பெயர் சொல்லிப் பயமுறுத்துகிறார்கள்!
பெண்களை மக்குகள் என்றவர்கள்
ஓய்ந்து விட்டார்கள். இப்போது அவர்கள்தான் நன்றாகப் படிக்கிறார்கள். ஆண்கள் மக்கு சாம்பிராணிகளாகி
விட்டார்கள்.
பெண்கள் வேலைக்குப் போன போது
பலர் பலவிதமாகப் பேசினார்கள். இன்று பெண்களைத்தான் அரசாங்கம் முதற் கொண்டு தனியார்
நிறுவனங்கள் வரை வேலைக்கு எடுக்கின்றன.
பெண்கள் சுரிதார் அணிந்த
போதும் இப்படிச் சில கூக்குரல்கள் கேட்டன. இன்று அதுதான் பெண்களுக்கான பாதுகாப்பான
உடையாக இருக்கிறது.
அவர்கள் நைட்டி அணிந்து தெருவில்
போவது வருவது குறித்து இப்போது சில விமர்சனங்கள் இருக்கின்றன. அதுவும் காலப்போக்கில்
மாறி விடும்.
நீங்கள் கேட்கலாம், சுரிதார்,
நைட்டிகள் வந்து விட்டப் பிறகு புடவை வியாபாரம் குறைந்து விட்டதா என்று. புடவைக் கடைகள்
பெருகிக் கொண்டுதான் இருக்கின்றன. விதவிதமான புடவைகளும் வந்து கொண்டுதான் இருக்கின்றன.
ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு
வகைப் புடவை. இதனால் புடவை அணிந்து பண்பாட்டை மறக்காமல் இருக்கிறார்கள் பெண்கள் என்று
சொல்லலாமா என்று கேட்கிறார்கள்.
அவர்களுக்கு விருப்பமானதை
அணிகிறார்கள். அவர்களுக்கு விருப்பம் இருக்கும் வரை அணிவார்கள்.
ஆண்கள் வேட்டிக் கட்டுவதைக்
குறைத்துக் கொண்டு முழுக்கால் சட்டைகள் (பேண்டுகள்) அணிவதில்லையா? முழுக்கால் சட்டைகளும்
முக்கால் கால் சட்டைகளாக (முக்கால் பேண்டுகள்) மாறவில்லையா? முக்கால் கால் சட்டைகளும்
அரைக்கால் சட்டைகளாக (டிராயர்கள் மற்றும் பெர்முடாஸ்கள்) ஆக வில்லையா? என்னதான் விதவிதமான
கால் சட்டை வகையறாக்கள் வந்தாலும் பாரம்பரிய மணம் மாறாது கைலிகளோடு வீதிகளில் திரிவதில்லையா?
நமது விருப்பமும் ஆர்வமும்தான்
நமது பண்பாட்டைத் திணிக்கிறது. முதலில் அதற்கு கால மாற்றம் (டிரெண்ட் அல்லது பேஷன்
என்பதாக) பெயர் வழங்கப்படுகிறது. பிறகு அதுதான் கலாச்சாரம் என்பதாக பெயர் மாற்றம் செய்யப்படுகிறது.
கடைசியில்தான் பண்பாடு எனும் பெயர் வந்து ஒட்டிக் கொள்கிறது.
இதற்கு இடையில் கலாச்சாரக்
காவலர்கள் இதற்கு வேறு பெயர் கொடுத்துப் பண்பாட்டு படையெடுப்பு என்று சொல்லி பயமுறுத்துகிறார்கள்.
*****
No comments:
Post a Comment