22 Apr 2024

மருத்துவர்களா? பொறியாளர்களா? அவர்கள் குழந்தைகளா?

மருத்துவர்களா? பொறியாளர்களா? அவர்கள் குழந்தைகளா?

போகிறப் போக்கைப் பார்த்தால் பிள்ளைகள் மருத்துவம், பொறியியல் தவிர வேறு எதற்கும் படிக்க மாட்டார்கள் போலும்.

அது முடியாமல் தங்கள் முடிவுகளை மாற்றிக் கொண்ட பிள்ளைகள்தான் ஆசிரியர்களாகவும், எழுத்தர்களாகவும், கணக்காளர்களாகவும், மின் பணியாளர்களாகவும், வீட்டுப் பராமரிப்புப் பணியாளர்களாகவும் நமக்குக் கிடைத்திருக்கிறார்கள் போலும்.

இந்தச் சமூகத்தில் ஒரு குழந்தையானது குழந்தையாக வளர்வது அபூர்வம்தான். குழந்தைகள் பெரும்பாலும் மருத்துவர்களாகவோ, பொறியாளர்களாகவோத்தான் வளர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

பள்ளிக் கூடத்தில் சேர்ப்பது எதற்காக? அறிவையும் மனிதத் தன்மையையும் வளர்த்துக் கொள்வதற்குத்தான் இல்லையா? இதைப் பற்றி நாம் ஏன் பேச மாட்டோம் என்கிறோம்? மருத்துவர் ஆவதையும் பொறியாளர் ஆவதைப் பற்றியும்தான் நாம் பேசுகிறோம். நம் நினைப்பே எப்போதும் அப்படியாக மாறி விட்டது.

பிள்ளைகளை ஏன் நாம் அப்படி மாற்ற நினைக்கிறோம்? மருத்துவராகி அந்தத் துறையை மேம்படுத்தவா? மக்களுக்குச் சேவை செய்யவா? அல்லது பொறியாளராகி மக்களின் பிரச்சனைகளையெல்லாம் தீர்க்கவா? தொழில்நுட்பங்களை மேம்படுத்தவா? இந்த இரண்டில் ஒன்றாகி விட்டால் எப்படியும் வாழ்க்கையை ஓட்டுவதற்கான, வாழ்க்கையை வசதிப்படுத்திக் கொள்வதற்கான பணத்தைச் சம்பாதித்து விடலாம் என்ற எதிர்பார்ப்பில்தானே! குழந்தைகளை மருத்துவராக்கவும் பொறியாளராக்கவும் செய்யும் முயற்சிகள் எல்லாம் பணத்திற்காகப் பணயம் வைப்பதற்காகத்தானே!

மனித வாழ்க்கையைப் பணம் அவ்வளவு பயமுறுத்தி வைக்கிறது. பணம் இல்லாமல் எப்படி வாழ்வது? பணத்தை வைத்திருப்பவர்கள் மட்டும் நன்றாக வாழ்க்கிறார்களா என்ன? பணமில்லாமல் வாழ முடியாது என்பது போல வாழ்க்கையில் பணத்திற்கான இடம் என்ன என்பதைப் புரிந்து கொள்ளாமல் நிம்மதியாகவும் மன அமைதியாகவும் வாழ்ந்து விட முடியாது. இந்த உண்மையைப் புரிந்து கொள்ளாவிட்டால் பணத்திற்காக நிம்மதியையும் மன அமைதியையும் தொலைத்த மருத்துவர்களையும் பொறியாளர்களையும்தான் பெற்றோர்கள் உருவாக்க வேண்டியிருக்கும். அதற்காகப் பெற்றோர்கள் தாங்களும் கஷ்டப்பட்டு, தங்கள் பிள்ளைகளையும் கஷ்டப்படுத்தி ஒரு கஷ்ட காலத்தை உருவாக்கி அதையே தொடர்ந்து கொண்டிருக்க வேண்டியிருக்கும். இதைப் புரிந்து கொள்ளாமல் போனால் கஷ்ட காலத்தின் மாறாத சுழற்சி மீண்டும் மீண்டும் தொடரவே செய்யும்.

குழந்தைகளை நாம் குழந்தைகளாகவே பார்க்க வேண்டும். அவர்களை மருத்துவர்களாகவோ, பொறியாளர்களாகவோ பார்க்கக் கூடாது. அவர்கள் தங்கள் ஆர்வம் மற்றும் விருப்பத்தின் காரணமாக அவர்கள் மருத்துவராகலாம், பொறியாளராகலாம். ஆனால் பெற்றோர்களின் ஆர்வம் மற்றும் விருப்பத்தின் காரணமாக அப்படி ஆகி விடக் கூடாது. ஏனென்றால் அப்படி ஆகுபவர்கள் அந்தத் துறையின் மேல் உண்மையான ஆர்வமோ அர்ப்பணிப்போ உடையவர்களாக இருப்பார்கள் என்று சொல்லி விட முடியாது.

ஒரு குழந்தையிடம் நீ மருத்துவர் அல்லது நீ பொறியாளர் என்று சொல்லி வளர்ப்பது கூட ஒரு வகை வன்முறைதான். பிற்காலத்தில் அப்படி ஆக முடியாத குழந்தைகள் அதன் காரணமாகப் பெருத்த மன உளைச்சலை அடையவும் வாய்ப்பிருக்கிறது. அப்படி ஆக முடியாததை ஏற்றுக் கொள்ள முடியாமல் தன்னுயிரை நீத்துக் கொள்ளவும் வாய்ப்பிருக்கிறது.

பெற்றோர்கள் அது பற்றி அவர்களிடம் பேசவே கூடாதா என்றால் பேசலாம், வழிகாட்டலாம். வழிகளை அவர்களின் விருப்பதின் பேரிலும் ஆர்வத்தின் பேரிலும் அவர்களே தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். அதற்கான சுதந்திரத்தையும் அவர்களின் ஆர்வத்தையும் விருப்பத்தையும் மதித்து நேசிக்கிறோம் என்ற உணர்வையும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்குத் தர வேண்டும்.

இப்படிப்பட்ட நினைப்பில்தான் நான் பலரிடம் பேசுகிறேன், பழகுகிறேன். இந்தக் கருத்துகளைப் பலரிடம் எடுத்தும் சொல்கிறேன். இதே நினைப்பில் நான் எல்லாரையும் மனிதராக மட்டும் பார்க்கிறேன். அவர்கள் என்னவாக இருக்கிறார்கள் என்பதைக் கூட சில நேரங்களில் மறந்து விடுகிறேன். இது எனக்கு அண்மையில் ஏற்படுத்திய அனுபவம் ஒன்றை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

சமீபத்தில் நண்பர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்த போது வழக்கமான பல விசயங்களைப் பேசி விட்டு முடிவில், இப்போ எங்கப்பா இருக்கே என்றேன். மருத்துவமனையில் இருப்பதாகச் சொன்னார் அந்த நண்பர். சட்டென்று என்னையும் அறியாமல் உடம்புக்கு என்னப்பா என்று கேட்டு விட்டேன். ஒரு மருத்துவர் மருத்துவமனையில்தானே இருக்க முடியும் என்று அவர் சொன்ன போதுதான் அவர் மருத்துவர் என்ற விசயமே எனக்கு உறைத்தது. இப்படியும் சில நேரங்களில் நிகழ்ந்து விடுகிறது.

*****

No comments:

Post a Comment

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை!

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை! ஔவைக்கு நூலறிவு மட்டும் கிடையாது. அவரது பட்டறிவுக்கு எல்லையே கிடையாது. ஒரு பெண்ணாகச் சுதந்த...