தூக்கத்தை எப்படித் தொலைக்கிறோம்?
பாய்,
கட்டில், மெத்தை, தலையணையை வாங்கலாம். தூக்கத்தை வாங்க முடியாது. தூக்கம் அதுவாக வர
வேண்டும்.
தூக்க
மாத்திரைகள் மூலமாகத் தூக்கத்தை வாங்கலாம் என்றால் அது பக்க விளைவுகளுக்கு உட்பட்டது.
பிறகு ஒவ்வொரு தூக்கத்துக்கும் ஒரு மாத்திரை இரண்டாகி, இரண்டு நான்காகி விஸ்வரூபம்
எடுத்துக் கொண்டே இருக்கும்.
நல்ல
பொழுதைத் தூங்கிக் கழிக்கக் கூடாது என்று பட்டுக்கோட்டையார் பாட்டுக்கோட்டை கட்டி சொல்லியிருந்தாலும்,
தூங்க வேண்டிய பொழுதைத் தூங்காமல் கழிக்கக் கூடாது. அப்படியும் கழிப்பார்களா என்ன?
என்று நீங்கள் கேட்டால், இன்றைய மனிதர்கள் ராக்கோழிகளாக மாறிக் கொண்டிருக்கிறார்கள்
என்ற உண்மையை உங்களால் மறுக்க முடியாது.
தொலைக்காட்சி
இல்லாத காலங்களில் இரவு எட்டு மணிக்குள் உறங்கிப் பழகிய மனிதர்கள், தொலைக்காட்சி வந்த
பிறகு தூங்கப் போகும் நேரத்தை இரவு பத்திலிருந்து பனிரெண்டு வரை உயர்த்திக் கொண்டார்கள்.
இப்போது கையிலேயே ஓர் உலகமாக அலைபேசி வந்துவிட்ட பிறகு பின்னரவு இரண்டு, மூன்று மணி
வரை தூங்கப் போகும் நேரத்தை உயர்த்திக் கொள்பவர்கள் அதிகரித்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஒளிரும்
திரைகள் மனிதர்களின் உறக்கத்தை உறிஞ்சிக் கொண்டிருக்கிறது என்பது மிகையான ஒரு கூற்றில்லை.
திரைகள் இரவு முழுவதும் ஒளிர்ந்து கொண்டிருக்கின்றன அலைபேசியாக, தொலைக்காட்சியாக, கணினியாக,
ஓடிடியாக. மனிதர்களும் திரைகளின் அடிமைகளாய் இரவு முழுவதும் விழித்துக் கொண்டிருக்கிறார்கள்.
முறையாக
உறங்கினால் சரியான ஹார்மோன்கள் சுரக்கும். இல்லாவிட்டால் தவறான ஹார்மோன்கள் சுரக்கும்.
விளைவு நீங்கள் அளவாகச் சாப்பிட்டாலும் உங்களுக்குச் சர்க்கரை வியாதி வரலாம். திடீர்
மாரடைப்பு கூட நேரிடலாம். உடல் பருமன் ஏற்படலாம். இரத்த அழுத்தம் மாறுபடலாம். அடிக்கடி
ஞாபக மறதி உண்டாகலாம். எல்லாம் தூங்காமை படுத்தும் பாடு.
24 ×
7 சேவைகள் வழங்குவதாக பல வணிக நிறுவனங்கள் மார் தட்டிக் கொள்ளும் காலத்தில் மனிதர்களும்
24 × 7 இயந்திரங்களாக மாறிக் கொண்டிருக்கிறார்கள். எல்லாவற்றுக்கும் கையில் உள்ள அலைபேசியும்
எந்நேரமும் வரம்பற்ற முறையில் கிடைத்துக கொண்டிருக்கும் இணையமும் காரணமாக இருக்கின்றன
என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
இயல்பாக
மனிதர்களின் வேலைகள் தற்போது கணினிமயமாக ஆரம்பித்து விட்டதால், கணினியில் எட்டிலிருந்து
பனிரெண்டு மணி நேரம் வரை பணியாற்ற வேண்டிய சூழலில், வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக்,
யூடியூப் மற்றும் இன்னபிற பொழுதுபோக்கு சமூக ஊடகங்களில் நான்கிலிருந்து எட்டு மணி நேரம்
வரை தங்களை அமிழ்த்திக் கொள்ளும் நிலையில், வீட்டிற்கு வந்ததும் ஓடிடியில் நான்கிலிருந்து
ஆறு மணி நேரம் வரை ஒளிந்து கொள்ளும் வாழ்க்கையில் மனிதர்கள் 24 × 7 ஒளிரும் திரைகளின்
அடிமைகளாய் மாறிக் கொண்டிருக்கிறார்கள்.
இப்போது
உங்களுக்குப் புரிந்திருக்கும், மனிதர்கள் எங்கே உறக்கத்தைத் தொலைக்கிறார்கள் என்றால்
அங்கேதான். கையடக்கமாக, பையடக்கமாக, சுவரடக்கமாக இருக்கும் ஒளிரும் திரைகளில் தூக்கத்தை
மட்டுமல்லாது தங்களையே இழந்து கொண்டிருக்கிறார்கள். இதில் தற்போது செயற்கை நுண்ணறிவு
சாட்பாட்டுகள் வேறு வந்து சேர்ந்து விட்டன.
உண்மையைச்
சொல்வதென்றால் மனிதர்களுக்கு உறங்க நேரமில்லை. அவர்களின் நேரம் முழுவதும் ஒளிரும் திரைகளால்
ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.
உறக்கம்
தொலைத்த மனிதர்களுக்கு சுரக்க வேண்டிய ஹார்மோன்கள் சுரப்பதில்லை. சுரக்கக் கூடாத ஹார்மோன்கள்
சுரக்கின்றன. மெலடோனின், என்டார்பின் போன்றவை சுரக்க வேண்டியவை. கார்டிசோல், அட்ரினலின்
(எபினெஃப்ரின்) மற்றும் நாரெபினெஃப்ரின் போன்றவை சுரக்கக் கூடாதவை. எப்போதோ ஆபத்தான
நெருக்கடியான சூழலில் இவை சுரக்கலாம். எப்போதும் சுரக்கக் கூடாது. ஒளிரும் திரைகளில்
தூக்கத்தைத் தொலைக்கும் மனிதர்களுக்கு இவை எப்போதும் சுரக்கின்றன. விளைவு புற்றுநோய்
வரை வருவதற்கு மனிதர்களின் தூக்கமின்மையும் ஒரு காரணமாக அமைகிறது.
‘விடாது
கருப்பு’ போலப் பின்தொடரும் ஒளிர்திரைகளைக் கொஞ்சம் ஒதுக்கி வைக்காமல் மனிதர்களால்
இனி உறங்க முடியாது. மௌன விரதம், உண்ணா விரதம் இருப்பது போல அலைபேசி விரதம், வாட்ஸ்ஆப்
விரதம், பேஸ்புக் விரதம், இன்ஸ்டா விரதம், யூடியூப் விரதம், சாட்பாட் விரதம், இணைய
விரதம் என்று கூட இனி வாரத்தில் ஒரு நாள் அல்லது இரு நாள் இருக்கலாம்.
கருவிகளை
நீங்கள் பயன்படுத்தும் மனக்கட்டுபாடு இருந்தால் உங்களுக்கு இது போன்ற விரதங்கள் தேவையில்லை.
கருவிகள் உங்களைப் பயன்படுத்தும் வகையில் மனக்கட்டுபாடு இல்லாதவராக இருந்தால் உங்களுக்கு
இந்த விரதங்களை விட்டால் வேறு பக்கவிளைவற்ற வழிகள் இல்லை.
தூக்கத்தை
மருந்துகளில் தேடுவதை விட, இது போன்ற விரதங்களால் தேடுவது உடலுக்கும் நல்லது மனதுக்கும்
நல்லது, மனிதச் சமூகத்துக்கும் நல்லது.
இரவு
– பகல் என வேறுபாடு தெரியாமல் திரியும் உறங்கா மனிதர்களின் விழிகளைத் தூக்கம் தழுவட்டும்.
மனிதகுலம் நோயற்ற வாழ்வான குறைவற்ற செல்வத்தைக் குவிக்கட்டும்.
*****

No comments:
Post a Comment