2 Mar 2021

வேகமாக வந்து நின்ற ஆடி கார்!

வேகமாக வந்து நின்ற ஆடி கார்!

செய்யு - 733

            ஓரமாத்தாம் நின்னு ஆழித்தேரைப் பாத்துட்டு அப்பிடியே நின்னுட்டு இருந்தாம் விகடு. அவ்வேம் மின்னாடி ரண்டு அடி தூரத்துல வேகமா வந்த ஒரு ஆடி காரு சட்டுன்னு சடர்ன் பிரேக் போட்டு நின்னுச்சு. தன்னெ மறந்து நின்னவனோட நெனைப்பெல்லாம் திரும்ப வந்தாப்புல ஒடம்பு ஒரு நொடி அப்பிடியே அதிர்ந்துப் போயி நின்னுச்சு. நல்லவேள பிரேக்கப் போட்டு நிப்பாட்டுனாம் காருக்கார்ரேம். இல்லன்னா நம்ம நெலமெ என்னாவுறது? கஷ்டத்துல இருக்குற ஒருத்தேம் நாட்டுல ஓரமா நின்னு கூட அந்தக் கஷ்டத்தெ மறந்துடக் கூடாது போலருக்கு. அதெ ஞாபவப் படுத்தி வுடுறாப்புல இப்பிடித்தாம் இன்னொரு கஷ்டம் வந்து அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கும் போலருக்குன்னு நெனைச்சவேம் ஓரமா வெலகி வேகு வேகுன்னு நடக்க ஆரம்பிச்சாம்.

            "என்றா இத்து காரு மேல வந்து மோதுறாப்புல நின்னுப்புட்டு காசு கொடுக்காம போயிக்கிட்டு இருக்கே? மோதிருந்தா காருக்குச் சேதாரமா ஆயிருக்குமல்லோ. அதுக்கான காசெ எடுத்து வெச்சுப்பட்டு அந்தாண்ட போடா! என்றா நெனைச்சிக்கிட்டு இருக்குறே ஒன்ற மனசுல?"ன்னு கார்ல எறங்கி வந்த ஒருத்தரு பின்னாடியிலேந்து விகடுவோட கையப் பிடிச்சி வம்புக்கு இழுக்குறாப்புல பேசுனாரு. இதென்னடா இது நேரங்கெட்ட நேரத்துல இப்பிடி ஒரு சோதனங்ற நெனைப்போட திரும்புன விகடுவுக்கு அப்பிடியே தூக்கி வாரிப் போட்டாப்புல இருந்துச்சு.

            "மொதலாளி!"ன்னாம் விகடு கையப் பிடிச்ச மனுஷர்ரப் பாத்ததும் எத்தனையோ வருஷத்துக்கு மின்னாடி படிச்ச ஆர்க்கிமிடிஸ் விதி சட்டுன்னு ஞாபவத்துக்கு வந்துப்புடுறாப்புல.

            "என்றா வெகடு எப்பிடிடா இருக்கே? கலியாணம் ஆயிடுச்சாம்ல! ஒரு பத்திரிகெய அனுப்பி வைக்காம போயிட்டீயேடா? அப்பிடி என்றா நாங்க ஒங்களுக்கு எதிரியா போயிட்டேம்? ஏம்டா இப்பிடிப் பண்டிக்கிட்டு அலையுறே?"ன்னாரு தொண்டாமுத்தூர் கேப்பிட்டலோட மொதலாளி குஞ்சுக் கவுண்டரு பழக்கத்துல உள்ளவங்கள விஷேத்துல ஒதுக்கக் கூடாதுங்றாப்புல.

            "நம்மளயெல்லாம் ஞாபவத்துல வெச்சிருப்பீயளாங்ற சந்தேவந்தாம் மொதலாளி!"ன்னாம் விகடு ஒசரத்துக்குப் போயிட்டே இருக்குறவங்களோட பார்வைக்குக் கீழ நிக்குற உருவங்க குட்டியா போயி ஒரு கட்டத்துல மறைஞ்சிப் போயிடும்ங்றாப்புல.

            "எப்பிடிடா ஒன்ற மறக்க முடியும்? திருவாரூரப் பத்தினப் பேச்சு வந்தா ஒன்றப் பேச்சு வர்றாம இருக்காது. அதென்னடா போனப் போட்டா நம்பரு போவ மாட்டேங்குது. நம்பர்ர மாத்திட்டீயோ? நம்பர்ர மாத்துனா பிராஞ்சு ஆபீஸூக்குச் சொல்லணுங்ற அறிவு இருக்காதாடா ஒனக்கு?"ன்னாரு குஞ்சு கவுண்டரு தொடர்பு எல்லைக்கு அப்பால தொலைஞ்சுப் போனவனெ எப்பிடித் தொடர்பு கொள்ளுறதுங்றாப்புல.

            அந்தக் கேள்விக்கு என்னத்தெ பதிலச் சொல்றதுன்னுப் புரியாம, "ரித்தேஸ் அய்யா செளரியமா இருக்காங்களா மொதலாளி?"ன்னாம் விகடு கடையில கடுகு இருக்கான்னு கேட்டா கடுகு இல்லன்னு சொல்லக் கூடாதுங்றத்துக்காக மொளகு இருக்குன்னு சொல்றாப்புல.

            "காருக்குள்ளத்தாம் இருக்காம் மனுஷம். வாரும்யா ஒரு வெளையாட்டுக் காட்டலாம்ன்னா நாம்ம ஒண்ணும் சின்ன புள்ளெ இல்லங்ற மாதிரிக்கு பெரிய மனுஷம் சிரிப்பு சிரிச்சாம் மனுஷம். செரித்தாம் போன்னு நாம்ம மட்டும் நலுங்காம எறங்கிட்டேம்டா! அது கெடக்குது வா! காருக்குள்ளார உக்காந்துப் பேசுவேம்! ஒன்னயப் பாக்கணும்ன்னுத்தாம் திருவாரூரு பிராஞ்சுல வெலாசத்தெ வாங்கிட்டுக் கெளம்பி வந்தா நீயி தேர்ர வேடிக்கெ பாத்துட்டு நின்னுகிட்டெ இருந்தே. நீயென்ன குஞ்சுக் குளுப்பானாடா? இப்பிடி மெதாந்துக்கிட்டுப் பாத்துக்கிட்டு நிக்கே? கொஞ்சம் தூரத்துல கார்ல வர்றப்பயே என்னடா திருவாரூர்ல ஒரு பயெ அதிசயமா தேர்ரப் பாத்துட்டு நிக்கானேன்னுப் பாத்தா நம்மட பயலா போயிட்டே. அதென்னடா இத்து திருவாரூர்லப் பொறந்துட்டு நீயே இந்தத் தேர்ர அம்புட்டு அதிசயமா பாத்துட்டு நின்னா அத்து என்றா ஞாயம்? எந்த ஊர்ல எடுக்கும்டா நீயி பண்டுற காரியம்?"ன்னாரு குஞ்சு கவுண்டரு பெத்தெடுத்தவே நெதமும் பாக்குற புள்ளைய என்னவோ அன்னிக்குத்தாம் அதிசயமா பாக்குறாப்புல பாக்குறீயேடாங்றாப்புல.

            "மொதலாளிக்குப் பேச்சு இன்னும் மாறல!"ன்னாம் விகடு வயசு ஏறுனாலும் கொரலு மாறாதுங்றாப்புல.

            "அதெப்பிடிடா மாறும்? கூடப் பொறந்ந பொறப்பல்லோ! ரத்தத்தோட ரத்தமா ஊறுனதாக்கும்டா!"ன்னாரு குஞ்சு கவுண்டரு எறைக்குற கெணறு எப்பவும் ஒரே மாரியா ஊறிட்டுத்தாம் இருக்கும்ங்றாப்புல. அவரு பேசிக்கிட்டெ கார்ர நெருங்குனதும் கார் டிரைவரு எறங்கி காரு கதவெத் தொறந்து விட்டாரு.

            முன் சீட்டுல ரித்தேஸ் உக்காந்திருந்தாரு நடக்குறதையெல்லாம் ஒரு கொழந்தையப் போல வேடிக்கெ பாத்தபடிக்கு. குஞ்சு கவுண்டரு பின் சீட்டுல உக்காந்ததும், விகடுவும் அவருக்குப் பின்னாடி அவரோட பக்கத்துல உக்காந்தாம். சட்டுன்னு காரு கதவெ மூடி டிரைவரும் காருக்குள்ள வந்து உக்காந்தாரு. ரித்தேஸ் பின்னாடி திரும்புனாப்புல விகடுவெப் பாத்து, "எப்பிடிப்பா இருக்கே? ஒரு போன் கால் எதுவுமே கிடையாது. நாங்களும் அடிக்கலாம்ன்னு அடிச்சா நம்பர் அவுட் ஆப் ஆர்டர். அப்பா சொல்லிட்டார்ன்னா ஷேர் மார்க்கெட்டயே அப்பிடியே மறந்துடுறதா? நல்ல புள்ளடா நீ?"ன்னாரு ரித்தேஸ் கொடுத்த வாக்குக்காகக் கத்துக்கிட்டெ வித்தையை வுட்டுப்புடக் கூடாதுங்றாப்புல.

            "கோபி சொன்னாம்ல! இந்நேரத்துக்குப் புள்ளயே பொறந்திருக்கும்ன்னு! என்றா புள்ளடா?"ன்னாரு குஞ்சுக் கவுண்டரு கலியாணம் ஆனவங்க கொழந்தெ பெத்துக்கிடாம இருப்பாங்களாங்றாப்புல.

            "பொம்பளப் புள்ள மொதலாளி!"ன்னாம் விகடு ஆயித்தாம் கொழந்தைக்கு அப்பங்காரனெ அடையாளம் காட்டணும்ன்னு சொல்லுவாங்களே அந்த வகைக்கு.

            "அதென்னடா பொம்பளப் புள்ளன்னு சொல்லிக்கிட்டு. மகாலட்சுமின்னு சொல்லணும்டா! எத்தனெ புள்ளடா?"ன்னாரு குஞ்சு கவுண்டரு பொறக்குற புள்ளெ மொத புள்ளெ பொம்பளைப் புள்ளையாத்தாம் பொறக்கணும்ன்னு கிராமத்துல பெருமையா சொல்லுறாப்புல.

            "ஒண்ணுதாங் மொதலாளி!"ன்னாம் விகடு ஒண்ணே போதுங்ற மனசோட அதாச்சி கண்ணு போல புருஷன் பொண்டாட்டி ரண்டு இருந்தாலும் வாயப் போல புள்ள ஒண்ணு இருந்தா போதும்ன்னு இருந்தாச்சுங்றாப்புல.

            "அப்பிடியே புள்ளைங்களா பெத்து வுட்டு வூடு முழுக்க கல கலன்னு ஒண்ணொண்ணும் அங்கிட்டு இங்கிட்டுன்னு ஓடணும்டா! அத்தென்னடா ஒத்தப் புள்ளே? அத்து வெள்ளாடணும்ன்னா கூட யாருகிட்டெ வெள்ளாடும்? ஒங்கிட்டெயும் ஒன்ற பொண்டாட்டிக்கிட்டயுமடா வெள்ளாடும்? ஏம்டா அப்பா ஆயில்லாம் செளரியந்தானடா? அவுங்களச் சித்தெ நேரம் சும்மா வுடக் கூடாதுடா. பேரப் புள்ளைங்களப் பாத்துக்கிறதையே வேலையா வைக்கணும்டா! இன்னும் செரியான வெவஸ்தெ கெட்ட பயலா இருக்கேயேடா!"ன்னாரு குஞ்சு கவுண்டரு வூடு கொள்ளாத அளவுக்குக் கொழந்தைகளப் பெத்து குறும்பப் பண்ண விடணும்ங்றாப்புல.

            "நாட்டோட சனத்தொகெப் பெருக்கத்தப் பாக்கணும் மொதலாளி?"ன்னாம் விகடு ஒண்ணு கூட எடுத்துக்கிடணும்ன்னு ஒவ்வொருத்தரும் நெனைச்சா பந்தியில பாதி பேருக்கு ஜிலேபி இருக்காதுங்றாப்புல.

            "பாத்தீயளா ரித்தேஸ்ஸூ! என்றப் பேச்சுப் பேசுறாம்? இவ்வேம் ரண்டு மூணு புள்ளையப் பெத்துக்கிடுறதாலத்தாம் நாட்டோட சனத்தொகெ அதிகமாயிடப் போவுது? கொறைச்சலா நாலு புள்ளையாவதுப் பெத்துக்கணும்டா! போயி அதுக்கான ஏற்பாட்ட பண்டுடா!"ன்னாரு குஞ்சு கவுண்டரு சிரிச்சிக்கிட்டெ ஊர்ல ஒருத்தெம் தண்ணிய ஊத்துனா ஒட்டுமொத்த பாலும் தண்ணியாயிடாதுங்றாப்புல.

            "இப்பிடி ஒவ்வொருத்தரும் நெனைச்சா நாட்டோட சனத்தொகெ நாலு மடங்கு அதிகமாயிடும் மொதலாளி!"ன்னாம் விகடு நாலு பங்குக்குச் சிலவெ பண்டிட்டு ஒரு பங்குக்குச் சம்பாதிச்சா கட்டுப்படியாகுமாங்றாப்புல.

            "கவுண்டரே! ஆளு இன்னும் மாறல. திருத்த முடியாது. கோடு போட்டு வாழ்ற கேஸூ! வூட்டுல வெச்சுப் பாக்குறதுக்குக் கோயிலுக்கு முன்னாடி வெச்சுப் பாத்தாச்சு. வூட்டுக்குப் போயித்தாம் பாக்கணுமா என்னா? காரியத்தெ முடிச்சிக் கெளம்புனம்ன்னா மாயவரம் பிராஞ்சையும் ஒரு விசிட் அடிச்சிட்டு விடியுறதுக்குள்ளார கோயம்புத்தூர்ல இருக்கலாம். நாளைக்கு டிரேடர்ஸ் மீட் ஒண்ணு இருக்கு!"ன்னாரு ரித்தேஸ் மாமனார்ரப் பாத்துப்புட்டா மாமனாரு வூட்டெ வுட்டுக் கௌம்பிப்புடணும்ங்றாப்புல.

            "அதுவும் செரித்தாம்! என்றா வெகடு! ஒன்ற வூட்டுப்பக்கம் வர்ற யோஜனையிலத்தாம் கெளம்புனது. ஒரு நாளுக்கு இருவத்து நாலு மணி நேரம் போத மாட்டேங்குதுடா! அத்தாம் பாத்துட்டேம்லா. கெளம்புறேம். இந்தா இதெப் புடி! இதெ கொடுத்துட்டு அப்பிடியே பாத்துட்டும் வந்துடுறதுன்னுத்தாம் கௌம்புனது!"ன்னு பக்கத்துல வெச்சிருந்த ஒரு கவர்ர எடுத்துக் கையிலத் திணிச்சாரு குஞ்சு கவுண்டரு கும்புடுற சாமி நேர்ல வந்து கேக்காம வரம் கொடுக்குறாப்புல. விகடு அது என்ன கவருங்றது புரியாம முழிச்சாம். அத்தோட தன்னோட பையிலேந்து ஒரு ரண்டாயிரம் ரூவா நோட்ட எடுத்துக் கொடுத்து, "இதுல மகாலெட்சுமிக்கு நல்ல உடுப்பா எடுத்துட்டுப் போடா!"ன்னாரு வரம் கொடுத்த சாமி கொடுத்த வரத்துக்குக் கொஞ்சம் கொசுறையும் கொடுக்குறாப்புல. ரித்தேஸூம் ஒடனே ஒரு ரண்டாயிரம் ரூவா நோட்டெ எடுத்து, "அப்பிடியே ஒன் டாட்டருக்கு இதுலயும் ஒரு டிரெஸ் எடுத்துக்கோ!"ன்னாரு ஒண்ண வாங்குனா ஒண்ணு இலவசம்ங்றதப் போல ஒண்ண கொடுத்தா இன்னொண்ணையும் கூட்டிக் கொடுக்கணும்ங்றாப்புல.

            "அம்மா எப்பிடிய்யா இருக்காங்கய்யா?"ன்னாம் விகடு ரித்தேஸ்ஸப் பாத்து. மாட்டுக்கார்ரேம் மாய்ஞ்சு மாய்ஞ்சு புல்லறுத்துப் போட்டாலும் மாடு என்னவோ அப்பான்னு கத்தாம அம்மான்னுத்தாம் கத்தும் போலருக்குன்னு நெனைச்சாப்புல விகடு கேட்டதெப் பாத்து லேசா ஒரு சிரிப்பெ சிரிச்சிக்கிட்டாரு ரித்தேஸ். கண்ண மூடி ஒரு நிமிஷம் யோசிச்சவரு நேத்திய சுருக்குனாப்புல, "ஒன்னயப் பத்திக் கேப்பா. நீ அவுட் ஆப் கவரேஜ் ஏரியாவுல போயிட்டதா சொல்வேம். அதாங் சரின்னு சொல்லுவா."ன்னாரு ரித்தேஸ் ஒரு காலத்துல ஒட்டிட்டு இருந்ததெ வுட்டுப்புட்டு ஒரு காலத்துல வெலகிப் போறதுதாம் நல்லதுங்றதெ ஒத்துக்கிடுறாப்புல.

            "இந்தக் கவர்ல எதுக்குப் பணம்?"ன்னு கவர்ரப் பிரிச்சிப் பாத்துட்டு விகடு கேட்டாம் நாம்ம ன்னா மொய் விருந்து நடத்தி மொய்யா வாங்குறேம்ங்றாப்புல.

            "கவுண்டருக்குன்னு ஒரு பாலிஸி இருக்குல்லடா! நல்ல பங்கா ரெகமெண்ட் பண்ணி வாங்கிப் போட்டு லாபம் வந்தா அதெ செஞ்சுக் கொடுத்தவங்களுக்கு பதிலுக்குக் கவுண்டரு எதாச்சும் செய்வாருல்லடா!"ன்னாரு குஞ்சு கவுண்டரு நன்றிக்கடனா இருந்தாலும் கடனெ தீத்துப்புட்டாத்தாம் நல்லதுங்றாப்புல.

            "கவுண்டரே! அவ்வேம் மார்க்கெட்டெ வுட்டுப் போயி ஏகப்பட்ட வருஷமாவப் போவுது! அதாங் ஒண்ணும் புரியாம முழிக்கிறாம். கோபித்தாம் சொன்னாம்லா மார்கெட்டுப் பக்கமே எட்டிப் பாக்கறதில்லன்னு!"ன்னாரு ரித்தேஸ் படிச்சதெ மறந்தவேம்கிட்டெ அதெ ஞாபவப்படுத்தாம மேக்கொண்டு பாடத்தெ நடத்தக் கூடாதுங்றாப்புல.

            "அதாம்டா! நீயி கூத்தாநல்லூர்ல பிராஞ்சுப் போட்டு ஒமக்கும் நமக்கும் குத்தலாயிப் போயி, ஒன்ற மொறெ சரின்னு ஆனப் பெற்பாடு நமக்கு ஒரு எக்ஸ்ட்ரா அக்கெளண்ட் பண்ணி அதுல ஐபி செக்யூரிட்டீஸ், இந்தியா இன்போலைன், வோக்கார்ட பார்மா, டாட்டா எலக்ஸின்னு ஸ்டாக்ஸ்ச வாங்கிப் போட்டு போர்ட்போலியோ பண்ணி வுட்டீயே? ஞாபவம் இருக்கா? அதுவும் மறந்துப் போச்சாடா?"ன்னாரு குஞ்சு கவுண்டரு பாடம் கத்துக்கிட்டதெ மறக்கலாம் சைக்கிளு கத்துக்கிட்டெதையுமா மறப்பாம்ங்றாப்புல.

            "ஏழு ரூபாய்க்கு வாங்கிப் போட்ட ஐபி செக்யூரிட்டீஸ் இன்னிக்கு ஐபி வென்சர்ங்ற பேர்ல முந்நூத்து எழுவதுக்குப் போவுது. ஐம்பத்து எட்டுல வாங்கிப் போட்ட இந்தியா இன்போலைன் ஐஐஎப்எல்ங்ற பேர்ல எழுநூத்து நாப்பதுலப் போவுது. வோக்கார்ட் நூத்து எம்பதுல வாங்குனது ஆயிரத்து எண்ணூத்து. நூத்து இருவதுல வாங்குனா டாட்டா எல்க்ஸி ஆயிரத்து எரநூத்து! அதாங் கெளண்டரு மரியாதெ பண்ணுறாரு!"ன்னாரு ரித்தேஸ் கவுண்டரு போட்ட கோட்டுக்கு ரோட்டப் போடுறாப்புல.

            "அப்போ நாம்ம எஞ்ஞ யம்மா அக்கெளண்ட்ல வாங்கிப் போட்ட ஸ்டாக்கும் ஏறித்தாம் இருக்கும்லா?"ன்னாம் விகடு ஒரு சோறு பதமா இருந்தா ஒரு பானைச் சோறும் பதமாத்தாம் இருக்குமான்னு சந்தேவப்படுறாப்புல.

            "அதத்தாம்னடா சொல்லிட்டு இருக்காரு! கோபி ஆபீஸ்ல இருந்தாம்ன்னா போன அடிச்சிட்டுப் போடா! நல்ல ரேட்டு வர்றப்பயே வித்துப் போடணும்டா! ஆனெ குதிரெ வெல வாரும்ன்னு நெனைச்சிக்கிட்டு, பெறவு வெல எறங்கிப் போச்சுதுன்னா உள்ளதும் போச்சு நொள்ளக் கண்ணான்னு நின்றக் கூடாதுல்லோ!"ன்னாரு குஞ்சு கவுண்டரு கமலாலயம் கடலு தண்ணியில நெரம்பி கல்லுத்தேரு ஓடும்ன்னு காத்துக்கிட்டே இருந்துடக் கூடாதுங்றாப்புல.

            "நமக்குத் தெரியாது மொதலாளி!"ன்னாம் விகடு என்னென்னவோ நடந்திருக்கு எதுவும் தம் புத்திக்குத் தெரியாமப் போச்சுங்றாப்புல.

            "எல்லாந் நேரம்டா! அதெ சொல்றதுக்குன்னே வார்றோம். நீயி எதுத்தாப்புல வந்துத் தொலையுறேடா! அதெ வித்துப் போட்டு எதாச்சும் சொத்துச் சொகத்தெ வாங்கிப் போடு! மகாலட்சுமிய வேறல்லா பெத்துப் போட்டுருக்கே! சொத்தெச் சேத்தாவணும். அத்துச் செரி! வந்தக் காரியம் ஆச்சுல்லா! ராயல் பார்க்க காசீஸ் இன்னுன்னு மாத்திட்டதா கேள்விப்பட்டேம். வாயேம் சின்னதா ஒரு பார்ட்டி வெச்சிட்டுக் கெளம்பிடுறேம்டா!"ன்னாரு குஞ்சு கவுண்டரு வழியிலப் பாத்தாலும் வாயி நனைக்காம போவ வாண்டாம்ங்றாப்புல.

            "வாணாம் மொதலாளி! நாம்ம மூணு வேள சாப்பாட்டெத் தவுர வேற எதுவும் எடையில சாப்புடறது கெடையாது!"ன்னாம் விகடு பசியாறுன சிங்கத்துக்குப் பக்கத்துல அடிச்சித் திங்க பத்து மாடு நின்னாலும் அதெ ஒண்ணும் செய்யாதுங்றாப்புல.

            "பாத்தா தெரியுதுடா? இத்து என்னா ஒடம்பா? திங்குற வயசுல திங்காம பெறவு எந்த வயசுலடா திங்கப் போறே? ஒட்டக்குச்சி தேவலாம் போலருக்குடா. ஒங்கிட்டெப் பேசி காரியத்துக்கு ஆவாது. நீயி போறப் போக்குல போ! நாங்கப் போற போக்குலயே போறோம். அதாங் எல்லாத்துக்கும் நல்லது!"ன்னாரு குஞ்சு கவுண்டரு தண்ணியில போற படகெ தரையில ஓட வைக்க முடியாதுங்றாப்புல.

            "பை தி வே விகடு! ஒன்னயப் பாத்து அடையாளம் கண்டுபிடிச்சது நாம்மதாம். அதெ கவுண்டர்கிட்டெ சொன்னதும் அவர்தாம் கார்ர வேகமா கொண்டுப் போயி பயமுறுத்துறாப்புல நிப்பாட்ட சொன்னாரு. இவருக்குக் குஞ்சு கவுண்டர்ன்னு பேரு வெச்சதுக்குக் கொழந்தெ கவுண்டர்ன்னு பேர்ர வெச்சிருக்கலாம்!"ன்னாரு ரித்தேஸ் மீசெ மொளைச்சாலும் கொழந்தத்தனமான ஆசெ சில பேத்துக்குப் போவாதுங்றாப்புல.

            "குஞ்சும்ங்றதும் கொழந்தெங்ற அர்த்தத்துலத்தாம்யா வாரும்!"ன்னாம் விகடு கொழந்தை மனசுள்ளவங்களுக்குக் கொழந்த சாமின்னுத்தாம் பேரு வைப்பாங்கங்றாப்புல.

            "பேச ஆரம்பிச்சிட்டாம்! நேரம் போவுறது தெரியாது. எங்கப் போவணும்ன்னு சொல்லு. கார்ல எறக்கி வுட்டுக்கிட்டுப் போயிக்கிட்டெ இருக்கேம்!"ன்னாரு குஞ்சு கவுண்டரு மனுஷக் கதெய பேச ஆரம்பிச்சா பொழுது போறது தெரியாதுங்றாப்புல.

            "ரொம்ப சந்தோஷங்கய்யா! நாம்ம நடந்தே போயிக்கிறேம்!"ன்னாம் விகடு அவசரத்துல கௌம்ப நிக்குறவங்ககிட்டெ ஆசுவாசமா வெசாரிச்சுக்கிட்டு இருக்கக் கூடாதுங்றாப்புல.

            "இவ்வேம் ஒருத்தெம்! புடிச்சா முயலுக்கு மூணே முக்கால் காலுன்னு நிப்பாம்! இவனெ எறக்கி வுட்டுப்புட்டு கோயம்புத்தூருக்கு கதெயெக் கட்டுவோம்!"ன்னாரு குஞ்சு கவுண்டரு ஒத்தப் புத்திக்காரனெ செருப்பால அடிச்சிச் சொன்னாலும் போற போக்குலத்தாம் போவாம்ங்றாப்புல.

            "கால் பண்ணு!"ன்னு சொல்லி ரித்தேஸ் விசிட்டிங் கார்டெ எடுத்து நீட்டுனாரு ஊரு மாறுனாலும் பழகுனவங்களோட தொடர்புல இருங்றாப்புல. "அப்பிடியே நம்மட கார்டெயும் எடுத்து நீட்டிப் போடுங்க!"ன்னாரு குஞ்சு கவுண்டரு பொண்ணுங்க புகுந்த வூட்டுக்குப் போனாலும் பொறந்த எடத்தெ நெனைப்புலயாச்சும் வெச்சிக்கிடணும்ங்றாப்புல. டிரைவரு கவுண்டரோட கார்ட எடுத்து நீட்டுனாரு நேர்ல வந்து பாக்க முடியாட்டியும் கார்டுல இருக்குற நம்பர்ல போன்ல பேசலாம்ங்றாப்புல.

            "ரொம்ப ரொம்ப நன்றிங்கய்யா!"ன்னாம் விகடு கைக்காசிக்கு வழியில்லாம்ம நிக்குறவேம்கிட்டெ பொதையலுக்கான பாதையக் காட்டிட்டுப் போறீங்களேங்றாப்புல.

            "கெளம்புறம்டா! ஒடம்பப் பாத்துக்கடா! என்றா ஒடம்பு இத்து? எலும்பும் தோலுந்தாம் இருக்கு! யோகி மாரில்லா இருக்காம்!"ன்னாரு குஞ்சு கவுண்டரு ஆஸ்தி கொறைஞ்சாலும் ஒடம்புல தேஜஸ் கொறையக் கூடாதுங்றாப்புல. அதுக்குச் சரிங்ற மாதிரிய தலைய ஆட்டிக்கிட்டு, விகடு கார்ர வுட்டு எறங்குனதும் அந்த ஆடிக் காரு அப்பிடியே ஒரு யு டர்ன் போட்டு திரும்புனுச்சு கையில கோமேகத்தப் போட்டுட்டுப் பறந்து போற பறவையப் போல. காரு வடக்கு வீதிய நோக்கி மாயவரம் ரூட்டைப் பிடிச்சிப் போவ ஆரம்பிச்சது வந்த வேலை முடிஞ்சா வந்த வழியே திரும்பணும்ங்றாப்புல.

*****

No comments:

Post a Comment

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...