3 Mar 2021

அடேங்கப்பா பங்குகள்!

அடேங்கப்பா பங்குகள்!

செய்யு - 734

            அய்யப்ப மாதவன்கிட்டெ கட்டுகள கொடுக்குறதுக்கு மின்னாடி விகடு நேரா வடக்கு வீதியில மாறியிருந்த தொண்டாமுத்தூர் கேப்பிட்டல் ஆபீஸூக்கு போனாம். கோபி மட்டும் ஆபீஸ்ல வூட்டுக்குக் கெளம்புற நெலையில இருந்தாப்ல. விகடுவப் பாத்ததும் சட்டுன்னுப் புரிஞ்சிக்கிட்டாப்ல.

            "என்னப்பா இத்து? மார்க்கெட்டுப் பக்கம் வர்றாத ஆளுங்க எல்லாம் இந்தப் பக்கம் எட்டிப் பாக்குது? கொஞ்ச நேரத்துக்கு மின்னாடித்தாம்பா மொதலாளி வந்து போன் நம்பர், அட்ரஸ் கேட்டு ஒம்மடப் பாக்க கெளம்புனாருப்பா! அவுங்க அஞ்ஞப் போவ, நீயென்னப்பா இஞ்ஞ வந்து நிக்குறே?"ன்னாப்புல கோபி உறவுக்காரனெ தேடி அவ்வேம் ஊருக்குப் போனா உறவுக்கார்ரேன் என்னான்னா தேடிப் போறவேம் வூட்டு மின்னாடி வந்து நிக்குறாமேங்றாப்புல.

            "தேரடியில வெச்சுப் பாத்துட்டேம் கோபி!"ன்னாம் விகடு தேடி வந்தவங்கள வழியில வெச்சு பாத்துட்டேம்ங்றாப்புல.

            "மொதலாளி கையில கவர்ல்லாம் இருந்துச்சு. நீயி மார்க்கெட்டுல இருக்கீயாப்பா? இல்லையாப்பா?"ன்னாப்புல கோபி வானம் கருக்குற தெசைய வெச்சு பெய்யுற மழை பெய்யுமா பெய்யாதாங்றதெ உத்தேசிக்குறாப்புல.

            "சுத்தமா மார்க்கெட்டெ மறந்துப் போச்சு. யப்பாவுக்கு இத்துச் சுத்தமாப் பிடிக்கல. இதுலேந்து வெட்டி வுட்டப்பவே கண்டிச்சு வுட்டதுதாம். பெறவு வாத்தியாரு வேலைக்கு வந்த பெறவு இந்தப் பக்கம் தலெ வெச்சுக் கூட படுக்கக் கூடாதுன்னுட்டாவோ! இதுல அம்மா பேர்ல கணக்கு இருக்கு, அப்போ பிராஞ்சு கணக்கு முடிச்சப்போ வந்த பணத்துல வாங்கிப் போட்டது. வாங்கிப் போட்டது போட்டதுதாம். வாங்குன பங்குக கெடக்குங்ற ஞாபவமே மொதலாளியப் பாத்த பெற்பாடுதாங் வந்துச்சு! இப்போ அவரு சொல்லித்தாம் நாம்ம வாங்கிப் போட்ட பங்குக வெல ஏறிக் கெடக்குங்ற வெசயமே தெரிஞ்சிச்சு!"ன்னாம் விகடு பாக்குறவங்க சொல்றப்பத்தாம் தெரியுது மொகத்துல மீசெ அரும்புற வெசயமேங்றாப்புல.

            "வெல ஏறிக் கெடக்கா? அட ன்னா நேரத்துலப்பா அதெ வாங்குனே? இந்த மாதிரி மார்க்கெட்டுல ஏறி பணம் பாத்தது நம்ம பிராஞ்சுல இன்போஸிஸ் ‍ஷேர்ஸ்ஸ வாங்குன ஒரு ஆளுதாம்ப்பா! இப்போ அடுத்தது நீந்தாம்ப்பா!"ன்னாப்புல கோபி மவராசி கையால மண்ணுல வெதை வெதைச்சா மண்ணெல்லாம் பொன்னாயிடும்ங்றாப்புல.

            "யம்மா அக்கெளண்ட்ல இருக்குற பங்குகளோட மதிப்பப் பாக்கலாமா?"ன்னாம் விகடு வெளைஞ்சு கெடக்குற நெல்லு எத்தன கலம் தேறுங்றதெ தெரிசிக்கிட வேணுமேங்றாப்புல.

            "யிப்பத்தாம் சிஸ்டத்தையெல்லாம் ஆப் பண்ணிட்டுக் கெளம்புலாம்ன்னு இருந்தேம். அதால ன்னா ஒரு பிராஞ்சு மேனேஜரா இருந்தவரு கேக்குறப்ப பண்ணாம இருக்க முடியுமா?"ன்னு வேக வேகமா ஆப் பண்ணியிருந்த கம்ப்யூட்டர்ர ஆன் பண்ணாப்புல கோபி பட்டனெ தட்டுனா பட்டுன்னு வெவரத்தெத் தெரிஞ்சிக்கிடலாமேங்றாப்புல.

            "பெறவு பிராஞ்சுல எத்தனெ பேரு இருக்கீயே? யிப்போ எப்பிடிப் போயிட்டு இருக்கு?"ன்னாம் விகடு வெளிநாட்டுலேந்து வந்தவேம் உள்ளூரு நெலவரம் எப்பிடி இருக்குதுன்னு வெசாரிக்கிறாப்புல.

            "ரண்டே பேருதாங். மின்ன மாதிரி யில்ல யேவாரம். யிப்பத்தாம் செல்லுலயே டிரேடிங் பண்ணுற அளவுக்கு மொபைல் டிரேடிங்லாம் வந்துடுச்சு. யாரும் ஆபீஸ் வந்தெல்லாம் பெரிசா பண்டுறதில்ல. பழைய கேஸூங்கத்தாம் வருது. ஒன்லி ஆளு பிடிக்கிறது, அவுங்கள டிரேடிங்க பண்ண வைக்குறது, அதுக்கேத்தாப்புல வாட்ஸ்ப்புலயும், டெலிகிராம்லயும் டிரேடிங் கால்கள மேசேஜ் பண்ணுறது, ஆளுங்க பண்ணுற டிரேடிங்க மேனேஜ் பண்ணுறது. அவ்வளவுதாம் இப்போ பிராஞ்சுல நடக்குது. பிராஞ்சுல ரண்டு பேருன்னு சொன்னேம்ல. ஒண்ணு நாம்ம. இன்னொண்ணு சுபா. ஞாபவம் இருக்குல்லா?"ன்னாப்புல கோபி பல நாளு கழிச்சி வந்து பாக்குறப்போ வியப்பா இருக்குற ஊர்ரப் பத்தி வௌக்குறாப்புல.

            "சுபாவா? கலியாணம் ஆனதும் வேலைய வுட்டுட்டதா அப்பவே கேள்விப்பட்டேம்!"ன்னாம் விகடு சைவச் சாப்பாட்டெ வுட்டவுக திடீர்ன்னு சைவ சாப்பாட்டுக்கு மாறிட்டதா கேள்விப்படுறாப்புல வேலைய வுட்டவுக வேலையில சேந்துப்புட்டதா சொல்லுதீயேங்றாப்புல.

            "நாம்ம மட்டும் ன்னவாம்? நம்மள அடுத்த மேனேஜரா போடலங்ற கடுப்புல ஒயென்ஜிஸ்ஸிக்குக் காரு வெச்சு ஓட்டிட்டுக் கெடக்கலையா? நம்ம செட்டுப் போனதுக்குப் பெறவு பிராஞ்சு குட்டிச் சொவரா போயிடுச்சு. நீயி ஆரம்பிச்சி வெச்சில்லாப்பா கூத்தாநல்லூரு பிராஞ்சு. நீயி போன பெற்பாடு அதுல வுழுந்த அடியில மொதலாளி மெரண்டுடாப்புல. ரித்தேஸ் போன் மேல போன் அடிக்கிறாப்புல நமக்கு. திருவாரூரு பிராஞ்சும் அப்பிடி ஆயிடுமேங்ற பயம் வந்துடுச்சு. இவுங்கல்லாம் பயம் வந்தாத்தானே காரியத்துல எறங்குவாக. அந்தப் பயத்துல எப்பிடியோ பிராஞ்ச தக்க வெச்சிக்கிட்டா போதும்ன்னு நம்ம வூடு வரைக்கும் தேடி வந்துட்டாப்புல மொதலாளி. கவுண்டரு பேச்சுக்குச் சொல்லவா வேணும்? சர்க்கரைய அள்ளிக் கொட்டுறாப்புல பேசுறாரு. இத்தனெ நாளு இந்தப் பேச்செல்லாம் எங்கடா போச்சுன்னு நெனைச்சிக்கிட்டேம். இருந்தாலும் செரித்தாம் நம்ம மொதலாளியாச்சேன்னு மேனேஜரா போட்டாத்தாம் வரு‍வேம்ன்னேம். சம்பளத்தெ ரண்டாயிரம் கூட தரணணும்ன்னேம். எல்லாத்துக்கும் ஒரே நேரத்துல ஓக்கே கெடைக்கும்ன்னு நெனைக்கல. ஓக்கே ஆயிடுச்சு. வந்துட்டேம் மேனேஜரா. இஞ்ஞ மேனேஜரா வந்து டெர்மினல்ல போட்ட நெறைய பேரு மாறியாச்சு. புதுசு புதுசா ஆளுங்களப் போடுறதும், அதுங்க மாறிப் போறதுமா அதெ ஏம்ப்பா கேக்குறே? போன மாசந்தாம். ஒரு நாளு பாத்தா சுபா ஆபீஸூல்ல வந்து நிக்குது. வேலைக்கு வரட்டுமா கோபின்னுச்சு. சரின்னுட்டேம். அதோட ஹஸ்பெண்ட்டு வெளி நாட்டுல வே‍லை பாக்குறாப்புல. ஆம்பளப் புள்ளே ஒண்ணு. ஏழெட்டு வயசு இருக்கும். பையனெ பள்ளியோடத்துக்கு அனுப்புன பெறவு வூட்டுலயே இருக்க போரடிக்குது. அதாங் வேலைக்கு வரட்டுமானுச்சு. இஞ்ஞ அப்போ வேல பாத்தப் பொண்ணும் சரியில்ல. சரின்னு அதெ தூக்கிட்டுச் சுபாவப் போட்டாச்சு. பாரேம்ப்பா நேரத்த. நம்ம செட்டு அப்பிடியே ஒண்ணு சேருதுப்பா! நீயி ஒருத்தந்தாம் பாக்கி. நீயும் வந்துட்டீன்னா பழைய தொண்டாமுத்தூரு கேப்பிட்டலா ஆயிடும்ப்பா நம்ம பிராஞ்சு. நாம்மல்லாம் ஒண்ணா வேல பாத்த அந்த டையம் இருக்கே. அது ஒரு பொற்காலம்ப்பா!"ன்னாப்புல கோபி நேரம் காலம் கூடி வந்தா கலைஞ்சுப் போன மேகமெல்லாம் ஒண்ணா கூடிக்கிடும்ங்றாப்புல.

            "உண்மெதாம். இதுலயே கூட இருந்திருக்கலாம்!"ன்னாம் விகடு கொளத்தெ பிரிஞ்சு கெணத்துக்குப் போன தவளை கெணத்துலயே கெடக்க வேண்டியது ஆயிடுச்சுங்றாப்புல.

            "பெறவென்ன வந்துட வேண்டித்தானே?"ன்னாப்புல கோபி கெணத்துத் தவளைக்குக் கெணறு பிடிக்கலன்னா திரும்ப கொளத்துக்கு வந்துட வேண்டித்தானேங்றாப்புல.

            "இந்தப் பக்கம் இனுமெ தல வெச்சிப் படுக்குறதில்லன்னு யப்பாகிட்டெ சொல்லிட்டேம். யிப்போ கொஞ்சம் பணந் தேவ. அதாங் இதுல இருக்குற பணத்தெ எடுத்துப்புடலாம்ன்னு நெனைக்கிறேம். எவ்ளோ வேல்யூக்கு ஷேர்ஸ் இருக்குன்னு தெரிஞ்சிட்டா அதெ வித்துட்டு டாட்டா காட்டிடுவேம்!"ன்னாம் விகடு கெணத்துலயே இருந்துட்ட தவளைக்கு இனுமே கொளமும் பிடிக்காது, கடலும் பிடிக்காதுங்றாப்புல.

            "பாத்தீயாப்பா? வித்து இருக்குற காசியயல்லாம் சுருட்டி எடுத்துக்கிட்டுப் போப்பா! வாண்டாம்ன்னு சொல்லல. அதுக்காக இந்தப் பக்கம் வாராம இருந்திடாதே. அடிக்கடி வந்துட்டுப் போப்பா! நீயொண்ணும் மார்க்கெட்டுல யாவாரம் பண்ண வாணாம். வந்து மட்டும் பாத்துட்டுப் போ!"ன்னாப்புல கோபி ஆழக் கெணத்துல தவளை போல இருந்தாலும் வானத்தெ அடிக்கடி எட்டிப் பாத்துக்கிட்டெ இருங்றாப்புல.

            "அதுக்கென்ன?"ன்னாம் விகடு மல்லாக்க படுத்துட்டா அண்ணாந்து பாக்குறதுல கஷ்டம் ன்னா இருக்கப் போவுதுங்றாப்புல.

            "வந்துடுச்சுப்பா யம்மாவோட அக்கெளண்ட் டீட்டெய்ல்ஸ். அடேங்கப்பா நச்சுன்னு ஆறு ஸ்டாக்ஸ்தாம் வாங்கிப் போட்டிருக்கே. ஒவ்வொண்ணும் என்னமா ஏறிக் கெடக்கு. ஐபிவென்சர்ஸ் நாலாயிரத்து ஐநூத்து குவாண்டிட்டி, ஐஐஎப்பெல் ஆயிரத்து முந்நூத்து அம்பது குவாண்டிட்டி, ‍டெக் மஹிந்த்ரா டூ சிக்ஸ்டி எய்ட் குவாண்டிட்டிஸ், டாட்டா எல்க்ஸி தெளஸண்ட் குவாண்டிட்டிஸ், விஜயா பேங்க் தெளஸண்ட் குவாண்டிட்டிஸ்,  வோக்கார்ட் பார்மா திரி ஹண்டரட் எல்லாம் சேர்த்து இருபத்தொரு லட்ச சொச்சத்துக்கு ரூவாய்க்கு ஸ்டாக்ஸ் இருக்குப்பா!"ன்னாப்புல கோபி ஒத்த வயசுக் கழுதெ திரும்பப் பாக்குறப்போ ஏழு கழுதெ வயசுக்கு அது பாட்டுக்கு வளந்து நிக்குதுங்றாப்புல.

            "இருவத்தோரு லட்சமா?"ன்னு வாயப் பொளந்தாம் விகடு கண்ணு மூடி கண்ண தொறக்குறதுக்குள்ள பெத்த பொண்ணு மணப்பொண்ணா நிக்குதேங்றாப்புல.

            "நீயி வாங்கிப் போட்டதுதாம்ப்பா! எவ்ளோவுக்கு வாங்குனேன்னு ஞாபவம் இருக்கா?"ன்னாப்புல கோபி பொம்பளப் புள்ளைகளும் பங்குல போட்ட முதலீடும் அப்பிடித்தாம் வளந்து நிக்கும்ங்றாப்புல.

            "மூணு லட்சம்!"ன்னாம் விகடு முப்பது மூட்டெ நெல்லுக்கு வெதைச்சது மூணு மரக்கா கூட இருக்காதுங்றாப்புல.

            "அடேங்கப்பா! யப்போ வாயப் பொளக்குறதுல தப்பே யில்லப்பா! அத்துச் செரி எப்போ பார்ட்டி?"ன்னாப்புல கோபி புதுநெல்லு வெளைஞ்சா பொங்கலு வெச்சு ஆவணும்ங்றாப்புல.

            "யிப்பவே! யிந்த நொடியே!"ன்னு விகடு குஞ்சு கவுண்டரு கொடுத்த கவர்லேந்து ரண்டாயிரம் நோட்ட ஒண்ணு எடுத்து கோபிகிட்டெ நீட்டுனாம், இன்னொரு நோட்டெ எடுத்து இத்துச் சுபாவுக்குன்னு நீட்டுனாம் கொடுக்கணும்ன்னு நெனைக்கிறதெ யோசிக்காம கொடுத்துப்புடணும்ங்றாப்புல.

            "ஓ! குடும்பஸ்தன்னா ஆயிட்டே! அதால பார்ட்டிக்கெல்லாம் வர மாட்டேம், காசிய வாங்கிட்டு ஒஞ்ஞளுக்கு நீஞ்ஞளே பார்ட்டிய வெச்சிக்கோங்கடான்னு சொல்றே! அத்துச் செரி! எப்பிடியோ பார்ட்டிக்குப் பணம் வந்த வரைக்கும் சரித்தாம்!"ன்னாப்புல கோபி கொடுக்குறதெ எள்ளா கொடுத்தா ன்னா, எண்ணெய்யா ஆட்டிக் கொடுத்தா ன்னாங்றாப்புல.

            "நாம்ம இந்தப் பங்குகளையெல்லாம் விக்கணும்!"ன்னாம் விகடு கறி காயி முத்துனா சந்தையில வித்துப்புடணும்ங்றாப்புல.

            "ஏம்ப்பா? இப்போ விக்குறே? மார்க்கெட்டு நல்ல வெதமாப் போயிட்டு இருக்கு! கொஞ்சம் வெயிட் பண்ணு. இருவத்தோரு லட்சம் முப்பது லட்சமாப் போயிடும்!"ன்னாப்புல கோபி இன்னும் மரம் கொஞ்சம் பெருத்தா பெரிய மர வேலைக்கு ஆகுமேங்றாப்புல.

            "கடன் நம்மட கழுத்தெ நெரிக்குது. அதெ விட்டா அத்து முப்பது லட்சமாப் போயிடும்! அதெ எல்லாத்தையும் முடிச்சிடணும்ன்னு பாக்குறேம். ஒடனடியா விக்கணும். கடன்லேந்து மொதல்ல வெளியில வாரணும்!"ன்னாம் விகடு மொதல்ல வளக்கணுங்றதெ வுட கடனெ முடிக்கிறது முக்கியம்ங்றாப்புல.

            "இந்த வயசுல ஒனக்கென்னப்பா அம்புட்டுக் கடன்? மார்க்கெட்டுல யில்ல. இருந்தாலும் டிரேடிங் பண்ண மாட்டேம்பே. குடிக்க மாட்டே. கண்ட கண்ட தொடர்பும் கெடையாது. சூதாடவும் மாட்டே. கடனும் வாங்க மாட்டே. பெறவு எப்பிடிக் கடன் கடன்ங்றே? ஒருவேள பேங்க் லோன்னப் போட்ட ப்ளாட்டு வாங்கிப் போட்டீயா? யில்ல ஹெளசிங் லோன்ல வூட்டக் கட்டுனீயா? ஒண்ணுமே புரிய மாட்டேங்குதேப்பா!"ன்னாப்புல கோபி எறும்பு சொமக்குறதுன்னாலும் தன்னோட எடைக்கு எட்டு பங்குக்கு மேல எடையச் சொமக்காதுங்றாப்புல.

            விகடு நடந்தக் கதெயெ சொல்ல ஆரம்பிச்சாம். தங்காச்சிக்குக் கலியாணம் பண்ணி வைக்க ஆரம்பிச்சது, அதுக்காக சகட்டு மேனிக்குக் கடனெ வாங்க ஆரம்பிச்சிது, கலியாணத்துக்குப் பெறவு தங்காச்சி வூட்டுக்கு வந்தது, அவளுக்காகக் கோர்ட்டுல வழக்கப் போட்டு வதியழிஞ்சது, யிப்போ வக்கீலுக்கு ரெண்டாயீரம் ரூவாயக் கொடுக்க முடியாம, சட்டைப் பையில இருந்த ஐநூத்து ரூவாய நெனைச்சுக்கிட்டு, திருவாரூரு தேர்ரப் பாத்துட்டு நின்னது, குஞ்சு கவுண்டரு வந்ததுன்னு எல்லாத்தையும் சொல்லி முடிச்சாம்.

            "அப்பிடின்னா பணத்தெ எடுத்து எல்லாத்தையும் முடிச்சிட்டுப் பிரியா ஆயிடுப்பா! நேரத்தெப் பாரு! எந்த மார்க்கெட்டுல ஒன்னய இருக்கக் கூடாதுன்னு ஒஞ்ஞ யப்பா சொன்னாரோ அந்த மார்க்கெட்டுத்தாம் இன்னிக்கு ஒன்னய கை தூக்கி வுடுது. அதால மார்க்கெட்ட வுட்டுடாதப்பா. நீ பாட்டுக்கு யம்மா பேர்ல இருக்குறதெல்லாம் வித்துட்டு அக்கெளண்ட்ட குளோஸ் பண்ணிடாதேப்பா. அம்பதாயிரத்துக்காவது நல்ல பங்குகள வித்தக் காசியில வாங்கிப் போட்டு வெச்சிக்கோ. நாளைக்கி எந்த ஷேர்ஸ் என்ன வெலைக்குப் போவும்ன்னு யாருக்குத் தெரியும் சொல்லு?"ன்னாப்புல கோபி சிக்கனம் பண்ணி சேமிப்புல எடுத்து வைக்குற காசிப்பணம் நல்ல பங்குல சேந்துட்டா அத்து சீரழிஞ்சுப் போயிடாதுங்றாப்புல.

            "யிப்போ ஷேர்ஸ்ஸ விக்கணுமே!"ன்னாம் விகடு வெள்ளம் வந்து ஒசந்து போறப்போ தண்ணி கழுத்து வரைக்கும் ஏறட்டும்ன்னு பாத்துக்கிட்டு நிக்க முடியாதேங்றாப்புல.

            "யிப்போ எப்பிடி விக்க முடியும்? நாளைக்கி மார்க்கெட் ஆரம்பிச்சுத்தாம் விக்கணும். வித்தா அன்னிக்கே டெலிவரி இன்ஸ்டரக்ஸ்ன் ஸ்லிப்புல கையெழுத்தப் போட்டுக் கொடுக்கணும். இதெல்லாம் ஒரு பார்மர் மேனேஜருக்குத தெரியாதா ன்னா? இப்போ கையில அநேகமா டெலிவரி ஸ்லிப்பு இருக்காதுன்னு நெனைக்கிறேம். இருந்தாலும் பழைய ஸ்லிப்பு இப்போ செல்லுபடியாகாது. அதால புதுசா டெலிவரி இன்ஸ்ட்ரக்ஸன் ஸ்லிப்புகள யம்மா அக்கெளண்டுக்கு வூட்டு விலாசத்துக்கு அனுப்ப சொல்லி மெயில் பண்ணிடுறேம். அத்து வூட்டுக்கு வந்ததும் சைன் பண்ணி வாங்கியாந்தா அன்னிக்கே வித்துப்புடலாம். வித்த மூணாவது நாளு டி ப்ளஸ் டூ அன்னிக்குச் செட்டில்மெண்ட்ட பண்ணிடலாம்!"ன்னாப்புல கோபி பத்தாயம் முழுக்க நெல்லு இருக்குன்னாலும் அதெ அரிசியாக்கி சோறா சமைக்குற வரைக்கும் பொறுத்துதாம் ஆவணும்ங்றாப்புல.

            "அப்பிடியே பண்ணிடலாம். இன்னிக்கே ஹெட் ஆபீஸூக்கு மெயில் பண்ணிடலாம்ல!"ன்னாம் விகடு பத்தாயத்துல இருக்குற நெல்லெடுத்து ஒடனே அவிச்சிப் போட்டுடலாமாங்றாப்புல.

            "யிப்பவே பண்ணிடுறேம்ப்பா! ஏம்ப்பா இவ்ளோ பெரச்சனெயில இருந்திருக்கே. நமக்குல்லாம் ஒரு போன போட்டிருந்தா மார்க்கெட்டுல ஷேர்ஸ் இருக்குறதப் பத்தி, வெல நல்லா போயிட்டு இருக்குறதப் பத்தி சொல்லியிருப்பேம்ல. அதெ அப்பயே வித்துப்புட்டு ஆசுவாசமா இருந்திருக்கலாம்லா. அட போப்பா! அதென்னப்பா ஒம்மட நம்பருக்கு அடிச்சாலும் போவ மாட்டேங்குது?"ன்னாப்புல கோபி ஆழந் தெரியாம காலு வுட்டுகிட்டு கைய தூக்காம சொழலுக்குள்ளெயே சொழண்டுக்கிட்டுக் கெடந்திருக்கீயேங்றாப்புல.

            "என்னிக்கு யப்பாகிட்டெ இந்த மார்க்கெட்டப் பத்தி இனுமே நெனைச்சிப் பாக்க மாட்டேம்ன்னு சொன்னேன்னோ அன்னிலேந்தே இதெப் பத்தின நெனைப்பே சுத்தமா யில்ல. வேலைக்குப் போறது, வூட்டுக்கு வர்றது, வூட்டுல வேலையப் பாக்குறதுன்னே ஓடிடுச்சு. சத்தியமா இந்த நெனைப்பே நமக்கு வாரல. இதெப் பத்தி நெனைச்சுப் பாக்கவும் யில்ல. பழைய மொபைல் நம்பர்ர மாத்துறாப்புல ஆயிடுச்சு. தங்காச்சி வெவகாரத்துல அவனுவோ கண்ட நேரத்துலயும் போனப் போட்டு கண்ட மேனிக்குப் பேசிக்கிட்டு, மெரட்டிக்கிட்டுக் கெடந்தானுவோ. அதாங் அந்த நம்பர்ர ஏம் வெச்சிக்கிட்டுன்னு வேற ஒரு புது நம்பருக்கு மாறிட்டேம். அதாங் வெசயம்!"ன்னாம் விகடு பயத்துல மூச்சடங்கி நிக்குறவேமுக்குச் சட்டுன்னு சத்தம் போட்டு கூப்புடத் தோணாதுங்றாப்புல.

            "ஓக்கே! ஹெட் ஆபீஸூக்கு மெயில் போயிடுச்சு. தபால்ல அதாச்சி ரீஸ்தர்ல எப்பிடியும் மூணு நாளுக்குள்ள டெலிவரி ஸ்லிப்ஸ் எட்டு வூட்டுக்கு வந்திருக்கும். வந்த ஒடனே யம்மாகிட்டெ சைன்ன வாங்கிக் கொண்டாந்தா வித்து முடிச்சிடலாம். வேணும்ன்னா ஸ்லிப்ஸ் வந்த அன்னிக்குப் போன் பண்ணிச் சொன்னாலும் வித்துடுறேம். சாயுங்காலமா கூட ஸ்லிப்ஸ்ஸ கொண்டாந்து கொடுத்துக்கிடலாம்!"ன்னாப்புல கோபி பேச்சோட பேச்சா பண்ட வேண்டிய வேலையைப் பண்டி முடிச்சிட்டேம்ங்றாப்புல.

            "அப்பிடியே பண்ணிக்கிடலாம்!"ன்னாம் விகடு திட்டம் பண்ண படிக்கே செயலாக்கத்தெ முடிச்சிக்கிடலாம்ங்றாப்புல.

            "பெறவென்ன கெளம்பலாமா? யின்னும் கொஞ்ச நேரம் பேசிட்டு உக்காந்திருக்கலாமா?"ன்னாப்புல கோபி டீக்கடையில டீயக் குடிச்சு முடிச்சாலும் அரட்டை அடிக்காம கௌம்ப முடியுமாங்றாப்புல.

            "கெளம்புவோம்!"ன்னாம் விகடு வவுறு நெறைஞ்ச பறவை வழியில்ல பாடிட்டு நிக்காம வூட்டை நோக்கிப் போறதுதாங் சரிதாம்ங்றாப்புல.

            "வண்டியிலத்தான வந்தது?"ன்னாப்புல கோபி வந்த மார்க்கம் என்னவோங்றாப்புல.

            "பஸ்ல வந்து நடந்து வந்தேம்!"ன்னாம் விகடு ஓரிடம் வர்ற ரண்டு வெதமா ரண்டு மார்க்கமா வந்தேம்ங்றாப்புல.

            "ன்னப்பா இத்து? வண்டி இருக்குல்லா?"ன்னாப்புல கோபி வண்டிச் சக்கரந்தாம் இந்தக் காலத்துல மனுஷக் காலுங்றாப்புல.

            "யப்பாவோட டிவியெஸ் பிப்டித்தாம் இருக்கு!"ன்னாம் விகடு அப்பாரு காலத்துல வாங்குன வண்டித்தாம் இன்னமும் இருக்குங்றாப்புல.

            "மொதல்ல ஷேர்ஸ்ஸ வித்து ஒரு வண்டிய வாங்குப்பா! இனுமே வர்றதுன்னா வண்டியில வாப்பா! யிப்போ வா! நம்மட வண்டியில கொண்டாந்து பஸ் ஸ்டாண்டுல விட்டுட்டுக் கெளம்புறேம்!"ன்னாப்புல கோபி ஆடையில்லாத மனுஷம் அரை மனுஷங்றாப்புல இனி வர்ற காலத்துல வண்டியில்லாத மனுஷம் கொறை மனுஷம்ங்றாப்புல.

            "மொதல்ல தங்காச்சிச் சம்பந்தமா கேஸ் கட்டெ வக்கீல் ஆபீஸ்ல கொடுக்கணும். பெறவுதாம் பஸ் ஸ்டாண்டு!"ன்னாம் விகடு தாலி கட்டுறதெ பாக்க வந்துப்புட்டு கலியாணப் பந்தியில உக்காந்துச் சாப்புட்டு இருக்கேம்ங்றாப்புல.

            "கொடுத்தாப் போச்சு!"ன்னாப்புல கோபி ஆறு பக்கத்துல இருக்குறப்போ வாய்க்கால் வழியா தண்ணியக் கொண்டு வாரது ஒண்ணும் பெரிசு இல்லங்றாப்புல.

ஆபீஸ்ஸப் பூட்டி முடிச்சிட்டு வெளியில வந்த கோபியோட வண்டியிலப் போயி அய்யப்ப மாதவன் ஆபீஸ்ல கேஸ் கட்டெ கொடுத்து அவருகிட்டெ குஞ்சு கவுண்டரு கொடுத்த கவர்ல இருந்த ரெண்டாயிரம் ரூவாயி நோட்ட ஒண்ணுத்தெ எடுத்துக் கொடுத்துட்டுத் திரும்பவும் கோபியோட வண்டியிலயே ஏறி பஸ் ஸ்டாண்டுக்கு வந்தப்போ ஏழே முக்காலுக்குக் கெளம்ப தயாரா இருந்துச்சு எட்டாம் நம்பரு பஸ். அதெப் பிடிச்சி அதுல ஏறி உக்காந்தாம் விகடு. எட்டாம் நம்பரு பஸ் அன்னிய கடெசி டிரிப்ப முடிச்சிட்டு வடவாதியில ஹால்ட் அடிக்க திருவாரூரு பஸ் ஸ்டாண்டுலேந்து சன்னமா வேகமெடுத்துக் கௌம்ப தயாரானுச்சு.

*****

No comments:

Post a Comment

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...