10 Jan 2022

மிஞ்சியவர் கெஞ்சி நிற்கும் பொழுது

மிஞ்சியவர் கெஞ்சி நிற்கும் பொழுது

நள்ளிரவு அழைப்பொன்று கோழியின் கால்களைப் போல

சந்தேகத்தைக் கிளறி விட்டுப் போகிறது

நான் பெண்ணாய் அவர் ஆணாய் ஆகிப் போனதில்

அலைபேசியை அங்குலம் அங்குலமாய் ஆராய்ந்து பார்ப்பவர்

அதைப் பிடுங்கிப் பழி தீர்க்கும் உலகில் ஒளித்துக் கொள்கிறார்

உறவுகள் நட்புகள் என ஒவ்வொருவராய் அழைத்துச் சொல்லி

தீயில் இறக்கிக் கற்பைச் சோதிக்க முடியுமா எனப் பார்க்கிறார்

தணியாத நெருப்பை அணைக்க முடியாமல்

நீதி பேசும் படலத்தைத் தொடங்குபவர்

கற்புடைய பெண்டிருக்கு

நள்ளிரவு அழைப்புகள் கிடையாதென்று வாதிடுகிறார்

தவறி வரும் அழைப்புகள்

கற்புடைய பெண்டிரைத் தீண்டுவதில்லை என்கிறார்

என் தரப்பு நியாயங்கள் ஒவ்வொன்றையும்

சொல்ல சொல்ல புகையும் சிகரெட்டில் சுட்டுப் பொசுக்கும் அவர்

என் மன்னிப்புகள் ஒவ்வொன்றையும் புகைத்து முடிந்த சிகரெட்டை

கீழே போட்டு காலால் நசுக்குவது போல நசுக்கிக் கொண்டே

மூன்று முடிச்சிற்கு முன்பாக

எத்தனை ஆண்களை முடிந்து வைத்திருந்தாய் என்கிறார் கல்மிஷமாய்

பழிச்சொல் கேட்டு சொல்வது அறியாது செய்வது புரியாது

விசும்பி விசும்பித் தேம்பித் தேம்பி அழும் என்னிடம்

கடைசி வாய்ப்பாகத் தன்னோடு வாழ்வதற்கு

அலைபேசியற்ற உலகில் அடிமையென வாழ்வதற்கு

நிபந்தனையற்ற சம்மதத்தைப் பெற நிர்பந்திக்கிறார்

அரசனை நம்பி புருஷனைக் கைவிட்ட கதை போல

அலைபேசிக்காக புருஷனைத் தூக்கி எறிந்த கதை

என்னைப் பயமுறுத்துகையில் நான் நடுநடுங்கிப் போகிறேன்

நிபந்தனையற்ற நிர்பந்தத்தையும் நிபந்தனையற்ற சுதந்திரத்தையும்

மாற்றி மாற்றி யோசித்துக் குழம்பிப் போய்

எங்கிருந்தோ வரும் ஒளியில் கலந்து

கால்கள் படி தாண்டி வெளியேற எத்தனிக்கையில்

என் அலைபேசியைத் தூக்கியபடி ஏன் கெஞ்சத் தொடங்குகிறார் அவர்

*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...