28 Feb 2021

நல்லா இருப்பீங்க!

நல்லா இருப்பீங்க!

செய்யு - 731

            பழைய பரமசிவம் பேச ஆரம்பிச்சாரு.

            "தப்பான பொழைப்பு வாத்தியார்ரே நம்ம பொழைப்பு. அதுக்கான தண்டனயத்தாம் நம்மட பொண்ணு வடிவுல அனுபவிச்சிட்டு இருக்கேம்! தாலியறுத்து மூதியா ஒரு புள்ளையோட வந்து வூட்டுல கெடக்கா!"ன்னாரு கருவழிச்சு வாழுறவேம் உருவழிஞ்சுப் போவாம்ங்றாப்புல.

            "நாஞ்ஞ ன்னா தப்பான பொழைப்பெ பண்ணோம். நாஞ்ஞளும் எஞ்ஞ தங்காச்சி வெசயத்துல அனுபவிச்சிட்டு இருக்கேம்மே!"ன்னாம் விகடு நல்லவனும் சேந்துதாம் தடம் பொருளுற ரயில்ல அடிபடுறாம்ங்றாப்புல.

            "அப்பிடியில்ல வாத்தியார்ரே! நாம்ம பண்ண தப்பு நம்மட மவ்வே தலையில விடியுது. ஒஞ்ஞளுக்கு அப்பிடிக் கெடையாது. ஒஞ்ஞ சந்ததி ந்நல்லா இருக்கும். அதெ நேரத்துல ஒஞ்ஞப் பாவத்தெ வாங்கிக் கொட்டிக்கிடுறாம் பாருங்க தாடிக்கார பயலும், டாக்கடரு பயலும் அவனுவோ ந்நல்லா இருக்கவே மாட்டானுவோ. அவனுவோ சந்ததி சர்வ நாசமாவும் வாத்தியார்ரே. ஒஞ்ஞளுக்கு இத்து சில கால செருமந்தாம். ல்லன்னு சொல்ல மாட்டேம். அதுக்குப் பெறவு ஒஞ்ஞ காலம் மாறிடும்! நல்லா யிருப்பீயே!"ன்னாரு பழைய பரமசிவம் நல்லவேம் ஒரு காலம் செருமப்பட்டாலும் கெட்டவேம் ஒரு காலமும் நல்லா இருக்க மாட்டாம்ங்றாப்புல.

            "ஒஞ்ஞ கேஸ்ஸப் பத்திக் கேள்விப்பட்டுக்கிட்டுத்தாம் இருக்கேம். நமக்கு அதானே வேல. கோர்ட்டுக் கோர்ட்டா அலையுறது. இப்ப பாக்குக்கோட்டையில ஒருத்தரு கேஸ்ஸூ சம்பந்தமாத்தாம் வந்தேம். கையில யிப்போ முப்பது ரூவா காசித்தாம் இருக்கு. இதெ சிலவு பண்ணிட்டா நாம்ம பாக்குக்கோட்டைக்குப் போவ பிச்செயெடுத்துதாம் ஆவணும். இஞ்ஞ வெசாரிச்சிட்டுப் போயி அஞ்ஞ தகவலச் சொன்னா எரநூத்தோ, முந்நூத்தோ மனசுக்குப் போல கொடுப்பாவோ. நிச்சயமா ‍கொடுப்பாவோன்னும் சொல்ல முடியாது. சமயத்துல அம்பது ரூவாயத் தூக்கிக் கொடுத்து அடுத்த மொறை பாத்துக்கிடலாம்ன்னு சொன்னாலும் சொன்னதுதாம். ஏதோ ஒரு வெதத்துல ரண்டுப் பக்கமும் பேசி முடியுறப்போ பேசி வுடுறதுக்குக் கமிஷனா கணிசமா தேறும் வாத்தியார்ரே. அதெ நம்பித்தாம் அதுக்காக இந்த அலைச்சலப் பாக்கா ரண்டுப் பக்கமும் ஓடுறது. அப்பிடி ஓடுறப்போ இப்பிடி கையில பைசா காசில்லாம பட்டினியா அலையுறதும் உண்டு. நேத்தி முழுக்க பசிங்க வாத்தியார்ரே. கையில இருந்த காசியச் சிலவெ பண்ணிட்டா பஸ்ஸேறி இஞ்ஞ வாரணும்ன்னே வவுத்துல ஈரத்துணிய கட்டிக்கிட்டு பேரப் புள்ளைக்கு மட்டும் டீயும் பன்னும் வாங்கிக் கொடுத்துச் சமாளிச்சிட்டேம். இன்னிக்கும் அப்பிடின்னா குடும்பத்துல உசுரு தங்காதோங்ற பயம் வந்துடுச்சு. அதாங் நீஞ்ஞ நமக்கு எதிர்பார்ட்டின்னாலும் வெக்கத்தெ வுட்டு, மானத்தெ வுட்டு, கெளரவத்தெ வுட்டு கைய்ய நீட்டிட்டேம். நீஞ்ஞளும் நம்மள எதிர்ப்பா பாக்காம பசின்னதும் காசிய எடுத்து நீட்டுனீங்கப் பாருங்க. அதாங் வாத்தியாரே மனுஷத் தன்மெ! ரொம்ப நன்றீம்பீ வாத்தியாரும்பீ!!"ன்னாரு பழைய பரமசிவம் பசிக்கு மின்னாடி பத்து மட்டுமில்ல பத்தோட பதினொண்ணா பகையுணர்ச்சியும் மறந்துப் போயிடும்ங்றாப்புல.

            "ரொம்ப நல்லதுங்கய்யா! பெறவு நாம்ம கெளம்பட்டுமா? போயி திருவாரூரு போவ வேண்டிய வேல இருக்கு!"ன்னாம் விகடு அவசர வேலை இருக்குறப்போ கடலோரத்துல உக்காந்துட்டு அலையடிக்கிறதெ ரசிச்சுப் பாத்துக்கிட்டு உக்காந்துட்டு இருக்க முடியாதுங்றாப்புல.

            "‍ஒரே ஒரு சங்கதிய மட்டும் சொல்லிட்டு அனுப்பிடுறேம்!"ன்னாரு பழைய பரமசிவம் கவுத்த புட்டியில சொச்சமா கொஞ்சம் மிச்சம் தண்ணி இருக்கு, அதையும் ஊத்தி முடிச்சிப்புடுறேம்ங்றாப்புல.

            "செரி சொல்லுங்க!"ன்னாம் விகடு இன்னும் கொஞ்சம் இருந்தா நாடவம் முடிஞ்சிடும்ங்றப்போ இடையில எழுந்துப் போயி என்ன ஆயிடப் போவுதுங்றாப்புல.

            "யிப்போ ஒரு புது வக்கீலு வர்றாம் பாருங்க. பேரு கூட கங்காதரேம்ன்னு. அவ்வேந்தாம்பீ நம்ம பொழப்புல மண்ணள்ளிப் போட்டவேம். அந்த லாலு வாத்தி இருக்காம் பாருங்க. அவ்வேம் பாத்து வுட்ட ஆளு. நாம்ம கூட அவ்வேம்கிட்டெ எல்லா வாய்தாவுக்கும் வார வாணாம். நாம்ம போயிப் பாத்துட்டு தகவல் சொல்றேம். எப்போ வாரணுமோ அப்போ வாரலாம். நீஞ்ஞ தஞ்சாவூர்ல சோலியப் பாருங்கன்னேம். நமக்கும் பொழைப்பு ஓடணும் பாருங்க. அவ்வேம் சரியான எமகாதகப் பயலா இருப்பாம் போலருக்கு வாத்தியாரம்பீ! அவனெப் போல ஒரு பயல நாம்ம பாத்ததில்ல. டாக்கடரும் அவனுமா ஒட்டிக்கிட்டு நம்மள வெட்டிப்புட்டு வுட்டானுவோ. சரித்தாம் எத்தனெ நாளு இத்து நீடிக்கும்ன்னு பாத்தேம். அதெ போல எடையில அந்த டாக்கடரு பயலுக்கும், இந்த வக்கீலு பயலுக்கும் பீஸ் சம்பந்தமா முட்டிக்கிடுச்சு. அத்தோட புட்டுக்குவாம்ன்னு நெனைச்சேம் வாத்தியாரே! அந்த எடந்தாம்பீ அவனுகள ரொம்ப நெருக்கமா பண்டிடுச்சு!"ன்னாரு பழைய பரமசிவம் விரிசல் வுழுந்த பீங்கான் சாடி எப்பிடி ஒட்டுனதுங்றது தெரியலங்றாப்புல.

            விகடுவும், செய்யுவும் அவரு சொல்றது புரியாம அவர்ர வெறிக்கப் பாத்தாங்க. "நீஞ்ஞ ஏம் யிப்பிடி பாக்குறீங்கன்னுப் புரியுது. அதெப்பிடி புட்டுக்கப் போற ரண்டு பேரு சேந்துக்கிடுவாங்கன்னுத்தானே? அதெ சந்தேவந்தாம் வாத்தியாரே நமக்கும். நம்ம பொழைப்பு போவுதேன்னு மோப்பம் பிடிக்க ஆரம்பிச்சேம் பாருங்க. அட கருமத்தெ. ஏம்டா மோப்பம் பிடிச்சேம்ன்னு ஆயிடுச்சு. இந்த ஊர்லயல்லாம் அப்பிடி ஒரு கருமம் நடக்கும்ன்னு நாம்ம எதிர்பாக்கவே யில்ல வாத்தியார்ரே. இந்த டாக்கடர்ருப் பயெத்தாம் ஒஞ்ஞ தங்காச்சியக் கட்டிக்கிட்டு அறுத்து வுட்டாப்புல இருக்குறானா. அந்தக் கங்காதரேம் பயலுக்கு என்னா வந்துச்சுச் சொல்லுங்க? அவனுக்கு குடும்பம் குட்டி எல்லாம் இருக்குதுங்க வாத்தியார்ரே. அந்தப் பயலும், இந்தப் பயலும் சேந்து.... ப்பூ... ப்பூ... நம்மட வாயால சொல்லக் கூடாது. குடித்தனம் நடத்துறானுவோ வாத்தியார்ரே. ஆம்பளையும் ஆம்பளையும் சேந்து நடத்துற குடும்பத்தெ பம்பாய்ல பாக்கலாம், கல்கத்தாவுல பாக்கலாம், வெளிநாட்டுல பாக்கலாம்பாவோ. நாம்ம இஞ்ஞப் பாக்குறேம். அதுலத்தாம் வாத்தியார்ரே ரண்டு பயலுவோளும் ஒண்ணானது. அதுக்குப் பெறவு இவனெ அவ்வேம் பிரிய மாட்டேங்றேம். அவனெ இவ்வேம் பிரிய மாட்டேங்றாம். வாரம் பொறந்தா போதும் டாக்கடரு பயெ தஞ்சாரூக்கு வந்துடுவாம். அவ்வேம் ஆபீஸ்ல கூத்தா அடிச்சிக்கிட்டுக் கெடக்குறானுவோ. இவனுவோ ரண்டு பேத்துக்கும் தனியா வாடவைக்கு ஒரு வூட்டையும் பாத்திருக்கிறதா கேள்வி. அதுலப் பாத்தீங்கன்னா அவ்வேம் இஞ்ஞ வரலன்னா இந்தப் பயெ கெளம்பி சென்னைப் பட்டணுத்துக்குப் போயிடுறாம். ஒரே கூத்தும் கும்மாளந்தாம் நடக்குது. அந்த வக்கீலுப் பயெ ஒஞ்ஞ தங்காச்சி வாழ்க்கைய மட்டும் கெடுக்கல, அவனெ கட்டிட்டு நம்பி வந்த பொண்ணோட வாழ்க்கையையும் சேத்துதாம் கெடுக்குறாம். என்னத்தெ பண்டுறது எல்லாம் தலைவிதின்னு நெனைச்சிட்டுப் போவ வேண்டிருக்கு!"ன்னு சொல்லி முடிச்சாரு தலையில அடிச்சிட்டு அழுவுறதாலோ, தலைய நல்லா அழுத்தித் தேய்ச்சுக் குளிக்கிறதாலோ மட்டும் தலையெழுத்தோ தலைவிதியோ மாறிப்புடுமாங்றாப்புல.

            "இதெல்லாம் ஒஞ்ஞளுக்கு..."ன்னாம் விகடு நாலு சொவத்துக்குள்ள நடக்குறது முச்சந்தியில இருக்குறவேமுக்கு எப்பிடித் தெரியும்ங்றாப்புல.

            "அதாம் மோப்பம் பிடிச்சேம்ன்னு சொன்னேன்னே! ஒஞ்ஞளுக்குத்தாம் ஒண்ணும் தெரியாது வாத்தியார்ரே. குதிரைக்குக் கண்ணெ கட்டி வுட்டது போல வர்றதும் போறதுமா இருந்தா எப்பிடித் தெரியும்? அப்பிடி இப்பிடி கொஞ்சம் வெசாரிச்சிப் பாருங்க. ஒஞ்ஞளுக்கே தெரியும்!"ன்னாரு பழைய பரமசிவம் கண்ணத் தொறந்தா டிவிப் பொட்டியில ஒலகமே தெரியுறப்போ, காதெ தொறந்தா பரம ரகசியமும் பட்டுன்னுக் காதுக்குள்ளார வந்துப் பூந்துடும்ங்றாப்புல.

            "கும்பகோணத்து வக்கீலுகள்ல ஒருத்தரும் அந்த வக்கீலப் பத்தி ஒரு வார்த்தெ அப்பிடிச் சொல்லிருக்காரு!"ன்னாம் விகடு காத்துல கசியுறது கண்ட மேனிக்குப் பரவிக் காதுக்கு வந்துச் சேந்துப்புடும்ங்றது உண்மெதாம்ங்றாப்புல.

            "பாத்தீங்களா! அதாங் விசயம்! நாம்ம வேற ரொம்ப நேரம் பேசிட்டேம். நீஞ்ஞ வேற வேற சோலிய வெச்சிட்டு இருக்கீயே. நாமளும் இஞ்ஞ கோர்ட்டுலப் போயி தேதிய வெசாரிச்சிக்கிட்டுச் சீக்கிரமே மொனைக்கடையில சாப்பாட்ட வாங்கிட்டா பாக்குக்கோட்டைக்கு மூட்டையக் கட்டிடுவேம்!"ன்னாரு பழைய பரமசிவம் பொழுது மசங்குற நேரம் வந்துப்புட்டா மேயுற மாடு வூட்டை நோக்கி நடையக் கட்டிப்புடணும்ங்றாப்புல.

            "செரி கெளம்புங்க. நாஞ்ஞளும் கெளம்புறேம்!"ன்னாம் விகடு சுள்ளுன்னு வெயிலு மொகத்துல அடிச்ச பெறவும் சுருட்டிப் போத்திட்டு படுத்துக் கெடக்க கூடாதுங்றாப்புல.

            "எப்ப பாத்தாலும் செரி! நம்மள ஒரு டீத்தண்ணிக்குக் கவனிச்சி வுட்டுப்புடுங்க வாத்தியார்ரே. மறந்துடாதீயே!"ன்னாரு பழைய பரமசிவம் பெட்ரோல்ல ஊத்தி வண்டி ஓடுதுங்ற மாதிரிக்கு டீத்தண்ணிய ஊத்தித்தாம் உசுரு ஓடிட்டு இருக்குங்றாப்புல. விகடு வண்டிய ஸ்டார்ட் பண்ணுனதெ அவரு பேச ஆரம்பிச்சதும் நிப்பாட்டிருந்தாம் வாத்தியாரு வந்ததெப் பாத்ததும் சத்தத்தெ நிப்பாட்டிடுற பசங்களப் போல. மறுக்கா திரும்பவும் பெடலப் போட்டு அழுத்தி ஸ்டார்ப் பண்ணி ஸ்டாண்ட எடுத்து விட்டாம் விசிலு சத்தம் கேட்டா போறப்பட வேண்டிய பஸ்ஸப் போல. பின்னாடி செய்யு ஏறி உக்காந்ததும் வண்டிப் பொறப்பட ஆரம்பிச்சிது சனங்க எல்லாம் ஏறி உக்காந்ததும் சுத்தத் தொடங்குற ராட்டினமாட்டம்.

            "பாத்தீயாண்ணே அந்தப் பயலுவோ பண்டுறதெ? அதாம்ண்ணே அந்த வக்கீலு அந்த மாதிரிக்கி நம்மகிட்டெ அவனுக்காகப் பேசிருக்காம்?"ன்னாம் செய்யு பாம்பெ அடிச்சித் திங்குறவேம் நாக்குல வெஷத்தெத் தடவிட்டுத்தாம் பேசணும்ங்ற அவசியம் இல்லங்றாப்புல.

            "எதோ பேசிட்டாம். நடந்துட்டு. அதெ வுடு. அதாம் நம்மப் பக்கத்துக்கு கோவிந்து அண்ணன், பெத்தநாயகம் அண்ணன்ல்லாம் இருக்காங்களே!"ன்னாம் விகடு கீழே வுழுவுறப்பத்தாம் நாலு பேத்துத் தூக்கவும் வருவாங்கங்றாப்புல.

            அதெ சொல்லிட்டுச் சட்டுன்னு ஞாபவம் வந்தவனா, "அவுங்க இன்னிக்கு வரலியா?"ன்னாம் விகடு உருவம் நவுர்றப்போ நெழலு நவுந்து வர்றாம இருக்காதுங்றாப்புல.

            "நீயி ஒம்போது மணிக்கெல்லாம் அழைச்சாந்து பத்தே காலுக்கெல்லாம் கெளம்புனா எப்பிடி? கொஞ்ச நேரம் கோர்ட்டு வாசல்ல நின்னா வந்துடுவாங்க."ன்னா செய்யு எழும்புறதெ சீக்கிரமா எழும்பிட்டுக் கோழி கூவலன்னு சொன்னா எப்படிங்றாப்புல.

            "வாணாம். போன்ல கெளம்பிட்டேம்ன்னு சொல்லிடு. நின்னுப் பேச்சு வளந்தா போச்சு. இன்னிக்கு ஆவ வேண்டிய காரியமும் ஆவாமப் போயிடும்! வண்டி வேற வர்ற வர்ற முப்பது கிலோ மீட்டரு வேகத்தெ தாண்டிப் போவ மாட்டேங்குது. இருவத்தஞ்சு கிலோ மீட்டரு வேகத்துலயே உருட்டிக்கிட்டுப் போவ வேண்டியதா கெடக்கு! இந்த வேகத்துலயே வூட்டுக்குப் போயி, அதெ வேகத்துலயே திருவாரூருக்கு வேற போவணும்! பேயாம மூணரைக்குத் திருவாரூருக்குக் கெளம்புற எட்டாம் நம்பரு பஸ்ல திருவாரூருக்குப் போயிட்டு வந்திடலாம்ன்னு நெனைக்கிறேம்!"ன்னாம் விகடு விடியுறதெப் பாத்துட்டே இருந்தா பாதி தூரம் போயிருக்க வேண்டிய நடெ பக்கத்துலயேத்தாம் இருக்கும்ங்றாப்புல.

            "ஆமாண்ணே! இந்த டிவியெஸ் பிப்டி தமிழ்நாட்டுலயே இருவதோ, முப்பதோத்தாம் மொத்தத்துல ஓடும்ன்னு நெனைக்கிறேம். அதுல நம்ம வண்டியும் ஒண்ணு. இந்த வண்டியையே எஞ்ஞயும் பாக்க முடியல. நம்மகிட்டெத்தாம் பாக்க முடியுது. மொதல்ல ஒரு வண்டிய ஒண்ணுத்தெ வாங்கிக்கண்ணே! போவ வர்ற கொள்ள வசதியா இருக்கும் பாரு!"ன்னா செய்யு கூட மாட ஓடியாற இருக்குற ஊரு நாய்ய வுட்டுப்புட்டு சீமெ நாயொண்ண வாங்கிப்புடுங்றாப்புல.

            "வண்டியென்ன பெரிய வண்டி? நாம்ம வேலங்குடி பெரிய மாமாவப் போல, ஒன்னய அழைச்சிட்டு வர்ற வேண்டியதில்லன்னா வெச்சுக்கோ நடந்தே ஆர்குடிக்கு வந்துட்டு நடந்தே திரும்புவேம்!"ன்னாம் விகடு வண்டியில்லாக் காலத்துல காலிரண்டும் சக்கரமா சொழலையாங்றாப்புல.

            "ஏம் திருவாரூருக்கு நடந்தே போயேம்?"ன்னா செய்யு வேடிக்கையா அந்தக் காலத்துல பனையோலையில எழுதுனா இந்தக் காலத்துலயும் அதுலேயே எழுத முடியுமாங்றாப்புல.

            "திருவாரூருக்குப் பஸ்லப் போயி அஞ்ஞயிருந்து ஆட்டோ பிடிச்சிட்டு வடக்கு வீதிக்குப் போவேம்ன்னு நெனைச்சியா? வாடவெ சைக்கிளக் கூட எடுக்க மாட்டேம். நடந்தே போயிட்டு நடந்தேத்தாம் வருவேம்!"ன்னாம் விகடு ரண்டு கால்ல வெச்சு கால்நடையா நாலு கால்லப் போற கால்நடையப் போல நாலு காலுப் பாய்ச்சல்ல போவேம்ங்றாப்புல.

            "நீயி திருவாரூரு வண்டியிலயே போவே! கொஞ்ச நாளா அப்பிடிப் போற ஆளுத்தாம். இப்போ பெட்ரோல் காசிக்குச் சிலவு பண்ணுறதா வெச்சிருந்தா ரண்டு நாளு ஓட்டலாம்ன்னுத்தானே பஸ்ல போறேங்றே?"ன்னா செய்யு தயிரை ஊத்தித் தின்னா கொறைஞ்சிடும்ன்னு அதெ வாசம் பிடிச்சிக்கிட்டே சாப்பிடுறீயாங்றாப்புல.

            "ச்சைச்சேய்! வண்டி வேகம் வர்ற வர்ற கொறைஞ்சிக்கிட்டெ இருக்குது. சைக்கிள்லப் போறதெப் போலவே இருக்கு. ரொம்ப நேரம் இதுல உக்காந்துட்டே போறப்போ இடுப்பு வலி கண்டுப் போயிடுது!"ன்னாம் விகடு உள்ளங்கால்ல குத்துன முள்ளெ உள்ளங்கையில தேடிட்டு இருக்கேம்ங்றாப்புல.

            "ச்சும்மா எதாச்சும் காரணத்தெ சொல்லாதே. பேயாம வூட்டுலச் சாப்புட்டு வண்டிய எடுத்துட்டுக் கெளம்புறே!"ன்னா செய்யு வெரல்ல ஒட்டியிருக்கிறதெ நக்கித் தின்னே பசியாறிட முடியாதுங்றாப்புல.

            "பாப்பேம்!"ன்னாம் விகடு குடிக்க பாலிருந்தா கொழந்தெ ஏம் வெரலைச் சூப்பப் போறதுங்றாப்புல.

*****

27 Feb 2021

எக்ஸ்பாட்டி சட்டிசைடு


 எக்ஸ்பாட்டி சட்டிசைடு

செய்யு - 730

            பாண்டுரங்கஹரி விகடுவுக்குப் போன அடிச்சி ஹெச்செம்ஓப்பி வழக்கு ஒருதலைபட்சமா தீர்ப்பாயிருக்கிறதாவும் அவர்ர செய்யுவோட வந்து ஒடனே பாக்கச்  சொல்லிப் போன அடிச்சாரு. இப்பிடியெல்லாம் அவசரப்படுத்துற ஆளு கெடையாது பாண்டுரங்கஹரிங்றதால விகடுவே அன்னிக்குப் பள்ளியோடத்துக்கு லீவு அடிச்சிட்டுச் செய்யுவோட போனாம்.

            "ஹெச்செம்ஓப்பி வழக்குல ஆஜராயி ரொம்ப நாளு ஆயிடுச்சுல்லா?"ன்னாரு பாண்டுரங்ஹரி ஓர் அளவுக்கு மேல இழுத்தா ரப்பரு தாங்காதுங்றாப்புல.

            "ஆமாங்கய்யா! கிராஸ் பண்ணுறப்ப ஆஜரானதுதாம். அதுக்குப் பெறவு நாலு மாசத்துக்கு மேல இருக்கும்!"ன்னாம் விகடு எட்டு அமாவசெ கடந்து போனா எல்லாம் மறந்துப் போயிடும்ங்றாப்புல.

            "நாம்ம குமாஸ்தவ வுட்டு கேஸ் ஸ்டேட்டஸ் பாத்துட்டு வக்காலத்தப் போடப் போனா எக்ஸ்பாட்டி எவிடென்ஸ் ஆயிருக்கிறதா சொன்னாரு. அதாங் ஒடனே ஒஞ்ஞளுக்குப் போன அடிச்சேம்!"ன்னாரு பாண்டுரங்கஹரி நாம்ம தூங்குனாலும் சுத்துற பூமி சுத்திட்டுத்தாம் இருக்குறதெ போல, நாம்ம போவலன்னாலும் நடக்குற வழக்குக் கோர்ட்டுல நடந்துக்கிட்டுத்தாம் இருக்கும்ங்றாப்புல.

            "இப்போ என்னங்கய்யா பண்ணணும்?"ன்னாம் விகடு உச்சந்தலைக்கு மேல போரையேறிப் போனா என்னா பண்டுறதுங்றாப்புல.

            "அப்பிடியே வுட்டுடுறதுனாலும் வுட்டுடலாம். ஒடனே விவாகரத்து வழக்கப் போட்டுடணும்! எக்ஸ்பாட்டி சட்டிசைடு பண்ணுறதுன்னாலும் பண்ணலாம்."ன்னாரு பாண்டுரங்கஹரி வௌங்காத பயிருக்கு ஆத்தெ கட்டி எறைக்குதுன்னாலும் எறைக்கலாம், எறைக்காம அப்பிடியே வுட்டுட்டு வேற பயிர்ர வெதைச்சு வெளைவிச்சாலும் வெளைவிக்கலாம்ங்றாப்புல.

            "எப்பிடி பண்ணுனா சரியா இருக்கும்?"ன்னாம் விகடு வெயாதிஸ்தனுக்கு என்னத்தெத் தெரியும் எந்த மருந்தெ சாப்புட்டா கொணப்பாடு காணும்ங்றது தெரியும்ங்றாப்புல.

            "எக்ஸ்பாட்டு சட்டிசைடு பண்ணச் சொல்லி ஒரு மனுவெப் போட்டுடுவேம். அதெ தயாரு பண்ணச் சொல்லிட்டேம். அதுக்குக் கையெழுத்தப் போடச் சொல்லத்தாம் வரச் சொன்னேம். அது பாட்டுக்கு அதுப் போயிட்டு இருக்கட்டும். கூடிய சீக்கிரமே விவாகரத்து வழக்குப் போட்டுட்டா இந்த வழக்கச் சொல்லி அதெ அப்பிடியே தாட்டி வுட்டுடலாம். அதாஞ் செரி!"ன்னாரு பாண்டுரங்கஹரி புதுசா வண்டி வாங்குற வரைக்கும் பழசு ஓடிட்டு இருக்கட்டும்ங்றாப்புல.

            "அப்பிடின்னா அப்பிடியே பண்ணிடலாங்கய்யா!"ன்னாம் விகடு கொணம் காணும்ன்னா எந்த மருந்தெ சாப்புட்டாலும் சரித்தாம்ங்றாப்புல. வக்கீல் குமாஸ்தாவக் கூப்புட்டு செய்யுகிட்டெ கையெழுத்து வாங்கச் சொல்லி, அதெ கொண்டு போயி சப் கோர்ட்டுல தாக்கல் பண்ணச் சொன்னாரு.

            "திருவாரூர்ல அய்யப்ப மாதவன்னப் பாத்து ஜீவனாம்ச அப்பீல் கட்டெ கொடுக்கச் சொன்னேனே? இன்னும் கொடுக்கல போலருக்கே. ஏம் கொடுக்கல? நேத்தி எதார்த்தமா எப்பிடி இருக்கார் என்னா ஏதுன்னு விசாரிக்கப் போன அடிச்சேம். அப்பிடியே ஒங்க வழக்கு ஞாபவம் வந்து இது மாதிரிக்கி செய்யுங்ற பேர்ல ஒரு கேஸ் கட்டு வந்துச்சுன்னா கேட்டேம். இல்லன்னாரு. இப்போ இந்த கேஸோட ஸ்டேட்டஸ் பாத்து எப்பிடி இருக்கு பாத்தீங்களா? அது மாதிரி அதுவும் ஆயிருந்தா என்னத்தெ பண்ணுறது? எக்ஸ்பாட்டி சட்டிசைடு பண்ணிக்கிடலாந்தாம். அதுக்கும் ஒரு பீரியட் ஆப் டைம் இருக்குல்லா. அதெ தாண்டிட்டா ஒண்ணும் பண்ண முடியாது. அதுக்குத்தாம் சொல்ல வர்றேம், லேட் பண்ண வேண்டாம். இன்னிக்கே கட்டெ கொண்டுப் போயிக் கொடுத்து கேஸ் ஸ்டேட்டஸ்ஸப் பாக்கச் சொல்லுப்பா! வக்காலத்துக்குக் கூட இங்க காகிதம் இருக்கு. தங்கச்சியக் கூட அழைச்சிட்டுப் போவ வேண்டியதில்ல. தங்கச்சிக்கிட்டெ கையெழுத்து வாங்கிக்கிட்டு அதெ கொண்டுப் போயிக் கொடுத்தீன்னா மிச்சத்த நிரப்பி அவருப் பாத்துப்பாரு. போறப்ப ரண்டாயிரம் பணத்தெ எடுத்துட்டுப் போயிடுப்பா!"ன்னாரு பாண்டுரங்கஹரி வெள்ளத்தெ ஊருக்குள்ள நொழைய வுட்டுப்புட்டா அணை போடவும் முடியாது, காட்டுத்தீய பரவ வுட்டுப்புட்டு அணைக்கவும் முடியும்ங்றாப்புல. விகடு சரிங்ற மாதிரிக்கித் தலையாட்டுனாம்.

            "இங்க தலையாட்டிட்டு, நாம்ம மறுக்கா போனப் போட்டு எதாச்சும் விசாரிக்கிறப்ப இது பத்தின சேதி வந்து கட்டெ கொடுக்கலன்னு சொன்னா நம்மாள ஒண்ணும் பண்ண முடியாது பாத்துக்கப்பா!"ன்னாரு பாண்டுரங்கஹரி சொல்ல சொல்ல கேக்காம நுனிக்கொம்பெ நெருங்குனா முறிச்சிக்கிட்டு வுழுவுறதெ தடுக்க முடியாதுங்றாப்புல.

            "இன்னிக்குப் போவ முடிஞ்சா போயிடுறேம்யா! அப்பிடி முடியாட்டி நாளைக்குக் கண்டிப்பா போயிடுறேம்யா!"ன்னாம் விகடு மொத வலையில தப்புன மீனெல்லாம் ரண்டாவது வலையில மாட்டிடும்ங்றாப்புல.

            "இன்னிக்குன்னா மூணு மணிக்கு மேல போயிடு. நாளைக்குன்னா காலையில எட்டு மணிக்குள்ள போயிடணும். ஆபீஸ் பாத்தீன்னா வடக்குவீதி இருக்குல்லா. அங்கப் போயி வெசாரிச்சின்னா சொல்லிடுவாங்க. போன் நம்பர்த்தாம் கொடுத்திருக்கேம்ன்னே. அப்பிடி அங்கப் போயி சந்தேகம்ன்னா போன அடிச்சிக்கோ!"ன்னாரு பாண்டுரங்கஹரி போட்டு வுட்ட கடுதாசி மொறையா முகவரியிலப் போயிச் சேரணும்ங்றாப்புல.

            "இப்போ கோர்ட்டுல ஆஜராவ வேணாமா?"ன்னாம் விகடு நேர்ல போவ முடியாத கலியாணங் காட்சிக்கு மொய்ய மட்டும் எழுதிடச் சொன்னா போதுமாங்றாப்புல.

            "வாணாம். நாம்ம பாத்துக்கிறேம். நல்லா ஞாபவம் வெச்சிக்கணும். ரண்டு வாய்தா தாண்டலாம். மூணாவது வாய்தாவுக்கு குமாஸ்தாகிட்டெ போனப் பண்ணிக் கேட்டுக்கிட்டு வந்து ஆஜராயிடணும். நீங்க தவறுற ஒவ்வொரு வாய்தாவுக்கும் குமாஸ்தா ஸ்டாம்ப் ஒட்டி காயிதம் தாக்கல் பண்ணிடுவாரு. அவர்கிட்டெ ஒவ்வொரு வாய்தாவுக்கும் நூத்து ரூவான்னு கணக்குப் பண்ணி கொடுத்துடணும். அவருக்கு அதுதாம் வருமானம். நாம்ம ஒண்ணும் பெரிசா வருமானம் கொடுக்குறதில்ல!"ன்னாரு பாண்டுரங்கஹரி கோயில்ல வேண்டிக்கிட்டவேம் கோயில் உண்டியல்ல காசியப் போடாம வந்துப்புடக் கூடாதுங்றாப்புல.

            "அப்பிடியே கொடுத்திடுறேம்ய்யா! இப்போ எக்ஸ்பாட்டி சட்டிசைடுக்கு எவ்ளோங்கய்யா கொடுக்கணும்?"ன்னாம் விகடு அர்ச்சனை பண்டுற பூசாரிக்கு தட்சணை எம்மாம் கொடுக்கணும்ங்றாப்புல.

            "கோர்ட்டுல காகிதம்ன்னு தாக்கல் பண்ணுனா ஐநூறு, ஆயிரம்தாம். இருக்கிறதெ கொடுத்துட்டுப் போங்க!"ன்னாரு பாண்டுரங்கஹரி அர்ச்சனை பண்டுற பூசாரிக்குத் தட்டுல வைக்குறதுதாம் தட்சணைங்றாப்புல. விகடு சட்டைப் பையிக்குள்ள கைய வுட்டு ஐநூத்து ரூவாய எடுத்துக் கொடுத்தாம்.

            "செரி வாங்க! திருவாரூருக்கு ஒடனே கெளம்பி அய்யப்ப மாதவங்கிட்டெ கட்டெ கொடுக்குற சோலியப் பாருங்க!"ன்னாரு பாண்டுரங்கஹரி விருந்தெ முடிச்சா வெத்தலைப் பாக்கெப் போட்டு ஏப்பத்தெ வுட்டு சோலிய முடிச்சிடணும்ங்றாப்புல.

            "செரிங்கய்யா!"ன்னு தலையாட்டிக்கிட்டெ செய்யுவ அழைச்சிக்கிட்டு ஆபீஸ்ஸ வுட்டு வெளியில வந்தாம் விகடு வெறுவயித்துல இருந்தாலும் விருந்தெ சாப்புட்டதெ போல ஏப்பத்தெ எப்பிடியாச்சும் விட்டுப்புடுறேம்ங்றாப்புல. விகடு வெளியில போறதைப் பாத்துட்டு, "சாயுங்காலமா போன அடிச்சிக் கேப்பேம் அய்யப்ப மாதவனுக்கு கட்டு வந்துச் சேந்துட்டா என்னான்னு?"ன்னு சிரிச்சிக்கிட்டெ சொன்னாரு பாண்டுரங்கஹரி கறிச்சோத்தெ தின்னவெம் கைய மோந்துப் பாத்தா வெசயம் வௌங்கிடும்ங்றாப்புல. விகடு திரும்பி, "கட்டாயமா கட்டு அஞ்ஞ இருக்கும்யா!"ன்னாம் விகடு பச்செ பாம்பு கொத்துனா அத்து கொத்துனது கண்ணாத்தாம் இருக்கும்ங்றாப்புல.

நித்தம் நித்தம் கஞ்சிச் சோறு

            வேப்பமரத்தடியில போட்டிருந்த டிவியெஸ் பிப்டிய எடுத்து ஸ்டார் பண்ண ஆரம்பிச்சாம் விகடு. "ஏன்ண்ணே திருவாரூருக்குக் கட்டெ கொண்டுப் போயிக் கொடுக்கல?"ன்னா செய்யு விக்கல் வந்தும் இன்னும் ஏம் தண்ணியக் குடிக்காம இருக்கீயேங்றாப்புல.

            "கொடுத்திடுறேம். இன்னிக்கு ஒன்னய வூட்டுல சேத்துட்டுக் கொடுத்திடுறேம்!"ன்னாம் விகடு பந்தியில உக்காந்தவங்களுக்குப் பரிமாறாமலா இருக்கப் போறேம்ங்றாப்புல.

            "நீயி சரியா இருப்பீயேண்ணே? ஏதோ காரணம் இருக்கு. ஏம் கொடுக்கலன்னு சொல்லு?"ன்னா செய்யு அரிப்பெடுக்காம யாரும் சொரியுறதில்லங்றாப்புல.

            "ஒண்ணுமில்ல தங்காச்சி!"ன்னாம் விகடு ஓட்டை பலூன்ல காத்துக் கூட தங்காதுங்றாப்புல.

            "யிப்போ சொல்லப் போறீயா? யில்லன்னா நாம்ம வூட்டுக்கு வர்றப் போறதில்லா!"ன்னா செய்யு நறுக்குன்னு கிள்ளாதப்போ ஏம் கொழந்தெ பொசுக்குன்னு அழப் போவுதுங்றாப்புல.

            "சம்பளம் போட்டாங்கன்னா கொண்டுப் போயிக் கொடுத்துடலாம்ன்னு நெனைச்சேம். இன்னும் ரண்டு நாள்ல சம்பளம் போட்டுடுவாங்க. கொடுத்துடலாம்ன்னு நெனைச்சேம். அதுக்குள்ள ஹெச்செம்ஓப்பி வழக்குல எக்ஸ்பாட்டி ஆயி இவர்ர வந்து திடுதிப்புன்னு பாக்கறாப்புல ஆயிடுச்சு!"ன்னாம் விகடு கையில காசு வர்ற வரைக்கும் கடன் கொடுத்தவேம் கண்ணுல படக் கூடாதுன்னு நெனைச்சா, கடன் கொடுத்தவனே கண்ணு மின்னாடி வந்து நிக்குறாம்ங்றாப்புல.

            "ஏம்ண்ணே காசில்லையா?"ன்னா செய்யு வேலை முடிஞ்சு வீடு திரும்புற அப்பங்காரரு கையில பண்டம் ஏதும் இல்லாததப் பாத்து புள்ளீயோ ஏங்கிப் போயிக் கேக்குறாப்புல.

            "இருக்கு. இன்னும் ரண்டு நாள்ல இருக்கும்!"ன்னாம் விகடு ரண்டு நாளு ஆனா பொறந்த குட்டியோளுக்குக் கண்ணு ரெண்டும் தொறந்துடும்ங்றாப்புல.

            "காசில்லத்தானேண்ணே?"ன்னு செய்யு அழுவுறாப்புல கேட்டா விகடுவெப் பாத்து காசிருக்கிறவேம் ஏம் ராட்டினம் சுத்தாம அதெ வேடிக்கெப் பாத்துட்டு இருக்கப் போறாம்ங்றாப்புல.

            "இருக்குடா தங்காச்சி! கொடுத்திடுவேம். நீயேம் கலங்குறே?"ன்னாம் விகடு பாலு வத்திப் போன மாருல சொரக்காமலா போயிடும்ங்றாப்புல.

            "ல்லண்ணே! நீயிப் பொய்யிச் சொல்றே. ஒங்கிட்டெ காசில்லே. ல்லன்னா இந்த வேலய வக்கீலு சொன்ன ஒடனே செஞ்சிருப்பே. காசில்லாம நீயி ரொம்ப செருமப்படுறேண்ணே! வக்கீலு சொல்றப்போ கூட ரண்டாயிரத்தெ மறக்காம கொடுத்துடுங்கன்னு சொன்னார்ல. அப்ப ஒம் மொகத்தப் பாத்தேம்! காசி ஒங் கையில இல்லத்தானேண்ணே?"ன்னா செய்யு சட்டைப் பையிக் கிழிஞ்சிருந்தா வாங்குன சம்பளம் களவுப் போச்சுதுன்னுதானே அர்த்தம்ங்றாப்புல.

            "இருக்கு! நீயேன் அதெப் பத்தி நெனைக்குறே? இன்னிக்கு சாயுங்காலத்துக்குள்ள எப்பிடியும் கட்டு அய்யப்பமாதவன் வக்கீல்கிட்டெ இருக்கும். போதுமா?"ன்னாம் விகடு ஆத்துல போறத் தண்ணி எப்பிடியும் கடலெப் போயிச் சேந்துடும்ங்றாப்புல.

            "சம்பளம் போட்டெ ரண்டு நாளு கழிச்சிக் கொடுத்திடேம்!"ன்னா செய்யு நாளு ரண்டு தள்ளுறதுல வருஷம் ரண்டு கூடிடப் போறதில்லங்றாப்புல.

            "ஏம் ரண்டு நாளு மின்னாடி கொடுத்து, கொடுக்குறப்போ கையில இருக்குற பணத்தெ கொடுத்துட்டு, மிச்சப் பணத்தெ ரண்டு நாளு கழிச்சிக் கொடுத்தா கொறைஞ்சா போயிடப் போவுது?"ன்னாம் விகடு கடன் வாங்குன காசியில சாப்புடுற சாப்பாடு செரிக்காமலா போயிடும்ங்றாப்புல.

            "இந்தச் செயின்னு ஒண்ணு கழுத்துல இருக்கு. போறப்பன்னா அடவு வெச்சிட்டுப் போவலமாண்ணா?"ன்னா செய்யு பை நெறைய பணம் இருக்குறப்போ வெலையப் பாத்துப் பாத்துட்டு ஓட்டல்ல சாப்புட வாண்டாம்ங்றாப்புல.

            "அட ச்சைய்! வண்டிய ஸ்டார்ட் பண்ணுறேம். ஏறி உக்காரு!"ன்னாம் விகடு புரியாத்தனமா பேசுறவோளுக்கு தெரியாத்தனமா கூட வௌக்கம் சொல்லக் கூடாதுங்றாப்புல.

            "ல்லண்ணே! நமக்குத் தெரியும்ண்ணே! வக்கீலு ஐநூத்தோ, ஆயிரமோ கொடுங்கன்னு சொன்னா நீயி ஆயிரத்தத்தொம் கொடுப்பே. ஐநூத்த எடுத்து நீட்டுறப்பவே நெனைச்சேம். ஒங்கிட்டெ பணம் யில்ல. பணம் யில்லாம இன்னும் ரண்டு நாள எப்பிடி ஒட்டுறதுங்ற கவலெ ஒம் மூஞ்சியில எழுதி ஒட்டியிருக்குண்ணே! நாம்ம வேணும்ன்னா எதாச்சும் ஒரு பிரைவேட்டு ஸ்கூலுக்கு வேலைக்குன்னா போவட்டுமா?"ன்னா செய்யு சொமையத் தூக்குறப்போ ஒரு கையிக் கொடுத்தா சுலுவா மேல ஏறிடும்ங்றாப்புல.

            விகடு சிரிச்சாம். "ஒங் கனவு ன்னா? அவ்வேம் மின்னாடி ஒரு டாக்கடரேட் பண்ணுன ஆளா நிக்கணும்ன்னுதானே. அதெ நோக்கிப் போயிக்கிட்டெ இரு. அதுக்குப் படிச்சிக்கிட்டெ இரு. இந்தச் செருமத்தெ நாம்ம பாத்துக்கிறேம்."ன்னாம் விகடு கடிவாளம் போட்டுப்புட்டா குதிரெ எரவாணத்தெப் பாக்கக் கூடாதுங்றாப்புல.

            "யண்ணி என்னான்னா நெதமும் சோத்த வடிச்சி உப்பப் போட்டுப் போட்டுப் போடுது. பாப்பாவும் வளர வேண்டிய வயசுல அதெ சாப்புட்டுட்டுக் கெடக்குது. நீயும் என்னவோ தேவாமிர்தத்தெ சாப்புடுறதுப் போல சாப்புட்டுப் போறே. ஒம் ஒடம்பே சுத்தமா போச்சுண்ணே. இப்பிடியே சாப்புட்டா ஒடம்பு வெலவெலத்துப் போயிடும்ண்ணே. ஓடியாடி அலையுற ஆளு நீண்ணே. நீயி நல்லா சாப்புடணும்!"ன்னா செய்யு நாளு பூரா உழுவுற மாட்டுக்கு அரை கட்டு புல்லு கூட போடலன்னா எப்பிடிங்றாப்புல.

            "கொஞ்ச நாளுக்கு அப்பிடித்தாம் இருக்கும். எல்லாம் சரியாயிடும் வா!"ன்னாம் விகடு அடைமழைக்காலம் முடியுற வரைக்கும் வத்தல் கொழம்பெ வெச்சு சமாளிச்சுக்குவோம்ங்றாப்புல.

            "எப்பண்ணே சரியாவுறதோ? சாப்புட வேண்டிய வயசுல சாப்புடாம எப்பண்ணே சாப்புடுறது?"ன்னா செய்யு நெரைச்ச முடியிலா குஞ்சம் கட்டி அழகுப் பாக்க முடியுமாங்றாப்புல.

            "அதாங் சொல்றேன்னே கொஞ்ச நாளுக்குத்தான்னு. வண்டிய ஸ்டார்ட் பண்ணிக் கெளம்புவேம். நாம்ம வேற வூட்டுக்கு வந்து சாப்புட்டேம்ன்னா ஒடனே திருவாரூரப் பாக்க கெளம்பிடுவேம். மூணு மணிக்கு மேல அஞ்ஞப் போனேம்ன்னா கொடுத்துட்டுப் பொழுதுக்குள்ள திரும்பிடுவேம் பாரு!"ன்னாம் விகடு குளிரப் பாக்காம கொளத்துத் தண்ணிக்குள்ள கால வெச்சாத்தாம் குளிச்சி முடிச்சிட்டுக் கரையேறலாம்ங்றாப்புல.

            "போறப்ப இந்தச் செயின்ன..."ன்னு செய்யு இழுத்தா நஷ்டத்துல கஷ்டத்துலயும் தம் பங்கும் கொஞ்சம் இருக்கணும்ங்றாப்புல.

            "வாய மூடிக்கிட்டு வண்டியில உக்காந்து வர்றப் போறீயா யில்லையா?"ன்னு அதட்டுனாப்புல பேசுனாம் விகடு இதாம் வேலைன்னு எறங்கிப்புட்டா அதெப் பத்தி வேற வெட்டிப்பேச்சு இருக்க கூடாதுங்றாப்புல. செய்யு ஒண்ணும் சொல்ல முடியாம வண்டிய ஸ்டார்ட் பண்ணுறதுக்காகக் காத்திருந்தா. விகடு வண்டிய ஸ்டார்ட் பண்ணி ஸ்டாண்ட எடுத்து விட்டாம். அடைப்ப எடுத்து வுட்டா பாயுற தண்ணியப் போல பாய்ஞ்சோட தயாரானுச்சு வண்டி.

ஒரு அம்பது ரூவா இருக்குமா?

            சரியா வண்டியில கௌம்ப உக்காரப் போற நேரத்துல "அய்யா வாத்தியார்ரே!"ன்னே ஒரு கையி விகடுவோட தோள்ல பட்டுச்சு ஓடப் போற வண்டிய நிறுத்தப் போற பிரேக்கப் போல. யாருன்னு திரும்பிப் பாத்தாம் விகடு. அந்தக் கையி பாக்குக்கோட்டை பழைய பரமசிவத்தோட கையி.

            "யண்ணே கெளம்புவோம்ண்ணே!"ன்னா செய்யு பழைய பரமசிவத்தப் பாத்த எரிச்சல் தாங்காம பகையாளி வூட்டுல பச்சத் தண்ணிக் கூட வாங்கிக் குடிக்க கூடாதுங்றாப்புல.

            "ஒரு நிமிஷம் வாத்தியார்ரே!"ன்னு பழைய பரமசிவம் விகடுவெ அப்பிடியே கட்டிப் பிடிச்சிக்கிட்டாரு காந்தத்தோட வந்து ஒட்டிக்கிற இரும்பெப் போல. "தப்பா நெனைச்சுக்காதீங்க வாத்தியார்ரே! ஒரு அம்பது ரூவா இருக்குமா?"ன்னாரு பழைய பரமசிவம் பசி மயக்கத்துல இருக்குறவேம் ஒரு வாயிச் சோத்த யாசகம் கேக்குறாப்புல. விகடு அவர்ரப் புரியாமப் பாத்தாம்.

            "கொடுத்தீயன்னா மத்தியானம் கெளம்புறப்போ அந்தோ மொனைக் கடையில ஒரு பார்சல் சாப்பாட்ட வாங்கிட்டுப் பாக்குக்கோட்டைக்குப் பஸ் ஏறுவேம். ஒரு சாப்பாட்ட நாலு பேரு சாப்புட்டுக்குவோம் வாத்தியார்ரே. நாம்ம, நம்மட வூட்டுக்காரி, நம்மட பொண்ணு, நம்மட பேரப் புள்ளே. அவ்வே எம் மவ்வே தாலியறுத்த மூதியா வூட்டுலக் கெடக்கா!"ன்னு சொல்லுறப்போ பழைய பரமசிவத்தோட கண்ணெல்லாம் கலங்கிடுச்சு பசிக்கு மின்னாடி மான ரோஷமெல்லாம் பாத்துட்டு நிக்க முடியாதுங்றாப்புல.

            விகடு ரண்டு நூத்து ரூவாய எடுத்து எரநூத்து ரூவாயக் கொடுத்தாம் விரோதின்னாலும் வூட்டு வாசப்படி ஏறிட்டா வாங்கன்னு கூப்புட்டுத்தாம் ஆவணும்ங்றாப்புல. "அம்பது போதும் வாத்தியார்ரே!"ன்னாரு பரமசிவம் கேக்குறதுக்கு மேல ஒத்த பைசா கூட வாணாம்ங்றாப்புல.

            "நாலு பார்சல் வாங்குனீயன்னா நாலு பேரும் நெறைவா சாப்புடலாம்!"ன்னாம் விகடு கெடைக்குற சாப்பாட்டுக்கு ஏத்தாப்புல கொடல சுருக்கிட்டுக் கெடக்க வாணாம்ங்றாப்புல.

            "நெறைவால்லாம் கெடையாது வாத்தியார்ரே. அதெ ராத்திரிக்கிம் வெச்சிப்போம்!"ன்னாரு பழைய பரமசிவம் ஒரு வேளைச் சாப்பாட்டெ ரண்டு வேளைக்கு வெச்சி பசியாறிப்போம்ங்றாப்புல. அதெச் சொல்லிப்புட்டு, "எந் நெலையப் பாத்தீயளா?"ன்னு தேம்பி தேம்பி அழுவ ஆரம்பிச்சிட்டாரு ஊரு ஒசந்து ஒசத்தியாப் பாக்க ஓடுன தேரு உருக்கொழைஞ்சு நிக்குறாப்புல.

            "டீத்தண்ணி சாப்புடறீயளா?"ன்னாம் விகடு கசக்குற வாயிக்குக் கொஞ்சம் கற்கண்டெ அள்ளிப் போட்டுக் கசப்பெ மாத்துறாப்புல.

            "ஒஞ்ஞ கையால வாங்கிக் கொடுங்க வாத்தியார்ரே!"ன்னாரு பழைய பரமசிவம் உரிமெயா கொடுக்குறப்போ கல்லெடுத்துக் கொடுத்தாலும் கடிச்சித் திம்பேம், மண்ணள்ளித் தந்தாலும் மென்னுத் திம்பேம்ங்றாப்புல.

விகடு எதுத்தாப்புல இருந்த கடைக்குப் போயி ரண்டு வடையும், ஒரு பேப்பர் கப்புல டீயும் வாங்கியாந்து தந்தாம். பழைய பரமசிவம் வடைக ரண்டையும் தொண்டையில அடைச்சிக்கிறாப்புல வேக வேகமா சாப்புட்டாரு. காலச் சாப்பாடு சாப்புட்டு இருக்க மாட்டாரு போல. ஒரு வேள ராத்திரிப் பொழுதுலேந்தும் கூட சாப்புட்டுருக்காம இருந்திருப்பாரோ என்னவோ! ஒரு நிமிஷம் ஆயிருக்காது. சட்டுன்னு கப்புல இருந்த டீயை வாங்கி உறிஞ்சினாரு. "நீஞ்ஞ ந்நல்லா இருக்கணும் வாத்தியார்ரே. ந்நல்லா இருப்பீயே. எவ்ளோ காசிப் பணத்தெ வுட்டும் இன்னும் சிரிச்ச மொகமாத்தான்னே இருக்கீயே? மொகத்துல ஒரு கோவம், கவலெ எதுவும் காணுமே! ந்நல்லா இருப்பீரு வாத்தியார்ரே!"ன்னாரு பழைய பரமசிவம் சாவக் கெடக்குறவேமுக்கும் ரத்தம் கொடுத்துக் காப்பாத்துனதெப் போல.

            "பெறவு நாஞ்ஞ கெளம்புட்டுமா?"ன்னாம் விகடு ஏத்தி வந்த ரயிலு எறக்கி வுட்டப் பெறவு கௌம்பியாவணும்ங்றாப்புல.

            "ஒரு அஞ்சு நிமிஷம். அஞ்சே அஞ்சு நிமிஷம். ஒஞ்ஞகிட்டெ பேசிக்கிறேம். பெறவு கெளம்புங்களேம்."ன்னு கெஞ்சுறாப்புல கேட்டாரு பழைய பரமசிவம் தலைச்சொமைய எறக்கி வைக்க கை கொடுங்கன்னு கேக்குற மாதிரிக்கு மனப்பாரத்தெ எறக்கி வைக்க சொல்றதெ சித்தெ காது கொடுத்துக் கேட்டுட்டுப் போங்கங்கறாப்புல.

            "சொல்லுங்க!"ன்னாம் விகடு டீ வடையில பசியாறுனதெப் போல அந்த மனுஷரோட மனசும் ஆறட்டும்ங்றாப்புல.

*****

26 Feb 2021

பெட்டி கேஸ்!


 பெட்டி கேஸ்!

செய்யு - 729

            பாண்டுரங்கஹரி வக்கீல் சொன்னது போல கங்காதரன செருப்பால அடிச்சது பெட்டிக் கேஸா ஆயிருந்துச்சு. செருப்பால அடிச்ச செய்யு, எதுவும் செய்யாம என்ன செய்யுறதுன்னு கொழம்பிப் போயி நின்ன சுப்பு வாத்தியாருன்னு ரண்டு பேத்தையுமே கங்காதரன தாக்க முயற்சிப் பண்ணதா வழக்குல சேத்திருந்தாங்க. எல்லா வழக்குக்கும் வக்காலத்துப் போட்டுட்டு, அப்பிடியே அந்த செருப்படி கேஸூக்கும் வக்காலத்தெ போட சுப்பு வாத்தியாரு டிவியெஸ் பிப்டியில மவளெ அழைச்சிட்டுப் போனாரு. அந்த வழக்குல பாண்டுரங்கஹரி வக்கீல் ஆஜராவ அதுக்கு ரண்டாயிரம் பணத்தையும் கையோட எடுத்துட்டுப் போயிருந்தாரு. அதெ வக்கீல்கிட்டெ கொடுத்து அவரும் வக்காலத்துல கையெழுத்தப் போட்டுக் கொடுத்தாரு. அன்னிக்குன்னுப் பாத்து வன்கொடுமெ வழக்குக்கும் தேதியாயிருந்துச்சு.

            செய்யு இந்தத் தேதிக்குக் கோர்ட்டுக்கு வர்றேங்றதெ மூலங்கட்டளெ கோவிந்துக்குப் போன அடிச்சிச் சொல்லிருப்பா போல. கோவிந்து, மகேந்திரன், பெத்தநாயகமும் கட்சிக்கார ஆளுங்கள நாலைஞ்சு பேர்ர தொணைக்கு அழைச்சிக்கிட்டு ஆர்குடிக்கு வந்திருந்தாங்க. இப்போ புதுசாப் பாத்திருக்குற வக்கீலு பாண்டுரங்கஹரின்னு கேள்விப்பட்டதும், "ஏம்ம்மா! இதெ நம்மகிட்டெ சொல்லிருக்கக் கூடாதா? நாமளே அவர்கிட்டெ சொல்லி விட்டுருப்பேமா?"ன்னாரு கோவிந்து தென்னந்தோப்பெ வெச்சிருக்கிறவேம் கடைத்தேங்காயப் போயி வாங்கிட்டு நிக்குறதாங்றாப்புல.

            "யப்பாவும் யண்ணனும்தாம் அவுங்களுக்குத் தெரிஞ்ச வாத்தியாரு மூலமா வக்கீல் அய்யாவப் பாத்துட்டு வந்திருந்தாங்க! நமக்கொண்ணும் வெவரம் தெரியாதுண்ணா!"ன்னா செய்யு அரிசிக்கடை சந்துன்னு தெரியாம அரிசிய விக்க வந்துப்புட்டேம்ங்றாப்புல.

            "பாத்து வெச்ச வரைக்கும் செரித்தாம். நாம்ம வந்திருந்தேம்ன்னா பீஸூ இல்லாம பிரியா பண்ணி விட்டிருப்பேம். ஒன்னய நம்ம தாய்மண் முன்னேற்றக் கழகத்தோட மகளிரணி துணைத் தலைவின்னு சொல்லிருந்தா பிரியாவே வழக்க எடுத்திருப்பாரு. நமக்குத் தெரியாம போயிட்டே! அதுக்குச் சொன்னேம்! ஏன்னா பாண்டுரங்கஹரி நம்ம கட்சியில பல பொறுப்புல இருந்த ஆளு! நம்ம கட்சி ஆளுன்னா வுட்டுட மாட்டாரு!"ன்னாரு கோவிந்து கடல்ல தவிக்குற மனுஷன டால்பினுங்கப் பாத்துப்புட்டா காபந்து பண்டாம விடாதுங்றாப்புல. அதெ சொன்னதோட இல்லாம கோவிந்தும் வக்கீல்கிட்டெ போயி செய்யுவ அறிமுகம் பண்ணி வெச்சாரு.

            "அட நம்ம கட்சிப் பொண்ணுன்னு தெரியாம போயிடுச்சேப்பா! ரண்டாயிரந்தாம் கட்டுக்கு வாங்குனேம். கொடுக்கவா வெச்சிக்கவா?"ன்னிருக்காரு பாண்டுரங்கஹரி சிரிச்சிக்கிட்டெ அங்காளி பங்காளிக்குக்குப் பண்டுறதுக்கெல்லாம் காசியக் கேக்க முடியுமாங்றாப்புல.

            "இந்தக் காலத்துல கட்டுக்கு யாருங்கய்யா ரண்டாயிரம் வாங்குறா? எல்லாம் அய்யாயிரம் பத்தாயிரம்ன்னு எக்ஸ்பிரஸ் வேகத்துல பறந்துக்கிட்டு இருக்காங்க. இதெ ரேட்டை மட்டும் தங்காச்சிக்கு மெயின்டெய்ன் பண்ணிக்குங்க!"ன்னாரு கோவிந்து வாடிக்கையா யேவாரம் கொடுக்குறவங்களுக்கு வெலையக் கொறைச்சிக்கிடணும்ங்றாப்புல.

            "வக்காலத்துல கையெழுத்தப் போட்டுட்டு அப்பிடியே இன்னிக்குத் தேதியாயிருக்குற வன்கொடுமெ வழக்குக்கும் கோர்ட்டுல ஆஜராயிட்டுப் போயிட்டா ஒரு ரண்டு வாய்தாவுக்கு வர்ற வேண்டியதில்ல. பொண்ணு படிக்குதாம்ல. இந்த வழக்கால படிப்புக் கெட கூடாது பாருய்யா! அது செரி நீங்கல்லாம் யாரு? மகளிரணி துணைத் தலைவிக்கு செக்யூரிட்டிங்களா? பல அடுக்குப் பாதுகாப்பால்ல இருக்கும் போலருக்கு!"ன்னிருக்காரு பாண்டுரங்கஹரி சிரிச்சபடிக்கு வூட்டுக்கு ஒரு புள்ளெ ரண்டு புள்ளையா பெத்துக்கிடலாம்ன்னா ஒரு கெராமத்தையே பெத்து வெச்சிக்கிடுறதாங்றாப்புல.

            "ஆமாங்கய்யா! அந்தச் செருப்படி வெவகாரத்தால பொண்ணு ரொம்ப பயப்படுது. அதாங் இங்க ஆர்குடியில எப்ப வாய்தான்னாலும் நமக்கு போன்ன அடிச்சிடும். நம்மாள வர்ற முடிஞ்சா வந்துடுவேம். இல்லன்னா நம்ம ஆளுங்ககிட்டெ போன பண்ணிட்டுச் சொன்னா அவனுங்கப் பாத்துப்பானுங்க. நம்ம ஆளுங்களுக்குத்தாம் எல்லா கோர்ட்டுலயும் வழக்கு இருக்கே!"ன்னாரு கோவிந்து ஒரு சோலியா திருவாரூருப் பக்கம் போறவேம் தியாகராசரையும் தரிசனம் பண்டிட்டு வாராப்புலத்தாம்ங்றாப்புல.

            "அதுவும் நல்லதுதாம். பொண்ண அழைச்சிட்டுப் போயி கோர்ட்டுல அப்பியரன்ஸ்ஸ முடிச்சிட்டு அப்பிடியே அழைச்சிட்டுப் போயிடுங்க! பாத்துக்கிடலாம்! குமாஸ்தா வருவாப்புல. டிரையலப்பா நாம்ம வந்துக்கிடுறேம்!"ன்னாரு பாண்டுரங்கஹரி வருஷத்துல எல்லா நாளும் சாமிப் பொறப்பாடு இருக்காதுங்றாப்புல. அப்படியே சுப்பு வாத்தியார்ரப் பாத்து, "திருவாரூரு வடக்கு வீதியல அய்யப்ப மாதவன்னு ஒரு வக்கீலு. வடக்கு வீதியில போயி வெசாரிச்சா சின்ன புள்ளயும் வெலாசம் சொல்லிப்புடும். நம்ம ஆளுதாம். ஊருக்கு ஊரு நமக்கு ஆளு இருக்கு. திருவாரூர்ல இருக்குற நம்ம ஆளு அவரு. பெரிய பணக்கார வூட்டுப் புள்ளே. அவரு அப்பாரு, தாத்தம் காலத்துலேந்து வக்கீலு குடும்பம். வக்கீலு தொழிலு நடத்தித்தாம் சம்பாதிக்கணும்ங்ற அவசியமே யில்ல. ஏகப்பட்ட சொத்து, நெல நீச்சுன்னு அதுவே நூத்து நூத்தம்பது வேலி கெடக்கும். அதெ பாக்குறதுக்கே நேரம் கெடையாது. என்னவோ குடும்பத் தொழில்லா வர்றதால நடத்திட்டு இருக்குறாம். தொழில்ல ரொம்ப சரியா இருப்பாம். அவ்வேங்கிட்டெ போன்னப் போட்டுச் சொல்லிருக்கேம். அங்க இந்த ஜீவனாம்ச அப்பீலுக்கான கட்டெ கொண்டுப் போயிக் கொடுத்து இத்துப் போல நம்ம பேர்ரச் சொல்லி வெசயத்தச் சொல்லி கட்டோட ரண்டாயிரத்தக் கொடுத்துடணும் ஆம்மா! இந்தக் கட்டெ எடுத்துக்கோங்க!"ன்னாரு ஜீவனாம்சத்துக்கான மேல் அப்பீலுக்கான கட்டெ எடுத்துக் கொடுத்து ஊருக்கு ஊரு வூட்டெ கட்டி வெச்சிருக்கிறவேம் எந்த ஊருக்குப் போனாலும் தங்குறதுக்குப் பெரச்சனெ இல்லங்றாப்புல. சுப்பு வாத்தியாரு அந்தக் கட்டெ எடுத்துப் பையில போட்டுக்கிட்டாரு சேர்க்க வேண்டிய எடத்துல சரியா மணியார்டர்ரச் சேத்துப்புடுவேம்ங்ற தபால்காரரப் போல.

            "செரி கெளம்புங்க. கோர்ட்டுக்கு நேரமாயிடுச்சு!"ன்னு பாண்டுரங்கஹரி கெளப்பி விட்டதும், செய்யு, சுப்பு வாத்தியாரு, கோவிந்து, பெத்தநாயகம், மகேந்திரன், அவுங்களோட கூட வந்து ஆளுங்கன்னு எல்லாம் ஒண்ணா சேந்து ஆர்குடி குற்றவியல் நீதிமன்றத்து வளாகத்துக்குள்ள நொழைஞ்சாங்க. ரொம்ப சரியா அன்னிக்குன்னுப் பாத்து பாலாமணியும் கங்காதரனும் கோர்ட்டுக்குள்ள நொழைஞ்சிருந்தாங்க. வழக்கு நம்பர்ரச் சொல்லி, பேர்ர கூப்புட்டதும் செய்யுப் போயி கோர்ட்டுக்குள்ளார நின்னா. பாலாமணியும் போயி நின்னாம். கங்காதரன் எழும்பி, வழக்க வேணும்ன்னே இழுத்தடிக்க நினைக்கிறதா சொன்னாம். பாண்டுரங்கஹரியோட குமாஸ்தா எழும்பி, "இன்னிலேந்து இந்த வழக்குல எங்க வக்கீலு ஆஜராவுறாப்புல இருக்காங்க."ன்னு சொல்லி வக்காலத்தெ கோர்ட் கிளார்க்கிட்டெ சமர்ப்பிச்சாரு. ஜட்ஜ் அதெ குறிச்சிக்கிட்டு, "சீக்கிரமெ எவிடென்ஸ்ஸ சப்மிட்டு பண்ணுங்க!"ன்னு சொல்லி மறுதேதி கொடுத்து அனுப்பி வெச்சாரு.

இது எங்க ஏரியா!

            கோர்ட்டெ வுட்டு வெளியில வந்ததும் பாலாமணியும், கங்காதரனும் மின்னாடிப் போல செய்யுவ வம்புக்கு இழுத்துப் பேசல, பரிகாசம் பண்ண நெனைக்கல. வேகு வேகுன்னுப் போயி இன்னோவாவுல ஏறப் போனாங்க.

            "இப்பப் பாருங்க நடக்கற வேடிக்கைய!"ன்னு சொல்லிட்டு கோவிந்தும், பெத்தநாயகமும், மகேந்திரனும் அவுங்கப் போற தெசைக்கு எதிர்தெசையிலப் போயி நேர்ரா மோத வர்றதப் போல வந்து அவுங்க மேல மோதுனாங்க ரோட்டுல ஓரமா ஒழுங்கா போயிட்டு இருக்குறவேம் மேல போயி மோதுற வண்டிக்காரனெ போல. ஒடனே அவுங்க கூட வந்து ஆளுங்க அவுங்க பின்னாடியே அடிக்கப் போறதெப் போல பாய்ஞ்சிப் போனாங்க சண்டெ வைக்காம அமைதியா போனா ச்சும்மா வுட்டுப்புடுவோமாங்றாப்புல. பாலாமணியும், கங்காதரனும் ஸ்தம்பிச்சதுப் போல நின்னாங்க. "சாரி சார்! தெரியாம வந்து மோதிட்டேம்!"ன்னாரு வக்கீல் கங்காதரன் அடிபட்டு வுழுந்து கெடக்குறவேம் அடிச்சவனெப் பாத்து தானாத்தாம் வுழுந்து அடிபட்டுக்கிட்டேன்னு மன்னிப்பக் கேக்குறாப்புல.

            "வந்து மோதுனது நாஞ்ஞ. நீயேம் சாரி கேக்குறே? ஏம் சண்டெ வர்றக் கூடாதுன்னு பயப்படுறீயா?"ன்னாரு கோவிந்து மறுகன்னத்தெ காட்டுனாலும் அறை வுழுவும், கால்ல வுழுந்தாலும் ஒதை வுழுவும்ங்றாப்புல. கங்காதரனும், பாலாமணியும் எந்தப் பதிலையும் சொல்லாம அப்பிடியே தேமேன்னு நின்னாங்க காலச் சுத்துன பாம்பு கடிக்காம வுட்டா போதும்ங்றாப்புல.

            "அந்தப் பயம் இருக்குல்லா. அந்தப் பயத்தோடேயே கோர்ட்டுக்கு வாரணும், போவணும். ஏன்னா இத்து ஒஞ்ஞ ஏரியா இல்ல. எஞ்ஞ ஏரியா. புரியுதில்லா?"ன்னாரு கோவிந்து ஆர்குடிங்றது தாய்மண் முன்னேற்ற கழகத்துக்காரங்களோட கோட்டைங்றாப்புலயும், கோட்டைக்குள்ள வர்றவேமுக்குக் கொட்டமெல்லாம் அடங்கியிருக்கணும்ங்றாப்புலயும். கங்காதரனும், பாலாமணியும் புரியுறதுப் போல தலைய ஆட்டுனாங்க அடிபட்ட பாம்பு தலைய தூக்க முடியாம தொங்கப் போட்ட படி அந்தாண்டயும் இந்தாண்டயும் தலைய அசைச்சுப் பாக்குறாப்புல.

            "இனுமே எஞ்ஞப் பொண்ணுகிட்டெ எதுவும் வெச்சிக்கிட்டெ ஆர்குடி பக்கம் வந்துட்டு ரணம் இல்லாம திரும்ப முடியாது பாத்துக்கோ. கோர்ட்டுக்கு வந்தீயா? போனீயான்னு இருக்கணும். அநாவசியப் பேச்சு, பரிகாசம், மெரட்டுறது இதெல்லாம் இருக்கக் கூடாது. இருந்துச்சுன்னு வெச்சுக்கோ மவனெ ஆர்குடிக்கு வர்றதுக்கு நீயி இருக்க மாட்டே!"ன்னாரு பெத்தநாயகம் கசாப்புக்கடெகாரனுக்கு ஆட்டறுத்துக் கொல்லுறோமேங்ற பிரக்ஞையே இருக்காதுங்றாப்புல.

            "அட வுடுங்கப்பா சுடுகுஞ்சிகயப் போட்டு மெரட்டிக்கிட்டு. பாவந்தானே! ஏ அம்மணக்குஞ்சிகளா இதெ அழுதுகிட்டுப் போயி யம்மா யப்பாகிட்டெ சொல்லிட்டு அடுத்த மொறை அவுங்களக் கூப்புட்டு வந்து பெரியவங்கள வெச்சி வம்ப வளக்கக் கூடாது பாத்துக்கோ. பெறவு இந்த மகேந்திரன் மகேந்திரான இருக்க மாட்டாம்! கொதிச்சி எழுந்துடுவாம்! ஒரு கையால வாயையும் இன்னோரு கையால சூத்தையும் பொத்திக்கிட்டுப் போயிக்கிட்டெ இருக்கணும்!"ன்னாப்புல மகேந்திரன் இனுமே ஆர்குடி வர்றப்போ பொத்திக்கிட்டுப் போவலன்னா அவுந்த மேனியா அடிச்சு வெரட்டுவேம்ங்றாப்புல. அத்தனைக்கும் ஒண்ணும் சொல்லாம ரண்டு பேரும் அமைதியாவே நின்னாங்க இதுக்கு மேல காறித் துப்புனாலும் கண்டுக்கிடாம தொடைச்சிக்கிட்டுப் போயிட்டே இருப்போம்ங்றாப்புல.

            "ச்சீப் போங்கடா! இனுமே ஆர்குடிக்கு வந்துட்டுப் போற சொவடு தெரியக் கூடாது! தெரிஞ்சா ஒங்க காலடிச் சொவடு மறுக்கா ஆர்குடியில பாக்க முடியாது. இந்த ஆர்குடியில நாங்கதாம்டா கிங்கு! அலும்பு பண்டலாம்ன்னு நெனைச்சே அந்துத் தொங்கிடும் சங்கு!"ன்னு கோவிந்து சொல்லிட்டு நவந்து வழிய வுட்டாரு இன்னிக்குப் போயி நாளைக்கு வர்றப்பயும் இப்பிடித்தாம் குனிஞ்ச தலெ நிமுராம வந்துக்கிட்டும் போயிக்கிட்டும் இருக்கணும்ங்றாப்புல. கோவிந்து வுட்ட அந்த வழியில பாலாமணியும், கங்காதரனும் வேகமா ஓடிப் போயி இன்னோவா கார்ல ஏறுனாங்க காலடிச் சொவட்ட கண்டுகிட்டெ பாம்பு பொந்துக்குள்ள ஓடி ஒளியப் பாக்குறதப் போல. காரு அவுங்க ஏறுன வேகத்துல சர்ட்டுன்னு கெளம்பி கோர்ட்டு வளாகத்தெ விட்டு வெளியில போனுச்சு தப்பிச்சாப் பொழைச்சாப் போதும்ன்னு உசுரெ கையிலப் பிடிச்சிட்டு ஓடுறவேம்மே போல. அதெ பாத்துட்டு இருந்த சுப்பு வாத்தியார்கிட்டெயும், செய்யுகிட்டெயும் கோவிந்தும் மகேந்திரனும் பெத்தநாயகமும் அவுங்களோட ஆட்களும் வந்தாங்க.

            "பாத்தீங்களே! எப்பிடி மெரண்டுப் போறானுவோ! இனுமே தங்காச்சி நீயி தனியா வந்தாலும் ஒங்கிட்டெ வர்ற யோசிப்பானுவோ. இன்னிக்கு எஞ்ஞ கர வேட்டிய எல்லாம் பாத்திருப்பானுவோ. இனுமே எப்போதும் நீயி தனியாளு இல்ல. கட்சியோட அங்கம். எங்கப் போனாலும் கட்சி ஒம் பின்னாடி நிக்கும்!"ன்னாரு கோவிந்து ஆடுங்க போற எடமெல்லாம் மேய்க்குறவேமோட காவல் நாயி தொணைக்கு வாரும்ங்றாப்புல.

            "ஒஞ்ஞளுக்கு எப்பிடி நன்றி சொல்றதுன்னே தெரியல!"ன்னு சுப்பு வாத்தியாரு தழுதழுத்தாரு வெரட்டி வெரட்டி அடிச்சவனுங்கள வெரண்டு ஓட வெச்சுப்புட்டீங்களேங்றாப்புல.

            "நம்மப் பசங்க எல்லாம் சாப்பாட்டுப் பிரியனுங்க. வாஞ்ஞ மொதல்லப் போயி ஓட்டல் கடையில சாப்புடுவோம்!"ன்னாரு பெத்தநாயகம் சாப்புட கைய அலம்பிக்கிட்டு வந்தவேம்கிட்டெ கையக் குலுக்க வாணாம்ங்றாப்புல.

            "ஒஞ்ஞளப் பாத்தா சாப்புடற ஆளப் போலயே தெரியலையேண்ணா!"ன்னா செய்யு நாலு பிளேட்டு பிரியாணி கேக்குறவேமுக்கு அடிக்கிற காத்து அலேக்கா தூக்கிட்டுப் போற அளவுக்குத்தாம் ஒடம்பு இருக்குங்றாப்புல.

            "பாத்தியா தங்காச்சிக்கு கிண்டல் பண்ணுறது எப்பிடிக் கொப்புளிச்சிக்கிட்டு வருது? இனுமே நமக்கொண்ணும் கவலெயில்ல. நம்மப் பாதுகாப்புக்கு வேணும்ன்னா தங்காச்சிய கூட வர்றச் சொல்ல வேண்டித்தாம் இனுமே!"ன்னாரு பெத்தநாயகம் கொப்புளிச்சிட்டு வர்ற தண்ணியில உண்டாவுற சொழலு எப்பிடி போட்டு அமுக்கும்ன்னு தெரியாதுங்றாப்புல.

            "அதுக்குதாம்யா நம்மள மாதிரி சாப்புட்டு ஒடம்ப தேத்தி வையுய்யான்னா, இப்பிடி ஒட்டடெக்குச்சி போல போயி நின்னுகிட்டு மெரட்டுனீன்னா கூட நிக்குற எஞ்ஞளப் பத்தி அவ்வேம் என்னத்தெ நெனைப்பாம்!"ன்னாரு மகேந்திரன் தாட்டிகமா இருக்குற ஒடம்பெ வெச்சுத் தாராளமா சகட்டு மேனிக்கு மெரட்டலாம்ங்றாப்புல.

            "பாத்துடா தம்பீ! ஒஞ்ஞளுக்கு மின்னாடி கட்சிக்கு வந்த ஆளுடாம்பீ நாம்ம. ஒஞ்ஞளத் தூக்கி ஆளாக்கி வுட்டுச் சோடா பாட்டுல வீச, உருட்டுக் கட்டெயெ சுத்த கத்துக் கொடுத்த ஆளுடாம்பீ நாம்ம! உருவம் சிறிசுன்னாலும் விஸ்வரூவம் எடுத்தா பெரிசுடாம்பீ!"ன்னாரு பெத்தநாயகம் உருவத்தெ வெச்சு எடைப் போடக் கூடாது, கரிச்சாங்குருவி பருந்தையும் பாய்ஞ்சு அடிக்கும்ங்றாப்புல.

            "மன்னிசிக்கோ குருதேவா! ஓட்டல் கடைக்குப் போயி மிச்சத்தெ வெச்சிக்கிடலாம்!"ன்னாரு மகேந்திரன் வூடு கட்டி வெளையாண்டுக்கிட்டே இருந்தா வூட்டுக்கு எப்போ போறதுங்றாப்புல. அதுக்கு மேல பேச்ச வளத்த வுடக் கூடாதுன்னு சுப்பு வாத்தியாரு எல்லாரையும் அழைச்சிக்கிட்டுப் போயி ஓட்டல் ஆரியாஸ்ல மத்தியானச் சாப்பாட்ட பண்ணி வுட்டு அனுப்பி வெச்சாரு. அதுலேந்து எப்போ செய்யு ஆர்குடி வந்தாலும் வந்துப் பாத்துக்கிறதும், பஸ்ல வந்தா ரண்டாம் நம்பரு பஸ்ஸூ வர்ற வரைக்கும் நின்னு அழைச்சிட்டு வர்றதும், கோர்ட்டுல வேல முடிஞ்சா பஸ் ஸ்டாண்டு வரை வந்து பஸ்ஸேத்தி வுடுறதெயும் ஆர்குடியில இருக்குற கோவிந்தோட தாய்மண் முன்னேற்ற கழகத்தோட ஆளுங்கள்ல யாராச்சும் செஞ்சு வுட ஆரம்பிச்சாங்க. ஆர்குடிக்கு தனியா போயிட்டு வர்ற அளவுக்கு செய்யுவுக்கும் தைரியம் உண்டாவ ஆரம்பிச்சது. ஊர்ல இருந்தா சரியா படிக்க முடியலன்னும், ஊர்ல இருக்கப் பிடிக்கலன்னும் சொல்லிட்டு இருந்த அவளோட மனநெலை இப்போ ரொம்பவே மாறிடுச்சு. ஊர்லேந்துதாம் படிக்குறா. ஊர்லேந்துதாம் கோர்ட்டுக்குச் சமயத்துல அவளா தனியாவும் போயிட்டு வந்துப்புடுறா.

*****

25 Feb 2021

வெளியில நிக்குற நாய அடிச்சித் தொரத்து!

வெளியில நிக்குற நாய அடிச்சித் தொரத்து!

செய்யு - 728

            ஆனந்தகுமாருக்கு விகடு போனைப் போட்டு கட்டு ஒண்ணு கொறையுறதையும், வேற ஒரு கட்டு கூடுதலா இருக்குறதையும் சொன்னா, அந்தக் கட்டோட பேர்ரக் கேட்டுக்கிட்டவரு, "அதெத்தாம் சார்! ஒரு பத்து நாளா ஆபீஸ்ஸையே தொடைச்சி அள்ளித் தேடிக்கிட்டு இருக்கேம். முக்கியமான வழங்குங்க சார் அது. அந்த ஆளு வேற ஆபீஸூக்கு வந்து ரப்சர் பண்ணிட்டுப் போயிட்டு இருக்காம். நீங்க ஒண்ணு பண்ணுங்க. நம்ம அட்ரஸூக்கு அந்த கட்டெ அப்பிடியே கூரியர் பண்ணி விட்டுடுங்க. ஒங்க கட்டையும் நாம்ம ஒங்க அட்ரஸூக்குக் கூரியர் பண்ணி வுட்டுடுறேம்!"ன்னாரு இன்னிக்கு நீயி வாங்குற மிட்டாய்ல காக்கா கடி கடிச்சுக் கொடுத்தா, நாளைக்கு நாம்ம வாங்குற மிட்டாய்ல ஒமக்குக் காக்கா கடி கடிச்சிக் கொடுப்பேம்ங்றாப்புல.

            "கூரியர்ல்லாம் வேண்டாங்கய்யா! நாமளே நேர்ல கொண்டாந்து ஒஞ்ஞ கட்டெ ஒஞ்ஞகிட்டெ கொடுத்துட்டு, எஞ்ஞ கட்டெ வாங்கிட்டு வந்துடுறேம்!"ன்னாம் விகடு வயித்து வலி கண்டவேம் வைத்தியர்ர நேர்ல பாத்துதாம் மாத்திரையப் போட்டுக்கிடணும்ங்றாப்புல.

            "தேவையில்லாத அலைச்சல் சார்! கூரியர்ல போட்டா வேலை முடிஞ்சிடும். நீங்க வேற எண்பதும் எண்பதும் நூத்து அறுவது கிலோ மீட்டர் வந்து திரும்பணும்!"ன்னாரு ஆனந்தகுமாரு போன்ல பேசி முடிச்சிட்டா வேன்ல வந்து அலைய வாண்டியதில்லங்றாப்புல.

            "சனிக்கெழம வந்தா இருப்பீங்களா?"ன்னாம் விகடு நேக்கா முடிக்க வேண்டியதெ நேர்ல பாத்துதாம் முடிக்கணும்ங்றாப்புல.

            "வாங்க சார்! நாம்ம இல்லன்னாலும் ஆபீஸ்ல யாராச்சும் இருப்பாங்க. நாம்ம விவரத்தெ சொல்லி ஒங்க கட்டெ எடுத்து வெச்சிருக்கேம். ஒங்களுக்கு எந்த வெதமான தாமதமும் இல்லாம அனுப்பி வெச்சிடுவாங்க! நீங்க கெளம்புறப்ப வேணும்ன்னா போன அடிங்க. நாம்ம ஆபீஸூக்கு வந்துடுறேம்!"ன்னாரு ஆனந்தகுமாரு விரோதின்னாலும் வூடு தேடி வந்துட்டா கௌரவத்துக்குக் கொறைச்சல் யில்லாம நடந்துக்கிடணும்ங்றாப்புல.

            "வேணாங்கய்யா! யாருக்கும் தொந்தரவு வேண்டாம். அதாம் ஆபீஸ்ல யாராச்சும் இருப்பாங்கன்னு சொல்றீயேளே! நாம்ம கட்டெ கொடுத்துட்டு கட்டெ வாங்கிட்டு வந்துடுறேம்."ன்னு சொன்னவேம் சொன்னபடிக்கே சனிக்கெழமெ டிவியெஸ் பிப்டிய எடுத்துட்டுக் கெளம்புனாம் மொறைப்படிப் போயி உருப்படியா இந்த மொறையாச்சும் முழுசா காரியத்தெ முடிச்சிடணும்ங்றாப்புல. அதுக்கேத்தாப்புல நேரா கும்பகோணத்துக்குப் போயி கட்டெ வாங்குறது, வாங்குன கையோடயே நேரா அங்யேிருந்து ஆர்குடிக்கு வந்து பாண்டுரங்கஹரிகிட்டெ கட்டெ கொடுத்துட்டு வந்துடறதுன்னு திட்டம் பண்ணிக்கிட்டாம் விகடு.

            போன மொறைப் போன அனுபவத்துல ஆபீஸூ தொறக்காம வெளியில உக்காந்திருக்க வேண்டியதெ நெனைச்சிக்கிட்டு, இந்த மொறை காலச் சாப்பாட்ட முடிச்சிட்டு ஒம்போது மணிக்கு மேல கெளம்பி பதினொண்ணரை மணிக்குத்தாம் கும்பகோணத்துக்குப் போயிச் சேந்தாம். ஆபீஸ்ல நந்தகுமாரும், செந்தில்குமாரும் இருந்தாங்க. விகடுவெப் பாத்ததும் செந்தில்குமாரு மொகத்தத் திருப்பிக்கிட்டாரு. நந்தகுமாருதாம், "வாங்க சார்! வேற வக்கீல் பாத்துட்டதா ஆனந்தகுமாரு அண்ணன் சொன்னாரு. கட்டு மாறிப் போயிடுச்சுன்னும் சொன்னாரு. சாரி சார்! நாம்ம வேற அன்னிக்கு நீங்க வந்த நேரத்துல அவசரமா கோர்ட்டுக்குக் கெளம்புறதுல இருந்தேம்மா! ஆனந்தகுமாரு அண்ணனும் பாக்காம கொடுத்துட்டாரு. இந்தாங்க ஒங்க கட்டு. வெரிபை பண்ணிட்டேம்!"ன்னாரு நந்தகுமாரு கட்டை நீட்டிக்கிட்டெ ஒரு மொறை தப்பு பண்டுணவேம் மறுமொறையும் தப்பு பண்ட மாட்டாம்ங்றாப்புல.

            விகடு பையில கைய வுட்டு, மாத்திக் கொடுத்திருந்த அவுங்க கட்டை எடுத்து நீட்டுனாம். அதெ வாங்கிக்கிட்ட நந்தகுமாரு, "தேங்க்ஸ் ஸார்! யாரு வக்கீல்!"ன்னாரு பொக்கிடம் போன எடம் பொருத்தமான எடமான்னு தெரிஞ்சிக்கிடுறாப்புல.

            "ஆர்குடியில பாண்டுரங்கஹரி!"ன்னாம் விகடு சேந்த எடம் சிறப்பான எடமான்னு சொல்லுங்கங்றாப்புல. அதெ கேட்டுட்டு கண்ண மூடிட்டு தலைய மட்டும் ஆட்டுனாரு நந்தகுமாரு. எதாச்சும் சொல்வார்ன்னு எதிர்பார்த்தா எதையும் சொல்லல.

            "நாம்ம கெளம்புறேம்ங்கய்யா!"ன்னாம் விகடு மொகம் முறிஞ்சுப் போன எடத்துல பிசிரா நீட்டிட்டு இருக்குற நகத்தெ போல இருக்க வாணாம்ங்றாப்புல. நந்தகுமாரு அதுக்கும் தலைய ஆட்டுனாரு. விகடு ஆபீஸூக்கு வெளியில வந்தாம். எதுக்கும் இந்தக் கட்டெ சரி பாத்துக்குவோம். இதுவும் மாறிப் போயி இன்னொரு தடவெ தேவையில்லாம்ம அலைஞ்சிடக் கூடாதுன்னு படிகட்டுலயே ஓரமா உக்காந்து கட்டெ பிரிச்சி சரிபாத்துக்கிட்டாம். சரியான கட்டுத்தாம்ன்னு கட்ட கட்டி நாடாவுல முடிச்செ போடுறப்ப நோ அப்ஜக்சன் கையெழுத்து இருக்கான்னு சந்தேகம் வந்தவனா கட்டுன கட்டெ திரும்ப அவுக்கப் பாத்தாம். அப்போ வேக வேகமா இவனெ தாண்டி போறாப்புல வெள்ளெ சட்டையும், காவி வேட்டியும் கட்டுன ஒரு ஆளு உள்ளாரப் போனாரு. ஆளு பாக்குறதுக்கு நல்லா தாட்டிகமா, ரொம்ப நாளா மழிக்காத மொகத்தோட பாக்கறதுக்குப் பயங்கரமா இருந்தாரு. அந்த ஆளு போன வேகத்தப் பாத்தப்போ ஏதோ பெரச்சன பண்ணத்தாம் போற மாதிரி விகடுவுக்குத் தெரிஞ்சது. அத்து உண்மைங்றது போல அவரோட மொரட்டுத்தனமான கொரலு வெளியில கேட்டுச்சு.

            "ஏம்டா என்னத்தெடா நெனைச்சிக்கிட்டு இருக்கீங்க? என்னிக்குடா நம்மட கேஸ்ஸ முடிக்கிறாப்புல இருக்கீங்க? நாமளும் ஒரு மாசமா வந்து வெசாரணையப் பண்ணி முடிங்கடா முடிங்கடான்னா வந்து வந்து வாய்தாவே வாங்கிட்டு இருக்கீங்க! இந்தப் பாரு! இதுக்கு மேல சொல்லிட்டு இருக்க மாட்டேம். வக்கீலா இருக்குறதால ஒண்ணும் பண்ண முடியாதுன்னு நெனைக்காதே. நீ இருந்தாத்தானே எதாச்சும் பண்ணுவே. இல்லாம அடிச்சிப்புடுவேம் பாத்துக்கோ!"ன்னாரு அந்த ஆளு மனுஷ உசுர எடுக்குறதெ என்னவோ கெடா வெட்டி பொங்கலு போடுறாப்புல.

            "கோவப்படாதீங்கய்யா! ஒரு வழக்குன்னா அப்பிடி இப்பிடித்தாம் இருக்கும். சரி பண்ணிடுவேம் வாங்கய்யா! மொதல்ல உக்காருங்க. தம்பி நந்தா அண்ணனுக்கு ஒரு டீயச் சொல்லு! பாரு எப்பிடிக் கோவமா இருக்காரு!"ன்னாரு செந்தில்குமாரு ஒரு வாயி டீயக் குடிச்சா ஒரு கிலோ கோவம் கொறையும்ங்றாப்புல.

            "யோவ் நாம்ம ன்னா டீயக் குடிக்காமலயா கெடக்குறேம்? என்னவோ டீயக் குடிக்கிறதுக்காக இஞ்ஞ வந்த மாதிரி பேசுறே? என்னிக்குய்யா வந்து வெசாரணையப் பண்ணுவே? அதெச் சொல்லு மொதல்ல!"ன்னாரு அந்த ஆளு ரொம்ப காட்டமா வேலை முடிஞ்சிட்டா ஏம் தேவையில்லாம்ம வேர்வை சிந்திட்டு இருக்கணும்ங்றாப்புல.

நந்தகுமாரு அப்போ விகடு கொண்டு போயிக் கொடுத்த கட்டெத்தாம் பிரிச்சிப் பாத்துட்டு இருந்தாரு. அதெ காட்டிச் செந்தில்குமாரு, "ஒங்க கட்டைத்தாம் தம்பி பாத்துக்கிட்டு இருக்காப்புல. பிரிபரேஷன் ஆயிட்டு இருக்காப்புல. திங்கக் கெழமெ கண்டிப்பா ஒங்க கேஸ்ல விசாரணை ஆயிடும். கூலா இருங்கய்யா! நம்மகிட்டெ வழக்க ஒப்படைச்சிட்டு இப்பிடி டென்ஷன் ஆன்னா எப்பிடி?"ன்னாரு செந்தில்குமாரு அண்டார்டிக்காவுக்குப் போயிட்டு குளிரு பத்தலன்னு சொன்னா எப்பிடிங்றாப்புல.

            "இந்த கோர்ட்டுல ஏமாத்துறப் பேச்சையெல்லாம் நம்மகிட்டெ வெச்சுக்காதே. அதெ கோர்ட்டோட நிறுத்திக்கோ. திங்கக் கெழம மட்டும் விசாரணெ ஆவலன்னா வெச்சுக்கோ இதெ மாதிரி பேசிக்கிட்டு இருக்க மாட்டேம். ஏன்னு கேக்கறீயா? அதெ பேச நாம்ம இருப்பேம். கேக்க நீயி இருக்க மாட்டே. கோர்ட்டுலயே வெச்சி செஞ்சிப்புடுவேம் பாத்துக்கோ!"ன்னாரு அந்த ஆளு கொலை கேஸ்ஸ எடுத்து நடத்துறவேமேயே கொலை பண்டிட்டா அந்தக் கேஸை எடுத்து யாரு நடத்துவாங்கங்றாப்புல.

            செந்தில்குமாரு புலித்தல நாற்காலியிலேந்து வெளியில எட்டிப் பாத்தாரு. விகடு அதெ கேட்டுக்கிட்டு இருக்கறதப் பாத்து, நந்தகுமார்கிட்டெ சத்தம் போட்டாரு, "கட்டெ வாங்குனா கெளம்பிப் போகச் சொல்லுடா தம்பி! இங்கப் பேசுறதெ அங்க என்னடா ஒட்டுக் கேட்டுக்கிட்டு?"ன்னு ஒருத்தெம் அவமானப்படுறதே அம்முக்குளிப் போல அமுங்கிக்கிட்டுப் பாத்துட்டு இருக்கக் கூடாதுங்றாப்புல.

            "ஏம்டா ஒஞ்ஞ வண்டவாளம் ஊர்ல நாலு பேத்துக்குத் தெரியக் கூடாதுன்னு நெனைக்கிறீயளா? வெளியில நிக்கற தம்பீ நீஞ்ஞ உள்ளார வாஞ்ஞ. ஒஞ்ஞ மின்னாடியே வண்டெ வண்டெயா திட்டுறேம்!"ன்னாரு அந்த ஆளு ஒலகத்துக்கே தெரிஞ்சது ஒம் பொண்டாட்டிக்கு மட்டும் தெரியக் கூடாதாங்றாப்புல.

            "இந்தாருங்கய்யா! நீங்க என்ன வேணும்ன்னா பேசுங்க. வெளியில நிக்குற ஆளு நம்ம ஆளு கெடையாது. நம்மகிட்டெயிருந்து கட்டெ வாங்கிட்டுப் போற ஆளு. அதெப் புரிஞ்சிக்கோங்க."ன்னாரு செந்தில்குமாரு கொண்டான் கொடுத்தான் அடிச்சிக்கிறதுல கண்டவன்ல்லாம் உள்ள நொழையக் கூடாதுங்றாப்புல.

            "நீங்க வழக்கு நடத்துற லட்சணத்துக்கு கட்டெ வாங்கிட்டுத்தாம் போறாப்புலத்தாம் இருக்கு. எங் கட்டையும் கொடுத்துப்புடு. பேசவே யில்ல. கட்டெ வாங்கிட்டுப் போயிட்டு இருக்கேம்!"ன்னாரு அந்த ஆளு கடனெ கொடுத்துப்புட்டா அதெ கொடுத்தவேம் வூட்டு வாசல்ல வந்து ஏம் நிக்கப் போறாம்ங்றாப்புல. செந்தில்குமாரு இப்போ நாற்காலியிலேந்து எழும்பி வந்து அவரோட தோளப் பிடிச்சி சமாதானம் பண்ணாரு. "உக்காருங்கய்யா! பேசுனா சரியாவாத விசயமே இல்ல. உக்காந்துப் பேசணும். இப்பிடி படபடப்பா நின்னுகிட்டு கோவமால்லாம் பேசக் கூடாது. அது ஒங்களுக்குத்தாம்யா பாதிப்பு. இதயத்தப் பாதிக்கும். ரத்த ஓட்டத்தப் பாதிக்கும். அமைதியாப் பேசுங்க. திருப்தியா பீல் பண்ணுங்க. அதுக்குத்தானே நாம்ம இருக்கேம்!"ன்னாரு செந்தில்குமாரு நம்மள அடிச்சா ஒம்மட கையித்தாம் வலிக்கும்ன்னுத்தாம் அதெ வாண்டாம்ன்னு சொல்லுறாப்புல.

            நந்தகுமாரு வெளியில ஓடியாந்து விகடுவெப் பாத்து, "கெளம்புங்க சார்! இல்லன்னா நம்மளப் பாத்துக் கடுப்படிப்பாம் மனுஷன். அவ்வேங்கிட்டெ நீங்கல்லாம் போன பெற்பாடு திட்டெ வாங்கிட்டு நிக்க முடியாது!"ன்னாரு உப்புப் பொறாத காரியத்துக்கெல்லாம் உப்புப் போட்டுச் சாப்புட்டீயான்னுத்தாம் திட்டுவாம்ங்றாப்புல.

            "நோ அப்ஜக்சன் சைன் பண்ணாம எப்பிடி கட்டெ எடுத்துட்டுப் போறது? அதுக்குத்தாம் கட்டெ உக்காந்து ஒரு தவா பாத்துக்கிட்டெம். அந்த ஆளு போன ஒடனே உள்ளார வந்து கேக்கலாம்ன்னு பாத்தா அதுக்குள்ள மூத்தவரு ஒட்டுக் கேக்குறதா பேசுறாரு!"ன்னாம் விகடு உருப்படியா காரியம் ஆயிருந்தா தெருப்படியில நாம்ம ஏம் உக்காந்திருக்கப் போறேம்ங்றாப்புல.

            "கொண்டாங்க சார் கட்டெ! நாமளும் அதெ மறந்துட்டேம். இப்பிடித்தாம் ஆவுது!"ன்னு சொல்லிக்கிட்டெ கட்டெ வாங்கிட்டு உள்ளாரப் போனாரு வில்லை ஒட்டாம எடுத்துட்டு வந்த தபாலுக்கு அதெ ஒட்டிட்டு எடுத்துட்டு வந்துடுறேம்ங்றாப்புல. "கட்டுல நோ அப்ஜக்சனுக்கு சைன் பண்ணணும்ண்ணே!"ன்னு உள்ளார போன நந்தகுமாரு மெதுவா சொல்றது வெளியில சன்னமா கேட்டது, யாரு வாயி நாறுதுன்னு கேட்டா நம்ம வாயித்தாம் நாறுதுன்னு சொல்றாப்புல.

            "ஏந் தம்பீ இதெல்லாம் மின்னாடியே வாங்கி வெச்சி சரியா செஞ்சி அனுப்பிட மாட்டீயா? இப்பிடிப் போட்டு கழுத்தெ அறுக்கிறீயே?"ன்னு சத்தம் போட்ட செந்தில்குமார்கிட்டெ நந்தகுமாரு பேனாவ நீட்டுனாரு அரையும் கொறையுமா கழுத்தறுபட்ட ஆட்டெ ஒழுங்கா அறுத்துப் போடுங்றாப்புல. அதெ வாங்கி வேண்டா வெறுப்பா வேக வேகமா கையெழுத்தப் போட்டாரு செந்தில்குமாரு. கையெழுத்தப் போட்டு முடிச்சிட்டு, "ஆபீஸூக்கு வெளியில ஒரு நாயும் நிக்கக் கூடாது. அடிச்சித் தொரத்துடாம்பீ!"ன்னு சத்தம் போட்டாரு பேர்லயே தெருநாய்ன்னு இருந்தாலும் அதுக்கு தெருவுல நிக்கக் கூட உரிமெ இல்லங்றாப்புல.

            நந்தகுமாரு கட்டொட வெளியில வந்தாரு. அவரு கொடுத்த கட்டுல கையெழுத்து இருக்கான்னு விகடு ஒண்ணுக்கு ரண்டு தடவயா பாத்துக்கிட்டாம். "மொதல்ல கெளம்புங்க சார்! நல்லதுக்கே காலம் இல்ல. கட்டெ நேர்ல கொண்டாந்து கொடுத்துட்டு வாங்கிட்டுப் போறதுக்கு கூரியர்ல நீங்க எவனோ ஒருத்தனோட ஒரு வெலாசத்தப் போட்டு எங்கேயோ அனுப்பிருக்கலாம்! இவனுங்க இப்பிடித்தாம் சார்! சாதுவானவங்ககிட்டெ பாயுவானுங்க. பாய வேண்டிய ஆளுங்ககிட்டெ சாதுவாகிடுவானுங்க!"ன்னாரு நந்தகுமாரு சிங்கம் சாந்தமா இருந்தா சின்ன நரியும் சீறிப் பாய்ஞ்சுத்தாம் தாக்கும்ங்றாப்புல.

            "ஆனந்தகுமாரு அய்யாகிட்டெ சொல்லிடுங்கய்யா!"ன்னு விகடு டிவியெஸ் பிப்டியெ நெருங்கி ஸ்டார்ட் பண்ண ஆரம்பிச்சாம் உத்தரவே வாங்குன பெற்பாடு ஏம் உத்தரத்தெ பிடிச்சித் தொங்கிட்டு இருக்கப் போறேம்ங்றாப்புல.

            "அவரு வந்துக்கிட்டு இருக்கற நேரந்தாம். நீங்க நிக்க வேணாம். கெளம்புங்க."ன்னு சொல்லிட்டு நந்தகுமாரு வேக வேகமா உள்ளாரப் போனாரு நல்ல புள்ளைக்கு அழகு சொல்லாம கொள்ளாம கௌம்புறதுதாம்ங்றாப்புல.

            "என்னாடாம்பீ! ஒரு கட்டெ கொடுத்துட்டு வர்றதுககு எவ்ளோ நேரம்டாம்பீ? இப்பிடி இருந்தா என்னத்தெப் பண்ணுறது?"ன்னு செந்தில்குமாரு சத்தம் போடுறது விகடுவுக்கு கேட்டது தேடி வந்து காது மடல்ல கொட்டுற கொளவியப் போல. விகடுவோட டிவியெஸ் பிப்டி கெளம்புற சத்தமும் அவுங்களுக்குக் கேட்டிருக்கும் ராவுல பேசுறதெல்லாம் சொவத்தோட காதுக்குக் கேக்கும்ங்றாப்புல.

அண்ணன அடிச்சிட்டாங்க

            வண்டியில வர்றப்ப, ஒரு கட்டெ வாங்க்கிட்டு ஆபீஸ்ல உக்காந்து கூட சரிபாக்கல, படிக்கட்டுல வெளியில உக்காந்து சரிபாக்குறதுக்குள்ள என்னா பேச்சப் பேசுறானுவோன்னு இருந்துச்சு விகடுவுக்கு. இவனுங்க கட்டெ கொடுக்குறப்பவே சரியா கொடுத்திருந்தா நாம்ம ஏம் கட்டெ வாங்க திரும்பி தேவையில்லாம தண்டமா வர்றப் போறேம், இவ்வோ திட்டு வாங்குறதெ ஏம் கேக்கப் போறேம்ன்னு நெனைச்சிக்கிட்டாம் விகடு. ஆவாத கோவத்தெ எப்பவும் மனுஷருங்க தேவையில்லாத ஆளுங்ககிட்டெத்தாம் காட்டுறாங்க, எப்பிடியோ நம்மகிட்டெ கோவத்தெக் காட்டி தணிஞ்சா கூட செரித்தாம்ன்னு நெனைச்சிக்கிட்டெ ஆர்குடிக்கு பாண்டுரங்கஹரியோட ஆபீசுக்கு வந்துச் சேந்தாம் விகடு. ஆபீஸ்ல குமாஸ்தாத்தாம் இருந்தாரு. இவனெப் பாத்தவரு அடையாளம் கண்டுக்கிட்டு, "டி.வி. கட்டெ வாங்கிட்டு வந்திட்டீங்களோ?"ன்னாரு சர்க்கரை ஆலைக்கு வர்ற வாகனம் கரும்பெ ஏத்திக்கிட்டுத்தாம் வாரும்ங்றாப்புல. விகடு தலைய ஆட்டிக்கிட்டெ கட்டெ அவருகிட்டெ நீட்டுனாம் பண்டம் வாங்க வந்தவேம் பணமில்லாம வார முடியுமாங்றாப்புல.

            கட்டெ வாங்கிப் பிரிச்சி வேக வேகமா சரிபாத்தாரு குமாஸ்தா. "இதுலயே முக்கியமான நெறைய பேப்பர்ஸ் கொறையுற மாதிரி இருக்குதுங்களே சார்! ச்சும்மா கட்டு ஏதோ பேருக்குத்தாம் இருக்குது!"ன்னாரு குமாஸ்தா பரிசு பொட்டிக்குள்ளார இருக்குறது ஓடாத கடியாரம்ங்றாப்புல. கட்டெ நாடாவப் போட்டு கட்டி முடிச்சவரு, "செரி பரவாயில்ல வுடுங்க. நாஞ்ஞ கோர்ட்டுலப் போட்டுக் கொறையுறதெ வாங்கிக்கிறேம்!"ன்னாரு சாப்பாட்டுல்ல கொறையுற அளவுக்கு உப்பெ போட்டுக்கிடுறோம்ங்றாப்புல.

            "நாம்ம வேணும்ன்னா போனப் போட்டுக் கேக்கவா? எந்தெந்த் காயிதங்க கொறையுதுன்னு சொல்லுங்க!"ன்னாம் விகடு கோடிட்ட எடத்தையெல்லாம் நிரப்பிக் கொடுத்துடுறேம்ங்றாப்புல.

            "வேண்டாம் வுடுங்க. சில வக்கீலுங்க இப்பிடித்தாம் பண்ணுவாங்க. முக்கியமான கேஸ் கட்டுலேந்து நெறைய உருவிடுவாங்க. கேஸ்ஸ எடுத்து நடத்துற வக்கீலு அல்லாடிக்கிட்டுக் கெடக்கணும்ன்னுகிட்டு. அதுல ஒண்ணும் நமக்கு அல்லாட்டம்லாம் இல்ல. அய்யா பாத்துப்பாங்க வாங்க! கோர்ட்டுல எல்லா பேப்பர்ஸூம் இருக்கும். ஒரு நகல் போட்டு வாங்கிடலாம்! கவலப்படாதீங்க!"ன்னாரு குமாஸ்தா சோத்து மூட்டைய எடுத்தார மறந்துட்டா ஓட்டல்ல சாப்புட்டுக்கிடலாம்ங்றாப்புல.

            "நாம்ம போனப் போட்டுத் தர்றேம். நீஞ்ஞளே பேசுங்க!"ன்னு ஆனந்தகுமாருக்குப் போன போட்டு வெவரத்தெ சொல்லிட்டு குமாஸ்தாகிட்டெ போனக் கொடுப்பேம்ன்னு போட்டாம் பாருங்க. "சார்! நாம்ம அப்புறம் பேசுறேம். இப்போ நாம்ம ஆஸ்பிட்டல்ல இருக்கேம். அண்ணன ஆபீஸூல பூந்து அடிச்சிட்டாங்க!"ன்னு சட்டுன்னு கட் பண்ணாரு ஆனந்தகுமாரு புலி வாயில சிக்கிட்டு இருக்குறவேம் வாயில வந்து புளிப்பு மிட்டாய்ய வைக்காதேங்றாப்புல.

            அதெ நேரத்துல குமாஸ்தாவும் டக்குன்னு, "அய்யா அதெல்லாம் விரும்ப மாட்டாங்க. வேண்டாம் அதெ கட் பண்ணுங்க! திங்க கெழமெ மட்டும் தங்கச்சிய அழைச்சாந்து வக்காலத்துல கையெழுத்தப் போட்டுட்டு அய்யாகிட்டெ பேசிக்கிட்டுக் கெளம்புங்க. அய்யா கட்டுகள படிச்சிட்டாங்க. அய்யா எப்பவுமே கிளையண்டுக்கிட்டெ பேசிட்டு அவுங்களோட மைண்ட் செட் எப்பிடி இருக்குன்னு பாத்துப்பாங்க."ன்னாரு குமாஸ்தா சாமியக் கும்புட்டவேம் பூசாரி விபூதி கொடுக்காததுக்கெல்லாம் கவலெப்பட வாணாம்ங்றாப்புல. அதுதாங் சரிங்ற மாதிரிக்கி விகடு தலைய ஆட்டிக்கிட்டெ கெளம்புனாம். கெளம்பி வெளியில வந்திருப்பாம் விகடு, "பக்கத்துக் கடையில ஒரு டீ சொல்லிட்டு, அப்பிடியே காசு கொடுத்துட்டுப் போயிடுங்க!"ன்னாரு குமாஸ்தா விகடுவப் பாத்துச் சிரிச்சிக்கிட்டெ நர்ஸம்மாவப் பாத்த பேஷண்டு குளுக்கோஸ் பாட்டில போட்டு வுடுங்கன்னு சொல்லுறாப்புல.

            கடையில டீயச் சொல்லிட்டு காசக் கொடுத்துட்டு வண்டிய எடுத்துட்டுக் கெளம்புனவேம் அதுக்குப் பெறவு ஆனந்தகுமாருக்குப் போன அடிக்கவும் இல்ல, ஆனந்தகுமாரும் இவனுக்குப் போன அடிக்கவே இல்ல. அவரோட நம்பரு மட்டும் பத்திரமா இன்னும் விகடுவோட போன்லயே இருக்கு. அந்த ஓர் எண்ணை அழிக்க ஏம் தோணலன்னு எண்ணி எண்ணிப் பாக்குறாம் விகடு. அதுக்கான காரணம் மட்டும் புரிபட மாட்டேங்குது எண்ணத்துக்கு அப்பால காரண காரியத்துக்கு அப்பாற்பட்டு ஏதோ ஒண்ணு இருக்குங்றாப்புல.

*****

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...