25 Sept 2023

மன அழுத்தத்திலிருந்து மன மகிழ்வுக்கு…

மன அழுத்தத்திலிருந்து மன மகிழ்வுக்கு…

ஒரு காலத்தில் பெரியவர்களுக்கு மட்டும் ஏற்பட்ட மன அழுத்தம் இன்று வயது வேறுபாடினின்றி சிறியவர்களிலிருந்து பெரியவர்கள் வரை அனைவரையும் பாதிக்கச் செய்கிறது. வயது வித்தியாசம் தெரியாத குருடாகி விட்டது மன அழுத்தம்.

மனதுக்கு ஒத்து வராத நிகழ்வுகள், சம்பவங்கள், பிரதிவினைகள் மற்றும் மனதால் ஏற்றுக்கொள்ள முடியாத சூழ்நிலைகள், வாழ்வியல் நிலைகள், மனதால் சகித்துப் போக முடியாத அக மற்றும் புற நிலைமைகள் ஆகியன ஒருவருக்கு மன அழுத்தத்தை உண்டாக்கலாம். இவை மட்டும்தான் மன அழுத்தத்திற்கான காரணங்கள் என்றில்லை.

மனதின் சின்ன சின்ன எதிர்பார்ப்புகள், சின்ன சின்ன விருப்பங்கள், சிறு சிறு வெற்றிகள், அங்கீகாரங்கள் போன்றவை கிடைக்கப்பெறாத சமூக நிலைமைகளும் ஒருவருக்கு மன அழுத்தத்தை உண்டாக்கலாம்.

தொடர்ச்சியாக ஏற்படும் தோல்விகள், ஏமாற்றங்கள், பின்னடைவுகள், மதிக்கப்படாத சூழ்நிலைகள், அங்கீகாரமற்ற பொதுவான நிலைகள் போன்றவற்றில் தொடர்ந்து இருத்தப்படும் நிர்ப்பந்தங்கள் போன்றனவும் ஒருவரை மன அழுத்தம் கொள்ளச் செய்யலாம்.

அன்பும் மகிழ்வும் கிடைக்கப்பெறாத குடும்பச் சூழ்நிலைகள், நட்பும் அங்கீகாரமும் கிடைக்கப்பெறாத பணிச் சூழ்நிலைகள், மதிப்பும் ஒத்துழைப்பும் கிடைக்கப்பெறாத உறவுகளின் பின்னணிகளும் ஒருவரை மன அழுத்தம் கொள்ளச் செய்யலாம்.

மன அழுத்தம் உண்டாவதற்கான காரண காரிய பரப்பு பரந்து விரிந்தது.

ஒருவர் தனக்கான மன அழுத்தம் எதன் காரணமாக ஏற்படுகிறது என்பதைத் தெரிந்து கொண்டு அதைக் களைந்து கொள்ளும் முறைகளைக் கண்டுபிடிக்க வேண்டியிருக்கிறது. மன அழுத்தம் நாளுக்கு நாள் முற்றிப் போவது ஆபத்தான விளைவுகளை உண்டாக்கி விடுகிறது. இந்த முற்றும் விளைவைத் தவிர்ப்பதற்கென மூத்தோர்கள், அனுபவசாலிகள் மற்றும் மருத்துவர்களின் உதவியை நாடுவதும் சில  நேரங்களில் தவிர்க்க முடியாமல் தேவைப்படுகிறது. அந்த அளவுக்கு அச்சம் தரக்கூடிய விளைவுகளை உண்டாக்கக் கூடியது மன அழுத்தம்.

மன அழுத்தப் பிரச்சனைகளில் அதை சுலபமாக அகற்றிக் கொள்ளவும் சில வழிகள் இருக்கின்றன. ஒருவர் தன்னைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்ளும் போதும், நிகழ்பவற்றைப் புரிந்து கொண்டு அவற்றில் மாற்றக் கூடியவற்றை மாற்றியும் மாற்ற முடியாதவற்றை அப்படியே ஏற்றுக் கொள்வது மூலமாகவும் மன அமைதியை அடைய முடியும். அதை எப்படியேனும் அடைவது அடிக்கடி மன அழுத்தம் அடைபவருக்கான வாழ்வதற்கான தகுதியாகி விடுகிறது.

ஒவ்வொருவருக்கும் ஏற்படும் மன அழுத்தம் ஒவ்வொரு மாதிரியானது என்றாலும் மனதுக்கு ஒவ்வாத அக மற்றும் புற நிலைகளே மன அழுத்தத்தை உண்டாக்குகின்றன என்பது பொதுவாகப் பலருக்கும் ஒத்துப் போகும் ஒன்றாகும். இதனைத் தொகுத்துப் பார்த்தால் மன ஒவ்வாமையின் மன விளைவே மன அழுத்தம் எனலாம்.

ஏதோ ஒரு காரணத்தால் உங்கள் மனதில் நிலவும் உங்கள் மனநிலையை உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாவிட்டால் நீங்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுவீர்கள். இவ்விதத்தில் எளிதில் சீரணிக்க முடியாத மனநிலையின் அஜீரணமே பல நேரங்களில் மன அழுத்தமாகி விடுகிறது.

உதாரணமாக இப்படி ஒரு சூழ்நிலையை எடுத்துக் கொள்ளலாம். இந்த முறை மருத்துவ நுழைவுத் (நீட்) தேர்வில் நீங்கள் தேர்வாகி விடுவீர்கள் என்று நீங்கள் நினைத்திருக்கலாம். ஆனால் முடிவு வேறாகும் போது நிச்சயம் நீங்கள் மன அழுத்தத்திற்கு ஆளாவீர்கள். இது இயற்கையானது. எதிர்பார்ப்புகள் நிறைவேறாத ஒவ்வொரு நிலைமைகளிலும் இப்படி மன அழுத்தத்திற்கு ஆளாவது மனிதர்களால் தவிர்க்க முடியாதது ஆகும்.

ஒரு சில நாட்கள் வரை இது குறித்த மன அழுத்தம் இருந்து பிறகு அதிலிருந்து நீங்கள் விடுபட்டு விட்டால் இத்தகைய மன அழுத்தத்தை நீங்கள் பொருட்படுத்த வேண்டியதில்லை. ஆனால் இந்த மன அழுத்தம் தொடர்ந்து உங்களை அழுத்திக் கொண்டோ அல்லது உங்களைத் தற்கொலைக்குத் தூண்டிக் கொண்டோ இருந்தால் நீங்கள் மன அழுத்த வியாதியால் பாதிக்கப்பட்டு இருக்கிறீர்கள். வியாதி உங்களைத் தின்று தீர்க்கும் நாளை நோக்கி நெருங்கிக் கொண்டு இருக்கிறீர்கள்.

இது போன்ற நிலைமைகளில் மன அழுத்தத்திற்கு உடனடி மருந்து உங்களை மூடிக் கொள்வதல்ல. உங்கள் மனநிலையைச் சகஜமாக மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வதுதான் சரியான மருந்து. அதனால் உங்களுக்கு என்ன கிடைத்து விடப் போகிறது என்று நீங்கள் கேட்கலாம். அதனால் தேர்வு பெறாத நுழைவுத்தேர்வில் தேர்வு பெற்று முடியுமா என்றும் கேட்கலாம். கடந்த காலத்தில் நடந்து முடிந்து விட்ட ஒன்றை யாராலும் மாற்ற முடியாது. ஆனால் அதைப் பகிர்ந்து கொள்வதன் மூலம் அதனால் பெருகப் போகும் உங்கள் மன அழுத்தத்தைப் பாதியாக அல்லது அதற்கும் அதிகமாகக் குறைத்துக் கொள்ள முடியும்.

ஓர் இலக்கு உங்களை மன அழுத்தத்தில் தள்ளுகிறது என்றால் அதன் குறுகிய நோக்கிலிருந்து நீங்கள் வெளியேறும் காலம் வந்து விட்டது எனலாம். ஏனென்றால் உங்கள் திறமைகளை ஒரு கூண்டுக்குள் சிறகடித்துக் காட்டுவதை விட வானவெளியில் சிறகடித்து மகிழ்வது சிறந்ததாகும். மன அழுத்தத்துடன் நீங்கள் சிறகடிக்க நினைப்பது கூண்டுக்குள் சாகசம் செய்யும் பறவையின் நிலையைப் போன்றதாகும்.

நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்று ஒரு வேலையில் சேர்ந்தவர்களை விட அதில் தோல்வியுற்று நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்றவர்களை வேலைக்கு அமர்த்திய சாமர்த்தியசாலிகள் இந்த உலகில் இருக்கிறார்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இதன் மூலம் நீங்கள் ஓர் உண்மையை உணரலாம். அதாவது மன அழுத்தம் என்பது குறுகிய பார்வை. அதிலிருந்து விடுபடுவது என்பது விசாலப் பார்வையை நோக்கிச் செல்வதாகும். விசாலப் பார்வையால் உங்கள் மனதை விரிவுபடுத்தும் போது நீங்கள் மன அழுத்தத்திலிருந்து சுலபமாக விடுபடலாம்.

மற்றுமொரு பயிற்சியாக வானத்தை நோக்குதல் மன அழுத்தத்திலிருந்து விடுபட அருமையான ஒரு வழிமுறையாகும். வானத்தை நோக்குங்கள். அது எப்போதும் ஒரே மாதிரியாகவா இருக்கிறது? கலைந்து போகும் மேகங்களால் வானம் எப்போதும் விதவிதமாகத்தான் இருக்கிறது. மனிதர்களின் மனதும் அப்படிப்பட்டதுதான். பலவிதமான எண்ணங்களால் மனமானது வானத்தைப் போலத்தான் இருக்கிறது.

சில நேரங்களில் வானில் இடி, மின்னல் ஏற்படுகின்றன. கருமேங்கள் சூழ்கின்றன. என்றாலும் எப்போதும் வானம் அப்படியேவாக இருக்கிறது? மனமும் அப்படித்தான் சில நேரங்களில் குழப்பம், விரக்தி, எரிச்சல் போன்ற உணர்வுகளால் சூழப்படுகிறதுதான். ஆனால் எப்போதும் இல்லை. அது மாறிக் கொண்டே இருக்கிறது. இந்த மாறிக் கொண்டே இருக்கிறது என்ற உண்மையை எப்போதும் மனதில் வையுங்கள்.

மேற்படி நினைப்பு உங்களுக்கு வந்து விட்டால் நல்லது. அதனால், இப்போது உங்கள் மனதை அழுத்திக் கொண்டிருக்கும் ஏதோ ஒன்று எப்போது அப்படியே அழுத்திக் கொண்டு இருக்க முடியாது. நாளைய பொழுதொன்றில் இவ்வளவு அழுத்தம் அழுத்திய அந்த எண்ணத்தை மறந்தவராக நீங்கள் சிரித்துக் கொண்டிருப்பீர்கள்.

வானத்தைப் பார்க்கும் நீங்கள் இன்னொன்றையும் நினைத்துப் பார்க்கலாம். இந்த வானவெளியிலிருந்து பார்த்தால் இந்தப் பூமி எவ்வளவு பெரிது என்று நினைக்கிறீர்கள்? நிச்சயம் சூரியனை விட சிறியது.

அந்தச் சூரியனையே எடுத்துக் கொள்ளுங்கள். இந்தப் பிரபஞ்சத்திலிருந்து பார்த்தால் அது ஒரு சிறிய கோலிகுண்டுதான். இப்போது இந்தச் சூரியன் – பூமி – நீங்கள் என்ற வரிசை முறைக்கு வாருங்கள். நீங்கள் எவ்வளவு பெரிது என்று சொல்லுங்கள். இந்த ஒப்பீட்டில் நாம் பொருட்படுத்ததக்க ஓர் அளவே இல்லை. இதில் நம்முடைய மன அழுத்தம் என்று பார்த்தால் அதற்கு என்ன அர்த்தம் இருக்கப் போகிறது சொல்லுங்கள்?

உங்கள் மன அழுத்தத்தை நீங்கள் கடந்து போகலாம் அல்லது ஏற்றுக் கொள்ளலாம் அல்லது கண்டு கொள்ளாமல் இருந்து விடலாம். எல்லாம் மன அழுத்தத்தை அணுகுவதற்கான முறைகள்தான்.

நீங்கள் மன அழுத்தமே இல்லாமல் இருந்து விட்டால் இந்த முறைகள் எதுவும் தேவையில்லைதானே. அது சாத்தியமா என்றால் அதுவும் சாத்தியம்தான்.

இந்த உலகில் உங்களுக்கு நிகழும் அனைத்தும் இரண்டே வகையில்தான் இருக்கும். ஒன்று உங்களால் கட்டுப்படுத்த முடிந்த உங்கள் கட்டுபாட்டிற்குள் வரக் கூடியன. மற்றொன்று உங்களால் கட்டுபடுத்த முடியாத உங்கள் கட்டுபாட்டிற்குள் வராதன.

இப்போது நீங்கள் உங்கள் கட்டுபாட்டிற்குள் வரக்கூடியவற்றிற்காக நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் கவலைப்பட்டுக் கொள்ளுங்கள். ஏனென்றால் உங்கள் கட்டுபாட்டிற்குள் உள்ளவற்றை உங்களால் மாற்றியமைக்க முடியும்.

உங்கள் கட்டுபாட்டிற்குள் வரதாவற்றைப் பற்றிக் கொஞ்சம் கூட கவலைப்படாதீர்கள். ஏனென்றால் அதை உங்களால் எதுவும் செய்ய முடியாது. ஒன்று அதுவாக உங்களுக்குத் தகுந்தாற் போல மாறலாம் அல்லது இரண்டாவதாக அப்படி மாறாமல் போகலாம். அதை உங்களால் எதுவும் செய்ய முடியாது.

இப்போது உங்கள் ஒவ்வொரு சூழ்நிலையையும் மனநிலையையும் இதை ஒட்டிப் பாருங்கள். நுழைவுத் தேர்வை எழுதுவதுதான் உங்கள் கட்டுபாட்டில் இருக்கிறது. அதிலிருந்து கிடைக்கும் மதிப்பெண்களிலிருந்து தேர்வு பெறுவது ஒவ்வொரு ஆண்டும் மாறக் கூடியதாக இருக்கிறது. சில ஆண்டுகளில் மிக உச்ச மதிப்பெண்கள் கூட தேர்வு பெறுவதற்கான தகுதி மதிப்பெண்களுக்குப் போதாமையாகி விடுகின்றன. சில ஆண்டுகளில் மிகக் குறைந்த மதிப்பெண்கள் கூட தகுதி மதிப்பெண்களாகி விடுகின்றன. அது உங்கள் கட்டுபாட்டில் இல்லை.

நீங்கள் அதிகபட்ச மதிப்பெண்கள் எடுப்பதற்காக முயன்றாலும் சில நேரங்களில் பல்வேறு காரணிகளால் அது நடக்காமல் போகலாம். உங்களால் இயன்ற அளவு முயற்சி என்ற ஒன்று மட்டுமே இதில் உங்கள் கட்டுபாட்டில் இருக்கிறது. அதைத் தாண்டி எந்நேரமும் ஒரு சக்தி வாய்ந்த மனிதரைப் போலச் செயலாற்றும் வாய்ப்பு அதாவது ஒரு சூப்பர் மேனைப் போலச் செயலாற்றும் தன்மை எப்போதும் உங்கள் கைகளில் இல்லை. அதைப் பற்றி நீங்கள் எப்போதும் கவலைப்பட வேண்டியதில்லை.

உங்களால் முடிந்த ஆகச் சிறந்த முறையில் நீங்கள் நுழைவுத் தேர்வை எதிர்கொண்டு விட்டீர்கள் எனும் போது, அதன் முடிவுகளைப் பற்றி நீங்கள் இனி கவலைப்பட வேண்டியதில்லை. எந்த முடிவு வந்தாலும் அதை ஏற்றுக் கொண்டு அடுத்து உங்கள் கட்டுபாட்டில் உள்ளவற்றைக் கொண்டு அதில் என்ன செய்ய முடியும் என்பதை மட்டும் பாருங்கள். உங்களை மன அழுத்தம் ஒரு போதும் அண்டாது.

தேர்வு பெறாத போது உங்கள் கட்டுபாட்டில் உள்ள இரண்டு வாய்ப்புகள் என்னவென்றால் மீண்டும் ஒரு முறை முயற்சித்து பார்ப்பது அல்லது வேறு திசையில் நீங்கள் பெற்றிருக்கும் மதிப்பெண்களைக் கொண்டு உங்களுக்குப் பிடித்தமான மற்றொரு துறையில் துணிந்து இறங்க முடிவெடுப்பது. இந்த இரண்டு முடிவுகளுக்குள் ஒன்றை நோக்கி வந்து விட்டால் வெற்றிகரமாக உங்கள் மன அழுத்தத்தைக் கடந்து விடலாம். அதை விடுத்து நிச்சயம் தேர்வாக வேண்டிய இந்தத் தேர்வில் எப்படித் தோற்றோம் என்று நீங்கள் நினைக்க ஆரம்பித்தால் ஒரு சுழலுக்குள் சிக்கிக் கொள்ள ஆரம்பிக்கிறீர்கள். அந்தச் சூழல்தான் மன அழுத்தம்.

எப்போதும் சுழலில் சிக்கியோர்களைக் காப்பாற்றுவது கடினமாகத்தான் இருக்கிறது. ஆனால் சுழல் என்றுதெரிந்த பிறகு நீங்கள் அதில் சிக்காமல் உங்களைக் காத்துக் கொள்ள முடியும். உங்களைச் சுற்றியுள்ளவர்களையும் உங்களால் தேவையற்ற சுழலில் சிக்கி விடாமல் தடுத்தாட்கொள்ள முடியும்.

ஆகவே மன அழுத்தத்திற்குள் சிக்கிக் கொள்ளாமல் எச்சரிக்கையாக இருங்கள். ஒரு சுழலில் சிக்கிக் கொண்டு அநாவசியமாகப் போராடுவதில் என்ன இருக்கிறது? அதற்குப் பதில் அதைக் கடந்து வேறொரு திசையில் ஒடத் துவங்குங்கள். இந்த வாழ்க்கையில் நீங்கள் பார்க்க வேண்டிய காட்சிகள் அநேகம் இருக்கின்றன.

*****

No comments:

Post a Comment

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை!

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை! ஔவைக்கு நூலறிவு மட்டும் கிடையாது. அவரது பட்டறிவுக்கு எல்லையே கிடையாது. ஒரு பெண்ணாகச் சுதந்த...