20 Jan 2022

பாலிதீன் சூழ் உலகு

பாலிதீன் சூழ் உலகு

            கடலை கடைகளில் வாங்கும் போது கவனமாகத் தாளில் மடித்துக் கொடுங்கள் என்று கேட்டு வாங்க வேண்டியிருக்கிறது. கேட்பதில் கொஞ்சம் பிசகினாலும் பாலிதீன் பையில் போட்டுக் கொடுத்து விடுகிறார்கள். தாளில் மடித்துக் கொடுங்கள் என்று கேட்டால் கொடுக்கிறார்கள். மற்ற கடைகளில் இது சாத்தியப்படாது.

            பாலிதீன் பைகள் அறிமுகமான காலங்களில் ஒரே பாலிதீன் பையை மடித்து வைத்து திரும்ப திரும்ப உபயோகிப்பார்கள். துணிப்பையை மீண்டும் மீண்டும் பயன்படுத்திய பழக்கத்தின் தொடர்ச்சியாக அது இருந்தது. ஒரு சிலர் கையிலிருக்கும் பாலிதீன் பைகளைப் பார்க்க சகிக்காது. அவ்வளவு அழுக்கடைந்திருக்கும். இருந்தாலும் பையில் மடித்து வைத்துக் கொண்டு திரும்ப திரும்ப பயன்படுத்துவார்கள்.

            காலவோட்டத்தில் ஒரு பாலிதீன் பையை ஒருமுறைக்கு மேல் பயன்படுத்துவதில்லை என்ற முடிவுக்கு மக்கள் வந்து விட்டார்கள். பரவலாகி விட்ட பாலிதீன் புழக்கமும் அவர்களின் முடிவு சரிதான் என்பதற்குத் தோதாக அமைந்து விட்டது.

            அப்போது வேலங்குடி மாமா எங்கள் வீட்டிற்கு வரும் போது பிரிட்டானியா ரொட்டிப் பொட்டலத்தை வாங்கி வருவார். அந்த ரொட்டிப் பொட்டலம் ஒரு மாதிரியான எண்ணெய் காகிதத்தில் சுற்றப்பட்டு மடிக்கப்பட்டிருக்கும். இனிப்பு, கார வகைகளுக்கும் எண்ணெய் காகித்தால் ஆன உறைதான். அல்வாவை இலையில் அழகாக மடித்து காகிதத்தில் ரோஸ் நூலில் கட்டித் தருவார்கள்.

            வயக்காட்டிற்குச் சென்றால் தண்ணீர் எடுத்துச் செல்வதற்கு தூக்கு வாளிகள் எல்லார் வீட்டிலும் இருக்கும். உடைந்து விடாமல் இருப்பதற்குத் துண்டைச் சுற்றிக் கண்ணாடி பாட்டில்களைத் தயார் செய்து எடுத்துச் செல்பவர்களும் இருந்தார்கள்.

            வெளியூர்களுக்குச் சென்றால் தண்ணீரை வாங்கிக் குடிப்பதும் எடுத்துச் செல்வதும் அரிது. தாகம் என்றால் யார் வீட்டிற்கு முன்பும் நின்று குரல் கொடுத்து தண்ணீர் வாங்கிக் குடிப்பார்கள். ஆற்று நீரையும் குளத்து நீரையும் தூய்மை பார்க்காமல் அள்ளிக் குடித்த காலகட்டங்களும் இருந்திருப்பதைச் சொன்னால் நம்ப இயலாது. அந்தத் தண்ணீரைக் குடித்து ஆரோக்கியமாகத்தான் வாழ்ந்தார்கள். நமக்குத்தான் சுத்தகரிக்கப்பட்ட தண்ணீரைக் குடித்தாலும் டைபாய்டு வருகிறது, வயிற்றுப்போக்கும் வருகிறது.

            பால் கொண்டு செல்வதென்றாலும் வாங்கி வருவதென்றாலும் அதற்கென்று செம்பும் லோட்டாவும் தூக்கு வாளிகளும் எல்லார் வீட்டிலும் இருந்தன. பால் புழங்கும் பாத்திரத்தில் வேறெதையும் புழங்காமல் அதில் ஓர் ஓர்மை காப்பார்கள்.

            சீரகம், மிளகு, வெந்தயம் வைக்க அஞ்சறைப்பெட்டி. புளி வைக்க பானை. உப்பு வைக்க பீங்கான் ஜாடி. அரிசி வைக்க ஆனைக்கால் குவளை. மிளகாய், மல்லியை வைத்துக் கொள்ள மூங்கில் கூடை. அப்படி இருந்த காலத்திலிருந்து இப்போது எது வைப்பதாக இருந்தாலும் எல்லாவற்றிற்கும் பிளாஸ்டிக் டப்பாக்களில் நிரப்பி வைக்கும் காலத்திற்கு வந்து விட்டோம்.

            வாங்கி வருகின்ற அனைத்தும் பாலிதீன் உறைகளில்தான் இருக்கின்றன. சட்டை, புடவை, வேட்டி என்று எது வாங்கி வந்தாலும் பாலிதீன் உறைகளில்தான் வைக்கப்பட்டிருக்கின்றன. பனியன், ஜட்டி என்று உள்ளாடைகளை வாங்கி வந்தாலும் அவை இருப்பதும் பாலிதீன் பைகளில்தான்.

மளிகை சாமான்கள் இருப்பதும் பாலிதீன் பைகளில்தான். காய்கறிகளும் பாலிதீன் பைகளில் போட்டுதான் குளிர் சாதனப் பெட்டிகளில் வைக்கப்படுகின்றன. பூக்களைச் சுற்றியிருப்பதும் பாலிதீன்தான். உணவகத்திலிருந்து வாங்கி வரும் உணவு இருப்பதும் பாலிதீன் பைகளில்தான். சுடச்சுட வாங்கி வரும் தேநீரும் பாலிதீன் பையில்தான் கட்டி வருகிறது. குடிக்கும் தண்ணீருக்கும் பாலிதீன் பைகள்தான்.

பத்து துணிப்பைகளைக் கடைகளில் வாங்கினால் அந்தப் பத்துப் பைகளையும் ஒரு பாலிதீன் உறையில் போட்டுதான் கொடுக்கிறார்கள். எந்தப் பொருளைக் கொடுத்தாலும் ஒரு பாலிதீன் பையில் போட்டுதான் கொடுக்க வேண்டும் என்ற மனநிலைக்கு வியாபாரிகள் வந்து விட்டார்கள். பாலிதீன் பையில் போட்டுதான் வாங்க வேண்டும் என்ற மனநிலைக்கு மக்களும் வந்து விட்டார்கள்.

அமரும் நாற்காலிகள் உட்பட இப்போது அனைத்தும் ப்ளாஸ்டிக்காக மாறி விட்டன. மர நாற்காலிகளும், தகர நாற்காலிகளும் வழக்கொழிந்து கொண்டிருக்கின்றன. நம்மைச் சுற்றம் சூழ ப்ளாஸ்டிக்கும் பாலிதீனும் ஆண்டு கொண்டிருக்கின்றன.

சட்டம் ஒழுங்கு உட்பட மித மிஞ்சி செல்லும் அனைத்தையும் கட்டுப்படுத்தும் பொறுப்பு குடி காக்கும் அரசுக்கு இருக்கிறது என்பதால் மித மிஞ்சி செல்லும் பாலிதீன் மற்றும் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் பொறுப்பும் அரசுக்கு இருக்கவே செய்கிறது. மக்களாகப் பார்த்து திருந்தா விட்டால் திருத்த வேண்டிய கடமையும் அரசுக்கு இருக்கிறது.

*****

No comments:

Post a Comment

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...