6 Sept 2023

தி.ஜானகிராமன் சிறுகதைகள் – ஓர் எளிய அறிமுகம்

தி.ஜானகிராமன் சிறுகதைகள் – ஓர் எளிய அறிமுகம்

‘தி.ஜானகிராமன் சிறுகதைகள் – ஓர் எளிய அறிமுகம்’ என்று இப்பத்திக்குத் தலைப்பு கொடுத்திருந்தாலும் தி.ஜா.வின் கதைகளுக்கு எந்தவித அறிமுகமும் தேவையில்லை. தி.ஜா.வின் ‘மோகமுள்’, ‘அம்மா வந்தாள்’ ஆகிய நாவல்களைப் படித்தவர்கள் அவரது ஒரு சிறுகதையாவது படித்திருப்பார்கள்.

நான் மேனிலைப் பள்ளியில் பதினொன்று பனிரெண்டு படித்த போது அவரது ‘முள்முடி’ சிறுகதையைப் படித்திருக்கிறேன். அப்போதே மனதை உருக்கிய கதையாக அது இருந்தது. பிற்பாடு அவரது ‘அம்மா வந்தாள்’ நாவல்தான் நான் வாசித்த முதல் நாவல். அட ஒரு பிரமாதமான எழுத்தாளரின் ஒரு சிறுகதையை பதினாறு பதினேழு வயதுகளில் படித்திருக்கிறேனே என்று எனக்குப் பெருமிதமாக இருந்தது.

தி.ஜா.வின் சிறுகதைகளைப் பல பதிப்பகங்கள் வெளியிட்டு இருக்கின்றன. எல்லாம் ஆயிரம் சொச்சம் பக்கங்கள் கொண்ட பதிப்புகள். இன்னும் ஆயிரம் சொச்சம் பக்கங்கள் எழுதியிருந்தாலும் தி.ஜா.வின் கதைகளை வாசிக்க வாசிக்க அலுக்காது. அப்படி ஓர் எழுத்துக்கு அதிபதி தி.ஜா.

தி.ஜா.வின் சிறுகதைகள், நாவல்கள் குறித்து பலர் ஆய்வு செய்து முனைவர் பட்டங்களே வாங்கியிருக்கிறார்கள். அந்த அளவுக்கு ஆய்வுப் பொருண்மைக்கான அற்புதங்கள் பல உடையது அவரது எழுத்து. இத்தனைக்கும் அவரது குறிப்பிடத்தக்க பல சிறுகதைகள் தீபாவளி மலர்களுக்காக எழுதப்பட்டவை. வணிக நோக்கில் தயாரிக்கப்பட்ட மலர்களுக்காக எழுதப்பட்டிருந்தாலும் தி.ஜா.வின் தனித்துவத்தை எந்தச் சிறுகதையும் இழந்து விடவில்லை என்பதுதான் தி.ஜா.வின் சிறுகதைக்கான அழுத்தமான அடையாள அறிமுகம் எனலாம்.

இதற்கு மேல் தி.ஜா.வின் சிறுகதைளைப் பற்றி நான் சொல்ல இருக்கிறது? நீங்களே வாசித்துத் புரிந்து கொள்ளத்தான் நிறைய இருக்கிறது. மனிதர்களையும் அவர்கள் வாழ்ந்த இடங்களையும் மனிதர்களுக்கும் நிலத்திற்குமான பிணைப்பையும் ரசித்து ரசித்து எழுதியிருக்கிறார்.

எல்லா சிறுகதைகளும் ஓர் உயர்ந்த மானுட மனநிலையில் எழுதப்பட்டவை. மனிதர்களைப் பற்றி அவருக்கு எந்தக் குற்றச்சாட்டும் இல்லை. மனிதர்களின் விசித்திரமான மனோநிலைகளைப் பார்த்துப் பார்த்து சித்திரமாக்கி சிறுகதையாக்கி விடுகிறார். இப்படி மனிதர்களின் குணாதிசயங்களை நுட்பமாக அணுகி அலசிப் பார்க்கும் தி.ஜா.வின் எழுத்துப் போக்கே அலாதியானது.

பெரும்பாலான தி.ஜா.வின் கதை மாந்தர்களில் நீங்கள் ஒரு பொதுப்பண்பைக் கண்டுபிடித்துவிட முடியும். ஒரு வகையான பெருந்தன்மையான, நியாயம் தப்பிப் போயிருந்தாலும் சரிதான் போ அவர்களுக்குத் தெரிந்தது அவ்வளவுதான் என விட்டுக் கொடுக்கும் மனப்போக்கை உடையவர்கள் அவர்கள். அதில் தி.ஜா. எங்கே இருக்கிறார் என்பதையும் நீங்கள் அனுமானித்து விட முடியும். இருந்தாலும் இப்பொதுமையைத் தாண்டித் தி.ஜா.வின் கதை மாந்தர்களுக்கு இடையே ஓரு நுட்பமான தனித்துவம் இழையோடிக் கொண்டே இருக்கும்.

தி.ஜா.வின் கதைகளில் பிடித்தமானவை என்று சொல்லப்படும் சிறுகதைகள் நபருக்கு நபர் வேறுபடும். நான் எனக்குப் பிடித்ததாகச் சொல்லும் சிறுகதைளை விட வேறு சில சிறுகதைகள் உங்களுக்குப் பிடித்தமானதாக இருக்கும். இந்த இடர்பாட்டுக்கு இடையே ஒரு சில கதைகளின் தலைப்புகளைச் சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். மேலும் இந்தக் கதைகளை நான் திரும்ப திரும்ப வாசித்திருக்கிறேன். மற்ற கதைகளின் மேல் அப்படி ஒரு திரும்ப திரும்ப வாசிக்கும் பாசம் வந்ததில்லை என்பதை ஓர் அடிப்படையாகவும் கொண்டு இந்தக் கதைகளைச் சொல்கிறேன்.

Ø பரதேசி வந்தான்

Ø கங்கா ஸ்நானம்

Ø பிடி கருணை

Ø மாற்றல்

Ø தீர்மானம்

என்ற இந்த ஐந்து கதைகளை ஏனோ நான் திரும்ப திரும்ப வாசித்து இருக்கிறேன், நண்பர்களுடன் பேசியிருக்கிறேன். அதுவும் திரும்ப திரும்பத்தான். எத்தனை முறை என்பதற்குக் கணக்கில்லை. ஏன் இந்தச் சிறுகதைகள் மனதோடு வந்து பச்சக் என்று ஒட்டிக் கொண்டன என்பதற்கும் என் மன எதிர்பார்ப்புக்கும் இடையே ஒத்த அலைவரிசை ஏதோ இயங்கிக் கொண்டிருக்கக் கூடும்.

தன்னுடைய அனுபவங்களைத்தான் அவர் புனைகதைகளாக்கி உள்ளார் என்ற வாசிப்பு மயக்கம் எனக்கு எப்போதும் உண்டு. அத்துடன் அவரது நாட்குறிப்பாகவும் தி.ஜா.வின் சிறுகதைகளைப் பார்க்கும் தோற்ற மயக்கமும் எனக்குண்டு. ‘யோகிஷி’, ‘பாட்டியா வீட்டில் குழந்தைகள் காட்சி’ போன்ற சிறுகதைகளை வாசிக்கும் போது அப்படி ஓர் எண்ணம்தான் எனக்குத் தோன்றியது.

மனித மனதை எடுத்துக் கொண்டு அதை உணர்வு அம்மனிதர்களின் சுதந்திரம் சார்ந்து அவர்களை எந்த இடத்திலும் குற்றம் சாட்டாமல் குறைவு படுத்தி விடாமல் நுட்பமாக விவரிக்கும் போது தி.ஜா. காட்டும் சிறுகதை உலகம் வேறுபட்டது என்பது புரியும். ‘கடைசி மணி’, ‘பாப்பாவுக்குப் பரிசு’ போன்ற சிறுகதைகளைப் படித்த போது எனக்கு அப்படித்தான் தோன்றியது.

தஞ்சை மண்ணின் ஆதர்ச எழுத்துக்கு அச்சாரம் அமைத்த ஓர் எழுத்தாளரின் சிறுகதைகளில் இன்னின்னது சிறந்தது, இன்னின்னது எனக்குப் பிடித்தது என்று சொல்வது ஒரு குற்ற உணர்வைத்தான் ஏற்படுத்துகிறது. வேறு பல்வேறு விதங்களில் தி.ஜா.வின் சிறுகதைகளைப் பலரும் அறிமுகம் செய்து விட்டதால் நான் என்னுடைய மனதின் தோற்றங்களை இப்படிச் சொல்வதைத் தவிர வேறு வழியும் இருக்கிறதா என்ன?

நீங்களும் உங்களது தி.ஜா.வின் சிறுகதைகளைப் படித்த அனுபவங்களைக் கருத்துப் பெட்டியில் பகிர்ந்தால் இந்தப் பத்தியானது தி.ஜா.வின் சிறுகதைகளுக்கான மிகச்சிறந்த அறிமுக அனுபவமாக இருக்கும் என்று நினைக்கிறேன். அந்த வகையில் தி.ஜா.வின் சிறுகதைகளுக்கான அறிமுகத்தைத் தனியொருவனாக நான் மட்டும் செய்வதற்கில்லை என்பது புரிகிறது. நாம் எல்லாரும் கைகோர்த்தால் அதைச் செவ்வனே செய்து முடிக்கலாம்.

*****

No comments:

Post a Comment

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர்

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர் ஒவ்வொருவரும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான நெறிமுறைகள் வழங்கப்படுகின்றன பெ...