5 Mar 2021

முத்துன தேங்கா சாமிக்கு!

முத்துன தேங்கா சாமிக்கு!

செய்யு - 736

            ஆரம்பத்துல விகடு எழுதுனது இதுதான். அதாவது கடைசியா எழுத வேண்டியதைத்தான் அவ்வேம் மொதல்ல எழுதுனாம். விசயம் அத்தோட முடிஞ்சிட்டுன்னுதான் அவ்வேம் நெனைச்சான். ஏன்னா எழுத வேண்டியது அவ்வளவுதான். அதெ எழுதி முடிச்சிட்டுப் பெறவு வேறென்ன இருக்குன்னு நெனைச்சப்போத்தான் எல்லாம் தலைகீழா மாற ஆரம்பிச்சிச்சு. எதைக் கடைசியா வாலா முடியப் போவுதுன்னு நெனைச்சி எழுதுனானோ அதுலேந்து தலை மொளைச்சி ஒவ்வொண்ணா வளர ஆரம்பிச்சிது. அதால மொத அத்தியாயமும், கடைசி அத்தியாமும் ஒரே மாதிரியாத்தாம் இருக்கும். அவ்வேன் மொதல்ல எழுதுன அந்த அத்தியாத்த நீங்களே படிச்சிப் பாருங்க. அது கடைசி அத்தியாயமா போயி, அதிலேந்து மொத அத்தியாயம் எப்படி மொளைச்சதுன்னு ஒங்களுக்கேப் புரியும்.

வளர்ற வீடு

            வெள்ளாம வெள்ளாமன்னு மட்டும் கெடக்குற ஆளா சுப்பு வாத்தியாரு? வயல்ல வெள்ளாமய வளக்குறார்ன்னா, வூட்டு மனையில வூட்டையும் வூடு வூடுன்னு கெடந்து வளத்துட்டுக் கெடக்குற ஆளு அவரு. பயிரு வளருதுங்றது மாதிரிக்கி வூடும் வளருங்றதுக்கு சுப்பு வாத்தியாரு கட்டுன வூடுதாம் உதாரணம். இந்த ஒலகத்துல தாவரப் பொறப்பு மட்டுந்தாம் சாவுற மட்டும் வளரும்பாங்க. மனுஷ பொறப்புக்கு அப்படி ஒரு வளர்ச்சி கெடையாது. இந்த வூடு தாவரப் பொறப்பும் இல்ல, மனுஷப் பொறப்பும் இல்ல. வூட்டுக்குள்ள மனுஷப் பொறப்புங்க இருக்கு. வெளியில தாவரப் பொறப்புங்க இருக்கு. அதுக்கு மத்தியிலத்தாம் இந்த வூடு இருக்கு. இந்த வூட்டை சுப்பு வாத்தியாரு கட்டிக்கிட்டே இருக்காரு. ஒவ்வொரு காலத்திலேயும் இது நீண்டுகிட்டே இருக்கு.

            அறுநூறு சதுரத்துல கட்ட ஆரம்பிச்சி ரொம்ப காலத்துக்கு பூச்சுப் பூசாம, சன்னலு கதவுக வைக்காம கெடந்த வீடு. பெறவு முன்னாடி போர்டிக்கோங்ற பேர்ல கொஞ்சம் நீண்டுச்சு. நல்ல மச்சு வூட்டுக்குள்ள எப்படி வெச்சி சமைக்கிறதுன்னும், கேஸூ சிலிண்டர்ல கசிவு வந்தா என்னா பண்றதுன்னும் யோசிச்சி சமையலு கட்டுக்காக ரயிலு ஓடு போட்டு பின்னாடி கொஞ்சம் நீண்டுச்சி. பாத்ரூம், டாய்லெட்டு கட்டுறேன்னு நீண்டப்போ அதுக்கு மேற்கால ஒரு ரூமைப் போட்டு இன்னும் கொஞ்சம் நீண்டிச்சி. விகடுவுக்குக் கல்யாணம் ஆன பிற்பாடு கொஞ்சம் இடப்புழக்கம் தேவைப்படுமேன்னு அதெத் தாண்டி ஒரு கூரை கொட்டாய் நீண்டு, பிற்பாடு அது தகரசீட்டுப் போட்ட கொட்டாயா நீண்டுச்சி. வூட்டுக்குள் அடைசலு ஒடிசாலா சாமானுங்க கெடக்குதுன்னேன்னு அதுக்குப் பிற்பாடும் கொஞ்சம் நீண்டு போயி, அதுவும் பத்தாதுன்னு நெனைச்சி சுப்பு வாத்தியாரு அதெத் தாண்டியும் உரச் சாக்குள எடுத்து படுதாவ தச்சிப் போட்டு பந்தலு மாதிரி நீட்டி விட்டு இன்னும் கொஞ்சம் வூட்டை நீட்டிருக்காரு. இன்னும் நீட்டிக்கிட்டும் போவாரு.

            இப்பிடி வூட்ட விரிவுப் பண்ணாதீயேன்னு வூட்டுல உள்ள அத்தனெ பேரும் சொல்லியும் அவரு கேக்குறாப்புல யில்ல. வருஷத்துக்கு எதாச்சும் ஒரு வேலைய வயலுக்கும், வூட்டுக்கும் செஞ்சிக்கிட்டு இருக்காரு. இந்த வூட்டப் பத்தி, வூட்டச் சுத்தி வூட்டுக்குள்ளயும், வூட்டுக்கு வெளியிலயும் நடந்த சம்பவந்தங்கத்தாம் அத்தனையும். யிப்போ கொல்லப் பக்கம் கீழே நல்லா சிமெண்டப் போட்டு உக்கார்ற மாதிரி தோது பண்ணிருக்காரு. ஆரம்பத்துல ஏம் இந்த வேலையத்த வேலன்னு சொல்லிட்டுக் கெடந்த சனங்க யிப்போ அந்த எடத்துல உக்காந்துதாம் சாயுங்காலமான பேசிக்கிட்டுக் கெடக்குதுங்க.

தெற்குப் பாத்த கொல்லை

            கோடை வெக்கையா இருக்குற நேரத்துல தெக்கப் பாத்த கொல்ல வாசப்படியில காத்து அள்ளுது. காத்து நல்லா சிலுசிலுன்னு ஆனா கொஞ்சம் வெக்கைக் கலந்து வீசுனாலும் இதமா இருக்கு. வீட்டுக்கு மேக்கால காய்கறிச் செடிங்கப் போட்டிருக்கு. அதுக்கு ஆளாளுக்குத் தண்ணிப் பிடிச்சி ஊத்துறது ஒரு வேல.

            வெங்கு கையால வெதைப் போட்டு கத்திரி, வெண்டை, கொத்தரை, அவரை, பரங்கி, சொரைன்னு எல்லாம் கெளம்பிக் கெடக்கு. ஆனாலும் அதுல ஒண்ணு வெதைப் போடாம மிதிபாகலு செடிங்க மண்டிக் கெடக்குது. எதெ வெதப் போட்டு வளத்தோமோ, அது கொஞ்சம் கொஞ்சமா கெளப்பிக் கொண்டார வேண்டிக் கிடக்கு. இந்த மிதிபாகலு செடிங்க சும்மா காடு போலல்ல மண்டிக் கெடக்கு. அதுக்குள்ள மிதிபாவற்காயத் தேடிக் கண்டுபிடிச்சி பறிக்கிறதுங்கறது ஒரு சவாலுதாம். கோழி ஒண்ணு அதோட குஞ்சுகள தன்னோட றெக்கைக்குள்ள மறைச்சி வெச்சிருக்காப்புல இல்ல மறைச்சி வெச்சிருக்கு.

            "ஏம்டாம்பி! இந்த மிதபாவால பறிச்சியாந்து கறிகாயி பண்றதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுதுடா!" அப்பிடிங்கிது வெங்கு வேருல ஊத்துன தண்ணிக்கு தென்னை மரத்து மேல ஏறித்தாம் தேங்காயப் பறிச்சி தேங்கா தண்ணிக் குடிக்கணும்ங்றாப்புல.

            "இந்தச் சாக்குல எங்கள வெச்சிப் பறிக்கப் பாக்குறீங்களா? அதல்லாம் முடியா. நம்மள வுட்டுடுங்க!"ங்றா வெங்கு தேடிட்ட வந்த மருமவப் பொண்ணு ஆயி உக்காந்திருக்குற நேரத்துல அரிசியில இருக்குற கல்லப் பாத்துக் கொடுன்னு வேல வாங்குறதெப் போல காரியம் ஆவப் பாக்குறீயளாங்றாப்புல.

            "ஆளுக்கு ரண்டா பறிச்சா அல்லாடுறது கொறையுந் தங்காச்சி!" அப்பிடிங்கிது வெங்கு ஆளுக்கொரு பிடி அரிசி கொண்டாந்தா அல்லாத்துக்கும் கூட்டாஞ்சோறு சமைச்சிடலாம்ங்றாப்புல.

            அப்பதாம் விகடு சின்ன வயசுல அவன் அக்கரையில வெளையாண்ட, 'முத்துன தேங்கா சாமிக்கு!'ங்ற கதெய எடுத்து விட்டான். " அப்போ அக்கரையில சோக்காளிங்க எல்லாம் சேர்ந்து முத்துன தேங்கா சாமிக்குன்னு சொல்லிட்டே அங்க இருக்குற மிதிபாகலு செடியில பாகற்காய்கள பறிக்கணும். யாரு அதிகக் காய்களப் பறிக்கிறாங்களோ அவங்க ஜெயிச்சவங்க. ஜெயிச்சவங்ககிட்ட மித்த எல்லாரும் பறிச்ச காய்களக் கொடுத்தடணும். அதாங் போட்டி!" அப்பிடிங்றான் சின்ன புள்ளையில திருட்டு மாங்கா அடிச்சதெ வீர தீர பராக்கிரமமா பெரிய வயசுல சொல்லிக்கிடுறாப்புல.

            "இந்தப் வெள்ளாட்டுப் ‍போட்டிகூட நல்லா இருக்கே!" அப்பிடிங்றா ஆயி பாடிட்டு செய்யுறப்போ வேல நோவு தெரியாது, பேசிட்டு நடக்குறப்போ பாத தூரம் தெரியாதுங்றாப்புல.

            "அப்ப வாங்க வெளையாடலாம்!" அப்பிடிங்றா பவ்வு பாப்பா சின்ன கொழந்தைக்கே இருக்குற உற்சாகத்தோட பசிக்குற வவுத்துக்கு சின்னவங்க, பெரியவங்கன்னு வித்தியாசம் தெரியுமாங்றாப்புல.

            "நமக்கும் மனசு அப்பைக்கப்போ ஒரு மாரியாப் போயிடுது. நடந்துப் போன சம்பவங்க சில நேரத்துல நம்மளயும் அறியாம ஞாபவத்துல வந்துக்கிட்டும் போயிக்கிட்டுத்தாம் இருக்குது. அத்தோட படிச்சிப் படிச்சும் சமயத்துல மண்டெ காயுறாப்புல ஆயிடுது. இப்பிடி எதாச்சும் நாமள வெளையாண்டாத்தாம் கொஞ்சம் ஆசுவாசமா இருக்கும் போலருக்கு. ச்சும்மா வெளையாண்டுத்தான் பாப்பமே!" அப்பிடிங்கிறா செய்யு நாடவத்துக்கு இடையில கோமாளி வந்தாத்தாம் கலகலப்பா இருக்கும்ங்றாப்புல.

            வாழெ மரத்துக்குத் தண்ணிய ஊத்திக்கிட்டுக் கெடக்குற சுப்பு வாத்தியாரு மட்டும் இதெயெல்லாம் கண்டுக்கிடல. அவரு பாட்டுக்கு மேக்கால ஒதுங்கி நிக்குற வாழெ மரங்களுக்குப் பைப்புலேந்து ரெண்டு கையிலுமா வாளியில தண்ணியப் பிடிச்சிக் கொண்டு போயி ஊத்திக்கிட்டுக் கெடக்குறாரு.

            இங்க மவன், மருமவ, மவள், பொண்டாட்டி, பேத்தின்னு எல்லாருமா சேந்துட்டு முத்துன தேங்கா சாமி வெளையாட்ட வெளையாடுறாங்க. ஆளாளுக்கு மிதிபாவலப் பறிக்கிறாங்க. அரை மணி நேரம் ஓடியிருக்கும். போதும் வெளையாட்டுன்னு சொல்லி அவங்கவங்க பறிச்ச மிதிபாவல தனியா போட்டு எண்ணிப் பாக்குறாங்க.

            அதுல செய்யு பறிச்ச மிதிபாவலுதான் அதிகமா இருக்கு. மொத்த இருவத்தோரு மிதிபாவல பறிச்சிருக்கா. மித்தவங்க எல்லாம் பன்னெண்டு, பதினாறு, பதினெட்டுன்னு ஏதோ ஒரு எண்ணிக்கையில பறிச்சிருக்காங்க. போட்டியோட நியதிப்படி எல்லாரும் மிதிபாவல செய்யுட்ட கொடுக்குறாங்க. அவதாம் ஜெயிச்சா. கையில சேந்திருக்குற எல்லாமும் பாகற்காயில்லா. ரொம்ப கசப்பால்லா இருக்கும். ஜெயிச்சாலும் கசக்குற காயியில்லா.

            வாழ்க்கையும் அப்படித்தான் ஒரு வெளையாட்டுப் போலருக்கு. பாகற்காய தேடுற வெளையாட்டு. நமக்குக் கெடைக்கற அனுபவங்க எல்லாம் அப்படித்தானே இருக்கு. இருந்தாலும் பாவக்காயோட கசப்பு ஒடம்புக்கு நல்லதுன்னுதாம் ஊரு ஒலகத்துல சொல்றாங்க. அது போலத்தாம் போலருக்கு நமக்குக் கெடைக்குற கசப்பான அனுபவங்களும்.

            இனுமே அந்த பாகலுக எல்லாத்தையும் கறி சமைச்சிச் சாப்புட்டு சீரணிச்சாகணும். கசப்பான அனுபவங்களயும் அப்படித்தாம் மனசுக்குள்ள பக்குவமாக்கிக் கொண்டு போயி சீரணிச்சாகணும். வேற ஒண்ணும் வழியில்ல. இன்னும் நெறைய பாகற்காய்க கெடைச்சிட்டுத்தாம் இருக்கும். நாம்ம சீரணிச்சுக்கிட்டுத்தாம் இருக்கணும்.

            - இப்படித்தான் செய்யுங்ற இதெ எழுதுறதுக்கு முன்னாடி விகடு ஆரம்பிச்சாம். பிற்பாடு இதெ பிடிச்சிக்கிட்டு முன்னாடிப் போவப் போவ அது பாட்டுக்கு நீண்டுப் போயிடுச்சு. நடந்தது ஒவ்வொண்ணும் கண்டமேனிக்குச் சிக்குப் பிடிச்சாப்புல ஞாபவத்துல வர ஆரம்பிச்சிடுச்சு. 

            இதுல வர்ற யாரும் பொய்யில்ல. அவங்களோட பேர்க, ஊர்க மாறியிருக்கலாம். ஒரு சில பேரு இதுல செத்துப் போயிருக்கலாம். அவங்க உசுரோட உலாவுன, உலாத்திக்கிட்ட மனுஷங்கத்தாம். ஆனா இவுங்களுக்குள்ள ஏம் இப்பிடியெல்லாம் நடக்குதுங்றதுக்கு என்ன பதிலச் சொல்றது?

அவன் பேர் அவன் பெயரில்லை!

            வாழ்க்கையில எது நடந்தாலும் நம்மால எதுவும் பண்ண முடியாது, அதெ ஏத்துக்கிறத தவிர. அப்டி ஏத்துக்கிறப்ப அங்கேயிருந்த இன்னொண்ணு ஏதாச்சிம் பொறக்காதாங்ற நம்பிக்கைத்தாம் நம்மள வாழ வெச்சிக்கிட்டு இருக்கு. இதுல சொல்றதுக்கு ஒண்ணும் இல்ல. இன்னும் எழுதிகிட்டே இருக்குறதுக்கு விசயங்க நெறைய இருக்குத்தாம். கதைக்கும், வாழ்க்கைக்கும் எங்க முடிவு இருக்கு? ரெண்டு வருஷமாவது இருக்கும். விகடு பாட்டுக்கு இதெ எழுதிக்கிட்டெ கெடக்குறது. இந்த வூட்டுலத்தாம் யாரு எதெ செஞ்சாலும் அதெ கண்டுக்கிடாத மனநெல உண்டாகிப் போச்சே. அவுங்கவுங்க அவுங்கவுங்க வேலயப் பாக்குறதே வேலன்னு கெடக்குறாங்க. வாரத்துல சில நாட்கள்ல மட்டும் எப்பவாச்சும் எல்லாம் சேந்துக் கொல்லப் பக்கம் உக்காந்து பேசுறதும், முத்துன தேங்கா சாமிக்கு வெளைாயடுறதும் நடந்தாத்தாம் உண்டு.

            வெளையாண்டுக்கிட்டும் பேசிக்கிட்டும் இருக்குறப்பவே விகடு பாட்டுக்குக் கழண்டுக்கிட்டு வந்து உக்காந்து எழுதிட்டு இருப்பாம். சுப்பு வாத்தியாரு எதாச்சும் வேலையில இருந்தாலும் இதெ கவனிச்சிக்கிட்டுத்தாம் இருக்காரு. ரொம்ப நாளு கவனிச்சவரு ஒரு நாளு இவ்வேம் வந்து உக்காந்து அவ்வேம் பாட்டுக்குப் பண்ணிட்டு இருக்குறதப் பாத்துக் கேட்டாரு.

            "ன்னடாம்பீ! இப்பிடி பொழுதேனைக்கும் கம்ப்யூட்டர்ல போட்டு நொட்டு நொட்டுன்னு தட்டிக்கிட்டு இருக்கீயே?"ன்னாரு சுப்பு வாத்தியாரு சொரிஞ்சவேம் கையும் தாளம் போடுறவேம் கையும் சும்மா இருக்காதுங்றாப்புல.

            திடீர்ன்னு சுப்பு வாத்தியாரு பக்கத்துல வந்து நின்னு இப்பிடி ஒரு கேள்வியக் கேப்பார்ன்னு விகடு எதிர்பார்க்கல. ஒரு நொடி எச்சில முழுங்கிட்டு யோசிச்சவேம் அவனையும் அறியாம சொன்னாம், "ஒரு நாவல் படிச்சிட்டு யிருக்கேம்பா?" தண்ணிய குடிக்கிறவேம் தண்ணிய சாப்பிட்டேம்ன்னு சொல்றாப்புல.

            வழக்கமா இதெப் பத்தில்லாம் கேக்காத ஆளுதாம் அவரு. அதால இத்தோட விட்டுட்டுப் போயிடுவார்ன்னு நெனைச்சாம் விகடு. அவரு மனசுக்குள்ள என்னத்தெ நெனைச்சாரோ? சுப்பு வாத்தியாரு விடல. ஆர்வமா கேக்குறாப்புல கேட்டாரு.  "ன்னடா நாவல் அத்து? யாருடா எழுதுனது?"ன்னாரு அதிசயமா கிரிக்கெட்டுப் பிடிக்காத ஆளு திடுதிப்புன்னு கிரிக்கெட்டு ஸ்கோரு என்னான்னு கேக்குறாப்புல.

            இதென்னடா இத்து அதிசயமா யிப்படி நோண்டிக் கேக்குறாரேன்னு நெனைச்சாம் விகடு. இதெ எப்பிடிச் சொல்றதுன்னு கொஞ்சம் தயங்குனவேம் சொல்லித்தாம் பாப்பேம்ன்னு சொன்னாம், "செய்யுங்ற நாவல்ப்பா! விகடபாரதிங்ற ஒருத்தெம் எழுதிருக்காம்பா!" நாட்டுல இப்போ நாவல் படிக்கிறதுதாம் பழக்கமாயிக் கெடக்குங்றாப்புல

            "பாரதின்னா அத்து ஒருத்தர்தாம்டா! அத்து சுப்புரமணிய பாரதி! இப்பிடி ஆளாளுக்கு பாரதின்னு பேர்ர வெச்சிட்டுத் திரியுறானுவோ?"ன்னு சலிப்பா சொன்னாரு சுப்பு வாத்தியாரு பட்டு வேட்டியக் கட்டிப்புட்டா மாப்புள்ளையா ஆயிட முடியுமாங்றாப்புல. சொல்லிட்டு, "அத்தென்னடாம்பீ! நெதமும் பாக்குறேம், ஒரு நாளு வுடாம இப்பிடி கம்ப்யூட்டரு மின்னாடி உக்காந்துகிட்டு அப்பிடி என்ன எழுதிருக்குன்னு வேல மெனக்கெட்டு இப்பிடி மாஞ்சி மாஞ்சி படிச்சிட்டு இருக்கே?"ன்னாரு வேலையத்த சாப்பாட்டு ராமேன் வெறும் வாய்யப் போட்டு மெல்லுறாப்புலங்றாப்புல.

            "சுப்பு வாத்தியாருன்னு ஒருத்தர்ப்பா! அவருக்கு விகடுன்னு ஒரு மவ்வேம்! செய்யுன்னு ஒரு மவ்வே! அவங்களப் பத்தின குடும்பக் கதைப்பா! "ன்னாம் விகடு படபடன்னு ஒரு ஊர்லன்னு கதெயெ சொல்ல ஆரம்பிக்கிறவேம் போல.

            "நீயி ஒரு ஆளுடாம்பீ! நம்ம குடும்பக் கதெயே பெருங்கதெடாம்பீ! அதெ வுட்டுப்புட்டு நீயி இன்னொரு குடும்பத்துக் கதெய படிச்சிட்டு இருக்கீயாடாம்பீ?வேலையத்த வேல. வேற வேல இல்லடாம்பீ ஒனக்கு!"ன்னு சொல்லிட்டுச் சட்டுன்னு ஆர்வமெல்லாம் வடிஞ்சாப்புல சலிச்சிப் போயி அந்தாண்ட போயிட்டாரு சுப்பு வாத்தியாரு தண்ணியில இருக்குற தாமரை அதோட ஒட்டிக்காதுங்றாப்புல.

            சுப்பு வாத்தியாருன்னு அவரோட பேர்ர சொல்லியும், அவரோட மகன்னு விகடுவோட பேர்ர சொல்லியும் இத்து அவரோட குடும்பத்துக் கதைங்றது அவருக்குத் தெரியலையான்னுத்தானே கேக்குறீங்க?

            அவருக்குத் தெரியாது. ஏன்னா அவரோட பேரு சுப்பு வாத்தியாரு கெடையாது. பாலசுப்பிரமணியன். அதெ எழுதுன விகடுவோ அல்லது விகடபாரதியோ விகடபாரதியும் கெடையாது. அவ்வேம் பேரு விஜயராமன்.

            பேர்களையும், எடங்களையும், தெசைகளையும் மாத்தி மாத்தில்லா எழுதி வெச்சிருக்காம் விகடு. எந்த ஊர்ல ஒலகத்துல தேடுனாலும் இந்த மனுஷங்களக் கண்டுபிடிக்கிறதோ, எந்தத் தெசையில் தேடுனாலும் இதோட வரைபடம் அறிஞ்சிக்கிறதோ கஷ்டம்தாம்.

            இந்த ரகசியம் இதுவரைக்கும் இதெ எழுதுன விகடபாரதிக்கும், இப்போ இதெ வாசிச்ச ஒங்களுக்கும்தாம் தெரியும். இந்த ரகசியம் அப்பிடியே இருக்கட்டும்! அப்பிடியே இருந்துட்டுப் போவட்டும்! இந்த ரகசியத்தக் காப்பாத்திக் கொடுப்பீங்கன்னு நம்புறேன்.

அன்புடன்,

விகடபாரதி

*****

4 Mar 2021

ஓடுற ஓட்டத்துல ஓடிக் கொண்டிருப்பவர்கள்!


 ஓடுற ஓட்டத்துல ஓடிக் கொண்டிருப்பவர்கள்!

செய்யு - 735

            2018 வது வருசம்.

செய்யுவோட கலியாணம் நடந்து முடிஞ்சு நாலு வருஷமாவப் போவுது. இந்த நாலு வருஷமா வழக்குகளும் நடந்துகிட்டெ இருக்கு. செய்யுவோட கலியாணத்துக்கு, வழக்க நடத்துறதுக்குன்னு வாங்குன கடன்ங்கள்ல இந்த நாலு வருஷத்துல அடைச்சது போவ, சொச்சம் பதினாறு லட்ச ரூவா பல வெதத்துலயும் அடைக்க வேண்டியதா இருந்துச்சு. பங்குச் சந்தையில எப்பவோ வாங்கிப் போட்ட பங்குகள இப்போ வித்த வகையில இருவது லட்சத்து எண்பத்தி அய்யாயிரம் சொச்சம் பணம் கெடைச்சது. அதெ வெச்சி பாங்கியில வாங்குன கடன், சொசைட்டியில வாங்குன கடன், யோகிபாய்கிட்டெ வாங்குன கடன், வாத்தியார்மார்கள்ட்ட கைமாத்தா வாங்குன காசி, சில்லுண்டிய அஞ்ஞன இஞ்ஞனன்னு வாங்கியிருந்த கடன்னு அத்தனைக் கடனையும் அடைச்சு முடிச்சாம் விகடு. அத்தோட அடவுல இருந்த நகைகளெயும் மீட்டு முடிச்சாம். விவசாயத்துல வுட்டுருந்த வயல்களையும் பணத்தெ கொடுத்து மீட்டுக் கொண்டாந்தாம்.

            எல்லாம் அடைச்சதுப் போவ கையில நாலரை லட்ச ரூவா கையில இருந்துச்சு. அந்த நேரம் திட்டையில ஆறரை மா நெலம் வெலைக்கு வந்துச்சு. அதெ அப்படியே நாலரை லட்ச ரூவாய் பணத்தோட குஞ்சு கவுண்டரு கொடுத்திருந்தப் பணத்தையும் சேத்துப் போட்டு வாங்கிப் போட்டாம். அத்தோட இன்னும் அஞ்சு மா நெலம் பம்பு செட்டோட அடுத்த ஆறு மாசத்துல வெலைக்கு வந்தப்போ சொசைட்டியில மூணு லட்ச ரூவாய்க்கு ஒரு லோனைப் போட்டு, பாங்கியில நாலு லட்ச ரூவாயில லோனைப் போட்டு அதையும் வாங்கிப் போட்டாம்.

சுப்பு வாத்தியாரின் ஓட்டம்

            சுப்பு வாத்தியாருக்கு மவளோட வெவகாரத்துல ஊரே தன்னெ கைவிட்டுப்புட்டதா ஒரு நெனைப்பு இருந்துச்சு. ஊருக்காரவுங்க மட்டும் சாதவமா மவளோட வெவகாரத்தெ முடிச்சி விட்டிருந்தா எப்பவோ தலை நிமுந்திருக்கலாங்ற கோவமும் அவரோட மனசுக்குள்ள ஒரு இருந்துச்சு. ஒரு சம்சாரியா ஊர்ல நெலத்தெ வெவசாயம் பண்ணாம முடியாம அடவுக்கு வுட்டுருந்தது கெளரவக் கொறைச்சலாவும் இருந்துச்சு. விகடு வாங்கிப் போட்ட நெலத்தோட ஏற்கனவே இருந்த நெலமும் சேந்தப்போ ஒரு வேலி நெலம் அவரோட கையிக்கு வெவசாயம் பண்ண வந்தப்போ அவரு எழந்திட்டிருந்தா நெனைச்சிருந்த அத்தனெ கெளரமும் திரும்ப வந்துட்டதா நெனைச்சாரு. அதெ உண்மெங்றாப்புல நெலம் வெச்சிருக்கிற வெவசாயிங்க சேந்துப் போடுற தலையாரிக் கூட்டத்துல சுப்பு வாத்தியார்ர திட்டைக் கிராமத்து வெவசாயச் சங்கத்தோட துணைத் தலைவரா போட்டாங்க. அதுல சுப்பு வாத்தியாருக்கு ஏக சந்தோஷம். அந்தச் சம்பவத்துக்குப் பெறவு சுப்பு வாத்தியாரு மிடுக்கா எந்நேரமும் வயல்லயே கெடக்க ஆரம்பிச்சாரு.

            சுப்பு வாத்தியாரு பம்பு செட்டுக்கு ஒரு நல்ல கொட்டாயப் போட்டாரு. விகடு வாங்கிப் போட்டிருந்த வயல்களும் ஏற்கனவே இருந்த வயலும் ஒட்டுனாப்புல ஒரே எடமா அமைஞ்சிப் போனதுல அத்தனையையும் சேத்தாப்புல வேலிய அடைச்சி வெள்ளா‍மெ பண்ண ஆரம்பிச்சாரு. நெல்லு வெவசாயம் பண்ணுறப்போ வெள்ளைப் பொன்னியைப் போட்டாரு. அதுக்கு ரசாயன உரமோ, ரசாயன மருந்தோ அடிக்காம சாண எருவ மட்டும் அடிச்சிப் பயிர் பண்ணாரு. நெல்லு வெவசாயம் முடிஞ்சா உளுந்தையும், பயிறையும், எள்ளையும் அடிச்சாரு. அதெ எடுத்து முடிஞ்சா பம்பு செட்டு இருக்குறதால திரும்ப வெள்ளைப் பொன்னியைப் போட்டு நாலைஞ்சு மாவுல கோடெ வெவசாயமா பண்ண ஆரம்பிச்சாரு.

            சுப்பு வாத்தியாரு இப்பிடி வெவசாயம் பண்டுற சங்கதிய வாத்தியார்மார்கள்கிட்டெ சந்திக்கிறப்போ விகடு பேசிட்டு இருந்தப்போ திருவாரூர்லேந்து ஸ்ரீதரன்ங்ற வாத்தியாரும், ஆர்குடியிலேந்து தமிழரசன்ங்ற வாத்தியாரும் ரசாயனம் போடாம பண்ணுற வெள்ளைப் பொன்னி நெல்லை அரிசியாக்கித் தந்தா கேக்குற ரூவாயத் தர்றோம்ன்னு சொல்லப் போவ, அந்தச் சங்கதிய விகடு சுப்பு வாத்தியார்கிட்டெ சொல்லப் போவ, சுப்பு வாத்தியாரு வெள்ளைப் பொன்னியை யேவாரிகிட்டெ போடுறதெ நிறுத்திப்புட்டு அதெ அவரே அவிச்சி, காய வெச்சி, அரைச்சி அரிசியாக்கி கிலோ அறுவது ரூவாய்க்குக் கொடுக்க ஆரம்பிச்சிட்டாரு. அந்த அரிசியக் கொண்டு போயி கொடுத்துட்டு காசிய வாங்கிட்டு வர்றது மட்டுந்தாம் விகடுவோட வேல. மித்த அத்தனெ வேலைகளும் சுப்பு வாத்தியாரோட வேலைய இருந்ததால அவருக்கு எந்நேரமும் எதாச்சும் வேல இருந்துகிட்டே இருந்துச்சு. 

            வெள்ளைப் பொன்னிய அவிச்சி அதெ அரிசியாக்கி முடிக்கிறதுக்குச் சுப்பு வாத்தியாருக்கு அஞ்சு நாளு ஆவும். ஒரு மூட்டெ நெல்லைத்தாம் அவிக்கப் போடுவாரு. அதெ அவரு ரண்டு கலம்பாரு. கலத்துக்கு பன்னெண்டு மரக்கா வீதம் ரண்டு கலம்ன்னா இருவத்து நாலு மரக்கா. அதெ சரியா அளந்து பத்தாயத்துலேந்து எடுத்தார்ன்னா நெல்ல சுத்தமா கருக்கா இல்லாம மொறத்தை வெச்சி கையால பொடைச்சி முடிப்பாரு. அதுக்கு ஒரு ரண்டு மணி நேரமாவது ஆவும். அந்த நெல்ல ஊற வைக்குறதுக்குன்னே ஆனைக்கா கொவள நாலு வெச்சிருக்காரு. அதுல கொட்டி தண்ணிய ஊத்தி பழைய வேட்டியால வேடு கட்டுனாப்புல கட்டி வெச்சிடுவாரு. ராத்திரி நேரந்தாம் சுப்பு வாத்தியாரு நெல்ல அவிக்கிற நேரம். ராத்திரிச் சாப்பாட்ட முடிச்சிட்டு ஒம்போது மணிக்கு மேலத்தாம் அவிக்க ஆரம்பிப்பாரு.

            நெல்லை அவிக்கிறதுக்குன்னே ஒரு அலுமினியா வட்டாவ வெச்சிருக்காரு. அதுல அஞ்சு மொறைக் கொட்டி அவிப்பாரு. அவிச்ச நெல்லை கொல்லைப் பக்கம் இருக்குற கொட்டாய்ல கொட்டி வெச்சி அத்தனெ கொவளைகளையும் அலம்பி முடிச்சிட்டுத்தாம் படுப்பாரு. அப்போ மணி ராத்திரி ரண்டு ஆயிருக்கும். அன்னிக்கு மட்டும் காத்தால ஏழு மணி வாக்குலதத்தாம் எழுந்திருப்பாரு. எழுந்திரிச்சார்ன்னா மொத வேலையா அவிச்சிக் கொட்டியிருக்கிற நெல்லைக் கொண்டு போயி மாடியில கொட்டி வுட்டு கிண்டி விட்டுடுவாரு. இந்த நெல்லை நெழல் வாடையில காயப் போடுறதுக்குன்னே மாடியச் சுத்திலும் நீல நெறத்துல இருக்குற டாட்டா தகர சீட்டுல செட்டப் போட்டுட்டாரு. மொத நாளு காய வைக்குறப்ப மட்டும் ஒரு நாளுக்கு நாலு தடவயாச்சும் நெல்ல காலால கிண்டி விட்டுட்டுக் கெடப்பாரு. சாயுங்காலம் அஞ்சு மணியான்னா போதும் காய வெச்ச நெல்ல குமிச்சி கொவளையில  கொட்டி தாம்பாளத்தப் போட்டு மேல ஒரு செங்கல்லப் போட்டு மூடி வெச்சிடுவாரு. இந்த வேலையச் செய்யலன்னா ராத்திரி நேரத்துல எலிகளும், பெருச்சாளிகளும் அத்தனெ நெல்லையும் வேட்டு வுட்டுப்புட்டுப் போயிடும்.

            இப்பிடி நெல்ல காய வைக்கிற வேலையச் சுப்பு வாத்தியாரு நாலு நாளுக்குச் செய்வாரு. அப்பத்தாம் நெல்ல அரைக்கிறப்போ இடியாதும்பாரு. அந்த நாலாவது நாளு சாயுங்காலமோ, அல்லது அஞ்சாவது நாளோத்தாம் மில்லுல நெல்ல அரைக்கிறதுக்குப் போவாரு. இதுக்குன்னே நெல்ல பதமா அரைக்கிற மில்ல அவரு மூலங்கட்டளெப் பக்கத்துல இருக்குற வேலுக்குடியில கண்டுபிடிச்சி வெச்சிருக்காரு. அங்கத்தாம் மெனக்கெட்டு ஏழு கிலோ மீட்டருக்கு டிவியெஸ் பிப்டியில வெச்சிக் கொண்டுப் போயி அரைச்சிக்கிட்டு வருவாரு. அந்த வேல முடிஞ்சதுன்னா அந்த அரிசியில இருவது கிலோவோ எடுத்துட்டுப் போயி திருவாரூரு வாத்தியாரு ஸ்ரீதரனுக்கும், இன்னொரு இருவது கிலோவோ எடுத்துட்டுப் போயி ஆர்குடி வாத்தியாரு தமிழரசன்கிட்டெயும் கொடுத்துட்டு காசிய வாங்கிட்டு அந்தக் காசியில அப்பிடியே அந்த மாசத்துக்கான மளிகெ சாமானுங்கள டவுன்லேந்து வாங்கிட்டு வந்துடுவாம் விகடு.

            வெவசாயம் பண்டுறவங்களுக்கு சித்த நேரம் ஓய்வுங்றதே இருக்காது. சதா எந்நேரத்துக்கும் எதாச்சும் பாத்துக்கிட்டெ இருக்கிறாப்புல இருக்கும். வெளையுற காலத்துல வயல்லயே பாத்துகிட்டுக் கெடக்கணும்ன்னா, வெளையாத காலத்துல வயல மட்டம் பண்ணி, சாண எருவையும், ஆட்டாம் புழுக்கெயையும் கெடைக்குற எடமாப் பாத்து அலைஞ்சி திரிஞ்சி கண்டுபிடிச்சி அதெ டிராக்டரோட டிப்பர்ல ஏத்தியாந்து வயல்ல எறக்கி, எரு கலைச்சி வுட்டு, வேலிய அப்பைக்கப்போ சரியா கட்டின்னு வேலைக்குக் கொறைவு இருக்காது. அது போவ வெச்சிருக்கிற வெதை நெல்லு, வெத உளுந்து, வெத பயிறு, வெத எள்ளு இதெல்லாம் எப்பிடி இருக்குதுன்னு மாசா மாசத்துக்கு ஒரு பார்வெ வெச்சிக்கிட்டெ இருக்கணும். தேவைப்பட்டா லேசா காய்ச்சலப் போட்டுத் திரும்ப கட்டி வைக்கணும். இத்தோட சுப்பு வாத்தியாருக்கு வெளைஞ்ச நெல்ல அரிசியாக்குற வேலையும் சேந்துக்கிட்டதால அவர்ர இப்போல்லாம் வூட்டுல இருக்குறவங்களே பாத்துப் பேச நேரம் கெடைக்கிறதுல. பம்பரமா சொழண்டுகிட்டுக் கெடக்குறாரு.

வெங்குவின் ஓட்டம்

            சுப்பு வாத்தியாரு அப்பிடின்னா வெங்கு வூட்டுக் கொல்லையில வாழைக் கட்டையப் போட்டு வாழைக் கொல்லைங்ற அளவுக்கு ஆக்கிப்புடுச்சு. கலியாணம், காது குத்தி, சடங்கு, கோயில் திருவிழான்னு பண்ணுறவங்க கட்டுறதுக்கு வாழை மரத்தெ வாங்கிட்டுப் போவ வந்துடுறாங்க. ஒரு வாழ மரம் முந்நூத்துன்னு ரண்டு மரம் ஆறுநூத்துக்கு எப்படியும் மாசத்துக்கு ஒரு சோடி மரம் வெல போறதெ வாங்கி பேத்தியாள்கிட்டெ கொடுத்து அதெ பத்திரமா வெச்சிக்கிச் சொல்றதுதாம் வெங்குவோட வேலன்னு ஆயிப் போச்சு. வாழக் கொல்லைக்குத் தண்ணிப் பாய்ச்சுறதோட இஞ்சி, மஞ்சளு, கீரெ, கத்திரி, மொளகா, வெண்டி, பொடலெ, கொத்தவரெ, வெள்ளரின்னு வெங்குப் பாட்டுக்குக் கறிகாய்கள போட்டுக்கிட்டு வூட்டுக் கொல்லையிலயும், எதுத்தாப்புல கெடக்குற கொல்லையிலயையுமா கெடக்குது. அதுக்கும் எந்நேரும் வேலையத்தாம் போவுது. கொல்லையில களை மண்டுறதெப் பத்திச் சொல்லவே வாணாம். அது பாட்டுக்கு மண்டிகிட்டெக் கெடக்குது. அதெ பாத்து அப்பைக்கப்போ புடுங்குறதும், தண்ணி வைக்கிறதும்ன்னு கொல்ல வேலையிலப் போவுது வெங்குவோட நாளு முழுக்க.

ஆயியின் ஓட்டம்

            ஆயிக்கு வூட்டு வேலைகளப் பாக்குறதும், பவ்வுப் பாப்பாவும் பாக்கறதும், அதெ படிக்க வைக்கிறதும்ன்னு நேரம் போயிக்கிட்டெ இருக்குது.

விகடுவின் ஓட்டம்

            விகடுவுக்குப் பள்ளியோடம் போறதும், பொத்தகம் படிக்கிறதும், ப்ளாக்ஸ்பாட்டுல எழுதுறதும்ன்னு நேரம் போயிக்கிட்டெ இருக்குது. அவ்வேம் இப்போ ரண்டு ப்ளாக்ல எழுதிட்டு இருக்காம். ஒண்ணு www.vikatabharathi.blogspot.com நீங்க இப்போ படிச்சிட்டு இருக்குற அவ்வேம் குடும்பக் கதையெ இந்த ப்ளாக்லத்தாம் படிச்சிட்டு இருக்கீங்க. இன்னொண்ணு www.teachervijayaraman.blogspot.com இதெ ஒரு அறிவுப் பகிர்தலுக்கான ப்ளாக்கா பண்டிட்டு இருக்காம்.

செய்யுவின் ஓட்டம்

            செய்யு வெவகாரத்து வழக்குக்காகக் கையெழுத்தப் போட்டுக் கொடுத்துட்டு வந்தவே ரொம்ப தீவிரமா படிக்க ஆரம்பிச்சிட்டா. ஒரு நாளு பிஹெச்டி என்ட்ரன்ஸ்ல தேறிட்டதாவும், தஞ்சாவூரு மாமன்னர் காலேஜ்ல கைய்டு கெடைச்சிட்டதாவும் சொல்லிட்டு ரொம்ப சந்தோஷமா இருந்தா. இனுமே தன்னெப் பத்தி யாரும் கவலப்பட வாணாம்ன்னும், பிஹெச்டிய முடிச்சிட்டு ஏதோ ஒரு காலேஜ்ல லெக்சரரா போயி அவளோட வாழ்க்கையெ அவ்வேப் பாத்துக்கிறதாவும் ரொம்ப நம்பிக்கையாச் சொன்னா. இப்போ பிஹெச்டிக்கான படிப்பு, அதுக்கான தீசிஸ் தயாரிப்புன்னு அவளோட நேரம் போயிக்கிட்டெ இருக்குது.

காலச் சக்கரத்தின் ஓட்டம்!

            யாரும் எதெப் பத்தியும் நெனைக்க முடியாத அளவுக்கு வாழ்க்கெ அது பாட்டுக்குச் சொழண்டு ஓட ஆரம்பிச்சது. ஒவ்வொருத்தருக்கும் வேலன்னா வேல எந்நேரமும் இருந்துகிட்டெ இருந்துச்சு. அந்த வேலைக கடந்துப் போன காலத்துல நடந்த எந்தக் காயத்தையோ, வேதனையையோ நெனைச்சுப் பாக்குறதுக்கான நேரத்தெ தரவே யில்ல. ஓடுற ஓட்டத்துல எல்லாரும் ஓடிக்கிட்டெ இருக்க வேண்டியதா இருந்துச்சு. காலச் சக்கரம் சொழண்டு ஓடுறப்போ புதுப்புது பாதைத்தாம் கண்ணுல தெரியுது. கடந்து வந்த பாதை கண்ணுலேந்து மறையுது.

*****

3 Mar 2021

அடேங்கப்பா பங்குகள்!

அடேங்கப்பா பங்குகள்!

செய்யு - 734

            அய்யப்ப மாதவன்கிட்டெ கட்டுகள கொடுக்குறதுக்கு மின்னாடி விகடு நேரா வடக்கு வீதியில மாறியிருந்த தொண்டாமுத்தூர் கேப்பிட்டல் ஆபீஸூக்கு போனாம். கோபி மட்டும் ஆபீஸ்ல வூட்டுக்குக் கெளம்புற நெலையில இருந்தாப்ல. விகடுவப் பாத்ததும் சட்டுன்னுப் புரிஞ்சிக்கிட்டாப்ல.

            "என்னப்பா இத்து? மார்க்கெட்டுப் பக்கம் வர்றாத ஆளுங்க எல்லாம் இந்தப் பக்கம் எட்டிப் பாக்குது? கொஞ்ச நேரத்துக்கு மின்னாடித்தாம்பா மொதலாளி வந்து போன் நம்பர், அட்ரஸ் கேட்டு ஒம்மடப் பாக்க கெளம்புனாருப்பா! அவுங்க அஞ்ஞப் போவ, நீயென்னப்பா இஞ்ஞ வந்து நிக்குறே?"ன்னாப்புல கோபி உறவுக்காரனெ தேடி அவ்வேம் ஊருக்குப் போனா உறவுக்கார்ரேன் என்னான்னா தேடிப் போறவேம் வூட்டு மின்னாடி வந்து நிக்குறாமேங்றாப்புல.

            "தேரடியில வெச்சுப் பாத்துட்டேம் கோபி!"ன்னாம் விகடு தேடி வந்தவங்கள வழியில வெச்சு பாத்துட்டேம்ங்றாப்புல.

            "மொதலாளி கையில கவர்ல்லாம் இருந்துச்சு. நீயி மார்க்கெட்டுல இருக்கீயாப்பா? இல்லையாப்பா?"ன்னாப்புல கோபி வானம் கருக்குற தெசைய வெச்சு பெய்யுற மழை பெய்யுமா பெய்யாதாங்றதெ உத்தேசிக்குறாப்புல.

            "சுத்தமா மார்க்கெட்டெ மறந்துப் போச்சு. யப்பாவுக்கு இத்துச் சுத்தமாப் பிடிக்கல. இதுலேந்து வெட்டி வுட்டப்பவே கண்டிச்சு வுட்டதுதாம். பெறவு வாத்தியாரு வேலைக்கு வந்த பெறவு இந்தப் பக்கம் தலெ வெச்சுக் கூட படுக்கக் கூடாதுன்னுட்டாவோ! இதுல அம்மா பேர்ல கணக்கு இருக்கு, அப்போ பிராஞ்சு கணக்கு முடிச்சப்போ வந்த பணத்துல வாங்கிப் போட்டது. வாங்கிப் போட்டது போட்டதுதாம். வாங்குன பங்குக கெடக்குங்ற ஞாபவமே மொதலாளியப் பாத்த பெற்பாடுதாங் வந்துச்சு! இப்போ அவரு சொல்லித்தாம் நாம்ம வாங்கிப் போட்ட பங்குக வெல ஏறிக் கெடக்குங்ற வெசயமே தெரிஞ்சிச்சு!"ன்னாம் விகடு பாக்குறவங்க சொல்றப்பத்தாம் தெரியுது மொகத்துல மீசெ அரும்புற வெசயமேங்றாப்புல.

            "வெல ஏறிக் கெடக்கா? அட ன்னா நேரத்துலப்பா அதெ வாங்குனே? இந்த மாதிரி மார்க்கெட்டுல ஏறி பணம் பாத்தது நம்ம பிராஞ்சுல இன்போஸிஸ் ‍ஷேர்ஸ்ஸ வாங்குன ஒரு ஆளுதாம்ப்பா! இப்போ அடுத்தது நீந்தாம்ப்பா!"ன்னாப்புல கோபி மவராசி கையால மண்ணுல வெதை வெதைச்சா மண்ணெல்லாம் பொன்னாயிடும்ங்றாப்புல.

            "யம்மா அக்கெளண்ட்ல இருக்குற பங்குகளோட மதிப்பப் பாக்கலாமா?"ன்னாம் விகடு வெளைஞ்சு கெடக்குற நெல்லு எத்தன கலம் தேறுங்றதெ தெரிசிக்கிட வேணுமேங்றாப்புல.

            "யிப்பத்தாம் சிஸ்டத்தையெல்லாம் ஆப் பண்ணிட்டுக் கெளம்புலாம்ன்னு இருந்தேம். அதால ன்னா ஒரு பிராஞ்சு மேனேஜரா இருந்தவரு கேக்குறப்ப பண்ணாம இருக்க முடியுமா?"ன்னு வேக வேகமா ஆப் பண்ணியிருந்த கம்ப்யூட்டர்ர ஆன் பண்ணாப்புல கோபி பட்டனெ தட்டுனா பட்டுன்னு வெவரத்தெத் தெரிஞ்சிக்கிடலாமேங்றாப்புல.

            "பெறவு பிராஞ்சுல எத்தனெ பேரு இருக்கீயே? யிப்போ எப்பிடிப் போயிட்டு இருக்கு?"ன்னாம் விகடு வெளிநாட்டுலேந்து வந்தவேம் உள்ளூரு நெலவரம் எப்பிடி இருக்குதுன்னு வெசாரிக்கிறாப்புல.

            "ரண்டே பேருதாங். மின்ன மாதிரி யில்ல யேவாரம். யிப்பத்தாம் செல்லுலயே டிரேடிங் பண்ணுற அளவுக்கு மொபைல் டிரேடிங்லாம் வந்துடுச்சு. யாரும் ஆபீஸ் வந்தெல்லாம் பெரிசா பண்டுறதில்ல. பழைய கேஸூங்கத்தாம் வருது. ஒன்லி ஆளு பிடிக்கிறது, அவுங்கள டிரேடிங்க பண்ண வைக்குறது, அதுக்கேத்தாப்புல வாட்ஸ்ப்புலயும், டெலிகிராம்லயும் டிரேடிங் கால்கள மேசேஜ் பண்ணுறது, ஆளுங்க பண்ணுற டிரேடிங்க மேனேஜ் பண்ணுறது. அவ்வளவுதாம் இப்போ பிராஞ்சுல நடக்குது. பிராஞ்சுல ரண்டு பேருன்னு சொன்னேம்ல. ஒண்ணு நாம்ம. இன்னொண்ணு சுபா. ஞாபவம் இருக்குல்லா?"ன்னாப்புல கோபி பல நாளு கழிச்சி வந்து பாக்குறப்போ வியப்பா இருக்குற ஊர்ரப் பத்தி வௌக்குறாப்புல.

            "சுபாவா? கலியாணம் ஆனதும் வேலைய வுட்டுட்டதா அப்பவே கேள்விப்பட்டேம்!"ன்னாம் விகடு சைவச் சாப்பாட்டெ வுட்டவுக திடீர்ன்னு சைவ சாப்பாட்டுக்கு மாறிட்டதா கேள்விப்படுறாப்புல வேலைய வுட்டவுக வேலையில சேந்துப்புட்டதா சொல்லுதீயேங்றாப்புல.

            "நாம்ம மட்டும் ன்னவாம்? நம்மள அடுத்த மேனேஜரா போடலங்ற கடுப்புல ஒயென்ஜிஸ்ஸிக்குக் காரு வெச்சு ஓட்டிட்டுக் கெடக்கலையா? நம்ம செட்டுப் போனதுக்குப் பெறவு பிராஞ்சு குட்டிச் சொவரா போயிடுச்சு. நீயி ஆரம்பிச்சி வெச்சில்லாப்பா கூத்தாநல்லூரு பிராஞ்சு. நீயி போன பெற்பாடு அதுல வுழுந்த அடியில மொதலாளி மெரண்டுடாப்புல. ரித்தேஸ் போன் மேல போன் அடிக்கிறாப்புல நமக்கு. திருவாரூரு பிராஞ்சும் அப்பிடி ஆயிடுமேங்ற பயம் வந்துடுச்சு. இவுங்கல்லாம் பயம் வந்தாத்தானே காரியத்துல எறங்குவாக. அந்தப் பயத்துல எப்பிடியோ பிராஞ்ச தக்க வெச்சிக்கிட்டா போதும்ன்னு நம்ம வூடு வரைக்கும் தேடி வந்துட்டாப்புல மொதலாளி. கவுண்டரு பேச்சுக்குச் சொல்லவா வேணும்? சர்க்கரைய அள்ளிக் கொட்டுறாப்புல பேசுறாரு. இத்தனெ நாளு இந்தப் பேச்செல்லாம் எங்கடா போச்சுன்னு நெனைச்சிக்கிட்டேம். இருந்தாலும் செரித்தாம் நம்ம மொதலாளியாச்சேன்னு மேனேஜரா போட்டாத்தாம் வரு‍வேம்ன்னேம். சம்பளத்தெ ரண்டாயிரம் கூட தரணணும்ன்னேம். எல்லாத்துக்கும் ஒரே நேரத்துல ஓக்கே கெடைக்கும்ன்னு நெனைக்கல. ஓக்கே ஆயிடுச்சு. வந்துட்டேம் மேனேஜரா. இஞ்ஞ மேனேஜரா வந்து டெர்மினல்ல போட்ட நெறைய பேரு மாறியாச்சு. புதுசு புதுசா ஆளுங்களப் போடுறதும், அதுங்க மாறிப் போறதுமா அதெ ஏம்ப்பா கேக்குறே? போன மாசந்தாம். ஒரு நாளு பாத்தா சுபா ஆபீஸூல்ல வந்து நிக்குது. வேலைக்கு வரட்டுமா கோபின்னுச்சு. சரின்னுட்டேம். அதோட ஹஸ்பெண்ட்டு வெளி நாட்டுல வே‍லை பாக்குறாப்புல. ஆம்பளப் புள்ளே ஒண்ணு. ஏழெட்டு வயசு இருக்கும். பையனெ பள்ளியோடத்துக்கு அனுப்புன பெறவு வூட்டுலயே இருக்க போரடிக்குது. அதாங் வேலைக்கு வரட்டுமானுச்சு. இஞ்ஞ அப்போ வேல பாத்தப் பொண்ணும் சரியில்ல. சரின்னு அதெ தூக்கிட்டுச் சுபாவப் போட்டாச்சு. பாரேம்ப்பா நேரத்த. நம்ம செட்டு அப்பிடியே ஒண்ணு சேருதுப்பா! நீயி ஒருத்தந்தாம் பாக்கி. நீயும் வந்துட்டீன்னா பழைய தொண்டாமுத்தூரு கேப்பிட்டலா ஆயிடும்ப்பா நம்ம பிராஞ்சு. நாம்மல்லாம் ஒண்ணா வேல பாத்த அந்த டையம் இருக்கே. அது ஒரு பொற்காலம்ப்பா!"ன்னாப்புல கோபி நேரம் காலம் கூடி வந்தா கலைஞ்சுப் போன மேகமெல்லாம் ஒண்ணா கூடிக்கிடும்ங்றாப்புல.

            "உண்மெதாம். இதுலயே கூட இருந்திருக்கலாம்!"ன்னாம் விகடு கொளத்தெ பிரிஞ்சு கெணத்துக்குப் போன தவளை கெணத்துலயே கெடக்க வேண்டியது ஆயிடுச்சுங்றாப்புல.

            "பெறவென்ன வந்துட வேண்டித்தானே?"ன்னாப்புல கோபி கெணத்துத் தவளைக்குக் கெணறு பிடிக்கலன்னா திரும்ப கொளத்துக்கு வந்துட வேண்டித்தானேங்றாப்புல.

            "இந்தப் பக்கம் இனுமெ தல வெச்சிப் படுக்குறதில்லன்னு யப்பாகிட்டெ சொல்லிட்டேம். யிப்போ கொஞ்சம் பணந் தேவ. அதாங் இதுல இருக்குற பணத்தெ எடுத்துப்புடலாம்ன்னு நெனைக்கிறேம். எவ்ளோ வேல்யூக்கு ஷேர்ஸ் இருக்குன்னு தெரிஞ்சிட்டா அதெ வித்துட்டு டாட்டா காட்டிடுவேம்!"ன்னாம் விகடு கெணத்துலயே இருந்துட்ட தவளைக்கு இனுமே கொளமும் பிடிக்காது, கடலும் பிடிக்காதுங்றாப்புல.

            "பாத்தீயாப்பா? வித்து இருக்குற காசியயல்லாம் சுருட்டி எடுத்துக்கிட்டுப் போப்பா! வாண்டாம்ன்னு சொல்லல. அதுக்காக இந்தப் பக்கம் வாராம இருந்திடாதே. அடிக்கடி வந்துட்டுப் போப்பா! நீயொண்ணும் மார்க்கெட்டுல யாவாரம் பண்ண வாணாம். வந்து மட்டும் பாத்துட்டுப் போ!"ன்னாப்புல கோபி ஆழக் கெணத்துல தவளை போல இருந்தாலும் வானத்தெ அடிக்கடி எட்டிப் பாத்துக்கிட்டெ இருங்றாப்புல.

            "அதுக்கென்ன?"ன்னாம் விகடு மல்லாக்க படுத்துட்டா அண்ணாந்து பாக்குறதுல கஷ்டம் ன்னா இருக்கப் போவுதுங்றாப்புல.

            "வந்துடுச்சுப்பா யம்மாவோட அக்கெளண்ட் டீட்டெய்ல்ஸ். அடேங்கப்பா நச்சுன்னு ஆறு ஸ்டாக்ஸ்தாம் வாங்கிப் போட்டிருக்கே. ஒவ்வொண்ணும் என்னமா ஏறிக் கெடக்கு. ஐபிவென்சர்ஸ் நாலாயிரத்து ஐநூத்து குவாண்டிட்டி, ஐஐஎப்பெல் ஆயிரத்து முந்நூத்து அம்பது குவாண்டிட்டி, ‍டெக் மஹிந்த்ரா டூ சிக்ஸ்டி எய்ட் குவாண்டிட்டிஸ், டாட்டா எல்க்ஸி தெளஸண்ட் குவாண்டிட்டிஸ், விஜயா பேங்க் தெளஸண்ட் குவாண்டிட்டிஸ்,  வோக்கார்ட் பார்மா திரி ஹண்டரட் எல்லாம் சேர்த்து இருபத்தொரு லட்ச சொச்சத்துக்கு ரூவாய்க்கு ஸ்டாக்ஸ் இருக்குப்பா!"ன்னாப்புல கோபி ஒத்த வயசுக் கழுதெ திரும்பப் பாக்குறப்போ ஏழு கழுதெ வயசுக்கு அது பாட்டுக்கு வளந்து நிக்குதுங்றாப்புல.

            "இருவத்தோரு லட்சமா?"ன்னு வாயப் பொளந்தாம் விகடு கண்ணு மூடி கண்ண தொறக்குறதுக்குள்ள பெத்த பொண்ணு மணப்பொண்ணா நிக்குதேங்றாப்புல.

            "நீயி வாங்கிப் போட்டதுதாம்ப்பா! எவ்ளோவுக்கு வாங்குனேன்னு ஞாபவம் இருக்கா?"ன்னாப்புல கோபி பொம்பளப் புள்ளைகளும் பங்குல போட்ட முதலீடும் அப்பிடித்தாம் வளந்து நிக்கும்ங்றாப்புல.

            "மூணு லட்சம்!"ன்னாம் விகடு முப்பது மூட்டெ நெல்லுக்கு வெதைச்சது மூணு மரக்கா கூட இருக்காதுங்றாப்புல.

            "அடேங்கப்பா! யப்போ வாயப் பொளக்குறதுல தப்பே யில்லப்பா! அத்துச் செரி எப்போ பார்ட்டி?"ன்னாப்புல கோபி புதுநெல்லு வெளைஞ்சா பொங்கலு வெச்சு ஆவணும்ங்றாப்புல.

            "யிப்பவே! யிந்த நொடியே!"ன்னு விகடு குஞ்சு கவுண்டரு கொடுத்த கவர்லேந்து ரண்டாயிரம் நோட்ட ஒண்ணு எடுத்து கோபிகிட்டெ நீட்டுனாம், இன்னொரு நோட்டெ எடுத்து இத்துச் சுபாவுக்குன்னு நீட்டுனாம் கொடுக்கணும்ன்னு நெனைக்கிறதெ யோசிக்காம கொடுத்துப்புடணும்ங்றாப்புல.

            "ஓ! குடும்பஸ்தன்னா ஆயிட்டே! அதால பார்ட்டிக்கெல்லாம் வர மாட்டேம், காசிய வாங்கிட்டு ஒஞ்ஞளுக்கு நீஞ்ஞளே பார்ட்டிய வெச்சிக்கோங்கடான்னு சொல்றே! அத்துச் செரி! எப்பிடியோ பார்ட்டிக்குப் பணம் வந்த வரைக்கும் சரித்தாம்!"ன்னாப்புல கோபி கொடுக்குறதெ எள்ளா கொடுத்தா ன்னா, எண்ணெய்யா ஆட்டிக் கொடுத்தா ன்னாங்றாப்புல.

            "நாம்ம இந்தப் பங்குகளையெல்லாம் விக்கணும்!"ன்னாம் விகடு கறி காயி முத்துனா சந்தையில வித்துப்புடணும்ங்றாப்புல.

            "ஏம்ப்பா? இப்போ விக்குறே? மார்க்கெட்டு நல்ல வெதமாப் போயிட்டு இருக்கு! கொஞ்சம் வெயிட் பண்ணு. இருவத்தோரு லட்சம் முப்பது லட்சமாப் போயிடும்!"ன்னாப்புல கோபி இன்னும் மரம் கொஞ்சம் பெருத்தா பெரிய மர வேலைக்கு ஆகுமேங்றாப்புல.

            "கடன் நம்மட கழுத்தெ நெரிக்குது. அதெ விட்டா அத்து முப்பது லட்சமாப் போயிடும்! அதெ எல்லாத்தையும் முடிச்சிடணும்ன்னு பாக்குறேம். ஒடனடியா விக்கணும். கடன்லேந்து மொதல்ல வெளியில வாரணும்!"ன்னாம் விகடு மொதல்ல வளக்கணுங்றதெ வுட கடனெ முடிக்கிறது முக்கியம்ங்றாப்புல.

            "இந்த வயசுல ஒனக்கென்னப்பா அம்புட்டுக் கடன்? மார்க்கெட்டுல யில்ல. இருந்தாலும் டிரேடிங் பண்ண மாட்டேம்பே. குடிக்க மாட்டே. கண்ட கண்ட தொடர்பும் கெடையாது. சூதாடவும் மாட்டே. கடனும் வாங்க மாட்டே. பெறவு எப்பிடிக் கடன் கடன்ங்றே? ஒருவேள பேங்க் லோன்னப் போட்ட ப்ளாட்டு வாங்கிப் போட்டீயா? யில்ல ஹெளசிங் லோன்ல வூட்டக் கட்டுனீயா? ஒண்ணுமே புரிய மாட்டேங்குதேப்பா!"ன்னாப்புல கோபி எறும்பு சொமக்குறதுன்னாலும் தன்னோட எடைக்கு எட்டு பங்குக்கு மேல எடையச் சொமக்காதுங்றாப்புல.

            விகடு நடந்தக் கதெயெ சொல்ல ஆரம்பிச்சாம். தங்காச்சிக்குக் கலியாணம் பண்ணி வைக்க ஆரம்பிச்சது, அதுக்காக சகட்டு மேனிக்குக் கடனெ வாங்க ஆரம்பிச்சிது, கலியாணத்துக்குப் பெறவு தங்காச்சி வூட்டுக்கு வந்தது, அவளுக்காகக் கோர்ட்டுல வழக்கப் போட்டு வதியழிஞ்சது, யிப்போ வக்கீலுக்கு ரெண்டாயீரம் ரூவாயக் கொடுக்க முடியாம, சட்டைப் பையில இருந்த ஐநூத்து ரூவாய நெனைச்சுக்கிட்டு, திருவாரூரு தேர்ரப் பாத்துட்டு நின்னது, குஞ்சு கவுண்டரு வந்ததுன்னு எல்லாத்தையும் சொல்லி முடிச்சாம்.

            "அப்பிடின்னா பணத்தெ எடுத்து எல்லாத்தையும் முடிச்சிட்டுப் பிரியா ஆயிடுப்பா! நேரத்தெப் பாரு! எந்த மார்க்கெட்டுல ஒன்னய இருக்கக் கூடாதுன்னு ஒஞ்ஞ யப்பா சொன்னாரோ அந்த மார்க்கெட்டுத்தாம் இன்னிக்கு ஒன்னய கை தூக்கி வுடுது. அதால மார்க்கெட்ட வுட்டுடாதப்பா. நீ பாட்டுக்கு யம்மா பேர்ல இருக்குறதெல்லாம் வித்துட்டு அக்கெளண்ட்ட குளோஸ் பண்ணிடாதேப்பா. அம்பதாயிரத்துக்காவது நல்ல பங்குகள வித்தக் காசியில வாங்கிப் போட்டு வெச்சிக்கோ. நாளைக்கி எந்த ஷேர்ஸ் என்ன வெலைக்குப் போவும்ன்னு யாருக்குத் தெரியும் சொல்லு?"ன்னாப்புல கோபி சிக்கனம் பண்ணி சேமிப்புல எடுத்து வைக்குற காசிப்பணம் நல்ல பங்குல சேந்துட்டா அத்து சீரழிஞ்சுப் போயிடாதுங்றாப்புல.

            "யிப்போ ஷேர்ஸ்ஸ விக்கணுமே!"ன்னாம் விகடு வெள்ளம் வந்து ஒசந்து போறப்போ தண்ணி கழுத்து வரைக்கும் ஏறட்டும்ன்னு பாத்துக்கிட்டு நிக்க முடியாதேங்றாப்புல.

            "யிப்போ எப்பிடி விக்க முடியும்? நாளைக்கி மார்க்கெட் ஆரம்பிச்சுத்தாம் விக்கணும். வித்தா அன்னிக்கே டெலிவரி இன்ஸ்டரக்ஸ்ன் ஸ்லிப்புல கையெழுத்தப் போட்டுக் கொடுக்கணும். இதெல்லாம் ஒரு பார்மர் மேனேஜருக்குத தெரியாதா ன்னா? இப்போ கையில அநேகமா டெலிவரி ஸ்லிப்பு இருக்காதுன்னு நெனைக்கிறேம். இருந்தாலும் பழைய ஸ்லிப்பு இப்போ செல்லுபடியாகாது. அதால புதுசா டெலிவரி இன்ஸ்ட்ரக்ஸன் ஸ்லிப்புகள யம்மா அக்கெளண்டுக்கு வூட்டு விலாசத்துக்கு அனுப்ப சொல்லி மெயில் பண்ணிடுறேம். அத்து வூட்டுக்கு வந்ததும் சைன் பண்ணி வாங்கியாந்தா அன்னிக்கே வித்துப்புடலாம். வித்த மூணாவது நாளு டி ப்ளஸ் டூ அன்னிக்குச் செட்டில்மெண்ட்ட பண்ணிடலாம்!"ன்னாப்புல கோபி பத்தாயம் முழுக்க நெல்லு இருக்குன்னாலும் அதெ அரிசியாக்கி சோறா சமைக்குற வரைக்கும் பொறுத்துதாம் ஆவணும்ங்றாப்புல.

            "அப்பிடியே பண்ணிடலாம். இன்னிக்கே ஹெட் ஆபீஸூக்கு மெயில் பண்ணிடலாம்ல!"ன்னாம் விகடு பத்தாயத்துல இருக்குற நெல்லெடுத்து ஒடனே அவிச்சிப் போட்டுடலாமாங்றாப்புல.

            "யிப்பவே பண்ணிடுறேம்ப்பா! ஏம்ப்பா இவ்ளோ பெரச்சனெயில இருந்திருக்கே. நமக்குல்லாம் ஒரு போன போட்டிருந்தா மார்க்கெட்டுல ஷேர்ஸ் இருக்குறதப் பத்தி, வெல நல்லா போயிட்டு இருக்குறதப் பத்தி சொல்லியிருப்பேம்ல. அதெ அப்பயே வித்துப்புட்டு ஆசுவாசமா இருந்திருக்கலாம்லா. அட போப்பா! அதென்னப்பா ஒம்மட நம்பருக்கு அடிச்சாலும் போவ மாட்டேங்குது?"ன்னாப்புல கோபி ஆழந் தெரியாம காலு வுட்டுகிட்டு கைய தூக்காம சொழலுக்குள்ளெயே சொழண்டுக்கிட்டுக் கெடந்திருக்கீயேங்றாப்புல.

            "என்னிக்கு யப்பாகிட்டெ இந்த மார்க்கெட்டப் பத்தி இனுமே நெனைச்சிப் பாக்க மாட்டேம்ன்னு சொன்னேன்னோ அன்னிலேந்தே இதெப் பத்தின நெனைப்பே சுத்தமா யில்ல. வேலைக்குப் போறது, வூட்டுக்கு வர்றது, வூட்டுல வேலையப் பாக்குறதுன்னே ஓடிடுச்சு. சத்தியமா இந்த நெனைப்பே நமக்கு வாரல. இதெப் பத்தி நெனைச்சுப் பாக்கவும் யில்ல. பழைய மொபைல் நம்பர்ர மாத்துறாப்புல ஆயிடுச்சு. தங்காச்சி வெவகாரத்துல அவனுவோ கண்ட நேரத்துலயும் போனப் போட்டு கண்ட மேனிக்குப் பேசிக்கிட்டு, மெரட்டிக்கிட்டுக் கெடந்தானுவோ. அதாங் அந்த நம்பர்ர ஏம் வெச்சிக்கிட்டுன்னு வேற ஒரு புது நம்பருக்கு மாறிட்டேம். அதாங் வெசயம்!"ன்னாம் விகடு பயத்துல மூச்சடங்கி நிக்குறவேமுக்குச் சட்டுன்னு சத்தம் போட்டு கூப்புடத் தோணாதுங்றாப்புல.

            "ஓக்கே! ஹெட் ஆபீஸூக்கு மெயில் போயிடுச்சு. தபால்ல அதாச்சி ரீஸ்தர்ல எப்பிடியும் மூணு நாளுக்குள்ள டெலிவரி ஸ்லிப்ஸ் எட்டு வூட்டுக்கு வந்திருக்கும். வந்த ஒடனே யம்மாகிட்டெ சைன்ன வாங்கிக் கொண்டாந்தா வித்து முடிச்சிடலாம். வேணும்ன்னா ஸ்லிப்ஸ் வந்த அன்னிக்குப் போன் பண்ணிச் சொன்னாலும் வித்துடுறேம். சாயுங்காலமா கூட ஸ்லிப்ஸ்ஸ கொண்டாந்து கொடுத்துக்கிடலாம்!"ன்னாப்புல கோபி பேச்சோட பேச்சா பண்ட வேண்டிய வேலையைப் பண்டி முடிச்சிட்டேம்ங்றாப்புல.

            "அப்பிடியே பண்ணிக்கிடலாம்!"ன்னாம் விகடு திட்டம் பண்ண படிக்கே செயலாக்கத்தெ முடிச்சிக்கிடலாம்ங்றாப்புல.

            "பெறவென்ன கெளம்பலாமா? யின்னும் கொஞ்ச நேரம் பேசிட்டு உக்காந்திருக்கலாமா?"ன்னாப்புல கோபி டீக்கடையில டீயக் குடிச்சு முடிச்சாலும் அரட்டை அடிக்காம கௌம்ப முடியுமாங்றாப்புல.

            "கெளம்புவோம்!"ன்னாம் விகடு வவுறு நெறைஞ்ச பறவை வழியில்ல பாடிட்டு நிக்காம வூட்டை நோக்கிப் போறதுதாங் சரிதாம்ங்றாப்புல.

            "வண்டியிலத்தான வந்தது?"ன்னாப்புல கோபி வந்த மார்க்கம் என்னவோங்றாப்புல.

            "பஸ்ல வந்து நடந்து வந்தேம்!"ன்னாம் விகடு ஓரிடம் வர்ற ரண்டு வெதமா ரண்டு மார்க்கமா வந்தேம்ங்றாப்புல.

            "ன்னப்பா இத்து? வண்டி இருக்குல்லா?"ன்னாப்புல கோபி வண்டிச் சக்கரந்தாம் இந்தக் காலத்துல மனுஷக் காலுங்றாப்புல.

            "யப்பாவோட டிவியெஸ் பிப்டித்தாம் இருக்கு!"ன்னாம் விகடு அப்பாரு காலத்துல வாங்குன வண்டித்தாம் இன்னமும் இருக்குங்றாப்புல.

            "மொதல்ல ஷேர்ஸ்ஸ வித்து ஒரு வண்டிய வாங்குப்பா! இனுமே வர்றதுன்னா வண்டியில வாப்பா! யிப்போ வா! நம்மட வண்டியில கொண்டாந்து பஸ் ஸ்டாண்டுல விட்டுட்டுக் கெளம்புறேம்!"ன்னாப்புல கோபி ஆடையில்லாத மனுஷம் அரை மனுஷங்றாப்புல இனி வர்ற காலத்துல வண்டியில்லாத மனுஷம் கொறை மனுஷம்ங்றாப்புல.

            "மொதல்ல தங்காச்சிச் சம்பந்தமா கேஸ் கட்டெ வக்கீல் ஆபீஸ்ல கொடுக்கணும். பெறவுதாம் பஸ் ஸ்டாண்டு!"ன்னாம் விகடு தாலி கட்டுறதெ பாக்க வந்துப்புட்டு கலியாணப் பந்தியில உக்காந்துச் சாப்புட்டு இருக்கேம்ங்றாப்புல.

            "கொடுத்தாப் போச்சு!"ன்னாப்புல கோபி ஆறு பக்கத்துல இருக்குறப்போ வாய்க்கால் வழியா தண்ணியக் கொண்டு வாரது ஒண்ணும் பெரிசு இல்லங்றாப்புல.

ஆபீஸ்ஸப் பூட்டி முடிச்சிட்டு வெளியில வந்த கோபியோட வண்டியிலப் போயி அய்யப்ப மாதவன் ஆபீஸ்ல கேஸ் கட்டெ கொடுத்து அவருகிட்டெ குஞ்சு கவுண்டரு கொடுத்த கவர்ல இருந்த ரெண்டாயிரம் ரூவாயி நோட்ட ஒண்ணுத்தெ எடுத்துக் கொடுத்துட்டுத் திரும்பவும் கோபியோட வண்டியிலயே ஏறி பஸ் ஸ்டாண்டுக்கு வந்தப்போ ஏழே முக்காலுக்குக் கெளம்ப தயாரா இருந்துச்சு எட்டாம் நம்பரு பஸ். அதெப் பிடிச்சி அதுல ஏறி உக்காந்தாம் விகடு. எட்டாம் நம்பரு பஸ் அன்னிய கடெசி டிரிப்ப முடிச்சிட்டு வடவாதியில ஹால்ட் அடிக்க திருவாரூரு பஸ் ஸ்டாண்டுலேந்து சன்னமா வேகமெடுத்துக் கௌம்ப தயாரானுச்சு.

*****

2 Mar 2021

வேகமாக வந்து நின்ற ஆடி கார்!

வேகமாக வந்து நின்ற ஆடி கார்!

செய்யு - 733

            ஓரமாத்தாம் நின்னு ஆழித்தேரைப் பாத்துட்டு அப்பிடியே நின்னுட்டு இருந்தாம் விகடு. அவ்வேம் மின்னாடி ரண்டு அடி தூரத்துல வேகமா வந்த ஒரு ஆடி காரு சட்டுன்னு சடர்ன் பிரேக் போட்டு நின்னுச்சு. தன்னெ மறந்து நின்னவனோட நெனைப்பெல்லாம் திரும்ப வந்தாப்புல ஒடம்பு ஒரு நொடி அப்பிடியே அதிர்ந்துப் போயி நின்னுச்சு. நல்லவேள பிரேக்கப் போட்டு நிப்பாட்டுனாம் காருக்கார்ரேம். இல்லன்னா நம்ம நெலமெ என்னாவுறது? கஷ்டத்துல இருக்குற ஒருத்தேம் நாட்டுல ஓரமா நின்னு கூட அந்தக் கஷ்டத்தெ மறந்துடக் கூடாது போலருக்கு. அதெ ஞாபவப் படுத்தி வுடுறாப்புல இப்பிடித்தாம் இன்னொரு கஷ்டம் வந்து அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கும் போலருக்குன்னு நெனைச்சவேம் ஓரமா வெலகி வேகு வேகுன்னு நடக்க ஆரம்பிச்சாம்.

            "என்றா இத்து காரு மேல வந்து மோதுறாப்புல நின்னுப்புட்டு காசு கொடுக்காம போயிக்கிட்டு இருக்கே? மோதிருந்தா காருக்குச் சேதாரமா ஆயிருக்குமல்லோ. அதுக்கான காசெ எடுத்து வெச்சுப்பட்டு அந்தாண்ட போடா! என்றா நெனைச்சிக்கிட்டு இருக்குறே ஒன்ற மனசுல?"ன்னு கார்ல எறங்கி வந்த ஒருத்தரு பின்னாடியிலேந்து விகடுவோட கையப் பிடிச்சி வம்புக்கு இழுக்குறாப்புல பேசுனாரு. இதென்னடா இது நேரங்கெட்ட நேரத்துல இப்பிடி ஒரு சோதனங்ற நெனைப்போட திரும்புன விகடுவுக்கு அப்பிடியே தூக்கி வாரிப் போட்டாப்புல இருந்துச்சு.

            "மொதலாளி!"ன்னாம் விகடு கையப் பிடிச்ச மனுஷர்ரப் பாத்ததும் எத்தனையோ வருஷத்துக்கு மின்னாடி படிச்ச ஆர்க்கிமிடிஸ் விதி சட்டுன்னு ஞாபவத்துக்கு வந்துப்புடுறாப்புல.

            "என்றா வெகடு எப்பிடிடா இருக்கே? கலியாணம் ஆயிடுச்சாம்ல! ஒரு பத்திரிகெய அனுப்பி வைக்காம போயிட்டீயேடா? அப்பிடி என்றா நாங்க ஒங்களுக்கு எதிரியா போயிட்டேம்? ஏம்டா இப்பிடிப் பண்டிக்கிட்டு அலையுறே?"ன்னாரு தொண்டாமுத்தூர் கேப்பிட்டலோட மொதலாளி குஞ்சுக் கவுண்டரு பழக்கத்துல உள்ளவங்கள விஷேத்துல ஒதுக்கக் கூடாதுங்றாப்புல.

            "நம்மளயெல்லாம் ஞாபவத்துல வெச்சிருப்பீயளாங்ற சந்தேவந்தாம் மொதலாளி!"ன்னாம் விகடு ஒசரத்துக்குப் போயிட்டே இருக்குறவங்களோட பார்வைக்குக் கீழ நிக்குற உருவங்க குட்டியா போயி ஒரு கட்டத்துல மறைஞ்சிப் போயிடும்ங்றாப்புல.

            "எப்பிடிடா ஒன்ற மறக்க முடியும்? திருவாரூரப் பத்தினப் பேச்சு வந்தா ஒன்றப் பேச்சு வர்றாம இருக்காது. அதென்னடா போனப் போட்டா நம்பரு போவ மாட்டேங்குது. நம்பர்ர மாத்திட்டீயோ? நம்பர்ர மாத்துனா பிராஞ்சு ஆபீஸூக்குச் சொல்லணுங்ற அறிவு இருக்காதாடா ஒனக்கு?"ன்னாரு குஞ்சு கவுண்டரு தொடர்பு எல்லைக்கு அப்பால தொலைஞ்சுப் போனவனெ எப்பிடித் தொடர்பு கொள்ளுறதுங்றாப்புல.

            அந்தக் கேள்விக்கு என்னத்தெ பதிலச் சொல்றதுன்னுப் புரியாம, "ரித்தேஸ் அய்யா செளரியமா இருக்காங்களா மொதலாளி?"ன்னாம் விகடு கடையில கடுகு இருக்கான்னு கேட்டா கடுகு இல்லன்னு சொல்லக் கூடாதுங்றத்துக்காக மொளகு இருக்குன்னு சொல்றாப்புல.

            "காருக்குள்ளத்தாம் இருக்காம் மனுஷம். வாரும்யா ஒரு வெளையாட்டுக் காட்டலாம்ன்னா நாம்ம ஒண்ணும் சின்ன புள்ளெ இல்லங்ற மாதிரிக்கு பெரிய மனுஷம் சிரிப்பு சிரிச்சாம் மனுஷம். செரித்தாம் போன்னு நாம்ம மட்டும் நலுங்காம எறங்கிட்டேம்டா! அது கெடக்குது வா! காருக்குள்ளார உக்காந்துப் பேசுவேம்! ஒன்னயப் பாக்கணும்ன்னுத்தாம் திருவாரூரு பிராஞ்சுல வெலாசத்தெ வாங்கிட்டுக் கெளம்பி வந்தா நீயி தேர்ர வேடிக்கெ பாத்துட்டு நின்னுகிட்டெ இருந்தே. நீயென்ன குஞ்சுக் குளுப்பானாடா? இப்பிடி மெதாந்துக்கிட்டுப் பாத்துக்கிட்டு நிக்கே? கொஞ்சம் தூரத்துல கார்ல வர்றப்பயே என்னடா திருவாரூர்ல ஒரு பயெ அதிசயமா தேர்ரப் பாத்துட்டு நிக்கானேன்னுப் பாத்தா நம்மட பயலா போயிட்டே. அதென்னடா இத்து திருவாரூர்லப் பொறந்துட்டு நீயே இந்தத் தேர்ர அம்புட்டு அதிசயமா பாத்துட்டு நின்னா அத்து என்றா ஞாயம்? எந்த ஊர்ல எடுக்கும்டா நீயி பண்டுற காரியம்?"ன்னாரு குஞ்சு கவுண்டரு பெத்தெடுத்தவே நெதமும் பாக்குற புள்ளைய என்னவோ அன்னிக்குத்தாம் அதிசயமா பாக்குறாப்புல பாக்குறீயேடாங்றாப்புல.

            "மொதலாளிக்குப் பேச்சு இன்னும் மாறல!"ன்னாம் விகடு வயசு ஏறுனாலும் கொரலு மாறாதுங்றாப்புல.

            "அதெப்பிடிடா மாறும்? கூடப் பொறந்ந பொறப்பல்லோ! ரத்தத்தோட ரத்தமா ஊறுனதாக்கும்டா!"ன்னாரு குஞ்சு கவுண்டரு எறைக்குற கெணறு எப்பவும் ஒரே மாரியா ஊறிட்டுத்தாம் இருக்கும்ங்றாப்புல. அவரு பேசிக்கிட்டெ கார்ர நெருங்குனதும் கார் டிரைவரு எறங்கி காரு கதவெத் தொறந்து விட்டாரு.

            முன் சீட்டுல ரித்தேஸ் உக்காந்திருந்தாரு நடக்குறதையெல்லாம் ஒரு கொழந்தையப் போல வேடிக்கெ பாத்தபடிக்கு. குஞ்சு கவுண்டரு பின் சீட்டுல உக்காந்ததும், விகடுவும் அவருக்குப் பின்னாடி அவரோட பக்கத்துல உக்காந்தாம். சட்டுன்னு காரு கதவெ மூடி டிரைவரும் காருக்குள்ள வந்து உக்காந்தாரு. ரித்தேஸ் பின்னாடி திரும்புனாப்புல விகடுவெப் பாத்து, "எப்பிடிப்பா இருக்கே? ஒரு போன் கால் எதுவுமே கிடையாது. நாங்களும் அடிக்கலாம்ன்னு அடிச்சா நம்பர் அவுட் ஆப் ஆர்டர். அப்பா சொல்லிட்டார்ன்னா ஷேர் மார்க்கெட்டயே அப்பிடியே மறந்துடுறதா? நல்ல புள்ளடா நீ?"ன்னாரு ரித்தேஸ் கொடுத்த வாக்குக்காகக் கத்துக்கிட்டெ வித்தையை வுட்டுப்புடக் கூடாதுங்றாப்புல.

            "கோபி சொன்னாம்ல! இந்நேரத்துக்குப் புள்ளயே பொறந்திருக்கும்ன்னு! என்றா புள்ளடா?"ன்னாரு குஞ்சுக் கவுண்டரு கலியாணம் ஆனவங்க கொழந்தெ பெத்துக்கிடாம இருப்பாங்களாங்றாப்புல.

            "பொம்பளப் புள்ள மொதலாளி!"ன்னாம் விகடு ஆயித்தாம் கொழந்தைக்கு அப்பங்காரனெ அடையாளம் காட்டணும்ன்னு சொல்லுவாங்களே அந்த வகைக்கு.

            "அதென்னடா பொம்பளப் புள்ளன்னு சொல்லிக்கிட்டு. மகாலட்சுமின்னு சொல்லணும்டா! எத்தனெ புள்ளடா?"ன்னாரு குஞ்சு கவுண்டரு பொறக்குற புள்ளெ மொத புள்ளெ பொம்பளைப் புள்ளையாத்தாம் பொறக்கணும்ன்னு கிராமத்துல பெருமையா சொல்லுறாப்புல.

            "ஒண்ணுதாங் மொதலாளி!"ன்னாம் விகடு ஒண்ணே போதுங்ற மனசோட அதாச்சி கண்ணு போல புருஷன் பொண்டாட்டி ரண்டு இருந்தாலும் வாயப் போல புள்ள ஒண்ணு இருந்தா போதும்ன்னு இருந்தாச்சுங்றாப்புல.

            "அப்பிடியே புள்ளைங்களா பெத்து வுட்டு வூடு முழுக்க கல கலன்னு ஒண்ணொண்ணும் அங்கிட்டு இங்கிட்டுன்னு ஓடணும்டா! அத்தென்னடா ஒத்தப் புள்ளே? அத்து வெள்ளாடணும்ன்னா கூட யாருகிட்டெ வெள்ளாடும்? ஒங்கிட்டெயும் ஒன்ற பொண்டாட்டிக்கிட்டயுமடா வெள்ளாடும்? ஏம்டா அப்பா ஆயில்லாம் செளரியந்தானடா? அவுங்களச் சித்தெ நேரம் சும்மா வுடக் கூடாதுடா. பேரப் புள்ளைங்களப் பாத்துக்கிறதையே வேலையா வைக்கணும்டா! இன்னும் செரியான வெவஸ்தெ கெட்ட பயலா இருக்கேயேடா!"ன்னாரு குஞ்சு கவுண்டரு வூடு கொள்ளாத அளவுக்குக் கொழந்தைகளப் பெத்து குறும்பப் பண்ண விடணும்ங்றாப்புல.

            "நாட்டோட சனத்தொகெப் பெருக்கத்தப் பாக்கணும் மொதலாளி?"ன்னாம் விகடு ஒண்ணு கூட எடுத்துக்கிடணும்ன்னு ஒவ்வொருத்தரும் நெனைச்சா பந்தியில பாதி பேருக்கு ஜிலேபி இருக்காதுங்றாப்புல.

            "பாத்தீயளா ரித்தேஸ்ஸூ! என்றப் பேச்சுப் பேசுறாம்? இவ்வேம் ரண்டு மூணு புள்ளையப் பெத்துக்கிடுறதாலத்தாம் நாட்டோட சனத்தொகெ அதிகமாயிடப் போவுது? கொறைச்சலா நாலு புள்ளையாவதுப் பெத்துக்கணும்டா! போயி அதுக்கான ஏற்பாட்ட பண்டுடா!"ன்னாரு குஞ்சு கவுண்டரு சிரிச்சிக்கிட்டெ ஊர்ல ஒருத்தெம் தண்ணிய ஊத்துனா ஒட்டுமொத்த பாலும் தண்ணியாயிடாதுங்றாப்புல.

            "இப்பிடி ஒவ்வொருத்தரும் நெனைச்சா நாட்டோட சனத்தொகெ நாலு மடங்கு அதிகமாயிடும் மொதலாளி!"ன்னாம் விகடு நாலு பங்குக்குச் சிலவெ பண்டிட்டு ஒரு பங்குக்குச் சம்பாதிச்சா கட்டுப்படியாகுமாங்றாப்புல.

            "கவுண்டரே! ஆளு இன்னும் மாறல. திருத்த முடியாது. கோடு போட்டு வாழ்ற கேஸூ! வூட்டுல வெச்சுப் பாக்குறதுக்குக் கோயிலுக்கு முன்னாடி வெச்சுப் பாத்தாச்சு. வூட்டுக்குப் போயித்தாம் பாக்கணுமா என்னா? காரியத்தெ முடிச்சிக் கெளம்புனம்ன்னா மாயவரம் பிராஞ்சையும் ஒரு விசிட் அடிச்சிட்டு விடியுறதுக்குள்ளார கோயம்புத்தூர்ல இருக்கலாம். நாளைக்கு டிரேடர்ஸ் மீட் ஒண்ணு இருக்கு!"ன்னாரு ரித்தேஸ் மாமனார்ரப் பாத்துப்புட்டா மாமனாரு வூட்டெ வுட்டுக் கௌம்பிப்புடணும்ங்றாப்புல.

            "அதுவும் செரித்தாம்! என்றா வெகடு! ஒன்ற வூட்டுப்பக்கம் வர்ற யோஜனையிலத்தாம் கெளம்புனது. ஒரு நாளுக்கு இருவத்து நாலு மணி நேரம் போத மாட்டேங்குதுடா! அத்தாம் பாத்துட்டேம்லா. கெளம்புறேம். இந்தா இதெப் புடி! இதெ கொடுத்துட்டு அப்பிடியே பாத்துட்டும் வந்துடுறதுன்னுத்தாம் கௌம்புனது!"ன்னு பக்கத்துல வெச்சிருந்த ஒரு கவர்ர எடுத்துக் கையிலத் திணிச்சாரு குஞ்சு கவுண்டரு கும்புடுற சாமி நேர்ல வந்து கேக்காம வரம் கொடுக்குறாப்புல. விகடு அது என்ன கவருங்றது புரியாம முழிச்சாம். அத்தோட தன்னோட பையிலேந்து ஒரு ரண்டாயிரம் ரூவா நோட்ட எடுத்துக் கொடுத்து, "இதுல மகாலெட்சுமிக்கு நல்ல உடுப்பா எடுத்துட்டுப் போடா!"ன்னாரு வரம் கொடுத்த சாமி கொடுத்த வரத்துக்குக் கொஞ்சம் கொசுறையும் கொடுக்குறாப்புல. ரித்தேஸூம் ஒடனே ஒரு ரண்டாயிரம் ரூவா நோட்டெ எடுத்து, "அப்பிடியே ஒன் டாட்டருக்கு இதுலயும் ஒரு டிரெஸ் எடுத்துக்கோ!"ன்னாரு ஒண்ண வாங்குனா ஒண்ணு இலவசம்ங்றதப் போல ஒண்ண கொடுத்தா இன்னொண்ணையும் கூட்டிக் கொடுக்கணும்ங்றாப்புல.

            "அம்மா எப்பிடிய்யா இருக்காங்கய்யா?"ன்னாம் விகடு ரித்தேஸ்ஸப் பாத்து. மாட்டுக்கார்ரேம் மாய்ஞ்சு மாய்ஞ்சு புல்லறுத்துப் போட்டாலும் மாடு என்னவோ அப்பான்னு கத்தாம அம்மான்னுத்தாம் கத்தும் போலருக்குன்னு நெனைச்சாப்புல விகடு கேட்டதெப் பாத்து லேசா ஒரு சிரிப்பெ சிரிச்சிக்கிட்டாரு ரித்தேஸ். கண்ண மூடி ஒரு நிமிஷம் யோசிச்சவரு நேத்திய சுருக்குனாப்புல, "ஒன்னயப் பத்திக் கேப்பா. நீ அவுட் ஆப் கவரேஜ் ஏரியாவுல போயிட்டதா சொல்வேம். அதாங் சரின்னு சொல்லுவா."ன்னாரு ரித்தேஸ் ஒரு காலத்துல ஒட்டிட்டு இருந்ததெ வுட்டுப்புட்டு ஒரு காலத்துல வெலகிப் போறதுதாம் நல்லதுங்றதெ ஒத்துக்கிடுறாப்புல.

            "இந்தக் கவர்ல எதுக்குப் பணம்?"ன்னு கவர்ரப் பிரிச்சிப் பாத்துட்டு விகடு கேட்டாம் நாம்ம ன்னா மொய் விருந்து நடத்தி மொய்யா வாங்குறேம்ங்றாப்புல.

            "கவுண்டருக்குன்னு ஒரு பாலிஸி இருக்குல்லடா! நல்ல பங்கா ரெகமெண்ட் பண்ணி வாங்கிப் போட்டு லாபம் வந்தா அதெ செஞ்சுக் கொடுத்தவங்களுக்கு பதிலுக்குக் கவுண்டரு எதாச்சும் செய்வாருல்லடா!"ன்னாரு குஞ்சு கவுண்டரு நன்றிக்கடனா இருந்தாலும் கடனெ தீத்துப்புட்டாத்தாம் நல்லதுங்றாப்புல.

            "கவுண்டரே! அவ்வேம் மார்க்கெட்டெ வுட்டுப் போயி ஏகப்பட்ட வருஷமாவப் போவுது! அதாங் ஒண்ணும் புரியாம முழிக்கிறாம். கோபித்தாம் சொன்னாம்லா மார்கெட்டுப் பக்கமே எட்டிப் பாக்கறதில்லன்னு!"ன்னாரு ரித்தேஸ் படிச்சதெ மறந்தவேம்கிட்டெ அதெ ஞாபவப்படுத்தாம மேக்கொண்டு பாடத்தெ நடத்தக் கூடாதுங்றாப்புல.

            "அதாம்டா! நீயி கூத்தாநல்லூர்ல பிராஞ்சுப் போட்டு ஒமக்கும் நமக்கும் குத்தலாயிப் போயி, ஒன்ற மொறெ சரின்னு ஆனப் பெற்பாடு நமக்கு ஒரு எக்ஸ்ட்ரா அக்கெளண்ட் பண்ணி அதுல ஐபி செக்யூரிட்டீஸ், இந்தியா இன்போலைன், வோக்கார்ட பார்மா, டாட்டா எலக்ஸின்னு ஸ்டாக்ஸ்ச வாங்கிப் போட்டு போர்ட்போலியோ பண்ணி வுட்டீயே? ஞாபவம் இருக்கா? அதுவும் மறந்துப் போச்சாடா?"ன்னாரு குஞ்சு கவுண்டரு பாடம் கத்துக்கிட்டதெ மறக்கலாம் சைக்கிளு கத்துக்கிட்டெதையுமா மறப்பாம்ங்றாப்புல.

            "ஏழு ரூபாய்க்கு வாங்கிப் போட்ட ஐபி செக்யூரிட்டீஸ் இன்னிக்கு ஐபி வென்சர்ங்ற பேர்ல முந்நூத்து எழுவதுக்குப் போவுது. ஐம்பத்து எட்டுல வாங்கிப் போட்ட இந்தியா இன்போலைன் ஐஐஎப்எல்ங்ற பேர்ல எழுநூத்து நாப்பதுலப் போவுது. வோக்கார்ட் நூத்து எம்பதுல வாங்குனது ஆயிரத்து எண்ணூத்து. நூத்து இருவதுல வாங்குனா டாட்டா எல்க்ஸி ஆயிரத்து எரநூத்து! அதாங் கெளண்டரு மரியாதெ பண்ணுறாரு!"ன்னாரு ரித்தேஸ் கவுண்டரு போட்ட கோட்டுக்கு ரோட்டப் போடுறாப்புல.

            "அப்போ நாம்ம எஞ்ஞ யம்மா அக்கெளண்ட்ல வாங்கிப் போட்ட ஸ்டாக்கும் ஏறித்தாம் இருக்கும்லா?"ன்னாம் விகடு ஒரு சோறு பதமா இருந்தா ஒரு பானைச் சோறும் பதமாத்தாம் இருக்குமான்னு சந்தேவப்படுறாப்புல.

            "அதத்தாம்னடா சொல்லிட்டு இருக்காரு! கோபி ஆபீஸ்ல இருந்தாம்ன்னா போன அடிச்சிட்டுப் போடா! நல்ல ரேட்டு வர்றப்பயே வித்துப் போடணும்டா! ஆனெ குதிரெ வெல வாரும்ன்னு நெனைச்சிக்கிட்டு, பெறவு வெல எறங்கிப் போச்சுதுன்னா உள்ளதும் போச்சு நொள்ளக் கண்ணான்னு நின்றக் கூடாதுல்லோ!"ன்னாரு குஞ்சு கவுண்டரு கமலாலயம் கடலு தண்ணியில நெரம்பி கல்லுத்தேரு ஓடும்ன்னு காத்துக்கிட்டே இருந்துடக் கூடாதுங்றாப்புல.

            "நமக்குத் தெரியாது மொதலாளி!"ன்னாம் விகடு என்னென்னவோ நடந்திருக்கு எதுவும் தம் புத்திக்குத் தெரியாமப் போச்சுங்றாப்புல.

            "எல்லாந் நேரம்டா! அதெ சொல்றதுக்குன்னே வார்றோம். நீயி எதுத்தாப்புல வந்துத் தொலையுறேடா! அதெ வித்துப் போட்டு எதாச்சும் சொத்துச் சொகத்தெ வாங்கிப் போடு! மகாலட்சுமிய வேறல்லா பெத்துப் போட்டுருக்கே! சொத்தெச் சேத்தாவணும். அத்துச் செரி! வந்தக் காரியம் ஆச்சுல்லா! ராயல் பார்க்க காசீஸ் இன்னுன்னு மாத்திட்டதா கேள்விப்பட்டேம். வாயேம் சின்னதா ஒரு பார்ட்டி வெச்சிட்டுக் கெளம்பிடுறேம்டா!"ன்னாரு குஞ்சு கவுண்டரு வழியிலப் பாத்தாலும் வாயி நனைக்காம போவ வாண்டாம்ங்றாப்புல.

            "வாணாம் மொதலாளி! நாம்ம மூணு வேள சாப்பாட்டெத் தவுர வேற எதுவும் எடையில சாப்புடறது கெடையாது!"ன்னாம் விகடு பசியாறுன சிங்கத்துக்குப் பக்கத்துல அடிச்சித் திங்க பத்து மாடு நின்னாலும் அதெ ஒண்ணும் செய்யாதுங்றாப்புல.

            "பாத்தா தெரியுதுடா? இத்து என்னா ஒடம்பா? திங்குற வயசுல திங்காம பெறவு எந்த வயசுலடா திங்கப் போறே? ஒட்டக்குச்சி தேவலாம் போலருக்குடா. ஒங்கிட்டெப் பேசி காரியத்துக்கு ஆவாது. நீயி போறப் போக்குல போ! நாங்கப் போற போக்குலயே போறோம். அதாங் எல்லாத்துக்கும் நல்லது!"ன்னாரு குஞ்சு கவுண்டரு தண்ணியில போற படகெ தரையில ஓட வைக்க முடியாதுங்றாப்புல.

            "பை தி வே விகடு! ஒன்னயப் பாத்து அடையாளம் கண்டுபிடிச்சது நாம்மதாம். அதெ கவுண்டர்கிட்டெ சொன்னதும் அவர்தாம் கார்ர வேகமா கொண்டுப் போயி பயமுறுத்துறாப்புல நிப்பாட்ட சொன்னாரு. இவருக்குக் குஞ்சு கவுண்டர்ன்னு பேரு வெச்சதுக்குக் கொழந்தெ கவுண்டர்ன்னு பேர்ர வெச்சிருக்கலாம்!"ன்னாரு ரித்தேஸ் மீசெ மொளைச்சாலும் கொழந்தத்தனமான ஆசெ சில பேத்துக்குப் போவாதுங்றாப்புல.

            "குஞ்சும்ங்றதும் கொழந்தெங்ற அர்த்தத்துலத்தாம்யா வாரும்!"ன்னாம் விகடு கொழந்தை மனசுள்ளவங்களுக்குக் கொழந்த சாமின்னுத்தாம் பேரு வைப்பாங்கங்றாப்புல.

            "பேச ஆரம்பிச்சிட்டாம்! நேரம் போவுறது தெரியாது. எங்கப் போவணும்ன்னு சொல்லு. கார்ல எறக்கி வுட்டுக்கிட்டுப் போயிக்கிட்டெ இருக்கேம்!"ன்னாரு குஞ்சு கவுண்டரு மனுஷக் கதெய பேச ஆரம்பிச்சா பொழுது போறது தெரியாதுங்றாப்புல.

            "ரொம்ப சந்தோஷங்கய்யா! நாம்ம நடந்தே போயிக்கிறேம்!"ன்னாம் விகடு அவசரத்துல கௌம்ப நிக்குறவங்ககிட்டெ ஆசுவாசமா வெசாரிச்சுக்கிட்டு இருக்கக் கூடாதுங்றாப்புல.

            "இவ்வேம் ஒருத்தெம்! புடிச்சா முயலுக்கு மூணே முக்கால் காலுன்னு நிப்பாம்! இவனெ எறக்கி வுட்டுப்புட்டு கோயம்புத்தூருக்கு கதெயெக் கட்டுவோம்!"ன்னாரு குஞ்சு கவுண்டரு ஒத்தப் புத்திக்காரனெ செருப்பால அடிச்சிச் சொன்னாலும் போற போக்குலத்தாம் போவாம்ங்றாப்புல.

            "கால் பண்ணு!"ன்னு சொல்லி ரித்தேஸ் விசிட்டிங் கார்டெ எடுத்து நீட்டுனாரு ஊரு மாறுனாலும் பழகுனவங்களோட தொடர்புல இருங்றாப்புல. "அப்பிடியே நம்மட கார்டெயும் எடுத்து நீட்டிப் போடுங்க!"ன்னாரு குஞ்சு கவுண்டரு பொண்ணுங்க புகுந்த வூட்டுக்குப் போனாலும் பொறந்த எடத்தெ நெனைப்புலயாச்சும் வெச்சிக்கிடணும்ங்றாப்புல. டிரைவரு கவுண்டரோட கார்ட எடுத்து நீட்டுனாரு நேர்ல வந்து பாக்க முடியாட்டியும் கார்டுல இருக்குற நம்பர்ல போன்ல பேசலாம்ங்றாப்புல.

            "ரொம்ப ரொம்ப நன்றிங்கய்யா!"ன்னாம் விகடு கைக்காசிக்கு வழியில்லாம்ம நிக்குறவேம்கிட்டெ பொதையலுக்கான பாதையக் காட்டிட்டுப் போறீங்களேங்றாப்புல.

            "கெளம்புறம்டா! ஒடம்பப் பாத்துக்கடா! என்றா ஒடம்பு இத்து? எலும்பும் தோலுந்தாம் இருக்கு! யோகி மாரில்லா இருக்காம்!"ன்னாரு குஞ்சு கவுண்டரு ஆஸ்தி கொறைஞ்சாலும் ஒடம்புல தேஜஸ் கொறையக் கூடாதுங்றாப்புல. அதுக்குச் சரிங்ற மாதிரிய தலைய ஆட்டிக்கிட்டு, விகடு கார்ர வுட்டு எறங்குனதும் அந்த ஆடிக் காரு அப்பிடியே ஒரு யு டர்ன் போட்டு திரும்புனுச்சு கையில கோமேகத்தப் போட்டுட்டுப் பறந்து போற பறவையப் போல. காரு வடக்கு வீதிய நோக்கி மாயவரம் ரூட்டைப் பிடிச்சிப் போவ ஆரம்பிச்சது வந்த வேலை முடிஞ்சா வந்த வழியே திரும்பணும்ங்றாப்புல.

*****

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை!

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை! ஔவைக்கு நூலறிவு மட்டும் கிடையாது. அவரது பட்டறிவுக்கு எல்லையே கிடையாது. ஒரு பெண்ணாகச் சுதந்த...