31 Jul 2021

மாடுகளும் நரியும்

நம் மாடுகள்

நம் மாடுகளுக்கு

சுவரொட்டிகளைத் தவிர

தர என்ன இருக்கிறது

சாக்கடையைக் குடித்துக் கொள்கின்றன

குழாயில் ஒழுகும் நீரை

சைடிஸைப் போல நக்கிக் கொள்கின்றன

வயிற்றில் நான்கு கிலோவுக்குக் குறையாமல்

பாலிதீன்கனை வைத்திருக்கின்றன

பார்ப்பவர்கள் விரட்டி விடும் போதெல்லாம்

பரிதாபமாகப் பார்க்கும் மாட்டின் பால்

காலையும் மாலையும் தேவையாக இருக்கிறது

கறந்த பின் வழக்கம் போல

விரட்டியடிக்கப்படுகின்றன மாடுகள்

*****

ஒரு நரிக்கு தெரியும்!

ஒரு நரிக்கு தான் நரியென்று தெரியாது

ஒரு புலிக்கு தான் புலியென்று தெரியாது

ஒரு பாம்பிற்கு தான் பாம்பென்று தெரியாது

ஒரு பூரானுக்கு தான் பூரான் என்று தெரியாது

ஒரு தேளுக்கு தான் தேள் என்று தெரியாது

ஒரு விசப் பூச்சிக்கு தான் விசப் பூச்சியென்று தெரியாது

ஒரு மனிதனுக்கு தான் நரியென்று தெரியும்

ஒரு மனிதனுக்கு தான் புலியென்று தெரியும்

ஒரு மனிதனுக்கு தான் பாம்பென்று தெரியும்

ஒரு மனிதனுக்கு தான் பூரான் என்று தெரியும்

ஒரு மனிதனுக்கு தான் தேள் என்று தெரியும்

ஒரு மனிதனுக்கு தான் விசப் பூச்சியென்று தெரியும்

ஒரு மனிதனுக்கு தான் மனிதன் என்று மட்டும் தெரியாது

*****

30 Jul 2021

நகர முடியாத ஓட்டமும் யானை ஒரு அகதியும்

யானை ஒரு அகதி

யானை என்பது பானையா

யானை என்பது முறமா

யானை என்பது தூணா

வழிதவறி ஊருக்குள் புகும்

யானையைப் பார்

யானை என்பது அகதி

*****

நகர முடியாத ஓட்டம்

ராட்சச இயந்திரத்தின் களைப்போடு

சுழலத் தொடங்குகிறது மின்விசிறி

வெளியில் இருந்த வெக்கைக் காற்றை

இழுத்துப் போட்ட களைப்பில்

மின்விசிறிக்கு வியர்க்கிறது

அசைந்தாடும் மரங்களிலிருந்து

காற்றைப் பிடுங்க முடியாத விரக்தியில்

அறைக்குள் சுழலும் மின்விசிறிக்கு

புயலில் விழுந்த மரங்கள் பற்றித் தெரிய

என்ன வாய்ப்பு இருக்கிறது

இதற்கு மேல் சுழல முடியாது என்ற விரக்தியில்

ஓடி விடப் பார்க்கிறது மின்விசிறி

ஓட ஓட நகர முடியாமல்

ஒரே இடத்தில் சுழன்று கொண்டிருக்கிறது

பயத்தால் வியர்த்துப் போகிறது மின்விசிறி

யாரேனும் கைவிசிறி எடுத்து வாருங்கள்

*****

29 Jul 2021

அழகான கொலைகளை உங்களால் புரிந்து கொள்ள முடியாது

உங்களால் புரிந்து கொள்ள முடியாது

ஒரு பயம் ஆயிரம் கொலைகளைச் செய்யும்

என்று சொன்ன போது நம்ப மறுத்தவர்கள்

தங்கள் பயங்களை ஆயிரம் கொலைகளால்

வர்ணித்துச் சொல்கின்றனர்

நுட்பமாகப் பார்ப்பதில் தெரியும்

குற்றங்கள் செய்ய விட்ட

உங்களின் பொறுப்பற்றத்தனம்

மேலதிகமாக உங்களிடம் சொல்ல

யோசனை யோசனையோ யோசனை

நீங்கள் எப்படிப் புரிந்து கொள்வீர்கள்

என்பது குழப்பமாக இருக்கிறது

சொல்லாமல் போன தவறுக்காக

குற்றவாளி எனத் தீர்ப்பிட்டு

சிறையிலடையுங்கள் எம் ரட்சகரே

*****

அழகான கொலைகள்

சிலருக்கு நல்லது செய்ய முடிவதில்லை

அந்த நல்லதே கெடுதலாகி விடுகிறது

உதாரணத்துக்கு ஒன்று

குடிகாரனைத் தடுத்தால்

கொலைகாரனாகி விடுகிறான்

என்ன அழகாய்க்

கொலை செய்திருக்கிறார்கள் பாருங்கள்

*****

28 Jul 2021

நாகரிகக் கோமாளித்தனம்

நாகரிகக் கோமாளித்தனம்

இப்படி ஒரு கோமாளித்தனத்தை

பழிவாங்கும் கோமாளித்தனத்தை

தரிசித்திருக்க மாட்டீர்கள்

சொல்வதற்கு எதிராகச் சொல்வது

கேட்பதற்கு எதிராக மறுப்பது

விளையாட்டாகிப் போய் விட்டது பழிவாங்குதல்

அடக்கப்பட்ட வார்த்தைகள்

மெளனமாய்ப் புதைந்த போவதை வழிமொழிவீர்கள்

ஆயுதம் தூக்கினால் தீவிரவாதம் என்பீர்கள்

அதே ஆயுதம் எம்மைக் கொன்று போட்டால்

தியாகி பட்டம் சூட்டி உச்சி முகந்துப் போவீர்கள்

எல்லாம் எமக்கு நன்றாகத் தெரியும்

குற்றங்கள் நடக்காவிட்டால்

உங்கள் யாருக்கும் வேலையில்லை

உணர்ச்சிவசப்பட்டு அந்தக் குற்றத்தை

உங்களுக்கு எதிராக செய்து விடாமல்

தடுப்பது மட்டுமே உங்களுக்கான வேலை

*****

27 Jul 2021

சத்யனின் ‘தேநீர் என்று பெயரிட்டுக் கொண்டவன்’ –நூலறிமுகம்

சத்யனின் ‘தேநீர் என்று பெயரிட்டுக் கொண்டவன்’ –நூலறிமுகம்

            சத்யனின் மூன்றாவது கவிதைத் தொகுப்பு ‘தேநீர் என்று பெயரிட்டுக் கொண்டவன்’. நூலமைப்பிலும் கவித்துவத்திலும் இத்தொகுப்பின் மூலமாக சத்யன் ஒரு புதிய உச்சத்தை அடைந்திருக்கிறார்.

            தன் மென்மையான மனதை எழுத்தில் படர விட்டு கவிதையில் தான் அடைந்திருக்கும் விழிப்புணர்வை இத்தொகுப்பின் கவிதைகள் ஒவ்வொன்றிலும் சோதித்துப் பார்க்க முயல்கிறார் சத்யன். இச்சோதனையின் முடிவாக இயற்கையும் கவிதையும் வேறல்ல என்ற முடிவை அடைவதை

                        “தாய்க்குருவி கொத்தி தவறவிட்ட லார்வாப்புழு

                        இதுவாகத்தான் இருக்கக் கூடுமோ

                        என்றெண்ணுகையில்

                        தரை இறங்கிய பழுத்த இலையொன்றில்

                        படபடத்தது சிறகுகளின் ஆமோதிப்பு”[1]

என்ற தொகுப்பின் முதல் கவிதையில் காட்டி விடுகிறார். தலைப்புகளை வெகு கவனமாக ஒவ்வொரு கவிதைக்கும் தவிர்த்திருக்கிறார். இரண்டாவது தொகுப்பிலும் இவ்வித தலைப்பு தவிர்ப்பை அவர் கையாண்டிருந்தாலும் இத்தொகுப்பில் அது வாசிப்பவருக்கு வெவ்வேறு தலைப்புகளில் பிரயாணிப்பதற்கான சுதந்திரத்தை வழங்குகிறது. முதல் இரண்டு தொகுப்புகளில் தராத ஆழ்மன சுதந்திரத்தை இத்தொகுப்பில் சத்யன் வாசிப்போருக்கு வழங்குகிறார்.

            சங்க இலக்கிய பாடல்களுக்குள் உள்ள சொற்களின் இறுக்கத்தையும் நெருக்கத்தையும் அனுபவ அடர்த்தியோடு அநேக கவிதைகளில் பதிகிறார் சத்யன். முதலிரு தொகுப்பின் அனுபவங்களுக்குள் சுழன்றபடி செழுமையான சொற்கள் மற்றும் அழுத்தமான படிமங்கள் வழியாக இம்மூன்றாவது தொகுப்பை முன் வைக்கிறார். அவரது முதலிரு தொகுப்புகளைப் படித்தவர்களுக்கு இத்தொகுப்பை உள்வாங்குவதும் அதனுள் ஆழ்வதும் சுவாரசியமான அனுபவமாக இருக்கும்.

            தனது மூன்றாவது கவிதைத் தொகுப்பில் பல நுட்பமான அக தரிசனங்களைக் கண்டடைந்தபடி தன் கவிதைகளை முன்னகர்த்தும் சத்யன் வாழ்க்கையின் சிடுக்கான அனுபவங்களைச் சொற்களைக் கொண்டு உறைய வைப்பதில் மிகு கவனம் செலுத்தியிருக்கிறார். அதற்கேற்ப பட்டாம்பூச்சிகளை வண்ணக்கலவையைக் குழைத்தும் வண்ணமற்றதுமாய்ப் பல இடங்களில் பறக்க விடுகிறார்.

            அக வாழ்வின் நுண்ணியமான பல முடிச்சுகளை வெளிப்புற உருவகத்தால் உள்ளுறையாகக் கடக்கும் நுட்பத்தை

                        “நான்

                        காமம் போர்த்திக் கொள்கிறேன்

                        இந்தக் கொடும் பாலையை

                        ஒட்டகமென

                        கடந்து செல்கிறாய் நீ”[2]

என்ற கவிதையில் அநாயமாகச் சாத்தியப்படுத்துகிறார். மேலும் இக்கவிமொழியில் பெண்ணுடல் மேல் ஆணுடல் கொள்ளும் ஆதிக்கத்தைப் பெண்ணியம் பேசும் ஆணின் பார்வையில் சமன் குன்றாது பதிந்திருக்கிறார்.

            தேநீர் என்பது விழிப்புணர்வின் குறியீடாகப் பார்க்கும் ஜென் தத்துவத்தை உள்நோக்கும் அனுபவத்தின் அதன் அகச்சாத்தியத்தோடு இத்தொகுப்பைப் படைக்க முயல்கிறார் சத்யன். வாழ்க்கை என்பது வெற்றியோ தோல்வியோ அற்ற அக்கணத்தில் வாழும் விழிப்போடு தொடர்புற்றிருக்கும் தன்மையே

                        “விடியலுக்கு முன்

                        ஜெயித்து விட வேண்டும்

                        நமக்கான தோல்வியை”[3]

என்ற ஒரு கணத்தின் முடிவைப் பின்னொரு கணத்தில்

                        “எதுவானாலென்ன

                        முயல்களுடனான

                        தோல்வியானாலும் கூட”[4]

வேறொரு விழிப்புணர்வு தளத்தில் மாற்றுவதை இத்தொகுப்பில் காண முடிகிறது. இவ்விழிப்புணர்வு தேடலின் உக்கிரத்தை

                        “ஏதும் நிகழ்வதற்குள்

                        அறிந்து விட வேண்டும்

                        என் இருப்பிற்கான சூட்சமத்தை”[5]

என்ற வரிகளில் சத்யன் காட்டவும் செய்கிறார். இத்தேடல் தரும் மாய பிம்பங்களின் தோற்றத்தை

                        “மிதக்கும் என் கால்கள் பட்டு

                        உடைந்த கண்ணாடியாய்

                        சிதறுகின்றன மாய பிம்பங்கள்”[6]

எனப் பதியும் சத்யன் ஜென் வாசம் தரும் தேடலற்ற தேடலை

                        “பெயரறியா பானத்திற்கு

                        நான்தான்

                        தேநீரெனப் பெயரிட்டுக் கொண்டேனோ”[7]

என்ற வரிகளில் அடைவதைக் காண முடிகிறது.

                        “ஏனைய மானஸ்தர்கள்

                        என் நிழலின் மீது கல்லெறிகிறார்கள்”[8]

                        “தியான புத்தரின்

                        மூடிய இமைகளாய்

                        விரிந்திருக்கின்றன

                        போன்சாய் இலைகள்”[9]

என்ற வரிகளில் தான் அடைந்த கவித்துவமான விழிப்புணர்வைக் காட்டும் சத்யன் தன் தொகுப்பின் இறுதியில்

                        “படிநிலைகளில் விலங்கினும் கீழாய்

                        சரியத் தொடங்கியிருந்தது

                        மனித அறிவு”[10]

எனும் வரிகளில் தளர விடுவதான தோற்றத்தைத் தருகிறார். தளர விடுவது அடுத்த தொகுப்பில் அதை மீட்க வேண்டும் என்ற வேட்கையின் தொடர்ச்சியாகவும் இருக்கலாம்.

            பட்டாம்பூச்சி, சிலந்தி, ஈக்கள், ஈசல் எனப் பூச்சிகளோடு இறகுகளும் சிறகுகளும் கொண்ட பறவைகள் பல விதமாகப் பறந்து புணர்ச்சியும் மரணமும் வெவ்வேறு தோற்றம் தரும் மன ஓவியங்களை கவிதைத் தூரிகைகளால் வெவ்வேறு விதமாக வரைந்து காட்டும் தொகுப்பாக இத்தொகுப்பு அமைகிறது.

            மேலும் அத்துடன் அமையாது, வண்ணங்களையும் தூரிகைகளையும் பரிசில்களாய் வழங்கி விருப்பம் போல் ஓவியங்களை உருவாக்கிக் கொள்ள உவந்தளிக்கும் புரவலனைப் போல் சத்யன் வழங்கியிருக்கும் இத்தொகுப்பு வாசித்த பின் மனதுக்குள் வரையும் கவிதை ஓவியங்கள் அலாதியான அனுபவத்தைத் தர வல்லவை. அதற்கேற்ப அவர் அறிமுகப்படுத்தியருக்கும் ஓவியர்களின் ஓவியங்களும் தனித்துவமான கவிதை மொழியைப் பேசுகின்றன. சத்யனின் கவிதைத் தொகுப்புகள் என்றால் கவிதையும் ஓவியங்களும் பின்னிப் பிணைந்தவை என்பதை மெய்ப்பிக்கும் இத்தொகுப்பு மனதுக்குள் வரைந்து போகும் கவியோவியங்கள் வாசிப்போரையும் கவிஞர்களாக்கி விடும் ரசவாதம் கொண்டவை. இந்த ரசவாதம் அவரது அடுத்த கவிதைத் தொகுப்பை ஆவலோடு எதிர்பார்க்க வைக்கிறது எனலாம்.

நூல் குறிப்பு

நூலாசிரியர்

ஆர். சத்யன்

தொடர்பு எண் : 94433 82614

நூல் பெயர்

தேநீர் என்று பெயரிட்டுக் கொண்டவன்

பதிப்பும் ஆண்டும்

முதல் பதிப்பு, 2021

பக்கங்கள்

64

விலை

ரூ. 100/-

நூல் வெளியீடு

சித்ரகலா பதிப்பகம்,

அகரக்கடம்பனூர்,

கீழ்வேளூர் – 611 104,

நாகப்பட்டினம் மாவட்டம்.

தொடர்பு எண் : 94433 82614

 



[1] ஆழி. சத்யன், தேநீர் என்று பெயரிட்டுக் கொண்டவன், ப. 11

[2] ஆழி. சத்யன், தேநீர் என்று பெயரிட்டுக் கொண்டவன், ப. 28

[3] ஆழி. சத்யன், தேநீர் என்று பெயரிட்டுக் கொண்டவன், ப. 17

[4] ஆழி. சத்யன், தேநீர் என்று பெயரிட்டுக் கொண்டவன், ப. 31

[5] ஆழி. சத்யன், தேநீர் என்று பெயரிட்டுக் கொண்டவன், ப. 35

[6] ஆழி. சத்யன், தேநீர் என்று பெயரிட்டுக் கொண்டவன், ப. 40

[7] ஆழி. சத்யன், தேநீர் என்று பெயரிட்டுக் கொண்டவன், ப. 57

[8] ஆழி. சத்யன், தேநீர் என்று பெயரிட்டுக் கொண்டவன், ப. 47

[9] ஆழி. சத்யன், தேநீர் என்று பெயரிட்டுக் கொண்டவன், ப. 49

[10] ஆழி. சத்யன், தேநீர் என்று பெயரிட்டுக் கொண்டவன், ப. 64

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை!

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை! ஔவைக்கு நூலறிவு மட்டும் கிடையாது. அவரது பட்டறிவுக்கு எல்லையே கிடையாது. ஒரு பெண்ணாகச் சுதந்த...