27 Feb 2023

அது அப்படியும் இருக்கலாம்

அது அப்படியும் இருக்கலாம்

என்னிடமிருந்து எப்படியோ நீயும்

உன்னிடமிருந்து எப்படியோ நானும்

தப்பித்துக் கொண்டோம்

நான் அதிகம் நேசித்தது உன்னைத்தான் என்பதை

எப்படி என்னால் சொல்ல முடியாமல் போனதோ

நீ அதிகம் நேசித்தது என்னையா என்பதை

உன்னிடமிருந்து எப்படிக் கேட்டுத் தெரிந்து கொள்ள முடியாமல் போனதோ

நீ வேறொருவரைக் காதலித்ததிலிருந்து

அப்படிக் கூட இருக்கலாம்

நான் காதலைச் சொல்லாததும் காரணமாக இருக்கலாம்

இப்போது உன்னைப் பேரன்போடு பார்க்க விழைகின்றன கண்கள்

சுருளும் போது உன்னையே நினைத்துக் கொள்கிறது மனம்

யாருக்கும் தெரியாமல் எப்போதும் நீ

என்னுடன் இருக்கிறாய்

நினைக்கும் போதெல்லாம்

உன் அருகாமைக்குப் போய் விட முடிகிறது

எப்படி எப்போதும் இப்படி உற்சாகமாய்

இருக்க முடிகிறது என்று

நீயே ஒரு நாள் கேட்டு விட்டுப் போனாய்

உற்சாகமாய் உன்னை உள்ளுக்குள் வைத்திருப்பதை

உன்னிடமே எப்படிச் சொல்வதென்று விட்டு விட்டேன்

பிறிதொரு நாள்

உங்கள் உற்சாகத்தைக் கொஞ்சம் தர முடியுமா என்றாய்

உன்னையே உனக்கெப்படி தர முடியும் என்ற

புரியாமைப் போதாமையால் முடியாது என்றேன்

நான் வைத்துக் கொண்டு

வஞ்சகம் செய்திருப்பதாய் நீ நினைத்திருக்கலாம்

உன்னை எனக்குள் வைத்திருப்பதால்

அது அப்படியும் இருக்கலாம்

*****

No comments:

Post a Comment

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை!

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை! ஔவைக்கு நூலறிவு மட்டும் கிடையாது. அவரது பட்டறிவுக்கு எல்லையே கிடையாது. ஒரு பெண்ணாகச் சுதந்த...