25 May 2022

சோடையாகிப் போன உளுந்தும் பயிறும்

சோடையாகிப் போன உளுந்தும் பயிறும்

            நெல் விவசாயம் குடை அடித்தாலும் உளுந்து பயிறு தூக்கி விட்டு விடும் என்பார்கள். டெல்டா மாவட்டங்களில் வறட்சியோ, பெருமழையோ, புயல் காற்றோ, வெள்ளப் பெருக்கோ நெல்லை பாதிக்கும் வாய்ப்புகள் அதிகம்.

            உளுந்து, பயிறு பயிரிடும் காலங்களில் பெருமழைக்கோ, புயல் காற்றுக்கோ, வெள்ளப் பெருக்கிற்கோ வாய்ப்பில்லை. எவ்வளவு வறட்சி என்றாலும் உளுந்தும் பயிறும் செழித்து வளரும்.

            நெல் விவசாயத்தில் பார்க்க முடியாத லாபத்தை உளுந்து, பயிறு விவசாயத்தில் பார்க்க முடியும். உளுந்து பயிறு என்பது கடைமடை டெல்டா விவசாயிகளுக்குச் செலவினம் இல்லாத பயிர்.

            சம்பாவோ, தாளடியோ முற்றிய நிலையில் இருக்கும் போது ஒரு படி உளுந்தையோ, பயிரையோ ஒரு மாவுக்கு கைக்கு வந்த வாக்குக்குத் தெளித்து விட்டு வந்தால் போதும். அறுவடையை முடித்து விட்டு இரண்டு மாதங்கள் கழித்துச் சென்றால் உளுந்து பயிறோடு வீடு திரும்பலாம். வெறெந்த வகையிலும் உளுந்து, பயிறில் செலவு கிடையாது.

            இதெல்லாம் சில பத்தாண்டுகளுக்கு முன்பு நடந்த கதை. இப்போது நடக்கும் கதை வேறு. உளுந்து பயிரைத் தெளித்து விட்டு அது செழித்து வளர வேண்டும் என்று ரசாயன மருந்துகள் அடிக்கும் கதை இப்போது நடந்து கொண்டிருக்கிறது.

            உளுந்து பயிறுக்கு மருந்தா என்று ஆச்சரியப்பட்டு தரக்குறைவாகப் பேசியவர்கள் கூட ரசாயன மருந்தில் விளைந்த விளைச்சலைப் பார்த்து விட்டு அதற்கு மாறினார்கள். எல்லாம் இரண்டு மூன்று வருடங்கள்தான்.

            ரசாயன மருந்துகள் அதற்குப் பிறகு தன் வேலையைக் காட்ட ஆரம்பித்தன. புதுப்புது பூச்சிகளை உற்பத்தி செய்து அழைத்து வந்தன. பூச்சிகளை அழிப்பதற்காக மற்றொரு ரசாயன மருந்து விற்பனைக்கு வந்தது. பூ பூக்கும் பருவங்களில் பூத்ததெல்லாம் உதிர ஆரம்பித்தன. பூக்கள் உதிராமல் இருப்பதற்கு ஒரு ரசாயன மருந்து வயல் தேடி வந்தது.

            ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு ரசாயன மருந்து உளுந்து பயிரைத் தேடி வரும் வழக்கம் அதன் பின் ஆரம்பித்தது. சரியாக உளுந்து, பயிறு விளையாததற்கு இதுதான் காரணம், அதுதான் காரணம் என்று விதவிதமான காரணங்களைக் கற்பித்து ஒவ்வொரு காரணத்துக்கும் ஒவ்வொரு மருந்தையும் விருந்தாளிகளைப் போல மருந்து கம்பெனிகளும் வியாபாரிகளும் அழைத்து வந்த வண்ணம் இருந்தனர்.

            விவசாயிகளும் ஓகோ அதுதான் காரணமாக இருக்குமோ என்று அவர்கள் சொன்ன மருந்துகளையெல்லாம் கடன்பட்டாவது வாங்கித் தெளித்தனர். வாங்கிய கடனைச் செலுத்த முடியாத நிலை வந்த போது பயிருக்குத் தெளித்த அந்த மருந்தை உயிருக்கும் தெளித்துப் பார்த்தனர். பயிருக்குச் செயல்படாத மருந்து உயிருக்கு நன்றாகவே செயல்பட்டது. விவசாயிகள் கடன் தொல்லையிலிருந்து விடுபட்டுப் பரலோகம் செல்ல ஆரம்பித்தது அதன் பிறகுதான்.

            உளுந்து பயிறில் ரசாயன மருந்துகளைத் தெளிக்க ஆரம்பித்த காலந்தொட்டு ஒவ்வோர் ஆண்டும் ஒவ்வொரு விதமான பிரச்சனைகள். சில ஆண்டுகளில் உளுந்து மற்றும் பயிறு செடிகள் வெறும் காம்புகளோடு நின்றன. சில ஆண்டுகளில் பூத்துக் காய்க்காமல் நின்றன. சில ஆண்டுகள் தளதளவென்று வளர்ந்து மலட்டுத் தன்மையோடு மதார்ந்து நின்றன. இந்த ஆண்டோ காயெல்லாம் வைத்து சோடையாகி நின்றன.

            நெல் விவசாயம் என்பது போட்ட பணத்தை எடுக்க முடியுமா என்கிற பருவகால விளையாட்டுதான். உளுந்து பயிறுதான் நெல் விவசாயத்துக்குக் கிடைக்கும் போனஸ் போன்றது. அந்தப் போனஸை வைத்து மகளுக்குக் கொலுசு வாங்கிப் போட்டவர்கள், வீட்டில் கிரைண்டர், மிக்ஸ், டிவி வாங்கி வைத்தவர்களின் கதைகளை நீங்கள் டெல்டா மாவட்டங்கள் முழுவதும் கேட்கலாம்.

            இனிமேல் கேட்க முடியுமா என்று தெரியவில்லை. அதனால்தான் இலவச கிரைண்டர், மிக்ஸி, டிவி எல்லாம் கொடுத்து அந்தக் கவலையை இல்லாமல் அடித்து விட்டார்களே அரசியல்வாதிகள்.

            உளுந்து பயிறு லாபத்தை வைத்து பிள்ளைகளுக்குக் கல்யாணம் கதைகளும் உண்டு. அந்த வகையில் தை பிறந்தால் அல்ல சித்திரை பிறந்தால் வழி பிறந்த கதைகளை உளுந்து பயிறுகள் நிகழ்த்திக் கொண்டிருந்தன.

            தெளித்த உளுந்து பயிறாவது வீடு வந்து சேருமா என்று எதிர்பார்ப்பது எவ்வளவு மோசமான தாழ்நிலை. சோடைகளாய்ப் போன உளுந்து, பயிறை செலவு செய்து எடுத்து அடிப்பதை விட அப்படியே ஆடு, மாடுகளுக்கு உணவாக்கி விடுவது கையிலிருக்கும் காசுக்குப் பாதுகாப்பு என்ற முடிவில் டெல்டா விவசாயிகள் உளுந்து, பயிறை அப்படியே விட்டு விட்டார்கள் இந்த ஆண்டில்.

            வீட்டிற்குத் திரும்பாமல் உளுந்தும் பயிறும் ஆடு மாடுகளுக்கும் உணவாகிக் கொண்டு இருக்கின்றன. இனிமேல் அவர்கள் ஒரு பிடி உளுந்தானாலும் பயிறானாலும் கடைகளில் வாங்கிக் கொள்ள வேண்டும். கடைகளில்தான் உளுந்தும் பயிறும் ஆண்டு முழுவதும் விளைந்து கொண்டே இருக்கிறதே. வயல்களில்தான் விளைய மறுக்கின்றன.

*****

No comments:

Post a Comment

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...