5 Dec 2025

புதிய வருகையாளர்கள்

புதிய வருகையாளர்கள்

எதாவது புதிய செய்தி வருமா என்று பார்க்கிறேன்

எதுவும் எனக்கென வரவில்லை

பார்வேர்டு செய்யப்படும் வாட்ஸ்ஆப் செய்திகள் வருவதும் நின்று விட்டது

எதாவது எனக்கு வந்தாக வேண்டும் என்று

ஸிவிக்கியில் அமேசனில் ஆர்டர் போடுகிறேன்

சில மணி நேரங்களில் வாசல் கதவைத் தட்டுகிறது ஸ்விக்கி

இரண்டு நாட்களில் அமேசான் வீடு தேடி வருகிறது

தனிமையில் தவிக்கும் மனதுக்குத் துணைக்கு

ஆள் சேர்க்க வேண்டும் என்ற தவிப்பில்

சுற்றும் முற்றும் பார்க்கிறேன்

தானாக வந்து அமரும் குருவி

கதவைத் தள்ளி வரும் காற்று

இலையை உதிர்த்து தீண்டிப் போகும் மரம்

கீரை வேண்டுமா என்று கேட்டு வரும் பாட்டி

பஞ்சு மிட்டாய் விற்க வரும் இளைஞன்

பழைய இரும்பு பேப்பர் கேட்டு வரும் வியாபாரி

கேஸ் சிலிண்டர் போட வரும் வண்டி

எல்லாரையும் சிநேகமாக்கிக் கொண்ட பிறகு

ஒரு நாள் கோதுமை நிறப் பாம்பொன்று

எட்டிப் பார்த்து விட்டு விலகிச் செல்கிறது

*****

No comments:

Post a Comment