ஓலமிடும் பொழுதுகள்
விலகி ஓடிய பேருந்தைத் துரத்தி
கடிகாரத்திடம் கெஞ்சி
கால தாமதத்தைத் தவிர்த்து
மேலாளரிடம் முதுகை வளைத்து
கழைக்கூத்து ஆடி
அரை மணி நேரத்தை அடகு வைத்து
அரை மணி நேரத்தைக் கையூட்டாய்ப்
பெற்று
பிதுக்கித் தள்ளி பேருந்திற்குள்
மீள நுழைந்து பிரசமாவதைத்
தடுத்து
கூட்டக் கடலில் நீந்தி
வீதிச் சுழலில் சிக்கி
போக்குவரத்துக் குறிகளில்
புதைந்து
வீட்டிற்குள் நுழைந்து அறைக்குள்
ஒதுங்குவதற்கு முன்பு
ஓர் இரங்கற் செய்தி வருகிறது
செத்தது நானாக இருக்கக் கூடாதா
என
இப்போது மனம் ஓலமிடத் துவங்குகிறது
வீட்டில் இருப்பவர்கள் நினைத்துக்
கொள்கிறார்கள்
ஒப்பாரி வைப்பது
இறந்து போன யாரோ ஒருவருக்காக
என்று
*****
No comments:
Post a Comment