திருமணம் செய்விப்பவர் திடகாத்திரமாக இருக்க வேண்டும்
திருமணம் செய்விப்பவர்
துணிச்சல்காரராக இருக்க வேண்டும்
ஒரு திருமணம் எப்படி வேண்டுமானாலும்
முடியலாம்
என்பதில் தெளிவுள்ளவராக இருக்க
வேண்டும்
வாழ்த்துகளைச் சபித்தல்களைச்
சமமாகப் பாவிப்பவராக இருக்க
வேண்டும்
நிறைகளைப் போல குறைகளைக்
கொண்டாடத் தெரிந்தவராக இருக்க
வேண்டும்
மணமகனுக்கோ மணமகளுக்கோ எதிரியாகும்
போது
பொறுமை காத்து புன்னகைக்க
தெரிய வேண்டும்
நல்லது கெட்டதுகளில் வந்து
விழும் வார்த்தைகளில்
நாண்டு கொண்டு சாகாமல் இருக்கத்
தெரிந்திருக்க வேண்டும்
முடிவில் எல்லாம் சுபமாகும்
போது
வாழ்த்துகள் வந்து சேரும்
போது
சுபகேட்டின் தொடக்கம் ஒன்று
வசவுகளோடு விரைவில் வந்து
சேரும் என்பதையும்
எந்நேரமும் எதிர்நோக்கிக்
கொண்டிருக்க வேண்டும்
ஒரு திருமணம் செய்விப்பவர்
எதற்கும் தயாராக இருக்க வேண்டும்
எப்போது வேண்டுமானாலும்
எப்படி வேண்டுமானாலும்
எந்த திசையிலிருந்து வேண்டுமானாலும்
வந்து விழும் வார்த்தைகள்
எப்போது வேண்டுமானாலும்
எப்படி வேண்டுமானாலும்
எந்த திசையில் வேண்டுமானாலும்
தடம் மாறிப் போகும் வாழ்க்கை
*****
No comments:
Post a Comment