31 Oct 2022

பத்தாயிரம் பத்து கோடி ஆகும் நாள் எந்நாளோ?!

பணம் பற்றாத போது…

யாரைக் கேட்டாலும் பணம் பற்றவில்லை என்கிறார்கள்

இப்போதுதான் அதி நவீன பிரிண்டர்கள் வந்து விட்டதே, கொஞ்சம் அச்சடித்துக் கொள்ள வேண்டியதுதானே என்றால் தயங்குகிறார்கள்.

பணத்தை உருவாக்குவது என்றால் மக்களிடம் கொஞ்சம் பயம் இருக்கத்தான் செய்கிறது.

அந்தப் பயம் இல்லாதவர்கள்தான் பணக்காரர்கள் ஆகிறார்கள். கோடீஸ்வரர்களாகிறார்கள். வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்லும் வாய்ப்புகளையும் பெறுகிறார்கள்.

******

பத்தாயிரம் பத்து கோடி ஆகும் நாள் எந்நாளோ?!

மாமா எப்போது வந்தாலும் பத்தாயிரம் கேட்பார்.

அதற்குக் குறைந்து கேட்டதில்லை.

அது மாதச் சம்பளத்தில் மூன்றில் ஒரு பங்காயிற்றே என்றால் அதெல்லாம் முடியாது, கொடுத்துவிட்டு அடுத்த வேலையைப் பார் என்பார்.

மாமனைப் பெற்ற மாப்பிள்ளைகளால் மாமன் சொல்லை மறுக்கவும் முடியுமோ?

பத்தாயிரத்தைக் கொடுத்து விட்டால் அடுத்து ஒரு பத்து மாதங்களுக்கு எட்டு வைத்துப் பார்க்க மாட்டார்.

சரியாகப் பதினொன்றாவது மாதமோ, அது தப்பிப் போனால் பனிரெண்டாவது மாதமோ மறுபடியும் எட்டிப் பார்ப்பார்.

இந்த முறையும் பத்தாயிரம்தான் கேட்பார்.

ஒவ்வொரு முறையும் பத்தாயிரம் கேட்கும் போது கேட்காமல் இருக்க முடியுமா என்று பத்தாயிரத்தை வாங்கி என்ன செய்கிறீர்கள் மாமா என்றால்,

அது வந்துடா மாப்ளே! ஒரு தொழில் தொடங்கி நல்ல நிலைமைக்கு வந்து விடலாம் என்று பார்க்கிறேன், முடிய மாட்டேன்கிறேதடா என்பார்.

என்றாவது ஒரு நாள் பத்தாயிரத்தை பத்து கோடியாக்குவேன் என்று சூளுரைத்து விட்டுப் பத்தாயிரத்தை வாங்கிக் கொண்டு போவார்.

என்னவோ மாமாவின் சூழ்நிலையோ, கிரக நிலையோ பத்தாயிரத்தைப் பத்து கோடியாக்க முடியாமல் மறுபடியும் நிச்சயம் திரும்பவும் வருவார்.

நான் என்ன செய்ய முடியும் சொல்லுங்கள். மாதா மாதம் ஆயிரம் வீதம் எடுத்து வைத்து மாமா வரும் பத்தாவது மாதம் பத்தாயிரத்தை எடுத்துக் கொடுத்து விடுவேன்.

*****

No comments:

Post a Comment

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...