26 Feb 2021

பெட்டி கேஸ்!


 பெட்டி கேஸ்!

செய்யு - 729

            பாண்டுரங்கஹரி வக்கீல் சொன்னது போல கங்காதரன செருப்பால அடிச்சது பெட்டிக் கேஸா ஆயிருந்துச்சு. செருப்பால அடிச்ச செய்யு, எதுவும் செய்யாம என்ன செய்யுறதுன்னு கொழம்பிப் போயி நின்ன சுப்பு வாத்தியாருன்னு ரண்டு பேத்தையுமே கங்காதரன தாக்க முயற்சிப் பண்ணதா வழக்குல சேத்திருந்தாங்க. எல்லா வழக்குக்கும் வக்காலத்துப் போட்டுட்டு, அப்பிடியே அந்த செருப்படி கேஸூக்கும் வக்காலத்தெ போட சுப்பு வாத்தியாரு டிவியெஸ் பிப்டியில மவளெ அழைச்சிட்டுப் போனாரு. அந்த வழக்குல பாண்டுரங்கஹரி வக்கீல் ஆஜராவ அதுக்கு ரண்டாயிரம் பணத்தையும் கையோட எடுத்துட்டுப் போயிருந்தாரு. அதெ வக்கீல்கிட்டெ கொடுத்து அவரும் வக்காலத்துல கையெழுத்தப் போட்டுக் கொடுத்தாரு. அன்னிக்குன்னுப் பாத்து வன்கொடுமெ வழக்குக்கும் தேதியாயிருந்துச்சு.

            செய்யு இந்தத் தேதிக்குக் கோர்ட்டுக்கு வர்றேங்றதெ மூலங்கட்டளெ கோவிந்துக்குப் போன அடிச்சிச் சொல்லிருப்பா போல. கோவிந்து, மகேந்திரன், பெத்தநாயகமும் கட்சிக்கார ஆளுங்கள நாலைஞ்சு பேர்ர தொணைக்கு அழைச்சிக்கிட்டு ஆர்குடிக்கு வந்திருந்தாங்க. இப்போ புதுசாப் பாத்திருக்குற வக்கீலு பாண்டுரங்கஹரின்னு கேள்விப்பட்டதும், "ஏம்ம்மா! இதெ நம்மகிட்டெ சொல்லிருக்கக் கூடாதா? நாமளே அவர்கிட்டெ சொல்லி விட்டுருப்பேமா?"ன்னாரு கோவிந்து தென்னந்தோப்பெ வெச்சிருக்கிறவேம் கடைத்தேங்காயப் போயி வாங்கிட்டு நிக்குறதாங்றாப்புல.

            "யப்பாவும் யண்ணனும்தாம் அவுங்களுக்குத் தெரிஞ்ச வாத்தியாரு மூலமா வக்கீல் அய்யாவப் பாத்துட்டு வந்திருந்தாங்க! நமக்கொண்ணும் வெவரம் தெரியாதுண்ணா!"ன்னா செய்யு அரிசிக்கடை சந்துன்னு தெரியாம அரிசிய விக்க வந்துப்புட்டேம்ங்றாப்புல.

            "பாத்து வெச்ச வரைக்கும் செரித்தாம். நாம்ம வந்திருந்தேம்ன்னா பீஸூ இல்லாம பிரியா பண்ணி விட்டிருப்பேம். ஒன்னய நம்ம தாய்மண் முன்னேற்றக் கழகத்தோட மகளிரணி துணைத் தலைவின்னு சொல்லிருந்தா பிரியாவே வழக்க எடுத்திருப்பாரு. நமக்குத் தெரியாம போயிட்டே! அதுக்குச் சொன்னேம்! ஏன்னா பாண்டுரங்கஹரி நம்ம கட்சியில பல பொறுப்புல இருந்த ஆளு! நம்ம கட்சி ஆளுன்னா வுட்டுட மாட்டாரு!"ன்னாரு கோவிந்து கடல்ல தவிக்குற மனுஷன டால்பினுங்கப் பாத்துப்புட்டா காபந்து பண்டாம விடாதுங்றாப்புல. அதெ சொன்னதோட இல்லாம கோவிந்தும் வக்கீல்கிட்டெ போயி செய்யுவ அறிமுகம் பண்ணி வெச்சாரு.

            "அட நம்ம கட்சிப் பொண்ணுன்னு தெரியாம போயிடுச்சேப்பா! ரண்டாயிரந்தாம் கட்டுக்கு வாங்குனேம். கொடுக்கவா வெச்சிக்கவா?"ன்னிருக்காரு பாண்டுரங்கஹரி சிரிச்சிக்கிட்டெ அங்காளி பங்காளிக்குக்குப் பண்டுறதுக்கெல்லாம் காசியக் கேக்க முடியுமாங்றாப்புல.

            "இந்தக் காலத்துல கட்டுக்கு யாருங்கய்யா ரண்டாயிரம் வாங்குறா? எல்லாம் அய்யாயிரம் பத்தாயிரம்ன்னு எக்ஸ்பிரஸ் வேகத்துல பறந்துக்கிட்டு இருக்காங்க. இதெ ரேட்டை மட்டும் தங்காச்சிக்கு மெயின்டெய்ன் பண்ணிக்குங்க!"ன்னாரு கோவிந்து வாடிக்கையா யேவாரம் கொடுக்குறவங்களுக்கு வெலையக் கொறைச்சிக்கிடணும்ங்றாப்புல.

            "வக்காலத்துல கையெழுத்தப் போட்டுட்டு அப்பிடியே இன்னிக்குத் தேதியாயிருக்குற வன்கொடுமெ வழக்குக்கும் கோர்ட்டுல ஆஜராயிட்டுப் போயிட்டா ஒரு ரண்டு வாய்தாவுக்கு வர்ற வேண்டியதில்ல. பொண்ணு படிக்குதாம்ல. இந்த வழக்கால படிப்புக் கெட கூடாது பாருய்யா! அது செரி நீங்கல்லாம் யாரு? மகளிரணி துணைத் தலைவிக்கு செக்யூரிட்டிங்களா? பல அடுக்குப் பாதுகாப்பால்ல இருக்கும் போலருக்கு!"ன்னிருக்காரு பாண்டுரங்கஹரி சிரிச்சபடிக்கு வூட்டுக்கு ஒரு புள்ளெ ரண்டு புள்ளையா பெத்துக்கிடலாம்ன்னா ஒரு கெராமத்தையே பெத்து வெச்சிக்கிடுறதாங்றாப்புல.

            "ஆமாங்கய்யா! அந்தச் செருப்படி வெவகாரத்தால பொண்ணு ரொம்ப பயப்படுது. அதாங் இங்க ஆர்குடியில எப்ப வாய்தான்னாலும் நமக்கு போன்ன அடிச்சிடும். நம்மாள வர்ற முடிஞ்சா வந்துடுவேம். இல்லன்னா நம்ம ஆளுங்ககிட்டெ போன பண்ணிட்டுச் சொன்னா அவனுங்கப் பாத்துப்பானுங்க. நம்ம ஆளுங்களுக்குத்தாம் எல்லா கோர்ட்டுலயும் வழக்கு இருக்கே!"ன்னாரு கோவிந்து ஒரு சோலியா திருவாரூருப் பக்கம் போறவேம் தியாகராசரையும் தரிசனம் பண்டிட்டு வாராப்புலத்தாம்ங்றாப்புல.

            "அதுவும் நல்லதுதாம். பொண்ண அழைச்சிட்டுப் போயி கோர்ட்டுல அப்பியரன்ஸ்ஸ முடிச்சிட்டு அப்பிடியே அழைச்சிட்டுப் போயிடுங்க! பாத்துக்கிடலாம்! குமாஸ்தா வருவாப்புல. டிரையலப்பா நாம்ம வந்துக்கிடுறேம்!"ன்னாரு பாண்டுரங்கஹரி வருஷத்துல எல்லா நாளும் சாமிப் பொறப்பாடு இருக்காதுங்றாப்புல. அப்படியே சுப்பு வாத்தியார்ரப் பாத்து, "திருவாரூரு வடக்கு வீதியல அய்யப்ப மாதவன்னு ஒரு வக்கீலு. வடக்கு வீதியில போயி வெசாரிச்சா சின்ன புள்ளயும் வெலாசம் சொல்லிப்புடும். நம்ம ஆளுதாம். ஊருக்கு ஊரு நமக்கு ஆளு இருக்கு. திருவாரூர்ல இருக்குற நம்ம ஆளு அவரு. பெரிய பணக்கார வூட்டுப் புள்ளே. அவரு அப்பாரு, தாத்தம் காலத்துலேந்து வக்கீலு குடும்பம். வக்கீலு தொழிலு நடத்தித்தாம் சம்பாதிக்கணும்ங்ற அவசியமே யில்ல. ஏகப்பட்ட சொத்து, நெல நீச்சுன்னு அதுவே நூத்து நூத்தம்பது வேலி கெடக்கும். அதெ பாக்குறதுக்கே நேரம் கெடையாது. என்னவோ குடும்பத் தொழில்லா வர்றதால நடத்திட்டு இருக்குறாம். தொழில்ல ரொம்ப சரியா இருப்பாம். அவ்வேங்கிட்டெ போன்னப் போட்டுச் சொல்லிருக்கேம். அங்க இந்த ஜீவனாம்ச அப்பீலுக்கான கட்டெ கொண்டுப் போயிக் கொடுத்து இத்துப் போல நம்ம பேர்ரச் சொல்லி வெசயத்தச் சொல்லி கட்டோட ரண்டாயிரத்தக் கொடுத்துடணும் ஆம்மா! இந்தக் கட்டெ எடுத்துக்கோங்க!"ன்னாரு ஜீவனாம்சத்துக்கான மேல் அப்பீலுக்கான கட்டெ எடுத்துக் கொடுத்து ஊருக்கு ஊரு வூட்டெ கட்டி வெச்சிருக்கிறவேம் எந்த ஊருக்குப் போனாலும் தங்குறதுக்குப் பெரச்சனெ இல்லங்றாப்புல. சுப்பு வாத்தியாரு அந்தக் கட்டெ எடுத்துப் பையில போட்டுக்கிட்டாரு சேர்க்க வேண்டிய எடத்துல சரியா மணியார்டர்ரச் சேத்துப்புடுவேம்ங்ற தபால்காரரப் போல.

            "செரி கெளம்புங்க. கோர்ட்டுக்கு நேரமாயிடுச்சு!"ன்னு பாண்டுரங்கஹரி கெளப்பி விட்டதும், செய்யு, சுப்பு வாத்தியாரு, கோவிந்து, பெத்தநாயகம், மகேந்திரன், அவுங்களோட கூட வந்து ஆளுங்கன்னு எல்லாம் ஒண்ணா சேந்து ஆர்குடி குற்றவியல் நீதிமன்றத்து வளாகத்துக்குள்ள நொழைஞ்சாங்க. ரொம்ப சரியா அன்னிக்குன்னுப் பாத்து பாலாமணியும் கங்காதரனும் கோர்ட்டுக்குள்ள நொழைஞ்சிருந்தாங்க. வழக்கு நம்பர்ரச் சொல்லி, பேர்ர கூப்புட்டதும் செய்யுப் போயி கோர்ட்டுக்குள்ளார நின்னா. பாலாமணியும் போயி நின்னாம். கங்காதரன் எழும்பி, வழக்க வேணும்ன்னே இழுத்தடிக்க நினைக்கிறதா சொன்னாம். பாண்டுரங்கஹரியோட குமாஸ்தா எழும்பி, "இன்னிலேந்து இந்த வழக்குல எங்க வக்கீலு ஆஜராவுறாப்புல இருக்காங்க."ன்னு சொல்லி வக்காலத்தெ கோர்ட் கிளார்க்கிட்டெ சமர்ப்பிச்சாரு. ஜட்ஜ் அதெ குறிச்சிக்கிட்டு, "சீக்கிரமெ எவிடென்ஸ்ஸ சப்மிட்டு பண்ணுங்க!"ன்னு சொல்லி மறுதேதி கொடுத்து அனுப்பி வெச்சாரு.

இது எங்க ஏரியா!

            கோர்ட்டெ வுட்டு வெளியில வந்ததும் பாலாமணியும், கங்காதரனும் மின்னாடிப் போல செய்யுவ வம்புக்கு இழுத்துப் பேசல, பரிகாசம் பண்ண நெனைக்கல. வேகு வேகுன்னுப் போயி இன்னோவாவுல ஏறப் போனாங்க.

            "இப்பப் பாருங்க நடக்கற வேடிக்கைய!"ன்னு சொல்லிட்டு கோவிந்தும், பெத்தநாயகமும், மகேந்திரனும் அவுங்கப் போற தெசைக்கு எதிர்தெசையிலப் போயி நேர்ரா மோத வர்றதப் போல வந்து அவுங்க மேல மோதுனாங்க ரோட்டுல ஓரமா ஒழுங்கா போயிட்டு இருக்குறவேம் மேல போயி மோதுற வண்டிக்காரனெ போல. ஒடனே அவுங்க கூட வந்து ஆளுங்க அவுங்க பின்னாடியே அடிக்கப் போறதெப் போல பாய்ஞ்சிப் போனாங்க சண்டெ வைக்காம அமைதியா போனா ச்சும்மா வுட்டுப்புடுவோமாங்றாப்புல. பாலாமணியும், கங்காதரனும் ஸ்தம்பிச்சதுப் போல நின்னாங்க. "சாரி சார்! தெரியாம வந்து மோதிட்டேம்!"ன்னாரு வக்கீல் கங்காதரன் அடிபட்டு வுழுந்து கெடக்குறவேம் அடிச்சவனெப் பாத்து தானாத்தாம் வுழுந்து அடிபட்டுக்கிட்டேன்னு மன்னிப்பக் கேக்குறாப்புல.

            "வந்து மோதுனது நாஞ்ஞ. நீயேம் சாரி கேக்குறே? ஏம் சண்டெ வர்றக் கூடாதுன்னு பயப்படுறீயா?"ன்னாரு கோவிந்து மறுகன்னத்தெ காட்டுனாலும் அறை வுழுவும், கால்ல வுழுந்தாலும் ஒதை வுழுவும்ங்றாப்புல. கங்காதரனும், பாலாமணியும் எந்தப் பதிலையும் சொல்லாம அப்பிடியே தேமேன்னு நின்னாங்க காலச் சுத்துன பாம்பு கடிக்காம வுட்டா போதும்ங்றாப்புல.

            "அந்தப் பயம் இருக்குல்லா. அந்தப் பயத்தோடேயே கோர்ட்டுக்கு வாரணும், போவணும். ஏன்னா இத்து ஒஞ்ஞ ஏரியா இல்ல. எஞ்ஞ ஏரியா. புரியுதில்லா?"ன்னாரு கோவிந்து ஆர்குடிங்றது தாய்மண் முன்னேற்ற கழகத்துக்காரங்களோட கோட்டைங்றாப்புலயும், கோட்டைக்குள்ள வர்றவேமுக்குக் கொட்டமெல்லாம் அடங்கியிருக்கணும்ங்றாப்புலயும். கங்காதரனும், பாலாமணியும் புரியுறதுப் போல தலைய ஆட்டுனாங்க அடிபட்ட பாம்பு தலைய தூக்க முடியாம தொங்கப் போட்ட படி அந்தாண்டயும் இந்தாண்டயும் தலைய அசைச்சுப் பாக்குறாப்புல.

            "இனுமே எஞ்ஞப் பொண்ணுகிட்டெ எதுவும் வெச்சிக்கிட்டெ ஆர்குடி பக்கம் வந்துட்டு ரணம் இல்லாம திரும்ப முடியாது பாத்துக்கோ. கோர்ட்டுக்கு வந்தீயா? போனீயான்னு இருக்கணும். அநாவசியப் பேச்சு, பரிகாசம், மெரட்டுறது இதெல்லாம் இருக்கக் கூடாது. இருந்துச்சுன்னு வெச்சுக்கோ மவனெ ஆர்குடிக்கு வர்றதுக்கு நீயி இருக்க மாட்டே!"ன்னாரு பெத்தநாயகம் கசாப்புக்கடெகாரனுக்கு ஆட்டறுத்துக் கொல்லுறோமேங்ற பிரக்ஞையே இருக்காதுங்றாப்புல.

            "அட வுடுங்கப்பா சுடுகுஞ்சிகயப் போட்டு மெரட்டிக்கிட்டு. பாவந்தானே! ஏ அம்மணக்குஞ்சிகளா இதெ அழுதுகிட்டுப் போயி யம்மா யப்பாகிட்டெ சொல்லிட்டு அடுத்த மொறை அவுங்களக் கூப்புட்டு வந்து பெரியவங்கள வெச்சி வம்ப வளக்கக் கூடாது பாத்துக்கோ. பெறவு இந்த மகேந்திரன் மகேந்திரான இருக்க மாட்டாம்! கொதிச்சி எழுந்துடுவாம்! ஒரு கையால வாயையும் இன்னோரு கையால சூத்தையும் பொத்திக்கிட்டுப் போயிக்கிட்டெ இருக்கணும்!"ன்னாப்புல மகேந்திரன் இனுமே ஆர்குடி வர்றப்போ பொத்திக்கிட்டுப் போவலன்னா அவுந்த மேனியா அடிச்சு வெரட்டுவேம்ங்றாப்புல. அத்தனைக்கும் ஒண்ணும் சொல்லாம ரண்டு பேரும் அமைதியாவே நின்னாங்க இதுக்கு மேல காறித் துப்புனாலும் கண்டுக்கிடாம தொடைச்சிக்கிட்டுப் போயிட்டே இருப்போம்ங்றாப்புல.

            "ச்சீப் போங்கடா! இனுமே ஆர்குடிக்கு வந்துட்டுப் போற சொவடு தெரியக் கூடாது! தெரிஞ்சா ஒங்க காலடிச் சொவடு மறுக்கா ஆர்குடியில பாக்க முடியாது. இந்த ஆர்குடியில நாங்கதாம்டா கிங்கு! அலும்பு பண்டலாம்ன்னு நெனைச்சே அந்துத் தொங்கிடும் சங்கு!"ன்னு கோவிந்து சொல்லிட்டு நவந்து வழிய வுட்டாரு இன்னிக்குப் போயி நாளைக்கு வர்றப்பயும் இப்பிடித்தாம் குனிஞ்ச தலெ நிமுராம வந்துக்கிட்டும் போயிக்கிட்டும் இருக்கணும்ங்றாப்புல. கோவிந்து வுட்ட அந்த வழியில பாலாமணியும், கங்காதரனும் வேகமா ஓடிப் போயி இன்னோவா கார்ல ஏறுனாங்க காலடிச் சொவட்ட கண்டுகிட்டெ பாம்பு பொந்துக்குள்ள ஓடி ஒளியப் பாக்குறதப் போல. காரு அவுங்க ஏறுன வேகத்துல சர்ட்டுன்னு கெளம்பி கோர்ட்டு வளாகத்தெ விட்டு வெளியில போனுச்சு தப்பிச்சாப் பொழைச்சாப் போதும்ன்னு உசுரெ கையிலப் பிடிச்சிட்டு ஓடுறவேம்மே போல. அதெ பாத்துட்டு இருந்த சுப்பு வாத்தியார்கிட்டெயும், செய்யுகிட்டெயும் கோவிந்தும் மகேந்திரனும் பெத்தநாயகமும் அவுங்களோட ஆட்களும் வந்தாங்க.

            "பாத்தீங்களே! எப்பிடி மெரண்டுப் போறானுவோ! இனுமே தங்காச்சி நீயி தனியா வந்தாலும் ஒங்கிட்டெ வர்ற யோசிப்பானுவோ. இன்னிக்கு எஞ்ஞ கர வேட்டிய எல்லாம் பாத்திருப்பானுவோ. இனுமே எப்போதும் நீயி தனியாளு இல்ல. கட்சியோட அங்கம். எங்கப் போனாலும் கட்சி ஒம் பின்னாடி நிக்கும்!"ன்னாரு கோவிந்து ஆடுங்க போற எடமெல்லாம் மேய்க்குறவேமோட காவல் நாயி தொணைக்கு வாரும்ங்றாப்புல.

            "ஒஞ்ஞளுக்கு எப்பிடி நன்றி சொல்றதுன்னே தெரியல!"ன்னு சுப்பு வாத்தியாரு தழுதழுத்தாரு வெரட்டி வெரட்டி அடிச்சவனுங்கள வெரண்டு ஓட வெச்சுப்புட்டீங்களேங்றாப்புல.

            "நம்மப் பசங்க எல்லாம் சாப்பாட்டுப் பிரியனுங்க. வாஞ்ஞ மொதல்லப் போயி ஓட்டல் கடையில சாப்புடுவோம்!"ன்னாரு பெத்தநாயகம் சாப்புட கைய அலம்பிக்கிட்டு வந்தவேம்கிட்டெ கையக் குலுக்க வாணாம்ங்றாப்புல.

            "ஒஞ்ஞளப் பாத்தா சாப்புடற ஆளப் போலயே தெரியலையேண்ணா!"ன்னா செய்யு நாலு பிளேட்டு பிரியாணி கேக்குறவேமுக்கு அடிக்கிற காத்து அலேக்கா தூக்கிட்டுப் போற அளவுக்குத்தாம் ஒடம்பு இருக்குங்றாப்புல.

            "பாத்தியா தங்காச்சிக்கு கிண்டல் பண்ணுறது எப்பிடிக் கொப்புளிச்சிக்கிட்டு வருது? இனுமே நமக்கொண்ணும் கவலெயில்ல. நம்மப் பாதுகாப்புக்கு வேணும்ன்னா தங்காச்சிய கூட வர்றச் சொல்ல வேண்டித்தாம் இனுமே!"ன்னாரு பெத்தநாயகம் கொப்புளிச்சிட்டு வர்ற தண்ணியில உண்டாவுற சொழலு எப்பிடி போட்டு அமுக்கும்ன்னு தெரியாதுங்றாப்புல.

            "அதுக்குதாம்யா நம்மள மாதிரி சாப்புட்டு ஒடம்ப தேத்தி வையுய்யான்னா, இப்பிடி ஒட்டடெக்குச்சி போல போயி நின்னுகிட்டு மெரட்டுனீன்னா கூட நிக்குற எஞ்ஞளப் பத்தி அவ்வேம் என்னத்தெ நெனைப்பாம்!"ன்னாரு மகேந்திரன் தாட்டிகமா இருக்குற ஒடம்பெ வெச்சுத் தாராளமா சகட்டு மேனிக்கு மெரட்டலாம்ங்றாப்புல.

            "பாத்துடா தம்பீ! ஒஞ்ஞளுக்கு மின்னாடி கட்சிக்கு வந்த ஆளுடாம்பீ நாம்ம. ஒஞ்ஞளத் தூக்கி ஆளாக்கி வுட்டுச் சோடா பாட்டுல வீச, உருட்டுக் கட்டெயெ சுத்த கத்துக் கொடுத்த ஆளுடாம்பீ நாம்ம! உருவம் சிறிசுன்னாலும் விஸ்வரூவம் எடுத்தா பெரிசுடாம்பீ!"ன்னாரு பெத்தநாயகம் உருவத்தெ வெச்சு எடைப் போடக் கூடாது, கரிச்சாங்குருவி பருந்தையும் பாய்ஞ்சு அடிக்கும்ங்றாப்புல.

            "மன்னிசிக்கோ குருதேவா! ஓட்டல் கடைக்குப் போயி மிச்சத்தெ வெச்சிக்கிடலாம்!"ன்னாரு மகேந்திரன் வூடு கட்டி வெளையாண்டுக்கிட்டே இருந்தா வூட்டுக்கு எப்போ போறதுங்றாப்புல. அதுக்கு மேல பேச்ச வளத்த வுடக் கூடாதுன்னு சுப்பு வாத்தியாரு எல்லாரையும் அழைச்சிக்கிட்டுப் போயி ஓட்டல் ஆரியாஸ்ல மத்தியானச் சாப்பாட்ட பண்ணி வுட்டு அனுப்பி வெச்சாரு. அதுலேந்து எப்போ செய்யு ஆர்குடி வந்தாலும் வந்துப் பாத்துக்கிறதும், பஸ்ல வந்தா ரண்டாம் நம்பரு பஸ்ஸூ வர்ற வரைக்கும் நின்னு அழைச்சிட்டு வர்றதும், கோர்ட்டுல வேல முடிஞ்சா பஸ் ஸ்டாண்டு வரை வந்து பஸ்ஸேத்தி வுடுறதெயும் ஆர்குடியில இருக்குற கோவிந்தோட தாய்மண் முன்னேற்ற கழகத்தோட ஆளுங்கள்ல யாராச்சும் செஞ்சு வுட ஆரம்பிச்சாங்க. ஆர்குடிக்கு தனியா போயிட்டு வர்ற அளவுக்கு செய்யுவுக்கும் தைரியம் உண்டாவ ஆரம்பிச்சது. ஊர்ல இருந்தா சரியா படிக்க முடியலன்னும், ஊர்ல இருக்கப் பிடிக்கலன்னும் சொல்லிட்டு இருந்த அவளோட மனநெலை இப்போ ரொம்பவே மாறிடுச்சு. ஊர்லேந்துதாம் படிக்குறா. ஊர்லேந்துதாம் கோர்ட்டுக்குச் சமயத்துல அவளா தனியாவும் போயிட்டு வந்துப்புடுறா.

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...