18 Apr 2024

ஓ! என் சிறுதானியமே! ஒரு பச்சைத் தமிழனின் தினசரிச் சாப்பாடு! ரசாயனத்தில் தொடங்கி… ரசாயனத்தில் தொடர்ந்து… ரசாயனத்தில் முடிந்து…

ஓ! என் சிறுதானியமே!

இப்போது சிறுதானியம் கவர்ச்சிகரமாகி விட்டது. திரையில் கட்டாயம் இடம்பெறும் குத்துப்பாடலைப் போல உணவிலும் அது கவர்ச்சிகர கட்டாயமாகி விட்டது. எங்கு பார்த்தாலும் சிறுதானியம் என்று வாமன வடிவில் இருந்த அது விஸ்வரூப வடிவம் எடுத்து விட்டது. மக்களும் சிறுதானிய ரொட்டி, சிறுதானிய கஞ்சி, சிறுதானிய தோசை, சிறுதானிய இட்டிலி, சிறுதானிய சோறு என்று எதற்கும் குறை வைக்காமல் பஜ்ஜி, சொச்சி, வடை, போண்டா வரை எல்லாவற்றிலும் சிறுதானியத்திற்கு முன்னேறி விட்டார்கள்.

சிறுதானிய உணவு மற்றும் பலகாரங்களில் இருப்பதெல்லாம் சிறுதானியம்தானா என்ற சந்தேகம் எனக்குப் பல நாட்களாகவே உண்டு. ஏனென்றால் அவற்றின் சுவை அரிசி, கோதுமையில் செய்யப்படும் பண்டங்களின் சுவையாகத்தான் எனக்குத் தோன்றுகிறது. எனக்கு மட்டும்தான் இப்படியா? மற்றவர்களுக்கும் இப்படியா என்றால் மற்றவர்களும் பெரும்பான்மையாக இதே கருத்தைத்தான் சொல்கிறார்கள்.

இதற்கு மேல் எப்படிச் சும்மா இருக்க முடியும் என்று சிறுதானிய உணவு மற்றும் பலகாரங்களைத் தயாரிப்பவர்களை ஓரம் கட்டி விசாரித்தால், முழுக்க முழுக்க சிறுதானியத்திலேயே செய்தால் யார் சாப்பிடுவார்கள் என்று எதிர்கேள்வி கேட்கிறார்கள். அப்படியானால் அந்த உணவுகளையும் பலகாரங்களையும் எதில்தான் தயாரிக்கிறார்கள் என்றால் அரிசி, கோதுமையில்தான் தயாரிக்கிறார்களாம். இருந்தாலும்சிறுதானிய என்ற பெயரைப் போட்டுக் கொள்வதற்காகப் பேருக்குக் கொஞ்சம் அதில் சிறுதானியத்தைக் கலந்து கொள்வார்களாம். வாக்கும் நேர்மையும் தவறக்கூடாது பாருங்கள் அதற்காக இப்படி.

இதை எப்படிச் சொல்வது? சிறுதானியத்தில் நடக்கும் பெருதானிய கலப்படம் என்றா? அல்லது பெருதானிய உணவில் நடக்கும் சிறுதானிய கலப்படம் என்றா?

தற்போது அரிசி, கோதுமைச் சுவையே பிடிக்காதவர்கள் சிறுதானிய உணவையும் பலகாரங்களையும் விரும்பிச் சாப்பிடுகிறார்கள் என்றால் சிறுதானியங்களையும் தாண்டி சுவையான பல பொருட்கள் சேர்க்கப்பட்டால்தான் அவர்களால் சாப்பிட முடியும் என்பது நியாயமான கருதுகோளாகத்தானே இருக்க முடியும்.

நீங்கள் சிறுதானிய உணவைச் சாப்பிட விரும்பினால் நீங்களே சிறுதானியங்களை வாங்கி அதை அரைத்துக் கரைத்து எதையாவது செய்து தின்றால்தான் உண்டு. வியாபாரக் கலப்படங்களை நம்பிப் பலனில்லை.

*****

ஒரு பச்சைத் தமிழனின் தினசரிச் சாப்பாடு

உங்களுடைய சாப்பாட்டு ரகசியம் (டயட் சீக்ரெட்) என்னவென்று கேட்கிறார்கள்?

நானென்ன திரை நடிகனா? அல்லது திரை நடிகையா? என்றும் மார்க்கண்டேயனாக இருக்க நானென்ன சாப்பாட்டு ரகசியத்தை வைத்திருக்கப் போகிறேன்?

பொதுவாகத் தமிழ்க் குடும்பங்களில் என்ன சாப்பாடு சாப்பிடுவார்களோ அதுதான் என்னுடைய சாப்பாடும்.

காலையில் இட்டிலியோ, தோசையோ அது மாவரைத்து வைத்திருக்கும் ரகசியத்தைப் பொருத்தது. இட்டிலி தோசை இல்லையென்றால் இரவில் மீந்த சோற்றின் ரகசியத்தைப் பொருத்து அது பழையதாக இருக்கலாம்.

மதிய உணவு சோறும் குழம்பும். செவ்வாய், வெள்ளி என்றால் சாம்பார். ஏதோ ஒரு பொறியல் அல்லது வறுவல் அல்லது அவியல் அல்லது கீரை மசியல். சில நாட்களில் குழம்பு அல்லது சாம்பாரோடு ரசம் கிடைக்கலாம். அது தாய்குலங்களின் மனதைப் பொருத்தது. நிறைவாக மோர். ஊறுகாய் கிடைத்தால் தாய்குலங்கள் மகிழ்ச்சியான மனநிலை இருப்பதாக அர்த்தம் செய்து கொள்ளலாம்.

இரவில் இட்டிலியும் கிடைக்கலாம். தோசையும் கிடைக்கலாம். மதியம் வடித்த சோறு மீந்து விட்டால் தண்ணீர் ஊற்றிய சோறாகவும் இருக்கலாம்.

மாலையில் ஒரு தேநீரோ குளம்பியோ தாய்குலங்களின் மனநிலைக்கேற்ப ஏதேனும் ஒன்று கிடைக்கலாம்.

இடையில் உறவினர்களோ நண்பர்களோ வந்துவிட்டால் பஜ்ஜியோ, வடையோ சூடான பானத்தோடு அல்லது குளிர் பானத்தோடு கிடைக்கலாம். மற்ற நேரங்களில் தாகத்திற்கு ஏற்ப எவ்வளவு தண்ணீர் வேண்டுமானால் குடித்துக் கொள்ளலாம். இப்படித்தான் போய்க் கொண்டிருக்கிறது என்னுடைய சாப்பாட்டு ரகசியம்.

*****

ரசாயனத்தில் தொடங்கி… ரசாயனத்தில் தொடர்ந்து… ரசாயனத்தில் முடிந்து…

காய்கறிகள், பழங்கள் என்று எதை அப்படியே சாப்பிட முடிகிறது? எல்லாவற்றிலும் ரசாயனங்கள் என்கிறார்கள். அவற்றை வாங்கிக் கழுவி முடிப்பதற்குள் அரை கிலோ உப்பும் கால் கிலோ மஞ்சள் தூளும் காலியாகி விடுகிறது. அப்படிச் செய்தால்தான் அவற்றைச் சுற்றியுள்ள ரசாயனங்கள் நீங்குமாம்.

அப்படிக் கழுவியும் தோலில் ரசாயனங்கள் இருக்கலாம் என்று தோலை உரித்தோ, சீவியோ எடுத்து விடுகிறார்கள். அந்தக் காலத்தில் தப்பு தண்டா செய்தால் இப்படித் தோலை உரிக்கும் கொடூர பழக்கம் இருந்திருக்கிறது. இந்தக் காய்கறிகள் என்ன தப்பு தண்டா பண்ணியதோ தோலோடு எந்தக் கறிகாய்களையும் சாப்பிட வாய்க்கவில்லை.

முட்டைகோஸ், காலிபிளவர் வகையறாக்களையெல்லாம் ரசாயனங்களில் தலை குளிப்பாட்டித்தான் அனுப்புகிறார்கள்.

காரட், முள்ளங்கி, பீட்ரூட் எல்லாம் முகப்போலிவோடு வருவதற்கு ரசாயனப் பூச்சுதான் காரணம் என்கிறார்கள்.

கொத்தவரை, அவரை, தக்காளி, கத்திரி எல்லாம் வீரிய வகை என்கிறார்கள். நாட்டுக் காய்கள் எல்லாம் நாட்டை விட்டு நாடு கடத்தப்பட்டு விட்டன என்கிறார்கள்.

ஆப்பிள், ஆரஞ்சு எல்லாம் எல்லா காலத்திலும் கிடைப்பதற்கு ஏற்ற வகையில் ராயல் பழ வகைகளாக மாறி விட்டன என்கிறார்கள். அவையும் ராயல் என்பதற்கேற்ப ஒட்டுத்தாள் (ஸ்டிக்கர்) ஒட்டிக் கொண்டு வருகின்றன. என்னவோ எம்.ஜி.ஆர். மாறுவேடம் போடும் போது முகத்தில் மரு வைத்துக் கொள்வதைப் போல இருக்கிறது அதைப் பார்க்கும் போது. உங்களுக்கு எப்படி இருக்கிறதோ?

காய்கறி, பழங்கள் என்று ரசாயனக் கலப்பையோ ரசாயனக் கலவையையோ உண்டு விட்டு ரசாயனத்திலேயே மருத்துவம் பார்த்துக் கொள்ளும் அளவிற்கு ஆங்கில மருத்துவம் தெருவுக்குத் தெரு கடைகளையும் மருத்துவ நிலையங்களையும் பரப்பி வைத்திருக்கிறது.

ரசாயனத்தில் தொடங்கி ரசாயனத்தில் முடிகிறது வாழ்க்கை. தாய்ப்பாலும் சுத்தமில்லையாமே. அதிலும் ரசாயனக் கலப்பு இருக்கிறதாமே. எனவேதான் ரசாயனத்தில் தொடங்குகிறது என்று சொல்ல வேண்டியிருக்கிறது. கடைசியில் இழுத்துக் கொண்டு கிடக்கும் போது மருத்துவர் போடும் ரசாயன ஊசியில் எல்லாம் முடிகிறதா? ஆகவே ரசாயனத்தில் முடிகிறது என்று சொல்வதில் எந்தத் தவறோ மிகையோ இல்லை என்றுதான் தோன்றுகிறது.

இப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக ரசாயனத்தைச் சேர்த்துக் கொள்வதை விட ரசாயனத்தையே ஏன் உணவாகக் கொள்ளக் கூடாது என்றால் கூடிய விரைவில் அப்படியும் வரும் என்பதால் ஏன் அவசரப்படுகிறீர்கள் என்கிறார்கள். என்னத்தைச் சொல்ல என்று நீங்கள்தான் சொல்ல வேண்டும்.

*****

No comments:

Post a Comment

நீயும் என் தமிழனே! நீயும் என் இந்தியனே!

நீயும் என் தமிழனே! நீயும் என் இந்தியனே! இருக்கின்ற வேலைகளை தனியார் ஒப்பந்த வேலைகளை விடுவதற்கு நிரந்தரப் பணிகளைத் தற்காலிகப் பணிகளாக ...