முத்துன தேங்கா சாமிக்கு!
செய்யு - 736
ஆரம்பத்துல விகடு எழுதுனது இதுதான். அதாவது
கடைசியா எழுத வேண்டியதைத்தான் அவ்வேம் மொதல்ல எழுதுனாம். விசயம் அத்தோட முடிஞ்சிட்டுன்னுதான்
அவ்வேம் நெனைச்சான். ஏன்னா எழுத வேண்டியது அவ்வளவுதான். அதெ எழுதி முடிச்சிட்டுப் பெறவு
வேறென்ன இருக்குன்னு நெனைச்சப்போத்தான் எல்லாம் தலைகீழா மாற ஆரம்பிச்சிச்சு. எதைக்
கடைசியா வாலா முடியப் போவுதுன்னு நெனைச்சி எழுதுனானோ அதுலேந்து தலை மொளைச்சி ஒவ்வொண்ணா
வளர ஆரம்பிச்சிது. அதால மொத அத்தியாயமும், கடைசி அத்தியாமும் ஒரே மாதிரியாத்தாம் இருக்கும்.
அவ்வேன் மொதல்ல எழுதுன அந்த அத்தியாத்த நீங்களே படிச்சிப் பாருங்க. அது கடைசி அத்தியாயமா
போயி, அதிலேந்து மொத அத்தியாயம் எப்படி மொளைச்சதுன்னு ஒங்களுக்கேப் புரியும்.
வளர்ற வீடு
வெள்ளாம வெள்ளாமன்னு மட்டும் கெடக்குற
ஆளா சுப்பு வாத்தியாரு? வயல்ல வெள்ளாமய வளக்குறார்ன்னா, வூட்டு மனையில வூட்டையும் வூடு
வூடுன்னு கெடந்து வளத்துட்டுக் கெடக்குற ஆளு அவரு. பயிரு வளருதுங்றது மாதிரிக்கி வூடும்
வளருங்றதுக்கு சுப்பு வாத்தியாரு கட்டுன வூடுதாம் உதாரணம். இந்த ஒலகத்துல தாவரப் பொறப்பு
மட்டுந்தாம் சாவுற மட்டும் வளரும்பாங்க. மனுஷ பொறப்புக்கு அப்படி ஒரு வளர்ச்சி கெடையாது.
இந்த வூடு தாவரப் பொறப்பும் இல்ல, மனுஷப் பொறப்பும் இல்ல. வூட்டுக்குள்ள மனுஷப் பொறப்புங்க
இருக்கு. வெளியில தாவரப் பொறப்புங்க இருக்கு. அதுக்கு மத்தியிலத்தாம் இந்த வூடு இருக்கு.
இந்த வூட்டை சுப்பு வாத்தியாரு கட்டிக்கிட்டே இருக்காரு. ஒவ்வொரு காலத்திலேயும் இது
நீண்டுகிட்டே இருக்கு.
அறுநூறு சதுரத்துல கட்ட ஆரம்பிச்சி ரொம்ப
காலத்துக்கு பூச்சுப் பூசாம, சன்னலு கதவுக வைக்காம கெடந்த வீடு. பெறவு முன்னாடி போர்டிக்கோங்ற
பேர்ல கொஞ்சம் நீண்டுச்சு. நல்ல மச்சு வூட்டுக்குள்ள எப்படி வெச்சி சமைக்கிறதுன்னும்,
கேஸூ சிலிண்டர்ல கசிவு வந்தா என்னா பண்றதுன்னும் யோசிச்சி சமையலு கட்டுக்காக ரயிலு
ஓடு போட்டு பின்னாடி கொஞ்சம் நீண்டுச்சி. பாத்ரூம், டாய்லெட்டு கட்டுறேன்னு நீண்டப்போ
அதுக்கு மேற்கால ஒரு ரூமைப் போட்டு இன்னும் கொஞ்சம் நீண்டிச்சி. விகடுவுக்குக் கல்யாணம்
ஆன பிற்பாடு கொஞ்சம் இடப்புழக்கம் தேவைப்படுமேன்னு அதெத் தாண்டி ஒரு கூரை கொட்டாய்
நீண்டு, பிற்பாடு அது தகரசீட்டுப் போட்ட கொட்டாயா நீண்டுச்சி. வூட்டுக்குள் அடைசலு
ஒடிசாலா சாமானுங்க கெடக்குதுன்னேன்னு அதுக்குப் பிற்பாடும் கொஞ்சம் நீண்டு போயி,
அதுவும் பத்தாதுன்னு நெனைச்சி சுப்பு வாத்தியாரு அதெத் தாண்டியும் உரச் சாக்குள எடுத்து
படுதாவ தச்சிப் போட்டு பந்தலு மாதிரி நீட்டி விட்டு இன்னும் கொஞ்சம் வூட்டை நீட்டிருக்காரு.
இன்னும் நீட்டிக்கிட்டும் போவாரு.
இப்பிடி வூட்ட விரிவுப் பண்ணாதீயேன்னு
வூட்டுல உள்ள அத்தனெ பேரும் சொல்லியும் அவரு கேக்குறாப்புல யில்ல. வருஷத்துக்கு எதாச்சும்
ஒரு வேலைய வயலுக்கும், வூட்டுக்கும் செஞ்சிக்கிட்டு இருக்காரு. இந்த வூட்டப் பத்தி,
வூட்டச் சுத்தி வூட்டுக்குள்ளயும், வூட்டுக்கு வெளியிலயும் நடந்த சம்பவந்தங்கத்தாம்
அத்தனையும். யிப்போ கொல்லப் பக்கம் கீழே நல்லா சிமெண்டப் போட்டு உக்கார்ற மாதிரி
தோது பண்ணிருக்காரு. ஆரம்பத்துல ஏம் இந்த வேலையத்த வேலன்னு சொல்லிட்டுக் கெடந்த சனங்க
யிப்போ அந்த எடத்துல உக்காந்துதாம் சாயுங்காலமான பேசிக்கிட்டுக் கெடக்குதுங்க.
தெற்குப் பாத்த கொல்லை
கோடை வெக்கையா இருக்குற நேரத்துல தெக்கப்
பாத்த கொல்ல வாசப்படியில காத்து அள்ளுது. காத்து நல்லா சிலுசிலுன்னு ஆனா கொஞ்சம்
வெக்கைக் கலந்து வீசுனாலும் இதமா இருக்கு. வீட்டுக்கு மேக்கால காய்கறிச் செடிங்கப்
போட்டிருக்கு. அதுக்கு ஆளாளுக்குத் தண்ணிப் பிடிச்சி ஊத்துறது ஒரு வேல.
வெங்கு கையால வெதைப் போட்டு கத்திரி,
வெண்டை, கொத்தரை, அவரை, பரங்கி, சொரைன்னு எல்லாம் கெளம்பிக் கெடக்கு. ஆனாலும் அதுல
ஒண்ணு வெதைப் போடாம மிதிபாகலு செடிங்க மண்டிக் கெடக்குது. எதெ வெதப் போட்டு வளத்தோமோ,
அது கொஞ்சம் கொஞ்சமா கெளப்பிக் கொண்டார வேண்டிக் கிடக்கு. இந்த மிதிபாகலு செடிங்க
சும்மா காடு போலல்ல மண்டிக் கெடக்கு. அதுக்குள்ள மிதிபாவற்காயத் தேடிக் கண்டுபிடிச்சி
பறிக்கிறதுங்கறது ஒரு சவாலுதாம். கோழி ஒண்ணு அதோட குஞ்சுகள தன்னோட றெக்கைக்குள்ள
மறைச்சி வெச்சிருக்காப்புல இல்ல மறைச்சி வெச்சிருக்கு.
"ஏம்டாம்பி! இந்த மிதபாவால பறிச்சியாந்து
கறிகாயி பண்றதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுதுடா!" அப்பிடிங்கிது வெங்கு வேருல
ஊத்துன தண்ணிக்கு தென்னை மரத்து மேல ஏறித்தாம் தேங்காயப் பறிச்சி தேங்கா தண்ணிக் குடிக்கணும்ங்றாப்புல.
"இந்தச் சாக்குல எங்கள வெச்சிப் பறிக்கப்
பாக்குறீங்களா? அதல்லாம் முடியா. நம்மள வுட்டுடுங்க!"ங்றா வெங்கு தேடிட்ட வந்த
மருமவப் பொண்ணு ஆயி உக்காந்திருக்குற நேரத்துல அரிசியில இருக்குற கல்லப் பாத்துக்
கொடுன்னு வேல வாங்குறதெப் போல காரியம் ஆவப் பாக்குறீயளாங்றாப்புல.
"ஆளுக்கு ரண்டா பறிச்சா அல்லாடுறது
கொறையுந் தங்காச்சி!" அப்பிடிங்கிது வெங்கு ஆளுக்கொரு பிடி அரிசி கொண்டாந்தா
அல்லாத்துக்கும் கூட்டாஞ்சோறு சமைச்சிடலாம்ங்றாப்புல.
அப்பதாம் விகடு சின்ன வயசுல அவன் அக்கரையில
வெளையாண்ட, 'முத்துன தேங்கா சாமிக்கு!'ங்ற கதெய எடுத்து விட்டான். " அப்போ அக்கரையில
சோக்காளிங்க எல்லாம் சேர்ந்து முத்துன தேங்கா சாமிக்குன்னு சொல்லிட்டே அங்க இருக்குற
மிதிபாகலு செடியில பாகற்காய்கள பறிக்கணும். யாரு அதிகக் காய்களப் பறிக்கிறாங்களோ அவங்க
ஜெயிச்சவங்க. ஜெயிச்சவங்ககிட்ட மித்த எல்லாரும் பறிச்ச காய்களக் கொடுத்தடணும். அதாங்
போட்டி!" அப்பிடிங்றான் சின்ன புள்ளையில திருட்டு மாங்கா அடிச்சதெ வீர தீர பராக்கிரமமா
பெரிய வயசுல சொல்லிக்கிடுறாப்புல.
"இந்தப் வெள்ளாட்டுப் போட்டிகூட
நல்லா இருக்கே!" அப்பிடிங்றா ஆயி பாடிட்டு செய்யுறப்போ வேல நோவு தெரியாது, பேசிட்டு
நடக்குறப்போ பாத தூரம் தெரியாதுங்றாப்புல.
"அப்ப வாங்க வெளையாடலாம்!" அப்பிடிங்றா
பவ்வு பாப்பா சின்ன கொழந்தைக்கே இருக்குற உற்சாகத்தோட பசிக்குற வவுத்துக்கு சின்னவங்க,
பெரியவங்கன்னு வித்தியாசம் தெரியுமாங்றாப்புல.
"நமக்கும் மனசு அப்பைக்கப்போ ஒரு
மாரியாப் போயிடுது. நடந்துப் போன சம்பவங்க சில நேரத்துல நம்மளயும் அறியாம ஞாபவத்துல
வந்துக்கிட்டும் போயிக்கிட்டுத்தாம் இருக்குது. அத்தோட படிச்சிப் படிச்சும் சமயத்துல
மண்டெ காயுறாப்புல ஆயிடுது. இப்பிடி எதாச்சும் நாமள வெளையாண்டாத்தாம் கொஞ்சம் ஆசுவாசமா
இருக்கும் போலருக்கு. ச்சும்மா வெளையாண்டுத்தான் பாப்பமே!" அப்பிடிங்கிறா செய்யு
நாடவத்துக்கு இடையில கோமாளி வந்தாத்தாம் கலகலப்பா இருக்கும்ங்றாப்புல.
வாழெ மரத்துக்குத் தண்ணிய ஊத்திக்கிட்டுக்
கெடக்குற சுப்பு வாத்தியாரு மட்டும் இதெயெல்லாம் கண்டுக்கிடல. அவரு பாட்டுக்கு மேக்கால
ஒதுங்கி நிக்குற வாழெ மரங்களுக்குப் பைப்புலேந்து ரெண்டு கையிலுமா வாளியில தண்ணியப்
பிடிச்சிக் கொண்டு போயி ஊத்திக்கிட்டுக் கெடக்குறாரு.
இங்க மவன், மருமவ, மவள், பொண்டாட்டி,
பேத்தின்னு எல்லாருமா சேந்துட்டு முத்துன தேங்கா சாமி வெளையாட்ட வெளையாடுறாங்க. ஆளாளுக்கு
மிதிபாவலப் பறிக்கிறாங்க. அரை மணி நேரம் ஓடியிருக்கும். போதும் வெளையாட்டுன்னு சொல்லி
அவங்கவங்க பறிச்ச மிதிபாவல தனியா போட்டு எண்ணிப் பாக்குறாங்க.
அதுல செய்யு பறிச்ச மிதிபாவலுதான் அதிகமா
இருக்கு. மொத்த இருவத்தோரு மிதிபாவல பறிச்சிருக்கா. மித்தவங்க எல்லாம் பன்னெண்டு,
பதினாறு, பதினெட்டுன்னு ஏதோ ஒரு எண்ணிக்கையில பறிச்சிருக்காங்க. போட்டியோட நியதிப்படி
எல்லாரும் மிதிபாவல செய்யுட்ட கொடுக்குறாங்க. அவதாம் ஜெயிச்சா. கையில சேந்திருக்குற
எல்லாமும் பாகற்காயில்லா. ரொம்ப கசப்பால்லா இருக்கும். ஜெயிச்சாலும் கசக்குற காயியில்லா.
வாழ்க்கையும் அப்படித்தான் ஒரு வெளையாட்டுப்
போலருக்கு. பாகற்காய தேடுற வெளையாட்டு. நமக்குக் கெடைக்கற அனுபவங்க எல்லாம் அப்படித்தானே
இருக்கு. இருந்தாலும் பாவக்காயோட கசப்பு ஒடம்புக்கு நல்லதுன்னுதாம் ஊரு ஒலகத்துல சொல்றாங்க.
அது போலத்தாம் போலருக்கு நமக்குக் கெடைக்குற கசப்பான அனுபவங்களும்.
இனுமே அந்த பாகலுக எல்லாத்தையும் கறி சமைச்சிச்
சாப்புட்டு சீரணிச்சாகணும். கசப்பான அனுபவங்களயும் அப்படித்தாம் மனசுக்குள்ள பக்குவமாக்கிக்
கொண்டு போயி சீரணிச்சாகணும். வேற ஒண்ணும் வழியில்ல. இன்னும் நெறைய பாகற்காய்க கெடைச்சிட்டுத்தாம்
இருக்கும். நாம்ம சீரணிச்சுக்கிட்டுத்தாம் இருக்கணும்.
- இப்படித்தான் செய்யுங்ற இதெ எழுதுறதுக்கு
முன்னாடி விகடு ஆரம்பிச்சாம். பிற்பாடு இதெ பிடிச்சிக்கிட்டு முன்னாடிப் போவப் போவ
அது பாட்டுக்கு நீண்டுப் போயிடுச்சு. நடந்தது ஒவ்வொண்ணும் கண்டமேனிக்குச் சிக்குப்
பிடிச்சாப்புல ஞாபவத்துல வர ஆரம்பிச்சிடுச்சு.
இதுல வர்ற யாரும் பொய்யில்ல. அவங்களோட
பேர்க, ஊர்க மாறியிருக்கலாம். ஒரு சில பேரு இதுல செத்துப் போயிருக்கலாம். அவங்க உசுரோட
உலாவுன, உலாத்திக்கிட்ட மனுஷங்கத்தாம். ஆனா இவுங்களுக்குள்ள ஏம் இப்பிடியெல்லாம் நடக்குதுங்றதுக்கு
என்ன பதிலச் சொல்றது?
அவன் பேர் அவன் பெயரில்லை!
வாழ்க்கையில எது நடந்தாலும் நம்மால எதுவும்
பண்ண முடியாது, அதெ ஏத்துக்கிறத தவிர. அப்டி ஏத்துக்கிறப்ப அங்கேயிருந்த இன்னொண்ணு
ஏதாச்சிம் பொறக்காதாங்ற நம்பிக்கைத்தாம் நம்மள வாழ வெச்சிக்கிட்டு இருக்கு. இதுல சொல்றதுக்கு
ஒண்ணும் இல்ல. இன்னும் எழுதிகிட்டே இருக்குறதுக்கு விசயங்க நெறைய இருக்குத்தாம். கதைக்கும்,
வாழ்க்கைக்கும் எங்க முடிவு இருக்கு? ரெண்டு வருஷமாவது இருக்கும். விகடு பாட்டுக்கு
இதெ எழுதிக்கிட்டெ கெடக்குறது. இந்த வூட்டுலத்தாம் யாரு எதெ செஞ்சாலும் அதெ கண்டுக்கிடாத
மனநெல உண்டாகிப் போச்சே. அவுங்கவுங்க அவுங்கவுங்க வேலயப் பாக்குறதே வேலன்னு கெடக்குறாங்க.
வாரத்துல சில நாட்கள்ல மட்டும் எப்பவாச்சும் எல்லாம் சேந்துக் கொல்லப் பக்கம் உக்காந்து
பேசுறதும், முத்துன தேங்கா சாமிக்கு வெளைாயடுறதும் நடந்தாத்தாம் உண்டு.
வெளையாண்டுக்கிட்டும் பேசிக்கிட்டும் இருக்குறப்பவே
விகடு பாட்டுக்குக் கழண்டுக்கிட்டு வந்து உக்காந்து எழுதிட்டு இருப்பாம். சுப்பு வாத்தியாரு
எதாச்சும் வேலையில இருந்தாலும் இதெ கவனிச்சிக்கிட்டுத்தாம் இருக்காரு. ரொம்ப நாளு
கவனிச்சவரு ஒரு நாளு இவ்வேம் வந்து உக்காந்து அவ்வேம் பாட்டுக்குப் பண்ணிட்டு இருக்குறதப்
பாத்துக் கேட்டாரு.
"ன்னடாம்பீ! இப்பிடி பொழுதேனைக்கும்
கம்ப்யூட்டர்ல போட்டு நொட்டு நொட்டுன்னு தட்டிக்கிட்டு இருக்கீயே?"ன்னாரு சுப்பு
வாத்தியாரு சொரிஞ்சவேம் கையும் தாளம் போடுறவேம் கையும் சும்மா இருக்காதுங்றாப்புல.
திடீர்ன்னு சுப்பு வாத்தியாரு பக்கத்துல
வந்து நின்னு இப்பிடி ஒரு கேள்வியக் கேப்பார்ன்னு விகடு எதிர்பார்க்கல. ஒரு நொடி எச்சில
முழுங்கிட்டு யோசிச்சவேம் அவனையும் அறியாம சொன்னாம், "ஒரு நாவல் படிச்சிட்டு
யிருக்கேம்பா?" தண்ணிய குடிக்கிறவேம் தண்ணிய சாப்பிட்டேம்ன்னு சொல்றாப்புல.
வழக்கமா இதெப் பத்தில்லாம் கேக்காத ஆளுதாம்
அவரு. அதால இத்தோட விட்டுட்டுப் போயிடுவார்ன்னு நெனைச்சாம் விகடு. அவரு மனசுக்குள்ள
என்னத்தெ நெனைச்சாரோ? சுப்பு வாத்தியாரு விடல. ஆர்வமா கேக்குறாப்புல கேட்டாரு. "ன்னடா நாவல் அத்து? யாருடா எழுதுனது?"ன்னாரு
அதிசயமா கிரிக்கெட்டுப் பிடிக்காத ஆளு திடுதிப்புன்னு கிரிக்கெட்டு ஸ்கோரு என்னான்னு
கேக்குறாப்புல.
இதென்னடா இத்து அதிசயமா யிப்படி நோண்டிக்
கேக்குறாரேன்னு நெனைச்சாம் விகடு. இதெ எப்பிடிச் சொல்றதுன்னு கொஞ்சம் தயங்குனவேம்
சொல்லித்தாம் பாப்பேம்ன்னு சொன்னாம், "செய்யுங்ற நாவல்ப்பா! விகடபாரதிங்ற ஒருத்தெம்
எழுதிருக்காம்பா!" நாட்டுல இப்போ நாவல் படிக்கிறதுதாம் பழக்கமாயிக் கெடக்குங்றாப்புல
"பாரதின்னா அத்து ஒருத்தர்தாம்டா!
அத்து சுப்புரமணிய பாரதி! இப்பிடி ஆளாளுக்கு பாரதின்னு பேர்ர வெச்சிட்டுத் திரியுறானுவோ?"ன்னு
சலிப்பா சொன்னாரு சுப்பு வாத்தியாரு பட்டு வேட்டியக் கட்டிப்புட்டா மாப்புள்ளையா ஆயிட
முடியுமாங்றாப்புல. சொல்லிட்டு, "அத்தென்னடாம்பீ! நெதமும் பாக்குறேம், ஒரு நாளு
வுடாம இப்பிடி கம்ப்யூட்டரு மின்னாடி உக்காந்துகிட்டு அப்பிடி என்ன எழுதிருக்குன்னு
வேல மெனக்கெட்டு இப்பிடி மாஞ்சி மாஞ்சி படிச்சிட்டு இருக்கே?"ன்னாரு வேலையத்த
சாப்பாட்டு ராமேன் வெறும் வாய்யப் போட்டு மெல்லுறாப்புலங்றாப்புல.
"சுப்பு வாத்தியாருன்னு ஒருத்தர்ப்பா!
அவருக்கு விகடுன்னு ஒரு மவ்வேம்! செய்யுன்னு ஒரு மவ்வே! அவங்களப் பத்தின குடும்பக்
கதைப்பா! "ன்னாம் விகடு படபடன்னு ஒரு ஊர்லன்னு கதெயெ சொல்ல ஆரம்பிக்கிறவேம் போல.
"நீயி ஒரு ஆளுடாம்பீ! நம்ம குடும்பக்
கதெயே பெருங்கதெடாம்பீ! அதெ வுட்டுப்புட்டு நீயி இன்னொரு குடும்பத்துக் கதெய படிச்சிட்டு
இருக்கீயாடாம்பீ?வேலையத்த வேல. வேற வேல இல்லடாம்பீ ஒனக்கு!"ன்னு சொல்லிட்டுச்
சட்டுன்னு ஆர்வமெல்லாம் வடிஞ்சாப்புல சலிச்சிப் போயி அந்தாண்ட போயிட்டாரு சுப்பு
வாத்தியாரு தண்ணியில இருக்குற தாமரை அதோட ஒட்டிக்காதுங்றாப்புல.
சுப்பு வாத்தியாருன்னு அவரோட பேர்ர சொல்லியும்,
அவரோட மகன்னு விகடுவோட பேர்ர சொல்லியும் இத்து அவரோட குடும்பத்துக் கதைங்றது அவருக்குத்
தெரியலையான்னுத்தானே கேக்குறீங்க?
அவருக்குத் தெரியாது. ஏன்னா அவரோட பேரு
சுப்பு வாத்தியாரு கெடையாது. பாலசுப்பிரமணியன். அதெ எழுதுன விகடுவோ அல்லது விகடபாரதியோ
விகடபாரதியும் கெடையாது. அவ்வேம் பேரு விஜயராமன்.
பேர்களையும், எடங்களையும், தெசைகளையும்
மாத்தி மாத்தில்லா எழுதி வெச்சிருக்காம் விகடு. எந்த ஊர்ல ஒலகத்துல தேடுனாலும் இந்த
மனுஷங்களக் கண்டுபிடிக்கிறதோ, எந்தத் தெசையில் தேடுனாலும் இதோட வரைபடம் அறிஞ்சிக்கிறதோ
கஷ்டம்தாம்.
இந்த ரகசியம் இதுவரைக்கும் இதெ எழுதுன
விகடபாரதிக்கும், இப்போ இதெ வாசிச்ச ஒங்களுக்கும்தாம் தெரியும். இந்த ரகசியம் அப்பிடியே
இருக்கட்டும்! அப்பிடியே இருந்துட்டுப் போவட்டும்! இந்த ரகசியத்தக் காப்பாத்திக் கொடுப்பீங்கன்னு
நம்புறேன்.
அன்புடன்,
விகடபாரதி
*****
No comments:
Post a Comment