எக்ஸ்பாட்டி சட்டிசைடு
செய்யு - 730
பாண்டுரங்கஹரி விகடுவுக்குப் போன அடிச்சி
ஹெச்செம்ஓப்பி வழக்கு ஒருதலைபட்சமா தீர்ப்பாயிருக்கிறதாவும் அவர்ர செய்யுவோட வந்து
ஒடனே பாக்கச் சொல்லிப் போன அடிச்சாரு. இப்பிடியெல்லாம்
அவசரப்படுத்துற ஆளு கெடையாது பாண்டுரங்கஹரிங்றதால விகடுவே அன்னிக்குப் பள்ளியோடத்துக்கு
லீவு அடிச்சிட்டுச் செய்யுவோட போனாம்.
"ஹெச்செம்ஓப்பி வழக்குல ஆஜராயி ரொம்ப
நாளு ஆயிடுச்சுல்லா?"ன்னாரு பாண்டுரங்ஹரி ஓர் அளவுக்கு மேல இழுத்தா ரப்பரு தாங்காதுங்றாப்புல.
"ஆமாங்கய்யா! கிராஸ் பண்ணுறப்ப ஆஜரானதுதாம்.
அதுக்குப் பெறவு நாலு மாசத்துக்கு மேல இருக்கும்!"ன்னாம் விகடு எட்டு அமாவசெ கடந்து
போனா எல்லாம் மறந்துப் போயிடும்ங்றாப்புல.
"நாம்ம குமாஸ்தவ வுட்டு கேஸ் ஸ்டேட்டஸ்
பாத்துட்டு வக்காலத்தப் போடப் போனா எக்ஸ்பாட்டி எவிடென்ஸ் ஆயிருக்கிறதா சொன்னாரு.
அதாங் ஒடனே ஒஞ்ஞளுக்குப் போன அடிச்சேம்!"ன்னாரு பாண்டுரங்கஹரி நாம்ம தூங்குனாலும்
சுத்துற பூமி சுத்திட்டுத்தாம் இருக்குறதெ போல, நாம்ம போவலன்னாலும் நடக்குற வழக்குக்
கோர்ட்டுல நடந்துக்கிட்டுத்தாம் இருக்கும்ங்றாப்புல.
"இப்போ என்னங்கய்யா பண்ணணும்?"ன்னாம்
விகடு உச்சந்தலைக்கு மேல போரையேறிப் போனா என்னா பண்டுறதுங்றாப்புல.
"அப்பிடியே வுட்டுடுறதுனாலும் வுட்டுடலாம்.
ஒடனே விவாகரத்து வழக்கப் போட்டுடணும்! எக்ஸ்பாட்டி சட்டிசைடு பண்ணுறதுன்னாலும் பண்ணலாம்."ன்னாரு
பாண்டுரங்கஹரி வௌங்காத பயிருக்கு ஆத்தெ கட்டி எறைக்குதுன்னாலும் எறைக்கலாம், எறைக்காம
அப்பிடியே வுட்டுட்டு வேற பயிர்ர வெதைச்சு வெளைவிச்சாலும் வெளைவிக்கலாம்ங்றாப்புல.
"எப்பிடி பண்ணுனா சரியா இருக்கும்?"ன்னாம்
விகடு வெயாதிஸ்தனுக்கு என்னத்தெத் தெரியும் எந்த மருந்தெ சாப்புட்டா கொணப்பாடு காணும்ங்றது
தெரியும்ங்றாப்புல.
"எக்ஸ்பாட்டு சட்டிசைடு பண்ணச் சொல்லி
ஒரு மனுவெப் போட்டுடுவேம். அதெ தயாரு பண்ணச் சொல்லிட்டேம். அதுக்குக் கையெழுத்தப்
போடச் சொல்லத்தாம் வரச் சொன்னேம். அது பாட்டுக்கு அதுப் போயிட்டு இருக்கட்டும்.
கூடிய சீக்கிரமே விவாகரத்து வழக்குப் போட்டுட்டா இந்த வழக்கச் சொல்லி அதெ அப்பிடியே
தாட்டி வுட்டுடலாம். அதாஞ் செரி!"ன்னாரு பாண்டுரங்கஹரி புதுசா வண்டி வாங்குற வரைக்கும்
பழசு ஓடிட்டு இருக்கட்டும்ங்றாப்புல.
"அப்பிடின்னா அப்பிடியே பண்ணிடலாங்கய்யா!"ன்னாம்
விகடு கொணம் காணும்ன்னா எந்த மருந்தெ சாப்புட்டாலும் சரித்தாம்ங்றாப்புல. வக்கீல் குமாஸ்தாவக்
கூப்புட்டு செய்யுகிட்டெ கையெழுத்து வாங்கச் சொல்லி, அதெ கொண்டு போயி சப் கோர்ட்டுல
தாக்கல் பண்ணச் சொன்னாரு.
"திருவாரூர்ல அய்யப்ப மாதவன்னப் பாத்து
ஜீவனாம்ச அப்பீல் கட்டெ கொடுக்கச் சொன்னேனே? இன்னும் கொடுக்கல போலருக்கே. ஏம் கொடுக்கல?
நேத்தி எதார்த்தமா எப்பிடி இருக்கார் என்னா ஏதுன்னு விசாரிக்கப் போன அடிச்சேம். அப்பிடியே
ஒங்க வழக்கு ஞாபவம் வந்து இது மாதிரிக்கி செய்யுங்ற பேர்ல ஒரு கேஸ் கட்டு வந்துச்சுன்னா
கேட்டேம். இல்லன்னாரு. இப்போ இந்த கேஸோட ஸ்டேட்டஸ் பாத்து எப்பிடி இருக்கு பாத்தீங்களா?
அது மாதிரி அதுவும் ஆயிருந்தா என்னத்தெ பண்ணுறது? எக்ஸ்பாட்டி சட்டிசைடு பண்ணிக்கிடலாந்தாம்.
அதுக்கும் ஒரு பீரியட் ஆப் டைம் இருக்குல்லா. அதெ தாண்டிட்டா ஒண்ணும் பண்ண முடியாது.
அதுக்குத்தாம் சொல்ல வர்றேம், லேட் பண்ண வேண்டாம். இன்னிக்கே கட்டெ கொண்டுப் போயிக்
கொடுத்து கேஸ் ஸ்டேட்டஸ்ஸப் பாக்கச் சொல்லுப்பா! வக்காலத்துக்குக் கூட இங்க காகிதம்
இருக்கு. தங்கச்சியக் கூட அழைச்சிட்டுப் போவ வேண்டியதில்ல. தங்கச்சிக்கிட்டெ கையெழுத்து
வாங்கிக்கிட்டு அதெ கொண்டுப் போயிக் கொடுத்தீன்னா மிச்சத்த நிரப்பி அவருப் பாத்துப்பாரு.
போறப்ப ரண்டாயிரம் பணத்தெ எடுத்துட்டுப் போயிடுப்பா!"ன்னாரு பாண்டுரங்கஹரி வெள்ளத்தெ
ஊருக்குள்ள நொழைய வுட்டுப்புட்டா அணை போடவும் முடியாது, காட்டுத்தீய பரவ வுட்டுப்புட்டு
அணைக்கவும் முடியும்ங்றாப்புல. விகடு சரிங்ற மாதிரிக்கித் தலையாட்டுனாம்.
"இங்க தலையாட்டிட்டு, நாம்ம மறுக்கா
போனப் போட்டு எதாச்சும் விசாரிக்கிறப்ப இது பத்தின சேதி வந்து கட்டெ கொடுக்கலன்னு
சொன்னா நம்மாள ஒண்ணும் பண்ண முடியாது பாத்துக்கப்பா!"ன்னாரு பாண்டுரங்கஹரி சொல்ல
சொல்ல கேக்காம நுனிக்கொம்பெ நெருங்குனா முறிச்சிக்கிட்டு வுழுவுறதெ தடுக்க முடியாதுங்றாப்புல.
"இன்னிக்குப் போவ முடிஞ்சா போயிடுறேம்யா!
அப்பிடி முடியாட்டி நாளைக்குக் கண்டிப்பா போயிடுறேம்யா!"ன்னாம் விகடு மொத வலையில
தப்புன மீனெல்லாம் ரண்டாவது வலையில மாட்டிடும்ங்றாப்புல.
"இன்னிக்குன்னா மூணு மணிக்கு மேல
போயிடு. நாளைக்குன்னா காலையில எட்டு மணிக்குள்ள போயிடணும். ஆபீஸ் பாத்தீன்னா வடக்குவீதி
இருக்குல்லா. அங்கப் போயி வெசாரிச்சின்னா சொல்லிடுவாங்க. போன் நம்பர்த்தாம் கொடுத்திருக்கேம்ன்னே.
அப்பிடி அங்கப் போயி சந்தேகம்ன்னா போன அடிச்சிக்கோ!"ன்னாரு பாண்டுரங்கஹரி போட்டு
வுட்ட கடுதாசி மொறையா முகவரியிலப் போயிச் சேரணும்ங்றாப்புல.
"இப்போ கோர்ட்டுல ஆஜராவ வேணாமா?"ன்னாம்
விகடு நேர்ல போவ முடியாத கலியாணங் காட்சிக்கு மொய்ய மட்டும் எழுதிடச் சொன்னா போதுமாங்றாப்புல.
"வாணாம். நாம்ம பாத்துக்கிறேம். நல்லா
ஞாபவம் வெச்சிக்கணும். ரண்டு வாய்தா தாண்டலாம். மூணாவது வாய்தாவுக்கு குமாஸ்தாகிட்டெ
போனப் பண்ணிக் கேட்டுக்கிட்டு வந்து ஆஜராயிடணும். நீங்க தவறுற ஒவ்வொரு வாய்தாவுக்கும்
குமாஸ்தா ஸ்டாம்ப் ஒட்டி காயிதம் தாக்கல் பண்ணிடுவாரு. அவர்கிட்டெ ஒவ்வொரு வாய்தாவுக்கும்
நூத்து ரூவான்னு கணக்குப் பண்ணி கொடுத்துடணும். அவருக்கு அதுதாம் வருமானம். நாம்ம
ஒண்ணும் பெரிசா வருமானம் கொடுக்குறதில்ல!"ன்னாரு பாண்டுரங்கஹரி கோயில்ல வேண்டிக்கிட்டவேம்
கோயில் உண்டியல்ல காசியப் போடாம வந்துப்புடக் கூடாதுங்றாப்புல.
"அப்பிடியே கொடுத்திடுறேம்ய்யா!
இப்போ எக்ஸ்பாட்டி சட்டிசைடுக்கு எவ்ளோங்கய்யா கொடுக்கணும்?"ன்னாம் விகடு அர்ச்சனை
பண்டுற பூசாரிக்கு தட்சணை எம்மாம் கொடுக்கணும்ங்றாப்புல.
"கோர்ட்டுல காகிதம்ன்னு தாக்கல்
பண்ணுனா ஐநூறு, ஆயிரம்தாம். இருக்கிறதெ கொடுத்துட்டுப் போங்க!"ன்னாரு பாண்டுரங்கஹரி
அர்ச்சனை பண்டுற பூசாரிக்குத் தட்டுல வைக்குறதுதாம் தட்சணைங்றாப்புல. விகடு சட்டைப்
பையிக்குள்ள கைய வுட்டு ஐநூத்து ரூவாய எடுத்துக் கொடுத்தாம்.
"செரி வாங்க! திருவாரூருக்கு ஒடனே
கெளம்பி அய்யப்ப மாதவங்கிட்டெ கட்டெ கொடுக்குற சோலியப் பாருங்க!"ன்னாரு பாண்டுரங்கஹரி
விருந்தெ முடிச்சா வெத்தலைப் பாக்கெப் போட்டு ஏப்பத்தெ வுட்டு சோலிய முடிச்சிடணும்ங்றாப்புல.
"செரிங்கய்யா!"ன்னு தலையாட்டிக்கிட்டெ
செய்யுவ அழைச்சிக்கிட்டு ஆபீஸ்ஸ வுட்டு வெளியில வந்தாம் விகடு வெறுவயித்துல இருந்தாலும்
விருந்தெ சாப்புட்டதெ போல ஏப்பத்தெ எப்பிடியாச்சும் விட்டுப்புடுறேம்ங்றாப்புல. விகடு
வெளியில போறதைப் பாத்துட்டு, "சாயுங்காலமா போன அடிச்சிக் கேப்பேம் அய்யப்ப மாதவனுக்கு
கட்டு வந்துச் சேந்துட்டா என்னான்னு?"ன்னு சிரிச்சிக்கிட்டெ சொன்னாரு பாண்டுரங்கஹரி
கறிச்சோத்தெ தின்னவெம் கைய மோந்துப் பாத்தா வெசயம் வௌங்கிடும்ங்றாப்புல. விகடு திரும்பி,
"கட்டாயமா கட்டு அஞ்ஞ இருக்கும்யா!"ன்னாம் விகடு பச்செ பாம்பு கொத்துனா அத்து
கொத்துனது கண்ணாத்தாம் இருக்கும்ங்றாப்புல.
நித்தம் நித்தம் கஞ்சிச் சோறு
வேப்பமரத்தடியில போட்டிருந்த டிவியெஸ்
பிப்டிய எடுத்து ஸ்டார் பண்ண ஆரம்பிச்சாம் விகடு. "ஏன்ண்ணே திருவாரூருக்குக் கட்டெ
கொண்டுப் போயிக் கொடுக்கல?"ன்னா செய்யு விக்கல் வந்தும் இன்னும் ஏம் தண்ணியக்
குடிக்காம இருக்கீயேங்றாப்புல.
"கொடுத்திடுறேம். இன்னிக்கு ஒன்னய
வூட்டுல சேத்துட்டுக் கொடுத்திடுறேம்!"ன்னாம் விகடு பந்தியில உக்காந்தவங்களுக்குப்
பரிமாறாமலா இருக்கப் போறேம்ங்றாப்புல.
"நீயி சரியா இருப்பீயேண்ணே? ஏதோ
காரணம் இருக்கு. ஏம் கொடுக்கலன்னு சொல்லு?"ன்னா செய்யு அரிப்பெடுக்காம யாரும்
சொரியுறதில்லங்றாப்புல.
"ஒண்ணுமில்ல தங்காச்சி!"ன்னாம்
விகடு ஓட்டை பலூன்ல காத்துக் கூட தங்காதுங்றாப்புல.
"யிப்போ சொல்லப் போறீயா? யில்லன்னா
நாம்ம வூட்டுக்கு வர்றப் போறதில்லா!"ன்னா செய்யு நறுக்குன்னு கிள்ளாதப்போ ஏம்
கொழந்தெ பொசுக்குன்னு அழப் போவுதுங்றாப்புல.
"சம்பளம் போட்டாங்கன்னா கொண்டுப்
போயிக் கொடுத்துடலாம்ன்னு நெனைச்சேம். இன்னும் ரண்டு நாள்ல சம்பளம் போட்டுடுவாங்க.
கொடுத்துடலாம்ன்னு நெனைச்சேம். அதுக்குள்ள ஹெச்செம்ஓப்பி வழக்குல எக்ஸ்பாட்டி ஆயி
இவர்ர வந்து திடுதிப்புன்னு பாக்கறாப்புல ஆயிடுச்சு!"ன்னாம் விகடு கையில காசு
வர்ற வரைக்கும் கடன் கொடுத்தவேம் கண்ணுல படக் கூடாதுன்னு நெனைச்சா, கடன் கொடுத்தவனே
கண்ணு மின்னாடி வந்து நிக்குறாம்ங்றாப்புல.
"ஏம்ண்ணே காசில்லையா?"ன்னா செய்யு
வேலை முடிஞ்சு வீடு திரும்புற அப்பங்காரரு கையில பண்டம் ஏதும் இல்லாததப் பாத்து புள்ளீயோ
ஏங்கிப் போயிக் கேக்குறாப்புல.
"இருக்கு. இன்னும் ரண்டு நாள்ல இருக்கும்!"ன்னாம்
விகடு ரண்டு நாளு ஆனா பொறந்த குட்டியோளுக்குக் கண்ணு ரெண்டும் தொறந்துடும்ங்றாப்புல.
"காசில்லத்தானேண்ணே?"ன்னு செய்யு
அழுவுறாப்புல கேட்டா விகடுவெப் பாத்து காசிருக்கிறவேம் ஏம் ராட்டினம் சுத்தாம அதெ வேடிக்கெப்
பாத்துட்டு இருக்கப் போறாம்ங்றாப்புல.
"இருக்குடா தங்காச்சி! கொடுத்திடுவேம்.
நீயேம் கலங்குறே?"ன்னாம் விகடு பாலு வத்திப் போன மாருல சொரக்காமலா போயிடும்ங்றாப்புல.
"ல்லண்ணே! நீயிப் பொய்யிச் சொல்றே.
ஒங்கிட்டெ காசில்லே. ல்லன்னா இந்த வேலய வக்கீலு சொன்ன ஒடனே செஞ்சிருப்பே. காசில்லாம
நீயி ரொம்ப செருமப்படுறேண்ணே! வக்கீலு சொல்றப்போ கூட ரண்டாயிரத்தெ மறக்காம கொடுத்துடுங்கன்னு
சொன்னார்ல. அப்ப ஒம் மொகத்தப் பாத்தேம்! காசி ஒங் கையில இல்லத்தானேண்ணே?"ன்னா
செய்யு சட்டைப் பையிக் கிழிஞ்சிருந்தா வாங்குன சம்பளம் களவுப் போச்சுதுன்னுதானே அர்த்தம்ங்றாப்புல.
"இருக்கு! நீயேன் அதெப் பத்தி நெனைக்குறே?
இன்னிக்கு சாயுங்காலத்துக்குள்ள எப்பிடியும் கட்டு அய்யப்பமாதவன் வக்கீல்கிட்டெ இருக்கும்.
போதுமா?"ன்னாம் விகடு ஆத்துல போறத் தண்ணி எப்பிடியும் கடலெப் போயிச் சேந்துடும்ங்றாப்புல.
"சம்பளம் போட்டெ ரண்டு நாளு கழிச்சிக்
கொடுத்திடேம்!"ன்னா செய்யு நாளு ரண்டு தள்ளுறதுல வருஷம் ரண்டு கூடிடப் போறதில்லங்றாப்புல.
"ஏம் ரண்டு நாளு மின்னாடி கொடுத்து,
கொடுக்குறப்போ கையில இருக்குற பணத்தெ கொடுத்துட்டு, மிச்சப் பணத்தெ ரண்டு நாளு கழிச்சிக்
கொடுத்தா கொறைஞ்சா போயிடப் போவுது?"ன்னாம் விகடு கடன் வாங்குன காசியில சாப்புடுற
சாப்பாடு செரிக்காமலா போயிடும்ங்றாப்புல.
"இந்தச் செயின்னு ஒண்ணு கழுத்துல
இருக்கு. போறப்பன்னா அடவு வெச்சிட்டுப் போவலமாண்ணா?"ன்னா செய்யு பை நெறைய பணம்
இருக்குறப்போ வெலையப் பாத்துப் பாத்துட்டு ஓட்டல்ல சாப்புட வாண்டாம்ங்றாப்புல.
"அட ச்சைய்! வண்டிய ஸ்டார்ட் பண்ணுறேம்.
ஏறி உக்காரு!"ன்னாம் விகடு புரியாத்தனமா பேசுறவோளுக்கு தெரியாத்தனமா கூட வௌக்கம்
சொல்லக் கூடாதுங்றாப்புல.
"ல்லண்ணே! நமக்குத் தெரியும்ண்ணே!
வக்கீலு ஐநூத்தோ, ஆயிரமோ கொடுங்கன்னு சொன்னா நீயி ஆயிரத்தத்தொம் கொடுப்பே. ஐநூத்த
எடுத்து நீட்டுறப்பவே நெனைச்சேம். ஒங்கிட்டெ பணம் யில்ல. பணம் யில்லாம இன்னும் ரண்டு
நாள எப்பிடி ஒட்டுறதுங்ற கவலெ ஒம் மூஞ்சியில எழுதி ஒட்டியிருக்குண்ணே! நாம்ம வேணும்ன்னா
எதாச்சும் ஒரு பிரைவேட்டு ஸ்கூலுக்கு வேலைக்குன்னா போவட்டுமா?"ன்னா செய்யு சொமையத்
தூக்குறப்போ ஒரு கையிக் கொடுத்தா சுலுவா மேல ஏறிடும்ங்றாப்புல.
விகடு சிரிச்சாம். "ஒங் கனவு ன்னா?
அவ்வேம் மின்னாடி ஒரு டாக்கடரேட் பண்ணுன ஆளா நிக்கணும்ன்னுதானே. அதெ நோக்கிப் போயிக்கிட்டெ
இரு. அதுக்குப் படிச்சிக்கிட்டெ இரு. இந்தச் செருமத்தெ நாம்ம பாத்துக்கிறேம்."ன்னாம்
விகடு கடிவாளம் போட்டுப்புட்டா குதிரெ எரவாணத்தெப் பாக்கக் கூடாதுங்றாப்புல.
"யண்ணி என்னான்னா நெதமும் சோத்த
வடிச்சி உப்பப் போட்டுப் போட்டுப் போடுது. பாப்பாவும் வளர வேண்டிய வயசுல அதெ சாப்புட்டுட்டுக்
கெடக்குது. நீயும் என்னவோ தேவாமிர்தத்தெ சாப்புடுறதுப் போல சாப்புட்டுப் போறே. ஒம்
ஒடம்பே சுத்தமா போச்சுண்ணே. இப்பிடியே சாப்புட்டா ஒடம்பு வெலவெலத்துப் போயிடும்ண்ணே.
ஓடியாடி அலையுற ஆளு நீண்ணே. நீயி நல்லா சாப்புடணும்!"ன்னா செய்யு நாளு பூரா உழுவுற
மாட்டுக்கு அரை கட்டு புல்லு கூட போடலன்னா எப்பிடிங்றாப்புல.
"கொஞ்ச நாளுக்கு அப்பிடித்தாம் இருக்கும்.
எல்லாம் சரியாயிடும் வா!"ன்னாம் விகடு அடைமழைக்காலம் முடியுற வரைக்கும் வத்தல்
கொழம்பெ வெச்சு சமாளிச்சுக்குவோம்ங்றாப்புல.
"எப்பண்ணே சரியாவுறதோ? சாப்புட வேண்டிய
வயசுல சாப்புடாம எப்பண்ணே சாப்புடுறது?"ன்னா செய்யு நெரைச்ச முடியிலா குஞ்சம்
கட்டி அழகுப் பாக்க முடியுமாங்றாப்புல.
"அதாங் சொல்றேன்னே கொஞ்ச நாளுக்குத்தான்னு.
வண்டிய ஸ்டார்ட் பண்ணிக் கெளம்புவேம். நாம்ம வேற வூட்டுக்கு வந்து சாப்புட்டேம்ன்னா
ஒடனே திருவாரூரப் பாக்க கெளம்பிடுவேம். மூணு மணிக்கு மேல அஞ்ஞப் போனேம்ன்னா கொடுத்துட்டுப்
பொழுதுக்குள்ள திரும்பிடுவேம் பாரு!"ன்னாம் விகடு குளிரப் பாக்காம கொளத்துத்
தண்ணிக்குள்ள கால வெச்சாத்தாம் குளிச்சி முடிச்சிட்டுக் கரையேறலாம்ங்றாப்புல.
"போறப்ப இந்தச் செயின்ன..."ன்னு
செய்யு இழுத்தா நஷ்டத்துல கஷ்டத்துலயும் தம் பங்கும் கொஞ்சம் இருக்கணும்ங்றாப்புல.
"வாய மூடிக்கிட்டு வண்டியில உக்காந்து
வர்றப் போறீயா யில்லையா?"ன்னு அதட்டுனாப்புல பேசுனாம் விகடு இதாம் வேலைன்னு எறங்கிப்புட்டா
அதெப் பத்தி வேற வெட்டிப்பேச்சு இருக்க கூடாதுங்றாப்புல. செய்யு ஒண்ணும் சொல்ல முடியாம
வண்டிய ஸ்டார்ட் பண்ணுறதுக்காகக் காத்திருந்தா. விகடு வண்டிய ஸ்டார்ட் பண்ணி ஸ்டாண்ட
எடுத்து விட்டாம். அடைப்ப எடுத்து வுட்டா பாயுற தண்ணியப் போல பாய்ஞ்சோட தயாரானுச்சு
வண்டி.
ஒரு அம்பது ரூவா இருக்குமா?
சரியா வண்டியில கௌம்ப உக்காரப் போற நேரத்துல
"அய்யா வாத்தியார்ரே!"ன்னே ஒரு கையி விகடுவோட தோள்ல பட்டுச்சு ஓடப் போற
வண்டிய நிறுத்தப் போற பிரேக்கப் போல. யாருன்னு திரும்பிப் பாத்தாம் விகடு. அந்தக் கையி
பாக்குக்கோட்டை பழைய பரமசிவத்தோட கையி.
"யண்ணே கெளம்புவோம்ண்ணே!"ன்னா
செய்யு பழைய பரமசிவத்தப் பாத்த எரிச்சல் தாங்காம பகையாளி வூட்டுல பச்சத் தண்ணிக் கூட
வாங்கிக் குடிக்க கூடாதுங்றாப்புல.
"ஒரு நிமிஷம் வாத்தியார்ரே!"ன்னு
பழைய பரமசிவம் விகடுவெ அப்பிடியே கட்டிப் பிடிச்சிக்கிட்டாரு காந்தத்தோட வந்து ஒட்டிக்கிற
இரும்பெப் போல. "தப்பா நெனைச்சுக்காதீங்க வாத்தியார்ரே! ஒரு அம்பது ரூவா இருக்குமா?"ன்னாரு
பழைய பரமசிவம் பசி மயக்கத்துல இருக்குறவேம் ஒரு வாயிச் சோத்த யாசகம் கேக்குறாப்புல.
விகடு அவர்ரப் புரியாமப் பாத்தாம்.
"கொடுத்தீயன்னா மத்தியானம் கெளம்புறப்போ
அந்தோ மொனைக் கடையில ஒரு பார்சல் சாப்பாட்ட வாங்கிட்டுப் பாக்குக்கோட்டைக்குப் பஸ்
ஏறுவேம். ஒரு சாப்பாட்ட நாலு பேரு சாப்புட்டுக்குவோம் வாத்தியார்ரே. நாம்ம, நம்மட
வூட்டுக்காரி, நம்மட பொண்ணு, நம்மட பேரப் புள்ளே. அவ்வே எம் மவ்வே தாலியறுத்த மூதியா
வூட்டுலக் கெடக்கா!"ன்னு சொல்லுறப்போ பழைய பரமசிவத்தோட கண்ணெல்லாம் கலங்கிடுச்சு
பசிக்கு மின்னாடி மான ரோஷமெல்லாம் பாத்துட்டு நிக்க முடியாதுங்றாப்புல.
விகடு ரண்டு நூத்து ரூவாய எடுத்து எரநூத்து
ரூவாயக் கொடுத்தாம் விரோதின்னாலும் வூட்டு வாசப்படி ஏறிட்டா வாங்கன்னு கூப்புட்டுத்தாம்
ஆவணும்ங்றாப்புல. "அம்பது போதும் வாத்தியார்ரே!"ன்னாரு பரமசிவம் கேக்குறதுக்கு
மேல ஒத்த பைசா கூட வாணாம்ங்றாப்புல.
"நாலு பார்சல் வாங்குனீயன்னா நாலு
பேரும் நெறைவா சாப்புடலாம்!"ன்னாம் விகடு கெடைக்குற சாப்பாட்டுக்கு ஏத்தாப்புல
கொடல சுருக்கிட்டுக் கெடக்க வாணாம்ங்றாப்புல.
"நெறைவால்லாம் கெடையாது வாத்தியார்ரே.
அதெ ராத்திரிக்கிம் வெச்சிப்போம்!"ன்னாரு பழைய பரமசிவம் ஒரு வேளைச் சாப்பாட்டெ
ரண்டு வேளைக்கு வெச்சி பசியாறிப்போம்ங்றாப்புல. அதெச் சொல்லிப்புட்டு, "எந் நெலையப்
பாத்தீயளா?"ன்னு தேம்பி தேம்பி அழுவ ஆரம்பிச்சிட்டாரு ஊரு ஒசந்து ஒசத்தியாப் பாக்க
ஓடுன தேரு உருக்கொழைஞ்சு நிக்குறாப்புல.
"டீத்தண்ணி சாப்புடறீயளா?"ன்னாம்
விகடு கசக்குற வாயிக்குக் கொஞ்சம் கற்கண்டெ அள்ளிப் போட்டுக் கசப்பெ மாத்துறாப்புல.
"ஒஞ்ஞ கையால வாங்கிக் கொடுங்க வாத்தியார்ரே!"ன்னாரு
பழைய பரமசிவம் உரிமெயா கொடுக்குறப்போ கல்லெடுத்துக் கொடுத்தாலும் கடிச்சித் திம்பேம்,
மண்ணள்ளித் தந்தாலும் மென்னுத் திம்பேம்ங்றாப்புல.
விகடு எதுத்தாப்புல இருந்த கடைக்குப் போயி ரண்டு வடையும், ஒரு பேப்பர்
கப்புல டீயும் வாங்கியாந்து தந்தாம். பழைய பரமசிவம் வடைக ரண்டையும் தொண்டையில அடைச்சிக்கிறாப்புல
வேக வேகமா சாப்புட்டாரு. காலச் சாப்பாடு சாப்புட்டு இருக்க மாட்டாரு போல. ஒரு வேள ராத்திரிப்
பொழுதுலேந்தும் கூட சாப்புட்டுருக்காம இருந்திருப்பாரோ என்னவோ! ஒரு நிமிஷம் ஆயிருக்காது.
சட்டுன்னு கப்புல இருந்த டீயை வாங்கி உறிஞ்சினாரு. "நீஞ்ஞ ந்நல்லா இருக்கணும்
வாத்தியார்ரே. ந்நல்லா இருப்பீயே. எவ்ளோ காசிப் பணத்தெ வுட்டும் இன்னும் சிரிச்ச மொகமாத்தான்னே
இருக்கீயே? மொகத்துல ஒரு கோவம், கவலெ எதுவும் காணுமே! ந்நல்லா இருப்பீரு வாத்தியார்ரே!"ன்னாரு
பழைய பரமசிவம் சாவக் கெடக்குறவேமுக்கும் ரத்தம் கொடுத்துக் காப்பாத்துனதெப் போல.
"பெறவு நாஞ்ஞ கெளம்புட்டுமா?"ன்னாம்
விகடு ஏத்தி வந்த ரயிலு எறக்கி வுட்டப் பெறவு கௌம்பியாவணும்ங்றாப்புல.
"ஒரு அஞ்சு நிமிஷம். அஞ்சே அஞ்சு
நிமிஷம். ஒஞ்ஞகிட்டெ பேசிக்கிறேம். பெறவு கெளம்புங்களேம்."ன்னு கெஞ்சுறாப்புல
கேட்டாரு பழைய பரமசிவம் தலைச்சொமைய எறக்கி வைக்க கை கொடுங்கன்னு கேக்குற மாதிரிக்கு
மனப்பாரத்தெ எறக்கி வைக்க சொல்றதெ சித்தெ காது கொடுத்துக் கேட்டுட்டுப் போங்கங்கறாப்புல.
"சொல்லுங்க!"ன்னாம் விகடு டீ
வடையில பசியாறுனதெப் போல அந்த மனுஷரோட மனசும் ஆறட்டும்ங்றாப்புல.
*****
No comments:
Post a Comment