9 Jan 2022

தொடர்மழைப் பெய்வதாகச் சொல்பவர்கள்

தொடர்மழைப் பெய்வதாகச் சொல்பவர்கள்

இன்றொரு நாள் சிறு பொழுது

வெயிலுக்கு வாய்ப்பிருக்குமா என்று பார்க்கிறேன்

வானம் மழையைக் கொட்டியபடி இருக்கிறது

மனவெளியெங்கும் நசநசத்துக் கிடக்கிறது

பள்ளங்கள் ஏதுமின்றிச் சாலை நிரம்பியிருக்கிறது

குடைகள் விரிய அடியில் கவிந்து கிடக்கிறது இருள்

தொடர்ந்து வரும் நாட்களில் நிற்காது பொழியும் மழை

கடந்த காலத்தின் கறைகளை அடித்துக் கொண்டோடுகிறது

மரங்களில் ஒதுங்கியிருக்கும் பறவைகள்

நிமிடத்திருக்கொரு முறை சிலுப்பியபடி

மழைநீரைக் கொத்தியபடி அமர்ந்திருக்கின்றன

காயாத ஆடைகளை உலர்த்தியபடி இருக்கும் பெண்கள்

பெய்யெனப் பெய்யும் மழையைச் சபித்தபடி இருக்கிறார்கள்

இன்றொரு நாள் விடுமுறை எடுத்துக் கொள்ளும் நினைப்பில்

அலைபேசி  அழைப்பு மண்ணள்ளிப் போடுகிறது

கனமழையைப் பொருட்படுத்தாமல் மழைக்குள் நுழைகையில்

மழைக்குள் இயங்கும் உலகம் ஒரு பேருண்மையைப் பேசுகிறது

மழையின் போக்குக்கு மழை பொழிந்து கொண்டிருக்கிறது

வேலையின் போக்குக்கு வேலைகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன

மழையோடு மழையாகி விடுபவர்களுக்கு நனைதல் ஒரு பொருட்டில்லை

மழையை வேடிக்கைப் பார்த்து அலுத்துப் போனவர்கள்

தொடர் மழை பெய்து கொண்டிருப்பதாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்

*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...