28 Feb 2021

நல்லா இருப்பீங்க!

நல்லா இருப்பீங்க!

செய்யு - 731

            பழைய பரமசிவம் பேச ஆரம்பிச்சாரு.

            "தப்பான பொழைப்பு வாத்தியார்ரே நம்ம பொழைப்பு. அதுக்கான தண்டனயத்தாம் நம்மட பொண்ணு வடிவுல அனுபவிச்சிட்டு இருக்கேம்! தாலியறுத்து மூதியா ஒரு புள்ளையோட வந்து வூட்டுல கெடக்கா!"ன்னாரு கருவழிச்சு வாழுறவேம் உருவழிஞ்சுப் போவாம்ங்றாப்புல.

            "நாஞ்ஞ ன்னா தப்பான பொழைப்பெ பண்ணோம். நாஞ்ஞளும் எஞ்ஞ தங்காச்சி வெசயத்துல அனுபவிச்சிட்டு இருக்கேம்மே!"ன்னாம் விகடு நல்லவனும் சேந்துதாம் தடம் பொருளுற ரயில்ல அடிபடுறாம்ங்றாப்புல.

            "அப்பிடியில்ல வாத்தியார்ரே! நாம்ம பண்ண தப்பு நம்மட மவ்வே தலையில விடியுது. ஒஞ்ஞளுக்கு அப்பிடிக் கெடையாது. ஒஞ்ஞ சந்ததி ந்நல்லா இருக்கும். அதெ நேரத்துல ஒஞ்ஞப் பாவத்தெ வாங்கிக் கொட்டிக்கிடுறாம் பாருங்க தாடிக்கார பயலும், டாக்கடரு பயலும் அவனுவோ ந்நல்லா இருக்கவே மாட்டானுவோ. அவனுவோ சந்ததி சர்வ நாசமாவும் வாத்தியார்ரே. ஒஞ்ஞளுக்கு இத்து சில கால செருமந்தாம். ல்லன்னு சொல்ல மாட்டேம். அதுக்குப் பெறவு ஒஞ்ஞ காலம் மாறிடும்! நல்லா யிருப்பீயே!"ன்னாரு பழைய பரமசிவம் நல்லவேம் ஒரு காலம் செருமப்பட்டாலும் கெட்டவேம் ஒரு காலமும் நல்லா இருக்க மாட்டாம்ங்றாப்புல.

            "ஒஞ்ஞ கேஸ்ஸப் பத்திக் கேள்விப்பட்டுக்கிட்டுத்தாம் இருக்கேம். நமக்கு அதானே வேல. கோர்ட்டுக் கோர்ட்டா அலையுறது. இப்ப பாக்குக்கோட்டையில ஒருத்தரு கேஸ்ஸூ சம்பந்தமாத்தாம் வந்தேம். கையில யிப்போ முப்பது ரூவா காசித்தாம் இருக்கு. இதெ சிலவு பண்ணிட்டா நாம்ம பாக்குக்கோட்டைக்குப் போவ பிச்செயெடுத்துதாம் ஆவணும். இஞ்ஞ வெசாரிச்சிட்டுப் போயி அஞ்ஞ தகவலச் சொன்னா எரநூத்தோ, முந்நூத்தோ மனசுக்குப் போல கொடுப்பாவோ. நிச்சயமா ‍கொடுப்பாவோன்னும் சொல்ல முடியாது. சமயத்துல அம்பது ரூவாயத் தூக்கிக் கொடுத்து அடுத்த மொறை பாத்துக்கிடலாம்ன்னு சொன்னாலும் சொன்னதுதாம். ஏதோ ஒரு வெதத்துல ரண்டுப் பக்கமும் பேசி முடியுறப்போ பேசி வுடுறதுக்குக் கமிஷனா கணிசமா தேறும் வாத்தியார்ரே. அதெ நம்பித்தாம் அதுக்காக இந்த அலைச்சலப் பாக்கா ரண்டுப் பக்கமும் ஓடுறது. அப்பிடி ஓடுறப்போ இப்பிடி கையில பைசா காசில்லாம பட்டினியா அலையுறதும் உண்டு. நேத்தி முழுக்க பசிங்க வாத்தியார்ரே. கையில இருந்த காசியச் சிலவெ பண்ணிட்டா பஸ்ஸேறி இஞ்ஞ வாரணும்ன்னே வவுத்துல ஈரத்துணிய கட்டிக்கிட்டு பேரப் புள்ளைக்கு மட்டும் டீயும் பன்னும் வாங்கிக் கொடுத்துச் சமாளிச்சிட்டேம். இன்னிக்கும் அப்பிடின்னா குடும்பத்துல உசுரு தங்காதோங்ற பயம் வந்துடுச்சு. அதாங் நீஞ்ஞ நமக்கு எதிர்பார்ட்டின்னாலும் வெக்கத்தெ வுட்டு, மானத்தெ வுட்டு, கெளரவத்தெ வுட்டு கைய்ய நீட்டிட்டேம். நீஞ்ஞளும் நம்மள எதிர்ப்பா பாக்காம பசின்னதும் காசிய எடுத்து நீட்டுனீங்கப் பாருங்க. அதாங் வாத்தியாரே மனுஷத் தன்மெ! ரொம்ப நன்றீம்பீ வாத்தியாரும்பீ!!"ன்னாரு பழைய பரமசிவம் பசிக்கு மின்னாடி பத்து மட்டுமில்ல பத்தோட பதினொண்ணா பகையுணர்ச்சியும் மறந்துப் போயிடும்ங்றாப்புல.

            "ரொம்ப நல்லதுங்கய்யா! பெறவு நாம்ம கெளம்பட்டுமா? போயி திருவாரூரு போவ வேண்டிய வேல இருக்கு!"ன்னாம் விகடு அவசர வேலை இருக்குறப்போ கடலோரத்துல உக்காந்துட்டு அலையடிக்கிறதெ ரசிச்சுப் பாத்துக்கிட்டு உக்காந்துட்டு இருக்க முடியாதுங்றாப்புல.

            "‍ஒரே ஒரு சங்கதிய மட்டும் சொல்லிட்டு அனுப்பிடுறேம்!"ன்னாரு பழைய பரமசிவம் கவுத்த புட்டியில சொச்சமா கொஞ்சம் மிச்சம் தண்ணி இருக்கு, அதையும் ஊத்தி முடிச்சிப்புடுறேம்ங்றாப்புல.

            "செரி சொல்லுங்க!"ன்னாம் விகடு இன்னும் கொஞ்சம் இருந்தா நாடவம் முடிஞ்சிடும்ங்றப்போ இடையில எழுந்துப் போயி என்ன ஆயிடப் போவுதுங்றாப்புல.

            "யிப்போ ஒரு புது வக்கீலு வர்றாம் பாருங்க. பேரு கூட கங்காதரேம்ன்னு. அவ்வேந்தாம்பீ நம்ம பொழப்புல மண்ணள்ளிப் போட்டவேம். அந்த லாலு வாத்தி இருக்காம் பாருங்க. அவ்வேம் பாத்து வுட்ட ஆளு. நாம்ம கூட அவ்வேம்கிட்டெ எல்லா வாய்தாவுக்கும் வார வாணாம். நாம்ம போயிப் பாத்துட்டு தகவல் சொல்றேம். எப்போ வாரணுமோ அப்போ வாரலாம். நீஞ்ஞ தஞ்சாவூர்ல சோலியப் பாருங்கன்னேம். நமக்கும் பொழைப்பு ஓடணும் பாருங்க. அவ்வேம் சரியான எமகாதகப் பயலா இருப்பாம் போலருக்கு வாத்தியாரம்பீ! அவனெப் போல ஒரு பயல நாம்ம பாத்ததில்ல. டாக்கடரும் அவனுமா ஒட்டிக்கிட்டு நம்மள வெட்டிப்புட்டு வுட்டானுவோ. சரித்தாம் எத்தனெ நாளு இத்து நீடிக்கும்ன்னு பாத்தேம். அதெ போல எடையில அந்த டாக்கடரு பயலுக்கும், இந்த வக்கீலு பயலுக்கும் பீஸ் சம்பந்தமா முட்டிக்கிடுச்சு. அத்தோட புட்டுக்குவாம்ன்னு நெனைச்சேம் வாத்தியாரே! அந்த எடந்தாம்பீ அவனுகள ரொம்ப நெருக்கமா பண்டிடுச்சு!"ன்னாரு பழைய பரமசிவம் விரிசல் வுழுந்த பீங்கான் சாடி எப்பிடி ஒட்டுனதுங்றது தெரியலங்றாப்புல.

            விகடுவும், செய்யுவும் அவரு சொல்றது புரியாம அவர்ர வெறிக்கப் பாத்தாங்க. "நீஞ்ஞ ஏம் யிப்பிடி பாக்குறீங்கன்னுப் புரியுது. அதெப்பிடி புட்டுக்கப் போற ரண்டு பேரு சேந்துக்கிடுவாங்கன்னுத்தானே? அதெ சந்தேவந்தாம் வாத்தியாரே நமக்கும். நம்ம பொழைப்பு போவுதேன்னு மோப்பம் பிடிக்க ஆரம்பிச்சேம் பாருங்க. அட கருமத்தெ. ஏம்டா மோப்பம் பிடிச்சேம்ன்னு ஆயிடுச்சு. இந்த ஊர்லயல்லாம் அப்பிடி ஒரு கருமம் நடக்கும்ன்னு நாம்ம எதிர்பாக்கவே யில்ல வாத்தியார்ரே. இந்த டாக்கடர்ருப் பயெத்தாம் ஒஞ்ஞ தங்காச்சியக் கட்டிக்கிட்டு அறுத்து வுட்டாப்புல இருக்குறானா. அந்தக் கங்காதரேம் பயலுக்கு என்னா வந்துச்சுச் சொல்லுங்க? அவனுக்கு குடும்பம் குட்டி எல்லாம் இருக்குதுங்க வாத்தியார்ரே. அந்தப் பயலும், இந்தப் பயலும் சேந்து.... ப்பூ... ப்பூ... நம்மட வாயால சொல்லக் கூடாது. குடித்தனம் நடத்துறானுவோ வாத்தியார்ரே. ஆம்பளையும் ஆம்பளையும் சேந்து நடத்துற குடும்பத்தெ பம்பாய்ல பாக்கலாம், கல்கத்தாவுல பாக்கலாம், வெளிநாட்டுல பாக்கலாம்பாவோ. நாம்ம இஞ்ஞப் பாக்குறேம். அதுலத்தாம் வாத்தியார்ரே ரண்டு பயலுவோளும் ஒண்ணானது. அதுக்குப் பெறவு இவனெ அவ்வேம் பிரிய மாட்டேங்றேம். அவனெ இவ்வேம் பிரிய மாட்டேங்றாம். வாரம் பொறந்தா போதும் டாக்கடரு பயெ தஞ்சாரூக்கு வந்துடுவாம். அவ்வேம் ஆபீஸ்ல கூத்தா அடிச்சிக்கிட்டுக் கெடக்குறானுவோ. இவனுவோ ரண்டு பேத்துக்கும் தனியா வாடவைக்கு ஒரு வூட்டையும் பாத்திருக்கிறதா கேள்வி. அதுலப் பாத்தீங்கன்னா அவ்வேம் இஞ்ஞ வரலன்னா இந்தப் பயெ கெளம்பி சென்னைப் பட்டணுத்துக்குப் போயிடுறாம். ஒரே கூத்தும் கும்மாளந்தாம் நடக்குது. அந்த வக்கீலுப் பயெ ஒஞ்ஞ தங்காச்சி வாழ்க்கைய மட்டும் கெடுக்கல, அவனெ கட்டிட்டு நம்பி வந்த பொண்ணோட வாழ்க்கையையும் சேத்துதாம் கெடுக்குறாம். என்னத்தெ பண்டுறது எல்லாம் தலைவிதின்னு நெனைச்சிட்டுப் போவ வேண்டிருக்கு!"ன்னு சொல்லி முடிச்சாரு தலையில அடிச்சிட்டு அழுவுறதாலோ, தலைய நல்லா அழுத்தித் தேய்ச்சுக் குளிக்கிறதாலோ மட்டும் தலையெழுத்தோ தலைவிதியோ மாறிப்புடுமாங்றாப்புல.

            "இதெல்லாம் ஒஞ்ஞளுக்கு..."ன்னாம் விகடு நாலு சொவத்துக்குள்ள நடக்குறது முச்சந்தியில இருக்குறவேமுக்கு எப்பிடித் தெரியும்ங்றாப்புல.

            "அதாம் மோப்பம் பிடிச்சேம்ன்னு சொன்னேன்னே! ஒஞ்ஞளுக்குத்தாம் ஒண்ணும் தெரியாது வாத்தியார்ரே. குதிரைக்குக் கண்ணெ கட்டி வுட்டது போல வர்றதும் போறதுமா இருந்தா எப்பிடித் தெரியும்? அப்பிடி இப்பிடி கொஞ்சம் வெசாரிச்சிப் பாருங்க. ஒஞ்ஞளுக்கே தெரியும்!"ன்னாரு பழைய பரமசிவம் கண்ணத் தொறந்தா டிவிப் பொட்டியில ஒலகமே தெரியுறப்போ, காதெ தொறந்தா பரம ரகசியமும் பட்டுன்னுக் காதுக்குள்ளார வந்துப் பூந்துடும்ங்றாப்புல.

            "கும்பகோணத்து வக்கீலுகள்ல ஒருத்தரும் அந்த வக்கீலப் பத்தி ஒரு வார்த்தெ அப்பிடிச் சொல்லிருக்காரு!"ன்னாம் விகடு காத்துல கசியுறது கண்ட மேனிக்குப் பரவிக் காதுக்கு வந்துச் சேந்துப்புடும்ங்றது உண்மெதாம்ங்றாப்புல.

            "பாத்தீங்களா! அதாங் விசயம்! நாம்ம வேற ரொம்ப நேரம் பேசிட்டேம். நீஞ்ஞ வேற வேற சோலிய வெச்சிட்டு இருக்கீயே. நாமளும் இஞ்ஞ கோர்ட்டுலப் போயி தேதிய வெசாரிச்சிக்கிட்டுச் சீக்கிரமே மொனைக்கடையில சாப்பாட்ட வாங்கிட்டா பாக்குக்கோட்டைக்கு மூட்டையக் கட்டிடுவேம்!"ன்னாரு பழைய பரமசிவம் பொழுது மசங்குற நேரம் வந்துப்புட்டா மேயுற மாடு வூட்டை நோக்கி நடையக் கட்டிப்புடணும்ங்றாப்புல.

            "செரி கெளம்புங்க. நாஞ்ஞளும் கெளம்புறேம்!"ன்னாம் விகடு சுள்ளுன்னு வெயிலு மொகத்துல அடிச்ச பெறவும் சுருட்டிப் போத்திட்டு படுத்துக் கெடக்க கூடாதுங்றாப்புல.

            "எப்ப பாத்தாலும் செரி! நம்மள ஒரு டீத்தண்ணிக்குக் கவனிச்சி வுட்டுப்புடுங்க வாத்தியார்ரே. மறந்துடாதீயே!"ன்னாரு பழைய பரமசிவம் பெட்ரோல்ல ஊத்தி வண்டி ஓடுதுங்ற மாதிரிக்கு டீத்தண்ணிய ஊத்தித்தாம் உசுரு ஓடிட்டு இருக்குங்றாப்புல. விகடு வண்டிய ஸ்டார்ட் பண்ணுனதெ அவரு பேச ஆரம்பிச்சதும் நிப்பாட்டிருந்தாம் வாத்தியாரு வந்ததெப் பாத்ததும் சத்தத்தெ நிப்பாட்டிடுற பசங்களப் போல. மறுக்கா திரும்பவும் பெடலப் போட்டு அழுத்தி ஸ்டார்ப் பண்ணி ஸ்டாண்ட எடுத்து விட்டாம் விசிலு சத்தம் கேட்டா போறப்பட வேண்டிய பஸ்ஸப் போல. பின்னாடி செய்யு ஏறி உக்காந்ததும் வண்டிப் பொறப்பட ஆரம்பிச்சிது சனங்க எல்லாம் ஏறி உக்காந்ததும் சுத்தத் தொடங்குற ராட்டினமாட்டம்.

            "பாத்தீயாண்ணே அந்தப் பயலுவோ பண்டுறதெ? அதாம்ண்ணே அந்த வக்கீலு அந்த மாதிரிக்கி நம்மகிட்டெ அவனுக்காகப் பேசிருக்காம்?"ன்னாம் செய்யு பாம்பெ அடிச்சித் திங்குறவேம் நாக்குல வெஷத்தெத் தடவிட்டுத்தாம் பேசணும்ங்ற அவசியம் இல்லங்றாப்புல.

            "எதோ பேசிட்டாம். நடந்துட்டு. அதெ வுடு. அதாம் நம்மப் பக்கத்துக்கு கோவிந்து அண்ணன், பெத்தநாயகம் அண்ணன்ல்லாம் இருக்காங்களே!"ன்னாம் விகடு கீழே வுழுவுறப்பத்தாம் நாலு பேத்துத் தூக்கவும் வருவாங்கங்றாப்புல.

            அதெ சொல்லிட்டுச் சட்டுன்னு ஞாபவம் வந்தவனா, "அவுங்க இன்னிக்கு வரலியா?"ன்னாம் விகடு உருவம் நவுர்றப்போ நெழலு நவுந்து வர்றாம இருக்காதுங்றாப்புல.

            "நீயி ஒம்போது மணிக்கெல்லாம் அழைச்சாந்து பத்தே காலுக்கெல்லாம் கெளம்புனா எப்பிடி? கொஞ்ச நேரம் கோர்ட்டு வாசல்ல நின்னா வந்துடுவாங்க."ன்னா செய்யு எழும்புறதெ சீக்கிரமா எழும்பிட்டுக் கோழி கூவலன்னு சொன்னா எப்படிங்றாப்புல.

            "வாணாம். போன்ல கெளம்பிட்டேம்ன்னு சொல்லிடு. நின்னுப் பேச்சு வளந்தா போச்சு. இன்னிக்கு ஆவ வேண்டிய காரியமும் ஆவாமப் போயிடும்! வண்டி வேற வர்ற வர்ற முப்பது கிலோ மீட்டரு வேகத்தெ தாண்டிப் போவ மாட்டேங்குது. இருவத்தஞ்சு கிலோ மீட்டரு வேகத்துலயே உருட்டிக்கிட்டுப் போவ வேண்டியதா கெடக்கு! இந்த வேகத்துலயே வூட்டுக்குப் போயி, அதெ வேகத்துலயே திருவாரூருக்கு வேற போவணும்! பேயாம மூணரைக்குத் திருவாரூருக்குக் கெளம்புற எட்டாம் நம்பரு பஸ்ல திருவாரூருக்குப் போயிட்டு வந்திடலாம்ன்னு நெனைக்கிறேம்!"ன்னாம் விகடு விடியுறதெப் பாத்துட்டே இருந்தா பாதி தூரம் போயிருக்க வேண்டிய நடெ பக்கத்துலயேத்தாம் இருக்கும்ங்றாப்புல.

            "ஆமாண்ணே! இந்த டிவியெஸ் பிப்டி தமிழ்நாட்டுலயே இருவதோ, முப்பதோத்தாம் மொத்தத்துல ஓடும்ன்னு நெனைக்கிறேம். அதுல நம்ம வண்டியும் ஒண்ணு. இந்த வண்டியையே எஞ்ஞயும் பாக்க முடியல. நம்மகிட்டெத்தாம் பாக்க முடியுது. மொதல்ல ஒரு வண்டிய ஒண்ணுத்தெ வாங்கிக்கண்ணே! போவ வர்ற கொள்ள வசதியா இருக்கும் பாரு!"ன்னா செய்யு கூட மாட ஓடியாற இருக்குற ஊரு நாய்ய வுட்டுப்புட்டு சீமெ நாயொண்ண வாங்கிப்புடுங்றாப்புல.

            "வண்டியென்ன பெரிய வண்டி? நாம்ம வேலங்குடி பெரிய மாமாவப் போல, ஒன்னய அழைச்சிட்டு வர்ற வேண்டியதில்லன்னா வெச்சுக்கோ நடந்தே ஆர்குடிக்கு வந்துட்டு நடந்தே திரும்புவேம்!"ன்னாம் விகடு வண்டியில்லாக் காலத்துல காலிரண்டும் சக்கரமா சொழலையாங்றாப்புல.

            "ஏம் திருவாரூருக்கு நடந்தே போயேம்?"ன்னா செய்யு வேடிக்கையா அந்தக் காலத்துல பனையோலையில எழுதுனா இந்தக் காலத்துலயும் அதுலேயே எழுத முடியுமாங்றாப்புல.

            "திருவாரூருக்குப் பஸ்லப் போயி அஞ்ஞயிருந்து ஆட்டோ பிடிச்சிட்டு வடக்கு வீதிக்குப் போவேம்ன்னு நெனைச்சியா? வாடவெ சைக்கிளக் கூட எடுக்க மாட்டேம். நடந்தே போயிட்டு நடந்தேத்தாம் வருவேம்!"ன்னாம் விகடு ரண்டு கால்ல வெச்சு கால்நடையா நாலு கால்லப் போற கால்நடையப் போல நாலு காலுப் பாய்ச்சல்ல போவேம்ங்றாப்புல.

            "நீயி திருவாரூரு வண்டியிலயே போவே! கொஞ்ச நாளா அப்பிடிப் போற ஆளுத்தாம். இப்போ பெட்ரோல் காசிக்குச் சிலவு பண்ணுறதா வெச்சிருந்தா ரண்டு நாளு ஓட்டலாம்ன்னுத்தானே பஸ்ல போறேங்றே?"ன்னா செய்யு தயிரை ஊத்தித் தின்னா கொறைஞ்சிடும்ன்னு அதெ வாசம் பிடிச்சிக்கிட்டே சாப்பிடுறீயாங்றாப்புல.

            "ச்சைச்சேய்! வண்டி வேகம் வர்ற வர்ற கொறைஞ்சிக்கிட்டெ இருக்குது. சைக்கிள்லப் போறதெப் போலவே இருக்கு. ரொம்ப நேரம் இதுல உக்காந்துட்டே போறப்போ இடுப்பு வலி கண்டுப் போயிடுது!"ன்னாம் விகடு உள்ளங்கால்ல குத்துன முள்ளெ உள்ளங்கையில தேடிட்டு இருக்கேம்ங்றாப்புல.

            "ச்சும்மா எதாச்சும் காரணத்தெ சொல்லாதே. பேயாம வூட்டுலச் சாப்புட்டு வண்டிய எடுத்துட்டுக் கெளம்புறே!"ன்னா செய்யு வெரல்ல ஒட்டியிருக்கிறதெ நக்கித் தின்னே பசியாறிட முடியாதுங்றாப்புல.

            "பாப்பேம்!"ன்னாம் விகடு குடிக்க பாலிருந்தா கொழந்தெ ஏம் வெரலைச் சூப்பப் போறதுங்றாப்புல.

*****

No comments:

Post a Comment

தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை!

தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை! கோடை விடுமுறையில் பெரிய நட்சத்திரங்களின் திரைப்படங்கள் வெளியாகாமல் இருந்ததுண்டா? கோடையில் அக்னி நட்சத்திரம் கூ...