4 Dec 2025

திரி சுந்தர கதை

திரி சுந்தர கதை

திரி ரத்னம் என்றால் மூன்று ரத்னங்கள். திரிகடுகம் என்றால் சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய மூன்று பொருட்களால் ஆன மருந்து. திரி சுந்தர கதை என்றால் மூன்று சுந்தரங்களின் கதை. கதையென்றால் பெருங்கதையும் அல்ல, இரண்டு மூன்று பக்கங்களுக்கு இழுக்கும் சிறுகதையும் அல்ல. மூன்று குறுங்கதைகள்.

முதல் கதைக்கு வருவோம்.

கல்யாணசுந்தரத்துக்கு எங்கள் ஊரில் பெயர் கடன் சுந்தரம். இந்நேரம் அவரளவுக்கு எங்கள் ஊரில் கடன் வாங்கியவர் அவராகத்தான் இருக்கும் என்பது உங்களுக்குப் புரிந்திருக்கும். கடனை வாங்கிக் குவிப்பதில் கில்லாடியான கல்யாணசுந்தரம் கடன் கொடுத்தவர்களின் கண்களுக்குத் தெரியாத ஹாலோ மனிதராக வாழ்வதிலும் வல்லவர்.

கடன் கொடுத்தவர்கள் கல்யாண சுந்தரத்தை வீட்டிலும் பிடிக்க முடியாது, அவர் வெளிநாட்டுக்கு ஓடிப் போனாலும் அங்கும் பிடிக்க முடியாது. யார் யாருக்கு எப்படி எப்படி டேக்கா கொடுக்க வேண்டும் என்பதெல்லாம் அவருக்கு அத்துபடி.

இப்படிக் கடனை வாங்கி டகால்ட்டி காட்டிக் கொண்டிருந்த கல்யாணசுந்தரத்துக்கு அவர் வாங்கி வைத்துக் கொண்ட செல்போனாலே வந்தது வினை. கல்யாணசுந்தரத்தை நேரில் பிடிக்க முடியாத கடன் கொடுத்தவர்கள் செல்போனில் பிடித்து கண்ட வாவில் பிடிபிடியெனப் பிடித்துக் கொண்டிருந்தனர்.

கடன் வாங்கியவர்கள் கண்ணில் மண்ணைத் தூவி விட்டுத் தலைமறைவாக இருப்பதில் சாமர்த்தியம் மிகுந்த கல்யாணசுந்தரம் அண்ணனுக்கு ஒரு விநோதமான பழக்கமும் இருந்தது. செல்போன் அழைப்புகளைத் துண்டிக்கவும் செய்யாது. செல்போனை அணைத்துப் போடவோ போடாது.

“பேசுறதுக்குத்தானே மக்கா செல்போனு!” என்று அதற்குக் காரணம் சொல்லும்.

இப்படியாக யாருக்கும் நேரில் சிக்காத கல்யாணசுந்தரம் செல்போனில் சிக்கிச் சின்னபின்னமாகி “என்னடா மாப்ளே! நம்ம பொழைப்பு இப்படிப் போவுது? இந்தக் கருமத்தெ விடவும் மனசில்ல, வெச்சிருக்கவும் மனசில்ல. கம்பெனிகாரனா பார்த்து லாக் பண்ணத்தான்டா கருமத்தெ நான் பொழைப்பேன்!” என்று பார்க்கின்ற இளவெட்டுகளிடம் புலம்ப ஆரம்பித்து விட்டது.

அப்போதுதான் ரிசர்வ் பேங்க் கடன் கட்டாதவர்களின் செல்போன்களை லாக் செய்ய பரிசீலித்துக் கொண்டிருப்பதாக ஒரு செய்தி வந்தது. கல்யாண சுந்தரம் அண்ணனுக்கு அவ்வளவு சந்தோசம். “ரிசர்வ் பேங்க மட்டும் அப்படி பண்ணிட்டுன்னா நான் கடன்காரங்ககிட்டேயிருந்து தப்பிச்சிடுவேன்டா மக்கா!” என்று சொல்லிக் கொண்டே துள்ளிக் குதித்த ஆரம்பித்து விட்டது.

ரிசர்வ் பேங்க என்ன நோக்கத்தில் அப்படி பரிசீலனையைச் செய்ததோ, அது அண்ணனக்குச் சாதகமாகப் போவதாக அது நினைத்துக் கொண்டது.

ஒரு சுந்தர கதை முடிந்ததா? இரண்டாவதற்கு வருவோம்.

சோமசுந்தரம் அண்ணன் இயல்பிலேயே கொஞ்சம் பருமனான உடல் வாகு. சின்ன பிள்ளையிலிருந்தே அப்படித்தான். அப்படியே குண்டான அமுல் பேபி கணக்காக வளர்ந்து, இப்போதும் மீசை வெச்ச பேபி கணக்காகத்தான கொழுகொழுவெனப் பார்க்கும் போது கன்னத்தைப் பிடித்துக் கிள்ள வேண்டும் போலத் தோன்றம்.

நாற்பது வயது வரைக்கும் அமுல் பேபியாக வாழ்ந்து விட்ட சோமசுந்தரம் அண்ணனுக்கு சமீபத்தில் மணமகனாக மேடையேறி கல்யாண மேடையிலேயே மாரிமுத்து அண்ணன் மாரடைப்பில் போய் சேர்ந்தது பீதியைக் கிளப்பி விட, தினம் சூரியன் உதிப்பதற்கு முன்பாக அதிகாலையிலேயே நடைபயிற்சி செய்வது என்று முடிவு செய்துவிட்டது.

துணைக்கு யார் யாரையோ கூப்பிட்டுப் பார்த்தது. இருட்டு நேரத்துல இழுத்துப் படுத்துக்கிட்டுத் தூங்குறதப் பார்க்குறதா, தூக்கத்துல நடக்குறாப்புல நடந்து போய்ட்டு இருக்கிறதா என யோசித்த பலரும் சோமசுந்தர அண்ணனைத் தனியாக நடைபயிற்சிக்குப் போகும் படி செய்து விட்டார்கள்.

அண்ணன் இருக்கின்ற உடல் வாகுக்குச் சாதாரணமாக நடக்கும் போதெ புஸ்புஸ் என்று மூச்சு வாங்கும். அது முதல்நாள் டிரக் சூட், சகிதம் நடை பயிற்சிக்குப் போய், உசேன் போல்ட் கணக்காக நாலு தெருவுக்கு அது மூச்சு விடும் சத்தம் கேட்கும் அளவுக்கு ஓடிக் கொண்டிருந்தது. “என்னண்ணே வாக்கிங் போறததானே சொன்னீக. ரன்னிங் போறதுன்னு எப்ப மாத்துனீயே?” என்று நான் கேட்க, “அட போடாங் கொய்யாலே! ஊரு நாய்க ஒண்ணு விடாம துரத்துதுடா. எங்கே கடிச்சிக் கிடிச்சு வெச்சுப் போடுமோன்னு பயந்துட்டு ஓடியாறேன்டா! இந்த வேகத்துல ஓடுனா நாலே நாள்ல ஓமகுச்சி நரசிம்மன் ரேஞ்சுக்கு வந்துடுவேன்டா!” என்றது.

இப்படி வாக்கிங் போவதாக முடிவெடுத்து, நாய்களின் துரத்தலால் ரன்னிங் போகிற கதையாக ஆனது சோமசுந்தரம் அண்ணனின் கதை.அது மனதுக்குள் நாய்க்கு நன்றி சொல்லியிருக்குமா? திட்டித் தீர்த்திருக்குமா? இன்னொரு நாள் பார்க்கும் போது அதைக் கேட்க வேண்டும்.

இரண்டு சுந்தரக் கதைகள் முடிந்தனவா? மூன்றாவதற்கு வந்து விடுவோம்.

குடிகாரன் என்றாலும் ஞானசுந்தரம் அண்ணன் ஒரு ஞானிதான். பெயரிலேயே ஞானம் இருக்கிறதில்லையா! ஒருமுறை குடித்து விட்டு அலப்பறை பண்ண போதுதான் பெரிசுகளுக்கு அதற்கும் நடந்த சம்பாஷனையில் அது மகத்தான ஞான வாக்கைச் சொன்னது.

“ஏன்டா இப்படி குடிச்சே சாவுறே?” என்று ஊரில் ரெண்டு பெரிசுகள் கேட்கப் போக, “நீங்க மட்டும் என்னா ஒழுங்கா?” என்று கேட்டது ஞானசுந்தரம்.

“நாங்க என்ன ஒன்னய மாதிரிக்கி குடிச்சிப்புட்டுச் சலம்பித் திரியுறோமா?” என்றன பெரிசுகள்.

“ஓட்டுக்குத் துட்ட வாங்கிட்டுப் போடுறீங்களே?” என்றது ஞானசுந்தரம்.

“எதுக்கு எதெடா முடிச்சுப் போடுறே?” என்றன பெரிசுகள்.

“பெறவு எப்படிச் சாராயக் கடையெ மூடுவானுவோ? நான் எப்படிக் குடிக்கிறதெ நிப்பாட்டுறது?” என்றது ஞானசுந்தரம்.

“குடிச்சு புத்தி பேதலிச்சுப் போச்சாடா ஒனக்கு?” என்றன பெரிசுகள்.

“அதெல்லாம் பேதலிக்கல. எவ்வளவு குடிச்சாலும் புத்தியில கத்தி மாதிரி நானு. எப்படி சாராயக் கடைய மூடுவானுவோ? சாராய ஆலையெ வெச்சிருக்கவனுவோத்தான் தேர்தல்லயே நிக்குறானுவோ! அவனுவோத்தான் காசெ கொடுத்து ஒங்களயெல்லாம் ஓட்டப் போட வைக்குறானுவோ. நீங்களும் வாங்குறதெ வாங்கிட்டுப் போடுறீங்க. உங்ககிட்டெ கொடுத்த காசெல்லாம் அவன் சாராய கடையில சம்பாதிச்சதுதான். பெறவு அடுத்த மொறை ஓட்டு போடுறப்ப கொடுக்கணும்ல. அவனுவோ சாராயக் கடையெ தொறந்து வெச்சாத்தான் சம்பாதிக்க முடியும். சாராயக் கடையெ தொறந்து வெச்சா என்னால எப்படிக் குடிக்காம இருக்க முடியும்? நம்ம ஊர்ல ஒரு கடையெ தொறந்து வெச்சு, அதுல யாரும் சரக்க வாங்கலேன்னா அது யாருக்கு அவமானம்? நம்ம ஊருக்குத்தானே. அதாங் நான் போய் சரக்கெ வாங்கி ஏத்திக்கிறேன். நான் ஏத்திக்க ஏத்திக்கத்தான் ஓட்டுக்கு ஐநூறு கொடுத்தது இப்போது ஆயிரமா ஏறிக் கெடக்குப் பார்த்துக்கோ! இனுமே என்னெ குடிக்குறேன்னு மட்டும் தட்டுனேன்னு வெச்சுக்கோ, அவ்வேங்கிட்ட சொல்லி ஓட்டுக்குக் கொடுக்குற ஆயிரத்தெ ஐநூறா கொறைச்சுப்பிடுவேன் பார்த்துக்கோ!”

ஞானசுந்தரம் அண்ணன் இடுப்பில் கட்டியிருந்த வேட்டியை அவிழ்த்து தலையில் முண்டாசு கட்டிக் கொண்டு பட்டாப்பட்டி டிராயரோடு நடந்து செல்லும் ஞானியைப் போல தெருவை இட வலமாக அளந்து கொண்டு போய்க் கொண்டிருந்தது.

எனக்கென்னவோ குடிகாரன் பேச்சென்று ஞானசுந்தரம் அண்ணனின் பேச்சைத் தள்ளி விட முடியாது என்று தோன்றியது. உங்களுக்கு?!

*****

No comments:

Post a Comment