4 Mar 2021

ஓடுற ஓட்டத்துல ஓடிக் கொண்டிருப்பவர்கள்!


 ஓடுற ஓட்டத்துல ஓடிக் கொண்டிருப்பவர்கள்!

செய்யு - 735

            2018 வது வருசம்.

செய்யுவோட கலியாணம் நடந்து முடிஞ்சு நாலு வருஷமாவப் போவுது. இந்த நாலு வருஷமா வழக்குகளும் நடந்துகிட்டெ இருக்கு. செய்யுவோட கலியாணத்துக்கு, வழக்க நடத்துறதுக்குன்னு வாங்குன கடன்ங்கள்ல இந்த நாலு வருஷத்துல அடைச்சது போவ, சொச்சம் பதினாறு லட்ச ரூவா பல வெதத்துலயும் அடைக்க வேண்டியதா இருந்துச்சு. பங்குச் சந்தையில எப்பவோ வாங்கிப் போட்ட பங்குகள இப்போ வித்த வகையில இருவது லட்சத்து எண்பத்தி அய்யாயிரம் சொச்சம் பணம் கெடைச்சது. அதெ வெச்சி பாங்கியில வாங்குன கடன், சொசைட்டியில வாங்குன கடன், யோகிபாய்கிட்டெ வாங்குன கடன், வாத்தியார்மார்கள்ட்ட கைமாத்தா வாங்குன காசி, சில்லுண்டிய அஞ்ஞன இஞ்ஞனன்னு வாங்கியிருந்த கடன்னு அத்தனைக் கடனையும் அடைச்சு முடிச்சாம் விகடு. அத்தோட அடவுல இருந்த நகைகளெயும் மீட்டு முடிச்சாம். விவசாயத்துல வுட்டுருந்த வயல்களையும் பணத்தெ கொடுத்து மீட்டுக் கொண்டாந்தாம்.

            எல்லாம் அடைச்சதுப் போவ கையில நாலரை லட்ச ரூவா கையில இருந்துச்சு. அந்த நேரம் திட்டையில ஆறரை மா நெலம் வெலைக்கு வந்துச்சு. அதெ அப்படியே நாலரை லட்ச ரூவாய் பணத்தோட குஞ்சு கவுண்டரு கொடுத்திருந்தப் பணத்தையும் சேத்துப் போட்டு வாங்கிப் போட்டாம். அத்தோட இன்னும் அஞ்சு மா நெலம் பம்பு செட்டோட அடுத்த ஆறு மாசத்துல வெலைக்கு வந்தப்போ சொசைட்டியில மூணு லட்ச ரூவாய்க்கு ஒரு லோனைப் போட்டு, பாங்கியில நாலு லட்ச ரூவாயில லோனைப் போட்டு அதையும் வாங்கிப் போட்டாம்.

சுப்பு வாத்தியாரின் ஓட்டம்

            சுப்பு வாத்தியாருக்கு மவளோட வெவகாரத்துல ஊரே தன்னெ கைவிட்டுப்புட்டதா ஒரு நெனைப்பு இருந்துச்சு. ஊருக்காரவுங்க மட்டும் சாதவமா மவளோட வெவகாரத்தெ முடிச்சி விட்டிருந்தா எப்பவோ தலை நிமுந்திருக்கலாங்ற கோவமும் அவரோட மனசுக்குள்ள ஒரு இருந்துச்சு. ஒரு சம்சாரியா ஊர்ல நெலத்தெ வெவசாயம் பண்ணாம முடியாம அடவுக்கு வுட்டுருந்தது கெளரவக் கொறைச்சலாவும் இருந்துச்சு. விகடு வாங்கிப் போட்ட நெலத்தோட ஏற்கனவே இருந்த நெலமும் சேந்தப்போ ஒரு வேலி நெலம் அவரோட கையிக்கு வெவசாயம் பண்ண வந்தப்போ அவரு எழந்திட்டிருந்தா நெனைச்சிருந்த அத்தனெ கெளரமும் திரும்ப வந்துட்டதா நெனைச்சாரு. அதெ உண்மெங்றாப்புல நெலம் வெச்சிருக்கிற வெவசாயிங்க சேந்துப் போடுற தலையாரிக் கூட்டத்துல சுப்பு வாத்தியார்ர திட்டைக் கிராமத்து வெவசாயச் சங்கத்தோட துணைத் தலைவரா போட்டாங்க. அதுல சுப்பு வாத்தியாருக்கு ஏக சந்தோஷம். அந்தச் சம்பவத்துக்குப் பெறவு சுப்பு வாத்தியாரு மிடுக்கா எந்நேரமும் வயல்லயே கெடக்க ஆரம்பிச்சாரு.

            சுப்பு வாத்தியாரு பம்பு செட்டுக்கு ஒரு நல்ல கொட்டாயப் போட்டாரு. விகடு வாங்கிப் போட்டிருந்த வயல்களும் ஏற்கனவே இருந்த வயலும் ஒட்டுனாப்புல ஒரே எடமா அமைஞ்சிப் போனதுல அத்தனையையும் சேத்தாப்புல வேலிய அடைச்சி வெள்ளா‍மெ பண்ண ஆரம்பிச்சாரு. நெல்லு வெவசாயம் பண்ணுறப்போ வெள்ளைப் பொன்னியைப் போட்டாரு. அதுக்கு ரசாயன உரமோ, ரசாயன மருந்தோ அடிக்காம சாண எருவ மட்டும் அடிச்சிப் பயிர் பண்ணாரு. நெல்லு வெவசாயம் முடிஞ்சா உளுந்தையும், பயிறையும், எள்ளையும் அடிச்சாரு. அதெ எடுத்து முடிஞ்சா பம்பு செட்டு இருக்குறதால திரும்ப வெள்ளைப் பொன்னியைப் போட்டு நாலைஞ்சு மாவுல கோடெ வெவசாயமா பண்ண ஆரம்பிச்சாரு.

            சுப்பு வாத்தியாரு இப்பிடி வெவசாயம் பண்டுற சங்கதிய வாத்தியார்மார்கள்கிட்டெ சந்திக்கிறப்போ விகடு பேசிட்டு இருந்தப்போ திருவாரூர்லேந்து ஸ்ரீதரன்ங்ற வாத்தியாரும், ஆர்குடியிலேந்து தமிழரசன்ங்ற வாத்தியாரும் ரசாயனம் போடாம பண்ணுற வெள்ளைப் பொன்னி நெல்லை அரிசியாக்கித் தந்தா கேக்குற ரூவாயத் தர்றோம்ன்னு சொல்லப் போவ, அந்தச் சங்கதிய விகடு சுப்பு வாத்தியார்கிட்டெ சொல்லப் போவ, சுப்பு வாத்தியாரு வெள்ளைப் பொன்னியை யேவாரிகிட்டெ போடுறதெ நிறுத்திப்புட்டு அதெ அவரே அவிச்சி, காய வெச்சி, அரைச்சி அரிசியாக்கி கிலோ அறுவது ரூவாய்க்குக் கொடுக்க ஆரம்பிச்சிட்டாரு. அந்த அரிசியக் கொண்டு போயி கொடுத்துட்டு காசிய வாங்கிட்டு வர்றது மட்டுந்தாம் விகடுவோட வேல. மித்த அத்தனெ வேலைகளும் சுப்பு வாத்தியாரோட வேலைய இருந்ததால அவருக்கு எந்நேரமும் எதாச்சும் வேல இருந்துகிட்டே இருந்துச்சு. 

            வெள்ளைப் பொன்னிய அவிச்சி அதெ அரிசியாக்கி முடிக்கிறதுக்குச் சுப்பு வாத்தியாருக்கு அஞ்சு நாளு ஆவும். ஒரு மூட்டெ நெல்லைத்தாம் அவிக்கப் போடுவாரு. அதெ அவரு ரண்டு கலம்பாரு. கலத்துக்கு பன்னெண்டு மரக்கா வீதம் ரண்டு கலம்ன்னா இருவத்து நாலு மரக்கா. அதெ சரியா அளந்து பத்தாயத்துலேந்து எடுத்தார்ன்னா நெல்ல சுத்தமா கருக்கா இல்லாம மொறத்தை வெச்சி கையால பொடைச்சி முடிப்பாரு. அதுக்கு ஒரு ரண்டு மணி நேரமாவது ஆவும். அந்த நெல்ல ஊற வைக்குறதுக்குன்னே ஆனைக்கா கொவள நாலு வெச்சிருக்காரு. அதுல கொட்டி தண்ணிய ஊத்தி பழைய வேட்டியால வேடு கட்டுனாப்புல கட்டி வெச்சிடுவாரு. ராத்திரி நேரந்தாம் சுப்பு வாத்தியாரு நெல்ல அவிக்கிற நேரம். ராத்திரிச் சாப்பாட்ட முடிச்சிட்டு ஒம்போது மணிக்கு மேலத்தாம் அவிக்க ஆரம்பிப்பாரு.

            நெல்லை அவிக்கிறதுக்குன்னே ஒரு அலுமினியா வட்டாவ வெச்சிருக்காரு. அதுல அஞ்சு மொறைக் கொட்டி அவிப்பாரு. அவிச்ச நெல்லை கொல்லைப் பக்கம் இருக்குற கொட்டாய்ல கொட்டி வெச்சி அத்தனெ கொவளைகளையும் அலம்பி முடிச்சிட்டுத்தாம் படுப்பாரு. அப்போ மணி ராத்திரி ரண்டு ஆயிருக்கும். அன்னிக்கு மட்டும் காத்தால ஏழு மணி வாக்குலதத்தாம் எழுந்திருப்பாரு. எழுந்திரிச்சார்ன்னா மொத வேலையா அவிச்சிக் கொட்டியிருக்கிற நெல்லைக் கொண்டு போயி மாடியில கொட்டி வுட்டு கிண்டி விட்டுடுவாரு. இந்த நெல்லை நெழல் வாடையில காயப் போடுறதுக்குன்னே மாடியச் சுத்திலும் நீல நெறத்துல இருக்குற டாட்டா தகர சீட்டுல செட்டப் போட்டுட்டாரு. மொத நாளு காய வைக்குறப்ப மட்டும் ஒரு நாளுக்கு நாலு தடவயாச்சும் நெல்ல காலால கிண்டி விட்டுட்டுக் கெடப்பாரு. சாயுங்காலம் அஞ்சு மணியான்னா போதும் காய வெச்ச நெல்ல குமிச்சி கொவளையில  கொட்டி தாம்பாளத்தப் போட்டு மேல ஒரு செங்கல்லப் போட்டு மூடி வெச்சிடுவாரு. இந்த வேலையச் செய்யலன்னா ராத்திரி நேரத்துல எலிகளும், பெருச்சாளிகளும் அத்தனெ நெல்லையும் வேட்டு வுட்டுப்புட்டுப் போயிடும்.

            இப்பிடி நெல்ல காய வைக்கிற வேலையச் சுப்பு வாத்தியாரு நாலு நாளுக்குச் செய்வாரு. அப்பத்தாம் நெல்ல அரைக்கிறப்போ இடியாதும்பாரு. அந்த நாலாவது நாளு சாயுங்காலமோ, அல்லது அஞ்சாவது நாளோத்தாம் மில்லுல நெல்ல அரைக்கிறதுக்குப் போவாரு. இதுக்குன்னே நெல்ல பதமா அரைக்கிற மில்ல அவரு மூலங்கட்டளெப் பக்கத்துல இருக்குற வேலுக்குடியில கண்டுபிடிச்சி வெச்சிருக்காரு. அங்கத்தாம் மெனக்கெட்டு ஏழு கிலோ மீட்டருக்கு டிவியெஸ் பிப்டியில வெச்சிக் கொண்டுப் போயி அரைச்சிக்கிட்டு வருவாரு. அந்த வேல முடிஞ்சதுன்னா அந்த அரிசியில இருவது கிலோவோ எடுத்துட்டுப் போயி திருவாரூரு வாத்தியாரு ஸ்ரீதரனுக்கும், இன்னொரு இருவது கிலோவோ எடுத்துட்டுப் போயி ஆர்குடி வாத்தியாரு தமிழரசன்கிட்டெயும் கொடுத்துட்டு காசிய வாங்கிட்டு அந்தக் காசியில அப்பிடியே அந்த மாசத்துக்கான மளிகெ சாமானுங்கள டவுன்லேந்து வாங்கிட்டு வந்துடுவாம் விகடு.

            வெவசாயம் பண்டுறவங்களுக்கு சித்த நேரம் ஓய்வுங்றதே இருக்காது. சதா எந்நேரத்துக்கும் எதாச்சும் பாத்துக்கிட்டெ இருக்கிறாப்புல இருக்கும். வெளையுற காலத்துல வயல்லயே பாத்துகிட்டுக் கெடக்கணும்ன்னா, வெளையாத காலத்துல வயல மட்டம் பண்ணி, சாண எருவையும், ஆட்டாம் புழுக்கெயையும் கெடைக்குற எடமாப் பாத்து அலைஞ்சி திரிஞ்சி கண்டுபிடிச்சி அதெ டிராக்டரோட டிப்பர்ல ஏத்தியாந்து வயல்ல எறக்கி, எரு கலைச்சி வுட்டு, வேலிய அப்பைக்கப்போ சரியா கட்டின்னு வேலைக்குக் கொறைவு இருக்காது. அது போவ வெச்சிருக்கிற வெதை நெல்லு, வெத உளுந்து, வெத பயிறு, வெத எள்ளு இதெல்லாம் எப்பிடி இருக்குதுன்னு மாசா மாசத்துக்கு ஒரு பார்வெ வெச்சிக்கிட்டெ இருக்கணும். தேவைப்பட்டா லேசா காய்ச்சலப் போட்டுத் திரும்ப கட்டி வைக்கணும். இத்தோட சுப்பு வாத்தியாருக்கு வெளைஞ்ச நெல்ல அரிசியாக்குற வேலையும் சேந்துக்கிட்டதால அவர்ர இப்போல்லாம் வூட்டுல இருக்குறவங்களே பாத்துப் பேச நேரம் கெடைக்கிறதுல. பம்பரமா சொழண்டுகிட்டுக் கெடக்குறாரு.

வெங்குவின் ஓட்டம்

            சுப்பு வாத்தியாரு அப்பிடின்னா வெங்கு வூட்டுக் கொல்லையில வாழைக் கட்டையப் போட்டு வாழைக் கொல்லைங்ற அளவுக்கு ஆக்கிப்புடுச்சு. கலியாணம், காது குத்தி, சடங்கு, கோயில் திருவிழான்னு பண்ணுறவங்க கட்டுறதுக்கு வாழை மரத்தெ வாங்கிட்டுப் போவ வந்துடுறாங்க. ஒரு வாழ மரம் முந்நூத்துன்னு ரண்டு மரம் ஆறுநூத்துக்கு எப்படியும் மாசத்துக்கு ஒரு சோடி மரம் வெல போறதெ வாங்கி பேத்தியாள்கிட்டெ கொடுத்து அதெ பத்திரமா வெச்சிக்கிச் சொல்றதுதாம் வெங்குவோட வேலன்னு ஆயிப் போச்சு. வாழக் கொல்லைக்குத் தண்ணிப் பாய்ச்சுறதோட இஞ்சி, மஞ்சளு, கீரெ, கத்திரி, மொளகா, வெண்டி, பொடலெ, கொத்தவரெ, வெள்ளரின்னு வெங்குப் பாட்டுக்குக் கறிகாய்கள போட்டுக்கிட்டு வூட்டுக் கொல்லையிலயும், எதுத்தாப்புல கெடக்குற கொல்லையிலயையுமா கெடக்குது. அதுக்கும் எந்நேரும் வேலையத்தாம் போவுது. கொல்லையில களை மண்டுறதெப் பத்திச் சொல்லவே வாணாம். அது பாட்டுக்கு மண்டிகிட்டெக் கெடக்குது. அதெ பாத்து அப்பைக்கப்போ புடுங்குறதும், தண்ணி வைக்கிறதும்ன்னு கொல்ல வேலையிலப் போவுது வெங்குவோட நாளு முழுக்க.

ஆயியின் ஓட்டம்

            ஆயிக்கு வூட்டு வேலைகளப் பாக்குறதும், பவ்வுப் பாப்பாவும் பாக்கறதும், அதெ படிக்க வைக்கிறதும்ன்னு நேரம் போயிக்கிட்டெ இருக்குது.

விகடுவின் ஓட்டம்

            விகடுவுக்குப் பள்ளியோடம் போறதும், பொத்தகம் படிக்கிறதும், ப்ளாக்ஸ்பாட்டுல எழுதுறதும்ன்னு நேரம் போயிக்கிட்டெ இருக்குது. அவ்வேம் இப்போ ரண்டு ப்ளாக்ல எழுதிட்டு இருக்காம். ஒண்ணு www.vikatabharathi.blogspot.com நீங்க இப்போ படிச்சிட்டு இருக்குற அவ்வேம் குடும்பக் கதையெ இந்த ப்ளாக்லத்தாம் படிச்சிட்டு இருக்கீங்க. இன்னொண்ணு www.teachervijayaraman.blogspot.com இதெ ஒரு அறிவுப் பகிர்தலுக்கான ப்ளாக்கா பண்டிட்டு இருக்காம்.

செய்யுவின் ஓட்டம்

            செய்யு வெவகாரத்து வழக்குக்காகக் கையெழுத்தப் போட்டுக் கொடுத்துட்டு வந்தவே ரொம்ப தீவிரமா படிக்க ஆரம்பிச்சிட்டா. ஒரு நாளு பிஹெச்டி என்ட்ரன்ஸ்ல தேறிட்டதாவும், தஞ்சாவூரு மாமன்னர் காலேஜ்ல கைய்டு கெடைச்சிட்டதாவும் சொல்லிட்டு ரொம்ப சந்தோஷமா இருந்தா. இனுமே தன்னெப் பத்தி யாரும் கவலப்பட வாணாம்ன்னும், பிஹெச்டிய முடிச்சிட்டு ஏதோ ஒரு காலேஜ்ல லெக்சரரா போயி அவளோட வாழ்க்கையெ அவ்வேப் பாத்துக்கிறதாவும் ரொம்ப நம்பிக்கையாச் சொன்னா. இப்போ பிஹெச்டிக்கான படிப்பு, அதுக்கான தீசிஸ் தயாரிப்புன்னு அவளோட நேரம் போயிக்கிட்டெ இருக்குது.

காலச் சக்கரத்தின் ஓட்டம்!

            யாரும் எதெப் பத்தியும் நெனைக்க முடியாத அளவுக்கு வாழ்க்கெ அது பாட்டுக்குச் சொழண்டு ஓட ஆரம்பிச்சது. ஒவ்வொருத்தருக்கும் வேலன்னா வேல எந்நேரமும் இருந்துகிட்டெ இருந்துச்சு. அந்த வேலைக கடந்துப் போன காலத்துல நடந்த எந்தக் காயத்தையோ, வேதனையையோ நெனைச்சுப் பாக்குறதுக்கான நேரத்தெ தரவே யில்ல. ஓடுற ஓட்டத்துல எல்லாரும் ஓடிக்கிட்டெ இருக்க வேண்டியதா இருந்துச்சு. காலச் சக்கரம் சொழண்டு ஓடுறப்போ புதுப்புது பாதைத்தாம் கண்ணுல தெரியுது. கடந்து வந்த பாதை கண்ணுலேந்து மறையுது.

*****

No comments:

Post a Comment

தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை!

தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை! கோடை விடுமுறையில் பெரிய நட்சத்திரங்களின் திரைப்படங்கள் வெளியாகாமல் இருந்ததுண்டா? கோடையில் அக்னி நட்சத்திரம் கூ...