25 Apr 2024

தீ பரவட்டும்!

தீ பரவட்டும்!

இன்றைக்கு எல்லாவற்றிற்குமான வாய்ப்புகள் வந்து விட்டன.

வாய்ப்புகளைப் பயன்படுத்த வேண்டும்.

பயன்படுத்துவதா பெரிது? அதற்கான மனநிலை வர வேண்டுமே!

அதுவரை பேஸ்புக் அணைந்து கிடக்க வேண்டியதுதான். ஜூம், கூகுள் மீட் எல்லாம் ஓய்ந்து கிடக்க வேண்டியதுதான். டிவிட்டர், ஸ்பாட்டிபை, இன்ஸ்டா என்று என்னனென்னவோ எல்லாம் இருக்கின்றன. எல்லாம் அப்படியே கிடக்க வேண்டியதுதான்.

உங்களது உலகத் தரமான பேச்சை யூடியூப்பில் பதிவேற்றி வாட்ஸாப்பில் உலவ விடலாம்.

தீப்பிடித்தால் எல்லாம் சாத்தியம்.  எப்போது பிடிக்கப் போகிறதோ தீ?

அதுவாகப் பிடிக்காவிட்டாலும் பேஸ்புக்கிலோ, டிவிட்டரிலோ தீ பிடிக்காமலா இருக்கிறது? ஏதோ ஒரு தீ பிடித்து எரிந்து கொண்டுதான் இருக்கிறது. தீயணைப்புத் துறை அமைதியாக இருக்கிறது.

யாருக்காகவும் எதற்காகவும் காத்திருக்க வேண்டாம். யாரையும் எதையும் தேடித் திரிய வேண்டாம். கையில் அலைபேசி இருக்கிறது. ஒரு காணொளி அழைப்பு செவ்வாயில் இருப்போரையும் வாய் திறக்க வைத்து விடும். உங்கள் அலைபேசியை வைத்து சந்திரனின் பார்க்க முடியாத பள்ளத்தையும் உற்றுப் பார்த்துக் கொண்டு இருக்கலாம்.

அலைவது வீண். தேடிப் போய் பேசுவது வீண். என்னதான் செய்வது?

உங்களுக்குக் குழப்பம் இல்லை என்பதை ஒத்துக் கொண்டுதான் ஆக வேண்டும். ஆனால் குழப்பம் இருக்கும்.

தனி ஒரு வயிற்றுக்கு உணவில்லை என்று அழுதால் சொமோட்டோ உணவு கொண்டு வரலாம். பிச்சையெடுப்பது எளிதானது என்பதை உங்கள் கையிலிருக்கும் அலைபேசி உங்கள் சிந்தனையிலிருந்து மறைக்கலாம்.

எப்படி வழி தேடப் போகிறீர்கள் என்பது உங்களுக்கே தெரியாது. வருங்காலத்தில் எப்படியோ தேடுவீர்கள். ஆரம்பத்தில் எல்லாம் அசட்டுத்தனமான வழிகள். பிறகுதான் நெறிபடுத்த வேண்டும். அவசரமில்லை.

நெறிப்படுத்தப்பட்ட வழியில் ஒருவர் அபத்தமாகத் தேடத் தொடங்கலாம். ஆரம்பம் எப்போதும் அப்படியே. அவராகவே நெறிபடுத்தப்பட்ட வழிக்கு வரலாம். இங்கு ஒன்றுதான் முக்கியம். அது அவசரப்பட முடியாது.

ஒருநாள் நீங்கள் எதிர்பார்க்கும் திசையில் பேஸ்புக்கிலும் டிவிட்டரிலும் தீப்பற்றக் கூடும். அதுவரை அது அடங்கிக் கிடக்கும். அல்லது பற்றிக் கொண்டு எரிந்து கொண்டிருக்கும் திசையில் தீ எரிந்து கொண்டிருக்கும். இஷ்டப்படியெல்லாம் பற்ற வைக்க இதென்ன நெருப்புப் பெட்டியிலா இருக்கிறது? மனப்பெட்டியில் ரொம்ப பத்திரமாக இருக்கிறது.

*****

No comments:

Post a Comment

நீயும் என் தமிழனே! நீயும் என் இந்தியனே!

நீயும் என் தமிழனே! நீயும் என் இந்தியனே! இருக்கின்ற வேலைகளை தனியார் ஒப்பந்த வேலைகளை விடுவதற்கு நிரந்தரப் பணிகளைத் தற்காலிகப் பணிகளாக ...