கால இயந்திரத்துப் புத்தகங்கள்
1990 லிருந்து 2000 வரையிலான
காலக் கட்டத்தில் வெளிவந்த சில புத்தகங்களைப் படிக்கும் சூழ்நிலை ஏற்பட்டு விட்டது.
அந்தக் காலக் கட்டத்தில்
சமையல் குறிப்புகள் தொடங்கி விண்வெளிக் குறிப்புகள் வரை நிறைய நூல்கள் வெளிவந்துள்ளன.
‘சுலபமாக நீங்களே ராக்கெட் செய்வது எப்படி?’ என்ற தலைப்பில் கூட புத்தகம் வெளிவந்திருக்கிறது.
அநேகமாக அந்தக் காலக் கட்டம்
புத்தக வெளியீட்டின் பொற்காலமாக இருந்திருக்க வேண்டும். அப்படி வெளிவந்த புத்தகங்களில்
‘ஒரு நூறு ஊறுகாய் ரகசியங்கள்’ என்ற புத்தகம் என்னைக் கவர்வதாக இருந்தது.
சமையல் குறிப்பில் பெரும்பாலும்
ஊறுகாய் தயாரிப்பு குறித்தும் வந்து விடும். இருந்த போதிலும் ஊறுகாய்க்காகத் தனித்து
வெளிவந்த புத்தகம் அதுவாகத்தான் இருக்கும். ஊறுகாயின் தனித்துவம் என்னவென்றால் உணவு
சுவையாக இல்லாவிட்டாலும் சுவையாக இல்லாத உணவையும் ஊறுகாய் சுவையானதாக ஆக்கி விடும்.
அது போல அந்தக் காலத்தின் சுவாரசியமற்ற பல புத்தகங்களுக்கு மத்தியில் இந்தப் புத்தகம்
எனக்கு வெகு சுவாரசியம் தருவதாக அமைந்தது.
நீங்கள் எந்தப் பொருளையும்
ஊறுகாய் ஆக்க முடியும். அதற்குத் தேவை அந்தப் பொருளும் உப்பும்தான். உப்பிட்டவரை மனிதர்கள்
உள்ளளவும் நினைக்காது போனாலும் அந்தப் பொருட்கள் நினைக்கின்றன. உப்பிட்ட பொருளில் எப்போதும்
உப்பு இருந்து நினைக்க வைக்கிறது. அதுதான் பொருள்களுக்கும் மனிதர்களுக்கும் உள்ள வேறுபாடு
என்று நினைக்கிறேன்.
கருவாடு என்பது ஊறுகாயின்
அசைவ வடிவம். பெரும்பாலான ஊறுகாய் வடிவங்கள் சைவ வடிவங்கள். அந்த நூல் உப்புக்கண்டம்,
கருவாடு போன்ற அசைவ வடிவங்களுக்கும் முக்கியத்துவம் தந்து எழுதியிருந்தது எனக்குப்
பிடித்திருந்தது.
உப்பு எந்த அளவுக்குப் போராட்டத்திலும்
முக்கியத்துவம் பெற்றிருந்தது என்பதை அறிவதற்கு நீங்கள் இந்திய சுதந்திரப் போராட்டத்தைப்
படித்துப் பார்க்க வேண்டும். காந்தியடிகள் உப்பை அடிப்படையாகக் கொண்டு உப்புச் சத்தியாகிரகப்
போராட்டத்தை நடத்தியிருக்கிறார்.
தமிழ்நாட்டிலும் வேதாரண்ய
உப்புச் சத்தியாகிரகப் போராட்டம் முக்கியமானது.
டூத்பேஸ்ட் தயாரிப்பாளர்கள்
உப்பின் முக்கியத்துவத்தை அறிந்து உங்கள் டூத்பேஸ்ட்டில் உப்பு இருக்கிறதா என்று கேட்க
ஆரம்பித்திருப்பதை நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அதற்கு அடுத்தாற்போல உப்பின்
முக்கியத்துவத்தை நமக்கு எடுத்துச் சொல்பவை என்றால் நானறிந்த வரை ஊறுகாய்கள்தான்.
ஊறுகாயும் உப்பும் நகமும்
சதையும் போல, அலையும் கடலும் போல, உயிரும் உடலும் போல. ஒன்றின்றி இன்னொன்று இல்லை.
இரண்டும் இணைந்திருக்கும் போதுதான் எவ்வளவு ருசி. அது போல இல்வாழ்க்கையில் கணவனும்
மனைவியும் இணைந்திருக்கும் போதுதான் வாழ்க்கையிலும் ருசி என்று கவிதை எழுதும் அளவுக்கு
என் மனம் முன்னேறியதை அந்தப் புத்தக வாசிப்பில் உணர முடிந்தது.
அப்புறம் அந்தப் புத்தகத்திலிருந்து
இன்னொரு அவதானிப்பு.
அந்தக் காலத்துப் புத்தகங்கள்
பெரும்பாலானவற்றில் முன்னுரையில் ஒரு வெண்பாவைக் காண முடிந்தது.
அப்போது வெண்பா எழுதுவதை
ஒரு டிரென்டாக வைத்துள்ளனர். நல்ல தெளிவாகத்தான் இருந்தது முன்னுரை. கடைசியில் நான்கடி
வெண்பாவையும் சேர்த்து எழுதியிருந்தனர். அது எதற்கு கூடுதல் புரிதலுக்காவா? அல்லது
தனக்கு வெண்பாவும் எழுத வரும் என்பதைக் காட்டுவதற்காவா? என்று யோசித்துப் பார்க்கிறேன்.
எனக்கு முன்னுரை புரிந்த
அளவுக்கு வெண்பா புரியவில்லை. அறிவாய் உப்பை உண்டு என்பது போல முடித்திருந்தனர். உப்பை
உண்டு அறிவாய் என்று அதை நேரடியாகவே சொல்லியிருக்கலாம் என்பது போலத் தோன்றியது. வெண்பா
என்றால் அப்படித்தான் எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.
நீங்களும் அந்தக் காலக் கட்டத்தில்
வெளிவந்துள்ள பல நூல்களைப் படித்துப் பாருங்கள். பழைய புத்தகக் கடைகளில் அந்தப் புத்தகங்கள்
நிறைய கிடைக்கின்றன. அந்தக் காலத்துப் புத்தகங்களைப் படிக்கும் போது கால இயந்திரத்தில்
பயணிப்பது போல இருந்தது. உங்களுக்கும் பொழுது போக நல்ல உத்திரவாதம்.
என்னைப் போல நீங்களும் ஏதாவது
ஒரு புத்தகத்தைப் படித்து விட்டு உங்கள் கருத்துகளைக் கிழே உள்ள கருத்துப் பெட்டியில்
எழுதுவீர்கள் என்று காத்திருக்கிறேன்.
எனக்கென்னவோ வரலாற்றில் அந்தப்
புத்தகக் காலம் அதிகம் பதிவு செய்யப்படாமல் போய் விட்டது போன்ற உணர்வு அதிகம் எழுந்து
கொண்டிருக்கிறது. என் ஆற்றாமை உணர்வைத் தணிக்க நீங்களும் நானும் இணைந்து செயல்பட வேண்டியது
அவசியம் என்று நினைக்கிறேன்.
*****
No comments:
Post a Comment