6 Dec 2025

இருமல் மருந்து எப்படிக் கொல்லும்?

இருமல் மருந்து எப்படிக் கொல்லும்?

நோய்கள் கொல்வதை விட நோய்களுக்கான மருந்துகள் கொல்வது அதிகம்.

இருமல் மனிதரைக் கொல்லாது. ஆனால் இருமல் மருந்து கொல்லக் கூடும்.

ஏன் இருமல் மருந்து கொல்கிறது?

இருமல் மருந்தில் கலக்கப்படும் ‘டை எத்திலின் கிளைக்கால்’ அதற்குக் காரணம். இதை இருமல் மருந்தில் கலக்கக் கூடாதா என்றால் 0.1 சதவீதம் கலக்கலாம். ஆனால் இந்தியாவில் தயாராகும் சில இருமல் மருந்துகளில் இதை 40 முதல் 50 சதவீதம் வலை கலக்கிறார்கள்.

அப்படிக் கலந்தால் என்னவாகும் தெரியுமா?

சிறுநீரகம் செயலிழக்கும். அடுத்துக் கல்லீரல் பாதிக்கப்டும். அடுத்து மூளையைப் பாதித்து மரணத்தை நோக்கி அழைத்துச் சென்று விடும்.

இப்போது உங்களுக்கு ஒரு கேள்வி எழலாம், அவ்வளவு மோசமானதா இந்த ‘டை எத்திலின் கிளைக்கால்’?

நிச்சயமாக. இதை பெயிண்டுகள், சாயங்கள், பிளாஸ்டிக் தயாரிப்புகளில் கொழ கொழப்பு தன்மையை உருவாக்குவதற்காகப் பயன்படுத்துகிறார்கள். அதைப் போய் மனிதர்கள் பருகும் மருந்துகளில் கலந்தால் என்னாவாது? அதுவும் 40 சதவீதம் 50 சதவீதம் என்றால்…

அப்படியானால் இருமல் மருந்தே சாப்பிடக் கூடாதா?

இரண்டு வயது வரையுள்ள குழந்தைகளுக்கு இருமல் மருந்துகள் கூடாது என்பது இந்திய மருத்துவ கவுன்சிலின் அறிவுரை. அமெரிக்காவில் இது பத்து வயது வரை. பொதுவாக ஐந்து வரையுள்ள குழந்தைகளுக்கு இருமல் மருந்து தேவையில்லை என்பது மருத்துவர்களுக்கு வழங்கப்படும் பரிந்துரை. இவை அனைத்துமே இந்தியாவில் மீறப்படுகின்றன.

இதில் மேலும் சில விடயங்களும் இருக்கின்றன.

பெரியவர்களுக்கான இருமல் மருந்து பெரியவர்களுக்கானவை. குழந்தைகளுக்கானது குழந்தைகளுக்கானவை. இதிலும் ஒரு தவறு நடக்கும். பெரியவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட இருமல் மருந்து நிவாரணம் தந்தால், குழந்தைகளுக்குக் கொடுக்கும் பழக்கம் பலரிடம் உண்டு. இது ஆபத்தானது.

அடுத்து இதில் இன்னொரு முக்கிய விடயம் என்றால், ஒரு முறை பயன்படுத்தி விட்ட குறை தொட்ட குறையாக இருக்கும் இருமல் மருந்தை, மிச்சம் மீதி இருக்கிறது என்பதற்காக ஒரு மாதம் கழித்தோ, சில மாதங்கள் கழித்தோ மீண்டும் பயன்படுத்துவது. இருமல் மருந்து புட்டியைத் திறந்து பயன்படுத்த ஆரம்பித்தால் சில நாட்களுக்குப் பின் அதிலுள்ள வேதிப்பொருட்களின் குணம் மாறத் துவங்கி விடும். அதனால் மிச்சம் மீதி இருப்பதை, காலாவதி ஆகவில்லை என்பதற்காகச் சில பல மாதங்கள் கழித்து பயன்படுத்துவது ஆபத்தானது.

மேலும் ஒரு விடயமும் இருக்கிறது. மருந்துகளில் அளவு முக்கியம். அதிலும் இருமல் மருந்தில் அளவு அதி முக்கியம். அதிகமாகக் குடித்தால் இருமல் உடனே குணமாகும் என நினைக்கக் கூடாது. அதிகமாகக் குடித்தால் விரைவாகப் பரலோகமும் போக ஏதுவாகும்.

இருமல் மருந்தை ஏன் நாம் இவ்வளவு தீவிரமான பிரச்சனையாகப் பார்க்க வேண்டியிருக்கிறது என்பதற்குப் பின்னால் ஒரு வரலாறே இருக்கிறது.

1937 இல் அமெரிக்காவில் இது போன்ற கலப்படம் கலந்த இருமல் மருந்துகளால் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்தார்கள். அமெரிக்கா விழித்துக் கொண்டது. அங்கு மருந்துக் கட்டுப்பாட்டு முறைகளும், பரிசோதனைகளும் தீவிரமாக்கப்பட்டன. விளைவு அங்கு அதன் பிறகு இருமல் மருந்தால் எவ்வித மரணங்களும் ஏற்படவில்லை.

1990 இல் இந்தியாவில் இருமல் மருந்தால் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்தார்கள். இந்தியா விழித்துக் கொள்ளவில்லை அல்லது விழித்துக் கொள்ள விரும்பவில்லை. 2019 இல் மீண்டும் நூற்றுக்கணக்கான குழந்தைகள் இருமல் மருந்தால் இறந்தார்கள். அப்போதும்   இந்தியா விழித்துக் கொள்ளவில்லை அல்லது விழித்துக் கொள்ள விரும்பவில்லை. 2020 இல் மீண்டும் இதே நிகழ்ந்தது. அப்போதும் இந்தியா விழித்துக் கொள்ளவில்லை அல்லது விழித்துக் கொள்ள விரும்பவில்லை. அண்மையிலும் ‘கோல்ட்டிரிப்’ இருமல் மருந்தால் இது நிகழ்ந்தது. இப்போதும் இந்தியா விழித்துக் கொள்ளவில்லை அல்லது விழித்துக் கொள்ள விரும்பவில்லை. இந்தியாவில் மட்டுமல்லாது இந்தியாவிலிருந்து தயாராகும் இருமல் மருந்துகளால் பல நாடுகளில் உள்ள குழந்தைகள் நூற்றுக்கணக்கில் பலியாகியிருக்கிறார்கள்.

விலை மலிவாகக் கிடைக்கிறது என்பதற்காக ‘டை எத்திலின் கிளைக்காலை’ கலந்து உயிருடன் விளையாடுகின்றன சில மருந்து நிறுவனங்களின் இருமல் மருந்துகள். டை எத்திலின் கிளைக்காலுக்கு மாற்றாக இருமல் மருந்தில் பயன்படுத்தப்பட வேண்டியது கிளிசரின் அல்லது புரோபிலின் கிளைக்கால். அது விலை கூடுதல் என்பதால் சில மருந்து நிறுவனங்கள் அதை இருமல் மருந்தில் சேர்ப்பதில்லை. விளைவு குழந்தைகளின் மரணங்கள்.

முடிவாக சொல்ல வருவது என்னவென்றால், இருமலால் யாரும் இறந்து விட மாட்டார்கள். இருமல் மருந்துகளால் இறந்து போக வாய்ப்பிருக்கிறது. இதை வேறு வழிகளில் தடுக்க முடியாதா என்றால், இருமல் மருந்துகளை உறிஞ்சு முறையில் (இன்கேலர்கள்) எடுத்துக் கொள்வது நல்லது என்கிறார்கள்.

ஏனிந்த பிரச்சனை? இதை விடவும் உத்தமான முறை இருக்கிறது. சுக்கும், மிளகும், சித்தரத்தையும் இருக்க இருமலுக்காக இருமல் மருந்தைக் குடித்து உயிரிழப்பானேன்?

*****

No comments:

Post a Comment