27 Sept 2025

தவறாமல் எழுதப்படும் தீர்ப்புகள்!

தவறாமல் எழுதப்படும் தீர்ப்புகள்!

சுயநலம் பலரை இயங்க வைக்கிறது

பொதுநலம் சிலரைத்தான் இயங்க வைக்கிறது

பலருக்காக இயங்கும் சிலர்

நாட்காட்டிகளில் நினைவு வைத்து போற்றப்படுகிறார்கள்

சிலருக்காக இயங்கும் பலர்

நாட்காட்டியின் தாள்கள் போல ஆகிறார்கள்

நெருக்கடி மனிதர்களைத் துரிதப்படுத்துகிறது

ஆகாதவற்றை ஆகும்படி செய்ய உந்துகிறது

நிதானம் துரிதப்படும் மனிதர்களே

ஆகாதவற்றைத் தவிர்க்கிறார்கள்

ஆகும்படியானதை ஆகாவெனச் செய்கிறார்கள்

சுயநலமும் நெருக்கடியும் கை கோர்க்கும் போது

மனிதர்கள் உணர்ச்சிமயமாகிறார்கள்

நிதானம் பொடி பொடியாக உடையும் பொழுதுகளில்

கொலை கூட நிகழ்கிறது

நிதானம் திரும்பும் போது

மனிதர்கள் தண்டனைக் கைதியாகிறார்கள்

நேர்மை நியாயம் மனோதர்மம்

தப்பித் தப்பிப் பிழைக்கும்

தீர்ப்புகள் மட்டும் தப்பாமல்

எழுதப்பட்டுக் கொண்டே இருக்கும்

*****

No comments:

Post a Comment