நான் முதன் முதலில் நகைக்கடைக்குச் சென்ற தினம்
அட்சய திரிதியை என்றால் நகை
கடைகளுக்கு வாழை மரங்கள் வரை கட்டி வரவேற்பு வழங்குகிறார்கள். நான் வாங்கும் நாளில்
எல்லாம் சாதாரண வரவேற்புதான்.
பரவாயில்லை கிராமுக்கு பத்தோ
இருபதோ குறைத்துக் கொண்டால் கூட போதும். வாங்கிக் கொண்டு போகும் வழியில் ஒரு டீயோ,
டிபனோ சாப்பிட்டுக் கொள்வேன்.
ஒட்ட துடைத்து அனுப்பினால்
வெறும் வயிற்றோடு வீடு திரும்பல்தான். வீடு திரும்பல் என்பது சாதாரணமா என்ன? வாங்குபவரின்
வயிறு நிறைந்தால் அமோக வியாபாரம் செய்யப் போவது கடைக்காரர்களே!
*
அட்சய திரிதியை தினத்துக்கு
நிறைய சிறப்புகள் இருக்கின்றன.
ஊழியில் அழிந்த உலகத்தை இறைவன்
படைத்த தினம்
இந்தத் தினம்தான்
திருமாலின் திருமார்பில்
திருமகள் நீங்காதிருக்கும்
வரம் பெற்ற தினம்
இந்தத் தினம்தான்
வியாசர் சொல்ல விநாயகர் மகாபாரதத்தை
எழுதிய தினம்
இந்தத் தினம்தான்
அவல் கொடுத்த குசேலரைக் கிருஷ்ணர்
குபேரனாக்கிய தினம்
இந்தத் தினம்தான்
கங்கை பூமிக்கு வந்த தினம்
இந்தத் தினம்தான்
பாண்டவர்கள் அட்சய பாத்திரம்
பெற்ற தினம்
இந்தத் தினம்தான்
முக்கியமான ஒரு சங்கதி விடுபட்டிருக்கிறது
பாருங்கள்
நான் முதன் முதலில்
நகைக்கடைக்கு அழைத்துச் செல்லப்பட்ட
தினம்
இந்தத் தினம்தான்
அட்சய திரிதியை யாரால் மறக்க
முடியும் சொல்லுங்கள்
அட்சய திரிதியை வருகிறது
என்று தெரிந்தால்
ஒரு வாரத்திற்கு முன்பே
கந்துவட்டி கந்தசாமியிடம்
அட்வான்ஸ் புக்கிங்கில்
ஓடிக் கொண்டிருக்கிறது வாழ்க்கை
*****
No comments:
Post a Comment