இலங்கையில் ஒலித்துக் கொண்டிருக்கும் அறத்தின் குரல்
விடுதலைப் புலிகளை வெற்றிக்
கொண்டதன் மூலமாக இலங்கையின் புதிய அத்தியாயம் எழுதப்பட்டதாக ராஜபக்ஷேக்களும் இலங்கை
மக்களும் நினைத்திருக்கலாம்.
அறமற்ற முறையில் பெற்ற வெற்றியின்
மூலமாக ராஜபக்ஷேக்கள் எழுதியிருந்தது மிக மோசமான அத்தியாயம் என்பதை காலம் இப்போது சொல்லி
விட்டது.
காலத்திற்கு அறம் ஓர் அறங்காவலர்.
அறங்காவலர் நெறிப்படியே காலம் செல்கிறது. சீரழிவு அல்லது பேரழிவு மூலம் அறமற்ற தன்மைக்கான
பிரதிவினையைக் காலம் முன்னெடுத்துச் செல்கிறது.
இலங்கையில் நிகழ்ந்திருப்பது
வெறும் பொருளாதாரச் சீரழிவு மட்டுமல்ல. அறமற்ற ஆட்சிமுறைக்கும் நிர்வாக முறைக்கும்
நேர்ந்திருக்கும் பேரழிவு. அவர்கள் தங்கள் ஆட்சி முறையையும் நிர்வாக முறையையும் அறம்
சார்ந்த முறைமையோடு கட்டியெழுப்பும் போதுதான் பொருளாதாரச் சீரழிவையும் தடுத்து நிறுத்த
முடியும்.
மதத்தின் பெயராலும் இனத்தின்
பெயராலும் துண்டாடும் அரசியல் போக்கு நெடுங்காலம் நீடிக்க முடியாது. அது அறமற்ற தன்மையின்
மோசமான போக்கு.
மனிதர்கள் யாவரும் சமமானவர்
என்னும் அறத்தின் குரலை இனவாதம் மற்றும் மதவாதம் பேசும் குரலால் மாற்ற முயன்றால் அதன்
பின் விளைவுகள் எப்படி அமையும் என்பதைத்தான் இலங்கை தற்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறது.
அனைத்து மக்களையும் அரவணைத்துச்
செல்வதன் மூலமாக இலங்கை இன்னும் சில காலத்திற்குள்ளாக அனைத்துப் பிரச்சனைகளிலிருந்தும்
மீள முடியும். அதற்குத் தேவையானது அதற்கொப்ப அங்குள்ள அரசியல் நிர்வாக சட்ட முறைமைகளை
மாற்றி அமைப்பதுதான்.
நாட்டிலுள்ள மக்கள் யாவருக்கும்
சமமான சட்ட முறைகளை உருவாக்காமல் பாகுபாடான சட்ட முறைமைகளைத் தொடர்ந்து முன்னெடுத்து
மீண்டும் இலங்கை தன்னை மீட்க முயற்சித்தால் அது மாபெரும் தொல்வியில் சென்றுதான் முடியும்.
இலங்கை தன் சீரழிவிலிருந்து
சொல்லும் சேதி ஒன்றுதான். நாட்டிலுள்ள அனைத்து மக்களையும் பாகுபாடின்றி அரவணைத்துச்
செல்லுங்கள் என்பதுதான் அது சொல்லத் துடிக்கும் சேதி.
தங்கள் நாடு தங்களைப் பாகுபாடற்ற
முறையில் அரவணைத்துச் செல்கிறது என்பதை மக்கள் உணரத் தலைப்பட்டு விட்டால் தங்கள் நாட்டுக்காக
மக்கள் எதைச் செய்யவும் தயாராக இருப்பார்கள். அப்போது சீரழிவிலிருந்து தங்கள் நாட்டை
மீட்க தங்கள் உயிரைக் கொடுக்கவும் தயாராக இருப்பார்கள். உயிர் கூட பெரிதில்லை எனும்
போது தங்கள் நாட்டின் வளர்ச்சிக்காக எப்படி உழைக்கவும் அவர்கள் தயார் நிலையில் இருப்பார்கள்.
அப்படி ஒரு முறை செய்து காப்பாற்றும்
தலைவரைத்தான் இலங்கை எதிர்பார்க்கிறது. அப்படி ஒரு தலைமை இலங்கையில் உருவானால் அது
இப்போதைக்கு மட்டுமல்லாது எப்போதைக்கும் நல்லது. இல்லையென்றால் அப்படியொரு தலைமையை
உருவாக்கும் வரையிலும் மக்களும் தங்கள் போராட்டங்களைத் தொடர்ந்து முன்னெடுத்துக் கொண்டிருப்பது
தவிர்க்க முடியாததாகி விடும்.
இலங்கையின் போராட்டங்கள்
உடனடியாக முடிவுக்கு வருவதும், தொடர்ந்து கொண்டிருப்பதும் ஆட்சி முறைமைகளிலும் நிர்வாக
நடைமுறைகளிலும் செய்யும் மாற்றங்களில்தான் அடங்கியிருக்கிறது.
*****
No comments:
Post a Comment