13 Oct 2021

ஆன்மாவைக் கலந்து பொழியும் மழை

ஆன்மாவைக் கலந்து பொழியும் மழை

ஓரளவுக்கு மேல் மனிதரால் மட்டுமல்ல

கடவுளாலும் எதுவும் செய்ய முடியாது என்ற

ஆதிக்குப் புறம்பான அந்தத்தின் இறுதிக் குறிப்பை எடுத்து படித்த போது

எப்போதோ பொழிந்த  மழையின் துளி எடுத்துப்

புதிதாய்ப் பொழிகிறது இந்த மழை

கிறித்துப் பிறப்பதற்கு முன்

பொழிந்த இந்த மழையில் ரத்தம் கலந்திருந்தது

புத்தருக்குப் பின் பொழிந்த மழையில்

நிர்வாணம் நிறைந்திருந்தது

பத்தொன்பது நூற்றாண்டு கழித்து பொழிந்த போது

வெடிகுண்டுகளின் வீச்சம் உறைந்திருந்தது

இன்னும் ஒரு நூற்றாண்டு கழித்து பொழிந்த போது

பெயர் தெரியாத கிருமிகள் ஒளிந்திருந்தன

இடியும் மின்னலும் கலந்து பொழியும் மழையிடம்

காலபேதம் பற்றி கேட்ட போது

மனித ஆன்மாவைக் கலந்து பொழிவதாகப் பதில் சொன்னது

*****

2 comments:

  1. மனித எண்ணங்களே
    மழையாய் பொழிகின்றதோ

    ReplyDelete
    Replies
    1. சரிதான். தாங்கள் குறிப்பிடுவது போலவே ‘நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லாருக்கும் பெய்யும் மழை’ என்பதாக மழை பொழிவதாகத்தான் தமிழ் இலக்கியம் குறிப்பிடுகிறது. பொதுப் புழகத்திலும் மழைக் குறைவிற்கு நல்லவர்கள் குறைவதை ஒரு காரணமாகச் சுட்டும் மரபு இருக்கிறது. ‘எண்ணம் போல் வாழ்வாய்’ என்ற சொலவத்தை நோக்கும் போது எண்ணங்கள் ஒருவரை நல்லவராகவும் தீயவராகவும் வழி நடத்தும் சக்தி கொண்டவைகளாக இருக்கின்றன எனலாம். மழை பெய்வதற்கும் பெய்யாமல் போவதற்கும் எவ்வளவோ புறக் காரணங்கள் இருக்கின்றன. இப்புறக் காரணங்கள் ஒவ்வொன்றும் மனிதரின் அகக் காரணங்களாகிய எண்ணங்களால் பாதிக்கப்படுகின்றன. மனித எண்ணங்களில் கணிசமானவை அழிவை நோக்கியதாகவும் அழிவை வளர்த்தெடுப்பதாகவும் உள்ளன. ஏதோ ஓர் எண்ணம் மண்ணாசை கொண்டோ, பெண்ணாசை கொண்டதோ, பொன்னாசை கொண்டாதோ அல்லது பேராசை கொண்டோ தன்னை நிறைவேற்றிக் கொள்வதைப் பொருட்படுத்திப் பல்லுயிர்களின் அழிவைப் பொருட்படுத்தாமல் போன நிகழ்வுகளை வரலாறு நிறையவே காட்டுகிறது. அத்தகைய நிகழ்வுகளை மனித எண்ணங்களோடு ஒன்றிணைத்து காலந்தோறும் பெய்யும் மழையோடு ஒப்பிட்டுப் பார்த்தால் மனித எண்ணங்கள் மழையாய்ப் பொழிந்திருக்கிறது எனலாம். புனிதர் ஒருவரின் பிறப்பால் அன்பு மழை பொழியும் உலகில் குரூரம் மிக்க ஒருவரால் குருதி மழை பொழியவும் வாய்ப்பிருக்கிறதுதானே. அந்த மழைக்கான ஊற்றுக்கண் மனித எண்ணங்கள் பிறக்கும் மனமாகத்தானே இருக்கிறது அல்லவா. இப்படி தங்கள் கருத்து எவ்வளவோ சாத்தியங்களைத் திறந்து விடுகிறது. கவிதைகள் உருவாக்கும் அகச் சாத்தியங்களுக்கு அளவில்லைதானே!

      Delete

மோசடி பேர்வழிகளும் நலம் விரும்பிகளும்!

மோசடி பேர்வழிகளும் நலம் விரும்பிகளும்! மோசடி பேர்வழிகளுக்கும் நலம் விரும்பிகளுக்கும் குறிப்பிடத்தக்க ஒற்றுமை ஒன்று இருக்கிறது. மோசடி பேர...