அழைப்புக்கான சரியான பதில் சொல்லும் அலைபேசி
தாத்தாவின் கைபேசி ஒலித்துக்
கொண்டிருக்கிறது
அவர் இறந்தது தெரியாமல்
அழைப்பை ஏற்கும் ஒவ்வொரு
பொழுதிலும்
அவர் இறப்பைப் பிரசங்கிக்க
வேண்டியிருக்கிறது
நன்றாகத்தானே இருந்தார் என்பவர்களுக்கு
என்ன பதில் சொல்வது என்று
தடுமாற வேண்டியிருக்கிறது
நேற்று கூட பார்த்தேனே என்பவர்களுக்கு
இன்று இல்லை என்று சொல்வது
கடினமாக இருக்கிறது
இறப்பின் செய்தியைக் கேட்டதும்
கேவி அழுபவரை எப்படி எதிர்கொள்வதெனக்
குழப்பமாக இருக்கிறது
ஆசி வாங்க வர வேண்டும் என்று
சொல்பவரை
தடுத்து நிறுத்துவது எப்படி
என்பது புரியாது தவிக்க வேண்டியிருக்கிறது
ஒரு வழியாக அலைபேசியை அணைத்து
வைத்து விடும் போது
அலைபேசியே அதற்கான பதிலைச்
சொல்கிறது
நீங்கள் தொடர்பு கொள்ளும்
வாடிக்கையாளர்
தொடர்பு எல்லைக்கு அப்பால்
இருக்கிறார் என்பதாக
*****
No comments:
Post a Comment