வெளியில நிக்குற நாய அடிச்சித் தொரத்து!
செய்யு - 728
ஆனந்தகுமாருக்கு விகடு போனைப் போட்டு
கட்டு ஒண்ணு கொறையுறதையும், வேற ஒரு கட்டு கூடுதலா இருக்குறதையும் சொன்னா, அந்தக்
கட்டோட பேர்ரக் கேட்டுக்கிட்டவரு, "அதெத்தாம் சார்! ஒரு பத்து நாளா ஆபீஸ்ஸையே
தொடைச்சி அள்ளித் தேடிக்கிட்டு இருக்கேம். முக்கியமான வழங்குங்க சார் அது. அந்த ஆளு
வேற ஆபீஸூக்கு வந்து ரப்சர் பண்ணிட்டுப் போயிட்டு இருக்காம். நீங்க ஒண்ணு பண்ணுங்க.
நம்ம அட்ரஸூக்கு அந்த கட்டெ அப்பிடியே கூரியர் பண்ணி விட்டுடுங்க. ஒங்க கட்டையும் நாம்ம
ஒங்க அட்ரஸூக்குக் கூரியர் பண்ணி வுட்டுடுறேம்!"ன்னாரு இன்னிக்கு நீயி வாங்குற
மிட்டாய்ல காக்கா கடி கடிச்சுக் கொடுத்தா, நாளைக்கு நாம்ம வாங்குற மிட்டாய்ல ஒமக்குக்
காக்கா கடி கடிச்சிக் கொடுப்பேம்ங்றாப்புல.
"கூரியர்ல்லாம் வேண்டாங்கய்யா! நாமளே
நேர்ல கொண்டாந்து ஒஞ்ஞ கட்டெ ஒஞ்ஞகிட்டெ கொடுத்துட்டு, எஞ்ஞ கட்டெ வாங்கிட்டு வந்துடுறேம்!"ன்னாம்
விகடு வயித்து வலி கண்டவேம் வைத்தியர்ர நேர்ல பாத்துதாம் மாத்திரையப் போட்டுக்கிடணும்ங்றாப்புல.
"தேவையில்லாத அலைச்சல் சார்! கூரியர்ல
போட்டா வேலை முடிஞ்சிடும். நீங்க வேற எண்பதும் எண்பதும் நூத்து அறுவது கிலோ மீட்டர்
வந்து திரும்பணும்!"ன்னாரு ஆனந்தகுமாரு போன்ல பேசி முடிச்சிட்டா வேன்ல வந்து அலைய
வாண்டியதில்லங்றாப்புல.
"சனிக்கெழம வந்தா இருப்பீங்களா?"ன்னாம்
விகடு நேக்கா முடிக்க வேண்டியதெ நேர்ல பாத்துதாம் முடிக்கணும்ங்றாப்புல.
"வாங்க சார்! நாம்ம இல்லன்னாலும்
ஆபீஸ்ல யாராச்சும் இருப்பாங்க. நாம்ம விவரத்தெ சொல்லி ஒங்க கட்டெ எடுத்து வெச்சிருக்கேம்.
ஒங்களுக்கு எந்த வெதமான தாமதமும் இல்லாம அனுப்பி வெச்சிடுவாங்க! நீங்க கெளம்புறப்ப
வேணும்ன்னா போன அடிங்க. நாம்ம ஆபீஸூக்கு வந்துடுறேம்!"ன்னாரு ஆனந்தகுமாரு விரோதின்னாலும்
வூடு தேடி வந்துட்டா கௌரவத்துக்குக் கொறைச்சல் யில்லாம நடந்துக்கிடணும்ங்றாப்புல.
"வேணாங்கய்யா! யாருக்கும் தொந்தரவு
வேண்டாம். அதாம் ஆபீஸ்ல யாராச்சும் இருப்பாங்கன்னு சொல்றீயேளே! நாம்ம கட்டெ கொடுத்துட்டு
கட்டெ வாங்கிட்டு வந்துடுறேம்."ன்னு சொன்னவேம் சொன்னபடிக்கே சனிக்கெழமெ டிவியெஸ்
பிப்டிய எடுத்துட்டுக் கெளம்புனாம் மொறைப்படிப் போயி உருப்படியா இந்த மொறையாச்சும்
முழுசா காரியத்தெ முடிச்சிடணும்ங்றாப்புல. அதுக்கேத்தாப்புல நேரா கும்பகோணத்துக்குப்
போயி கட்டெ வாங்குறது, வாங்குன கையோடயே நேரா அங்யேிருந்து ஆர்குடிக்கு வந்து பாண்டுரங்கஹரிகிட்டெ
கட்டெ கொடுத்துட்டு வந்துடறதுன்னு திட்டம் பண்ணிக்கிட்டாம் விகடு.
போன மொறைப் போன அனுபவத்துல ஆபீஸூ தொறக்காம
வெளியில உக்காந்திருக்க வேண்டியதெ நெனைச்சிக்கிட்டு, இந்த மொறை காலச் சாப்பாட்ட முடிச்சிட்டு
ஒம்போது மணிக்கு மேல கெளம்பி பதினொண்ணரை மணிக்குத்தாம் கும்பகோணத்துக்குப் போயிச்
சேந்தாம். ஆபீஸ்ல நந்தகுமாரும், செந்தில்குமாரும் இருந்தாங்க. விகடுவெப் பாத்ததும்
செந்தில்குமாரு மொகத்தத் திருப்பிக்கிட்டாரு. நந்தகுமாருதாம், "வாங்க சார்! வேற
வக்கீல் பாத்துட்டதா ஆனந்தகுமாரு அண்ணன் சொன்னாரு. கட்டு மாறிப் போயிடுச்சுன்னும்
சொன்னாரு. சாரி சார்! நாம்ம வேற அன்னிக்கு நீங்க வந்த நேரத்துல அவசரமா கோர்ட்டுக்குக்
கெளம்புறதுல இருந்தேம்மா! ஆனந்தகுமாரு அண்ணனும் பாக்காம கொடுத்துட்டாரு. இந்தாங்க
ஒங்க கட்டு. வெரிபை பண்ணிட்டேம்!"ன்னாரு நந்தகுமாரு கட்டை நீட்டிக்கிட்டெ ஒரு
மொறை தப்பு பண்டுணவேம் மறுமொறையும் தப்பு பண்ட மாட்டாம்ங்றாப்புல.
விகடு பையில கைய வுட்டு, மாத்திக் கொடுத்திருந்த
அவுங்க கட்டை எடுத்து நீட்டுனாம். அதெ வாங்கிக்கிட்ட நந்தகுமாரு, "தேங்க்ஸ் ஸார்!
யாரு வக்கீல்!"ன்னாரு பொக்கிடம் போன எடம் பொருத்தமான எடமான்னு தெரிஞ்சிக்கிடுறாப்புல.
"ஆர்குடியில பாண்டுரங்கஹரி!"ன்னாம்
விகடு சேந்த எடம் சிறப்பான எடமான்னு சொல்லுங்கங்றாப்புல. அதெ கேட்டுட்டு கண்ண மூடிட்டு
தலைய மட்டும் ஆட்டுனாரு நந்தகுமாரு. எதாச்சும் சொல்வார்ன்னு எதிர்பார்த்தா எதையும்
சொல்லல.
"நாம்ம கெளம்புறேம்ங்கய்யா!"ன்னாம்
விகடு மொகம் முறிஞ்சுப் போன எடத்துல பிசிரா நீட்டிட்டு இருக்குற நகத்தெ போல இருக்க
வாணாம்ங்றாப்புல. நந்தகுமாரு அதுக்கும் தலைய ஆட்டுனாரு. விகடு ஆபீஸூக்கு வெளியில வந்தாம்.
எதுக்கும் இந்தக் கட்டெ சரி பாத்துக்குவோம். இதுவும் மாறிப் போயி இன்னொரு தடவெ தேவையில்லாம்ம
அலைஞ்சிடக் கூடாதுன்னு படிகட்டுலயே ஓரமா உக்காந்து கட்டெ பிரிச்சி சரிபாத்துக்கிட்டாம்.
சரியான கட்டுத்தாம்ன்னு கட்ட கட்டி நாடாவுல முடிச்செ போடுறப்ப நோ அப்ஜக்சன் கையெழுத்து
இருக்கான்னு சந்தேகம் வந்தவனா கட்டுன கட்டெ திரும்ப அவுக்கப் பாத்தாம். அப்போ வேக வேகமா
இவனெ தாண்டி போறாப்புல வெள்ளெ சட்டையும், காவி வேட்டியும் கட்டுன ஒரு ஆளு உள்ளாரப்
போனாரு. ஆளு பாக்குறதுக்கு நல்லா தாட்டிகமா, ரொம்ப நாளா மழிக்காத மொகத்தோட பாக்கறதுக்குப்
பயங்கரமா இருந்தாரு. அந்த ஆளு போன வேகத்தப் பாத்தப்போ ஏதோ பெரச்சன பண்ணத்தாம் போற
மாதிரி விகடுவுக்குத் தெரிஞ்சது. அத்து உண்மைங்றது போல அவரோட மொரட்டுத்தனமான கொரலு
வெளியில கேட்டுச்சு.
"ஏம்டா என்னத்தெடா நெனைச்சிக்கிட்டு
இருக்கீங்க? என்னிக்குடா நம்மட கேஸ்ஸ முடிக்கிறாப்புல இருக்கீங்க? நாமளும் ஒரு மாசமா
வந்து வெசாரணையப் பண்ணி முடிங்கடா முடிங்கடான்னா வந்து வந்து வாய்தாவே வாங்கிட்டு இருக்கீங்க!
இந்தப் பாரு! இதுக்கு மேல சொல்லிட்டு இருக்க மாட்டேம். வக்கீலா இருக்குறதால ஒண்ணும்
பண்ண முடியாதுன்னு நெனைக்காதே. நீ இருந்தாத்தானே எதாச்சும் பண்ணுவே. இல்லாம அடிச்சிப்புடுவேம்
பாத்துக்கோ!"ன்னாரு அந்த ஆளு மனுஷ உசுர எடுக்குறதெ என்னவோ கெடா வெட்டி பொங்கலு
போடுறாப்புல.
"கோவப்படாதீங்கய்யா! ஒரு வழக்குன்னா
அப்பிடி இப்பிடித்தாம் இருக்கும். சரி பண்ணிடுவேம் வாங்கய்யா! மொதல்ல உக்காருங்க.
தம்பி நந்தா அண்ணனுக்கு ஒரு டீயச் சொல்லு! பாரு எப்பிடிக் கோவமா இருக்காரு!"ன்னாரு
செந்தில்குமாரு ஒரு வாயி டீயக் குடிச்சா ஒரு கிலோ கோவம் கொறையும்ங்றாப்புல.
"யோவ் நாம்ம ன்னா டீயக் குடிக்காமலயா
கெடக்குறேம்? என்னவோ டீயக் குடிக்கிறதுக்காக இஞ்ஞ வந்த மாதிரி பேசுறே? என்னிக்குய்யா
வந்து வெசாரணையப் பண்ணுவே? அதெச் சொல்லு மொதல்ல!"ன்னாரு அந்த ஆளு ரொம்ப காட்டமா
வேலை முடிஞ்சிட்டா ஏம் தேவையில்லாம்ம வேர்வை சிந்திட்டு இருக்கணும்ங்றாப்புல.
நந்தகுமாரு அப்போ விகடு கொண்டு போயிக் கொடுத்த கட்டெத்தாம் பிரிச்சிப்
பாத்துட்டு இருந்தாரு. அதெ காட்டிச் செந்தில்குமாரு, "ஒங்க கட்டைத்தாம் தம்பி
பாத்துக்கிட்டு இருக்காப்புல. பிரிபரேஷன் ஆயிட்டு இருக்காப்புல. திங்கக் கெழமெ கண்டிப்பா
ஒங்க கேஸ்ல விசாரணை ஆயிடும். கூலா இருங்கய்யா! நம்மகிட்டெ வழக்க ஒப்படைச்சிட்டு இப்பிடி
டென்ஷன் ஆன்னா எப்பிடி?"ன்னாரு செந்தில்குமாரு அண்டார்டிக்காவுக்குப் போயிட்டு
குளிரு பத்தலன்னு சொன்னா எப்பிடிங்றாப்புல.
"இந்த கோர்ட்டுல ஏமாத்துறப் பேச்சையெல்லாம்
நம்மகிட்டெ வெச்சுக்காதே. அதெ கோர்ட்டோட நிறுத்திக்கோ. திங்கக் கெழம மட்டும் விசாரணெ
ஆவலன்னா வெச்சுக்கோ இதெ மாதிரி பேசிக்கிட்டு இருக்க மாட்டேம். ஏன்னு கேக்கறீயா? அதெ
பேச நாம்ம இருப்பேம். கேக்க நீயி இருக்க மாட்டே. கோர்ட்டுலயே வெச்சி செஞ்சிப்புடுவேம்
பாத்துக்கோ!"ன்னாரு அந்த ஆளு கொலை கேஸ்ஸ எடுத்து நடத்துறவேமேயே கொலை பண்டிட்டா
அந்தக் கேஸை எடுத்து யாரு நடத்துவாங்கங்றாப்புல.
செந்தில்குமாரு புலித்தல நாற்காலியிலேந்து
வெளியில எட்டிப் பாத்தாரு. விகடு அதெ கேட்டுக்கிட்டு இருக்கறதப் பாத்து, நந்தகுமார்கிட்டெ
சத்தம் போட்டாரு, "கட்டெ வாங்குனா கெளம்பிப் போகச் சொல்லுடா தம்பி! இங்கப்
பேசுறதெ அங்க என்னடா ஒட்டுக் கேட்டுக்கிட்டு?"ன்னு ஒருத்தெம் அவமானப்படுறதே அம்முக்குளிப்
போல அமுங்கிக்கிட்டுப் பாத்துட்டு இருக்கக் கூடாதுங்றாப்புல.
"ஏம்டா ஒஞ்ஞ வண்டவாளம் ஊர்ல நாலு
பேத்துக்குத் தெரியக் கூடாதுன்னு நெனைக்கிறீயளா? வெளியில நிக்கற தம்பீ நீஞ்ஞ உள்ளார
வாஞ்ஞ. ஒஞ்ஞ மின்னாடியே வண்டெ வண்டெயா திட்டுறேம்!"ன்னாரு அந்த ஆளு ஒலகத்துக்கே
தெரிஞ்சது ஒம் பொண்டாட்டிக்கு மட்டும் தெரியக் கூடாதாங்றாப்புல.
"இந்தாருங்கய்யா! நீங்க என்ன வேணும்ன்னா
பேசுங்க. வெளியில நிக்குற ஆளு நம்ம ஆளு கெடையாது. நம்மகிட்டெயிருந்து கட்டெ வாங்கிட்டுப்
போற ஆளு. அதெப் புரிஞ்சிக்கோங்க."ன்னாரு செந்தில்குமாரு கொண்டான் கொடுத்தான்
அடிச்சிக்கிறதுல கண்டவன்ல்லாம் உள்ள நொழையக் கூடாதுங்றாப்புல.
"நீங்க வழக்கு நடத்துற லட்சணத்துக்கு
கட்டெ வாங்கிட்டுத்தாம் போறாப்புலத்தாம் இருக்கு. எங் கட்டையும் கொடுத்துப்புடு.
பேசவே யில்ல. கட்டெ வாங்கிட்டுப் போயிட்டு இருக்கேம்!"ன்னாரு அந்த ஆளு கடனெ கொடுத்துப்புட்டா
அதெ கொடுத்தவேம் வூட்டு வாசல்ல வந்து ஏம் நிக்கப் போறாம்ங்றாப்புல. செந்தில்குமாரு
இப்போ நாற்காலியிலேந்து எழும்பி வந்து அவரோட தோளப் பிடிச்சி சமாதானம் பண்ணாரு.
"உக்காருங்கய்யா! பேசுனா சரியாவாத விசயமே இல்ல. உக்காந்துப் பேசணும். இப்பிடி
படபடப்பா நின்னுகிட்டு கோவமால்லாம் பேசக் கூடாது. அது ஒங்களுக்குத்தாம்யா பாதிப்பு.
இதயத்தப் பாதிக்கும். ரத்த ஓட்டத்தப் பாதிக்கும். அமைதியாப் பேசுங்க. திருப்தியா பீல்
பண்ணுங்க. அதுக்குத்தானே நாம்ம இருக்கேம்!"ன்னாரு செந்தில்குமாரு நம்மள அடிச்சா
ஒம்மட கையித்தாம் வலிக்கும்ன்னுத்தாம் அதெ வாண்டாம்ன்னு சொல்லுறாப்புல.
நந்தகுமாரு வெளியில ஓடியாந்து விகடுவெப்
பாத்து, "கெளம்புங்க சார்! இல்லன்னா நம்மளப் பாத்துக் கடுப்படிப்பாம் மனுஷன்.
அவ்வேங்கிட்டெ நீங்கல்லாம் போன பெற்பாடு திட்டெ வாங்கிட்டு நிக்க முடியாது!"ன்னாரு
உப்புப் பொறாத காரியத்துக்கெல்லாம் உப்புப் போட்டுச் சாப்புட்டீயான்னுத்தாம் திட்டுவாம்ங்றாப்புல.
"நோ அப்ஜக்சன் சைன் பண்ணாம எப்பிடி
கட்டெ எடுத்துட்டுப் போறது? அதுக்குத்தாம் கட்டெ உக்காந்து ஒரு தவா பாத்துக்கிட்டெம்.
அந்த ஆளு போன ஒடனே உள்ளார வந்து கேக்கலாம்ன்னு பாத்தா அதுக்குள்ள மூத்தவரு ஒட்டுக்
கேக்குறதா பேசுறாரு!"ன்னாம் விகடு உருப்படியா காரியம் ஆயிருந்தா தெருப்படியில
நாம்ம ஏம் உக்காந்திருக்கப் போறேம்ங்றாப்புல.
"கொண்டாங்க சார் கட்டெ! நாமளும்
அதெ மறந்துட்டேம். இப்பிடித்தாம் ஆவுது!"ன்னு சொல்லிக்கிட்டெ கட்டெ வாங்கிட்டு
உள்ளாரப் போனாரு வில்லை ஒட்டாம எடுத்துட்டு வந்த தபாலுக்கு அதெ ஒட்டிட்டு எடுத்துட்டு
வந்துடுறேம்ங்றாப்புல. "கட்டுல நோ அப்ஜக்சனுக்கு சைன் பண்ணணும்ண்ணே!"ன்னு
உள்ளார போன நந்தகுமாரு மெதுவா சொல்றது வெளியில சன்னமா கேட்டது, யாரு வாயி நாறுதுன்னு
கேட்டா நம்ம வாயித்தாம் நாறுதுன்னு சொல்றாப்புல.
"ஏந் தம்பீ இதெல்லாம் மின்னாடியே
வாங்கி வெச்சி சரியா செஞ்சி அனுப்பிட மாட்டீயா? இப்பிடிப் போட்டு கழுத்தெ அறுக்கிறீயே?"ன்னு
சத்தம் போட்ட செந்தில்குமார்கிட்டெ நந்தகுமாரு பேனாவ நீட்டுனாரு அரையும் கொறையுமா
கழுத்தறுபட்ட ஆட்டெ ஒழுங்கா அறுத்துப் போடுங்றாப்புல. அதெ வாங்கி வேண்டா வெறுப்பா வேக
வேகமா கையெழுத்தப் போட்டாரு செந்தில்குமாரு. கையெழுத்தப் போட்டு முடிச்சிட்டு,
"ஆபீஸூக்கு வெளியில ஒரு நாயும் நிக்கக் கூடாது. அடிச்சித் தொரத்துடாம்பீ!"ன்னு
சத்தம் போட்டாரு பேர்லயே தெருநாய்ன்னு இருந்தாலும் அதுக்கு தெருவுல நிக்கக் கூட உரிமெ
இல்லங்றாப்புல.
நந்தகுமாரு கட்டொட வெளியில வந்தாரு. அவரு
கொடுத்த கட்டுல கையெழுத்து இருக்கான்னு விகடு ஒண்ணுக்கு ரண்டு தடவயா பாத்துக்கிட்டாம்.
"மொதல்ல கெளம்புங்க சார்! நல்லதுக்கே காலம் இல்ல. கட்டெ நேர்ல கொண்டாந்து கொடுத்துட்டு
வாங்கிட்டுப் போறதுக்கு கூரியர்ல நீங்க எவனோ ஒருத்தனோட ஒரு வெலாசத்தப் போட்டு எங்கேயோ
அனுப்பிருக்கலாம்! இவனுங்க இப்பிடித்தாம் சார்! சாதுவானவங்ககிட்டெ பாயுவானுங்க. பாய
வேண்டிய ஆளுங்ககிட்டெ சாதுவாகிடுவானுங்க!"ன்னாரு நந்தகுமாரு சிங்கம் சாந்தமா இருந்தா
சின்ன நரியும் சீறிப் பாய்ஞ்சுத்தாம் தாக்கும்ங்றாப்புல.
"ஆனந்தகுமாரு அய்யாகிட்டெ சொல்லிடுங்கய்யா!"ன்னு
விகடு டிவியெஸ் பிப்டியெ நெருங்கி ஸ்டார்ட் பண்ண ஆரம்பிச்சாம் உத்தரவே வாங்குன பெற்பாடு
ஏம் உத்தரத்தெ பிடிச்சித் தொங்கிட்டு இருக்கப் போறேம்ங்றாப்புல.
"அவரு வந்துக்கிட்டு இருக்கற நேரந்தாம்.
நீங்க நிக்க வேணாம். கெளம்புங்க."ன்னு சொல்லிட்டு நந்தகுமாரு வேக வேகமா உள்ளாரப்
போனாரு நல்ல புள்ளைக்கு அழகு சொல்லாம கொள்ளாம கௌம்புறதுதாம்ங்றாப்புல.
"என்னாடாம்பீ! ஒரு கட்டெ கொடுத்துட்டு
வர்றதுககு எவ்ளோ நேரம்டாம்பீ? இப்பிடி இருந்தா என்னத்தெப் பண்ணுறது?"ன்னு செந்தில்குமாரு
சத்தம் போடுறது விகடுவுக்கு கேட்டது தேடி வந்து காது மடல்ல கொட்டுற கொளவியப் போல.
விகடுவோட டிவியெஸ் பிப்டி கெளம்புற சத்தமும் அவுங்களுக்குக் கேட்டிருக்கும் ராவுல
பேசுறதெல்லாம் சொவத்தோட காதுக்குக் கேக்கும்ங்றாப்புல.
அண்ணன அடிச்சிட்டாங்க
வண்டியில வர்றப்ப, ஒரு கட்டெ வாங்க்கிட்டு
ஆபீஸ்ல உக்காந்து கூட சரிபாக்கல, படிக்கட்டுல வெளியில உக்காந்து சரிபாக்குறதுக்குள்ள
என்னா பேச்சப் பேசுறானுவோன்னு இருந்துச்சு விகடுவுக்கு. இவனுங்க கட்டெ கொடுக்குறப்பவே
சரியா கொடுத்திருந்தா நாம்ம ஏம் கட்டெ வாங்க திரும்பி தேவையில்லாம தண்டமா வர்றப் போறேம்,
இவ்வோ திட்டு வாங்குறதெ ஏம் கேக்கப் போறேம்ன்னு நெனைச்சிக்கிட்டாம் விகடு. ஆவாத கோவத்தெ
எப்பவும் மனுஷருங்க தேவையில்லாத ஆளுங்ககிட்டெத்தாம் காட்டுறாங்க, எப்பிடியோ நம்மகிட்டெ
கோவத்தெக் காட்டி தணிஞ்சா கூட செரித்தாம்ன்னு நெனைச்சிக்கிட்டெ ஆர்குடிக்கு பாண்டுரங்கஹரியோட
ஆபீசுக்கு வந்துச் சேந்தாம் விகடு. ஆபீஸ்ல குமாஸ்தாத்தாம் இருந்தாரு. இவனெப் பாத்தவரு
அடையாளம் கண்டுக்கிட்டு, "டி.வி. கட்டெ வாங்கிட்டு வந்திட்டீங்களோ?"ன்னாரு
சர்க்கரை ஆலைக்கு வர்ற வாகனம் கரும்பெ ஏத்திக்கிட்டுத்தாம் வாரும்ங்றாப்புல. விகடு
தலைய ஆட்டிக்கிட்டெ கட்டெ அவருகிட்டெ நீட்டுனாம் பண்டம் வாங்க வந்தவேம் பணமில்லாம வார
முடியுமாங்றாப்புல.
கட்டெ வாங்கிப் பிரிச்சி வேக வேகமா சரிபாத்தாரு
குமாஸ்தா. "இதுலயே முக்கியமான நெறைய பேப்பர்ஸ் கொறையுற மாதிரி இருக்குதுங்களே
சார்! ச்சும்மா கட்டு ஏதோ பேருக்குத்தாம் இருக்குது!"ன்னாரு குமாஸ்தா பரிசு பொட்டிக்குள்ளார
இருக்குறது ஓடாத கடியாரம்ங்றாப்புல. கட்டெ நாடாவப் போட்டு கட்டி முடிச்சவரு,
"செரி பரவாயில்ல வுடுங்க. நாஞ்ஞ கோர்ட்டுலப் போட்டுக் கொறையுறதெ வாங்கிக்கிறேம்!"ன்னாரு
சாப்பாட்டுல்ல கொறையுற அளவுக்கு உப்பெ போட்டுக்கிடுறோம்ங்றாப்புல.
"நாம்ம வேணும்ன்னா போனப் போட்டுக்
கேக்கவா? எந்தெந்த் காயிதங்க கொறையுதுன்னு சொல்லுங்க!"ன்னாம் விகடு கோடிட்ட
எடத்தையெல்லாம் நிரப்பிக் கொடுத்துடுறேம்ங்றாப்புல.
"வேண்டாம் வுடுங்க. சில வக்கீலுங்க
இப்பிடித்தாம் பண்ணுவாங்க. முக்கியமான கேஸ் கட்டுலேந்து நெறைய உருவிடுவாங்க. கேஸ்ஸ
எடுத்து நடத்துற வக்கீலு அல்லாடிக்கிட்டுக் கெடக்கணும்ன்னுகிட்டு. அதுல ஒண்ணும் நமக்கு
அல்லாட்டம்லாம் இல்ல. அய்யா பாத்துப்பாங்க வாங்க! கோர்ட்டுல எல்லா பேப்பர்ஸூம் இருக்கும்.
ஒரு நகல் போட்டு வாங்கிடலாம்! கவலப்படாதீங்க!"ன்னாரு குமாஸ்தா சோத்து மூட்டைய
எடுத்தார மறந்துட்டா ஓட்டல்ல சாப்புட்டுக்கிடலாம்ங்றாப்புல.
"நாம்ம போனப் போட்டுத் தர்றேம்.
நீஞ்ஞளே பேசுங்க!"ன்னு ஆனந்தகுமாருக்குப் போன போட்டு வெவரத்தெ சொல்லிட்டு குமாஸ்தாகிட்டெ
போனக் கொடுப்பேம்ன்னு போட்டாம் பாருங்க. "சார்! நாம்ம அப்புறம் பேசுறேம். இப்போ
நாம்ம ஆஸ்பிட்டல்ல இருக்கேம். அண்ணன ஆபீஸூல பூந்து அடிச்சிட்டாங்க!"ன்னு சட்டுன்னு
கட் பண்ணாரு ஆனந்தகுமாரு புலி வாயில சிக்கிட்டு இருக்குறவேம் வாயில வந்து புளிப்பு
மிட்டாய்ய வைக்காதேங்றாப்புல.
அதெ நேரத்துல குமாஸ்தாவும் டக்குன்னு,
"அய்யா அதெல்லாம் விரும்ப மாட்டாங்க. வேண்டாம் அதெ கட் பண்ணுங்க! திங்க கெழமெ
மட்டும் தங்கச்சிய அழைச்சாந்து வக்காலத்துல கையெழுத்தப் போட்டுட்டு அய்யாகிட்டெ பேசிக்கிட்டுக்
கெளம்புங்க. அய்யா கட்டுகள படிச்சிட்டாங்க. அய்யா எப்பவுமே கிளையண்டுக்கிட்டெ பேசிட்டு
அவுங்களோட மைண்ட் செட் எப்பிடி இருக்குன்னு பாத்துப்பாங்க."ன்னாரு குமாஸ்தா சாமியக்
கும்புட்டவேம் பூசாரி விபூதி கொடுக்காததுக்கெல்லாம் கவலெப்பட வாணாம்ங்றாப்புல. அதுதாங்
சரிங்ற மாதிரிக்கி விகடு தலைய ஆட்டிக்கிட்டெ கெளம்புனாம். கெளம்பி வெளியில வந்திருப்பாம்
விகடு, "பக்கத்துக் கடையில ஒரு டீ சொல்லிட்டு, அப்பிடியே காசு கொடுத்துட்டுப்
போயிடுங்க!"ன்னாரு குமாஸ்தா விகடுவப் பாத்துச் சிரிச்சிக்கிட்டெ நர்ஸம்மாவப்
பாத்த பேஷண்டு குளுக்கோஸ் பாட்டில போட்டு வுடுங்கன்னு சொல்லுறாப்புல.
கடையில டீயச் சொல்லிட்டு காசக் கொடுத்துட்டு
வண்டிய எடுத்துட்டுக் கெளம்புனவேம் அதுக்குப் பெறவு ஆனந்தகுமாருக்குப் போன அடிக்கவும்
இல்ல, ஆனந்தகுமாரும் இவனுக்குப் போன அடிக்கவே இல்ல. அவரோட நம்பரு மட்டும் பத்திரமா
இன்னும் விகடுவோட போன்லயே இருக்கு. அந்த ஓர் எண்ணை அழிக்க ஏம் தோணலன்னு எண்ணி எண்ணிப்
பாக்குறாம் விகடு. அதுக்கான காரணம் மட்டும் புரிபட மாட்டேங்குது எண்ணத்துக்கு அப்பால
காரண காரியத்துக்கு அப்பாற்பட்டு ஏதோ ஒண்ணு இருக்குங்றாப்புல.
*****
No comments:
Post a Comment