ஆங்கிலப் புத்தாண்டின் அரசியல்
ஒவ்வொரு
புத்தாண்டிலும் ஒரு உறுதிமொழி எடுத்துக் கொள்வதை உங்களில் ஒரு சிலர் ஒரு பழக்கமாக வைத்திருக்கலாம்.
அப்படிப்பட்ட சிலர் என்னைச் சந்திக்கையில் இந்தப் புத்தாண்டில் என்ன உறுதிமொழி எடுத்திருக்கிறீர்கள்
என்று என்னைக் கேட்பதுண்டு.
ஒவ்வொரு
புத்தாண்டிலும் ஜனவரியில் ஒரு உறுதிமொழி எடுத்து அதை பிப்ரவரியில் கடாசி விட்டுப் போவது
ஒரு வழக்கமாகி விட்டதால் இந்தப் புத்தாண்டில் புத்தாண்டின் பின் இருக்கும் அரசியலை
அறிந்து கொள்வது என்று உறுதிமொழி எடுத்தேன். அதன் அடிப்படையில் ஆங்கிலப் புத்தாண்டைப்
பற்றித் தேடத் தேட பல சுவாரசியமான செய்திகள் சிக்கின. அந்தச் சுவாரசியமான செய்திகளைத்
தொகுத்துப் பார்த்த போது இவ்வளவு தரமான சம்பவங்கள் கிடைத்தன. இனி அந்தத் தரமான சம்பவங்கள்.
மனித மனதுதான் புத்தாண்டையும் காலண்டரையும் எப்படியெல்லாம் ஆட்டிப் படைத்திருக்கிறது
என்று பாருங்கள்.
ஒரு
சில புத்தாண்டுகள் ஏப்ரல் மாதத்தில் அமைந்திருப்பதை நீங்கள் கவனிக்கலாம். தமிழ்ப் புத்தாண்டின்
சித்திரை முதல் நாள் ஏப்ரல் மாதத்தில் வரும். யுகாதி எனும் தெலுங்கு மற்றும் கன்னட
புத்தாண்டும் ஏப்ரல் மாதத்தில் வருவதை நோக்கலாம். ஒரு காலத்தில் ஆங்கிலப் புத்தாண்டும்
ஏப்ரல் மாதத்தில் இருந்ததாக ஒரு கருத்தும் நிலவுகிறது.
பதினைந்தாம்
நூற்றாண்டு போப்பாண்டவர் ஒருவர்தான் ஆங்கிலப் புத்தாண்டை ஏப்ரலில் இருந்து ஜனவரிக்கு
மாற்றியதாக ஒரு கதையும் நிலவுகிறது. இம்மாற்றத்தை ஒரு சாரார் ஏற்றிருக்கிறார்கள். பிறிதொரு
சாரர் ஏற்றுக் கொள்ள மறுத்திருக்கின்றனர். ஏற்றுக்கொள்ளாத பிறிதொரு சாரரைக் கிண்டலடிக்கும்
வகையில் ஏப்ரல் 1 ஐ முட்டாள்தினமாகவும் கூறியிருக்கிறார்கள் அப்போது.
இலத்தீன்
மொழிச் சொல்லான ‘ஏப்ரலிஸ்’ என்பதிலிருந்துதான் ஏப்ரல் என்ற மாதம் உருவாகியிருக்கிறது.
‘ஏப்ரலிஸ்’ என்ற சொல்லுக்குத் திறப்பது என்று அர்த்தமாம். ஆக ஆண்டைத் திறப்பது அதாவது
புத்தாண்டைத் தொடக்குவது என்ற பொருள் ஏப்ரல் மாதத்துக்கு ஒத்து வருகிறது. இதே போல்
ஒவ்வொரு ஆங்கில மாதத்துக்கும் ஒரு பின்புலம் இருக்கவே செய்கிறது.
ஜனவரி
மாதம் ‘ஜானஸ்’ என்ற உரோமக் கடவுளின் பெயரால் உண்டாக்கப்பட்டிருக்கிறது.
பிப்ரவரி
மாதம் ‘பிப்ரேரியஸ்’ என்ற உரோமத் திருவிழாவின் நினைவாக உருவாக்கப்பட்டிருக்கிறது.
மார்ச்
மாதம் ‘மார்ஸ்’ என்ற உரோமக் கடவுளின் பெயரால் உண்டாக்கப்பட்டிருக்கிறது.
ஏப்ரல்
மாதத்தைப் பற்றித்தான் முன்பே பார்த்து விட்டோமே.
மே
மாதம் ‘மேயஸ்’ என்ற கிரேக்கக் கடவுளின் பெயரால் உண்டாக்கப்பட்டிருக்கிறது.
ஜூன்
மாதம் ‘ஜூனோ’ என்ற உரோமப் பெண் கடவுளின் பெயரால் உண்டாக்கப்பட்டிருக்கிறது.
ஜூலை
மாதம் என்பது தனது பெயரை நிலைநாட்டிக் கொள்ள ஜூலியஸ் ஸீஸர் உண்டாக்கிக் கொண்டது.
ஆகஸ்ட்
மாதமும் அப்படியே. அகஸ்டஸ் ஸீஸர் தம் பெயரை நிலைநாட்டிக் கொள்ள உண்டாக்கிக் கொண்டது.
செப்டம்பர்,
அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய நான்கு மாதங்களும் ஏழு, எட்டு, ஒன்பது, பத்து என்ற
இலத்தீன் எண்களிலிருந்து எடுக்கப்பட்டவை. அதாவது ஜனவரியிலிருந்து கணக்கில் எடுத்துக்
கொண்டால் ஜூலையும் ஆகஸ்ட்டும் சேர்க்கப்படாத காலத்தில் செப்டம்பர் ஏழாவது மாதம் ஆகும்.
இம்மாதமானது ஏழு என்பதைக் குறிக்கும் ‘செப்டம்’ என்ற இலத்தீன் சொல்லிருந்து உருவாக்கப்பட்டது.
அதே போல் அக்டோபர் எட்டாவது மாதம் ஆகையால் அது எட்டு
என்பதைக் குறிக்கும் ‘ஆக்டோ’ என்ற இலத்தீன் சொல்லிலிருந்து உருவாக்கப்பட்டது.
அதே வகைமையில் ஒன்பதாவது மாதமாக ஒன்பது என்பதைக்
குறிக்கும் ‘நவம்’ என்ற இலத்தீன் சொல்லிலிருந்து நவம்பர் மாதம் உருவாக்கப்பட்டது.
பத்தாவது மாதமாகப் பத்தைக் குறிக்கும் ‘டிசம்’ என்ற
இலத்தீன் சொல்லிலிருந்து டிசம்பர் மாதம் உருவாக்கப்பட்டது. இந்த வரிசை முறை மாறியதற்குக்
காரணம் இடையில் இரு ஸீஸர் மன்னர்களால் புகுத்தப்பட்ட ஜூலை, ஆகஸ்ட் என்ற மாதங்களே ஆகும்.
இதனால் ஏழாவது மாதமாக இருந்த செப்டம்பர் ஒன்பதாவது மாதமாகவும்., எட்டாவது மாதமாக இருந்த
அக்டோபர் பத்தாவது மாதமாகவும், ஒன்பதாவது மாதமாக இருந்த நவம்பர் பதினோறாவது மாதமாகவும்,
பத்தாவது மாதமாக இருந்த டிசம்பர் பனிரெண்டாவது மாதமாகவும் மாற வேண்டியதாகி விட்டது.
ஆங்கில மாதங்களின் நாட்களை நிர்ணயம் செய்ததிலும்
ஒரு பெரும் அரசியல் ஒளிந்திருக்கிறது. ஆரம்ப காலங்களில் ஜனவரி முதல் டிசம்பர் வரையுள்ள
அத்தனை மாதங்களும் 31 நாள்கள், 30 நாள்கள் என்று மாறி மாறியே அமைந்திருந்திருக்கின்றன.
இதன்படி ஜூலை மாதத்திற்கு இருந்த 30 நாளை ஜூலியஸ் ஸீஸர் ஏற்றுக் கொள்ளவில்லை. தனது பெயரால்
அமைந்த ஜூலை மாதத்திற்கு 31 நாட்கள் வேண்டுமென்ற ஆசையில் பிப்ரவரி மாதத்திலிருந்து
ஒரு நாளைப் பிடுங்கி அவரது பெயரில் உள்ள ஜூலை மாதத்தை 31 நாட்களாக்கினார். இதே வேலையைத்
தனது பெயரில் இருந்த ஆகஸ்ட் மாதத்திற்கும் அகஸ்டஸ் ஸீஸர் செய்தார். விளைவு 30 நாட்களாக
இருந்த பிப்ரவரி மாதம் 2 நாட்களை இழந்து 28 நாட்களாக ஆனது.
இப்படி
உருவான இந்தக் காலண்டர் முறையை ‘கிரீகோரியன்’ (Gregorian) காலண்டர் என்கிறார்கள். ஆங்கில
காலண்டர் உருவானதில் இவ்வளவு சுவாரசியங்கள் இருக்கின்றன என்பதை எண்ணிப் பார்க்கும்
போது ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா!
*****
No comments:
Post a Comment