6 Jan 2022

நீர் மேல் செல்லும் வாகனங்கள்

நீர் மேல் செல்லும் வாகனங்கள்

சாலையில் செல்லும் இரு சக்கர வாகனம்

பெருக்கெடுக்கும் நீர் மேல் செல்லத் தொடங்குகிறது

மஞ்சளும் பழுப்புமாய் வெள்ளநீர்

திடீரெனப் பச்சையாய் உருமாறி ஆறெனப் பெருக்கெடுக்கிறது

தண்ணீரில் செல்லும் போது

விசையை முறுக்கியபடிச் செல்லுங்கள் என்ற

எச்சரிக்கை வாசகம் எங்கும் கேட்கிறது

இதற்கு மேல் நீர் மேல் பயணம் இயலாதென திரும்ப எத்தனிக்கையில்

எங்கே தொடங்குகிறது எங்கே முடிகிறது எனப் புரியாத

பெருவெளியாய் கடலைப் போலச் சூழ்கிறது நீர்

பயணித்துக் கொண்டிருப்பதைத் தவிர

வேறு வழியில்லை என்ற அறிவிப்பு கேட்க தொடங்குகிறது

பின்னால் அமர்ந்திருப்பவர்கள் முன்னால் இருப்பவர்களைக்

கெட்டியாகப் பிடித்துக் கொள்ளுங்கள் என்ற கரிசன வார்த்தைகளை

அருகருகே சென்று கொண்டிருப்பவர்கள் உதிர்க்கிறார்கள்

எரிபொருள் தீரும் வரை இயங்கும் வாகனம்

தீர்ந்த பின் நீரின் போக்கில் அடித்துச் செல்லப்படுவதும்

பயணத்தின் தொடர்ச்சியாகப் பதியப்படலாம்

தரையில் தொடங்கி நீர்ச்சுழலில் சிக்குவதாய்

ஒவ்வொரு நாளின் பயணத்தின் முடிவிலும்

எப்படித் தப்பித்து எங்கே கரையேறி

மறுநாள் பயணத்தைத் துவங்குகிறேன் என்பதை

அறிந்து கொள்வதற்குள் கனவுகள் முடிந்து விடுகின்றன

மறுநாள் கனவுகள் வழக்கம் போல்

சாலை மேல் செல்லும் வாகனங்கள்

நீர் மேல் செல்லப் போகும் படகுகளாய் மாறத் தொடங்குகின்றன

விசையை முடுக்கியபடி நீரில் செல்கின்றன வாகனங்கள்

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...