19 Jan 2022

இயற்கையைப் போற்றுதும்!

இயற்கையைப் போற்றுதும்!

            அதிகமாகப் பெய்தாலும், குறைவாகப் பெய்தாலும், மிதமாகப் பெய்தாலும் மழை வரம். வள்ளுவர் மழையை ‘வான்சிறப்பு’ என்கிறார். இளங்கோ மழையை ‘மாமழைப் போற்றுதும்’ எனப் போற்றுகிறார்.

            ஒவ்வொரு பத்தாண்டுக்கு ஒரு முறை காலநிலை வேறு விதமாக மாறுகிறது. இதனால் வறட்சியோடு பத்தாண்டுகளை எதிர்கொண்டால் அடுத்த பத்தாண்டுகளை வெள்ளத்தோடு எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

            வறட்சிக்கும் வெள்ளத்துக்கும் மழைநீர்ச் சேகரிப்புக் கட்டமைப்புகள் நல்ல தீர்வு. நாம் நினைப்பது போல வீட்டுக்கு வீடு காங்கிரீட்டையும் ப்ளாஸ்டிக் குழாய்களையும் கொண்டும் அமைக்கும் மழை நீர் சேமிப்பு அமைப்புகளை மழைநீர்ச் சேமிப்பு கட்டமைப்புகள் என்று சொல்ல இயலாது. அது நாமும் மழை நீரைச் சேமிக்கிறோம் என்ற விளம்பரத்திற்கான ஒரு முயற்சி.

            உண்மையான மழை நீர்ச் சேமிப்புக் கட்டமைப்புகள் நம்மைச் சுற்றியுள்ள நீர்நிலைகளும் அவற்றின் வழித்தடங்களும்தான். நீர் நிலைகளை ஆக்கிரமிக்காமலும் அவற்றன் வழித்தடங்களை மறிக்காமலும் இருப்பது மழைநீர் சேமிப்புக்கு நாம் செய்யும் மகத்தான பங்களிப்பாகும்.

            நம்மளவில் மழை நீர் சேமிப்புக்கு நாம் செய்ய வேண்டியது என்னவென்றால் காங்கிரீட் கட்டமைப்புகளை அதிகம் உருவாக்காமல் இருப்பதுதான். நமது காங்கிரீட் கட்டமைப்புகள் மழை நீருக்கும் மண்ணுக்குமான உறவை அழிக்கின்றன. தண்ணீரைத் தேங்கச் செய்து வெள்ளக்காடாக மாற்றுகின்றன. நமக்கு எவ்வளவு தேவையோ அவ்வளவு காங்கிரீட் கட்டமைப்புகள் போதும்.

            வீட்டைச் சுற்றி நடக்கும் போது கால்கள் சேறாகும் என்பதற்காக மண்தளத்தைச் சிமெண்ட் தளமாக்க வேண்டிய அவசியம் இல்லை. நமது தவறு அங்கிருந்ததான் ஆரம்பிக்கின்றது. மண் படாத பாதங்களுக்காக சிமெண்டையும் காங்கிரீட்டையும் கொண்டு நாம் உருவாக்கும் கட்டமைப்புகள் மழை நீர் சேமிப்புக்கு எதிராகப் போய் விடுகின்றன.

            எவ்வளவு அதிகமாக மழை பெய்தாலும் அது நமக்குத் தேவைதான். வடிகாலுக்கான கட்டமைப்புகளை நாம் வேரறுத்து விட்டதன் காரணமாக மிகு மழை நீர் வெள்ளக்காடாக மாறி அச்சுறுத்துகிறது. சாதாரண மழைக்கே நகரச் சாலைகளில் மழை நீர் ஆறாக ஓடுகிறது. வாகனங்கள் வெள்ளத்தில் நீந்துகின்றன. போக்குவரத்து நிலைகுழைகிறது. வேலைக்கு வீடு சென்றோர் வீடு திரும்புவது கேள்விக்குரியதாகிறது.

            மழையை முன்கூட்டியே கணிப்பதால் சில இடர்பாடுகளையும் பேரிடர்களையும் தணிக்க முடியும் என்ற ஒரு கருத்தும் சொல்லப்படுகிறது. எந்த முன்னேற்பான கட்டமைப்புகளும் இல்லாமல் எதைக் கணித்தும் எதுவும் செய்ய முடியாது.

            எவ்வளவு மழை பொழிந்தாலும் அது ஒரு பெரிய பிரச்சனை இல்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் அவ்வளவு நீரும் நமக்குத் தேவை. நமது குடிநீர், அன்றாடத் தேவை, விவசாயத் தேவை, தொழில்துறைத் தேவை என்று அனைத்திற்கும் அவ்வளவு நீரும் தேவைதான்.

நாம் மழை நீர் வடிவதற்கும் சேமிப்பதற்கும் உரிய கட்டமைப்புகளோடு இருந்தால் மழைநீரால் நாம் பெறப்போகும் பயன் அளப்பரியது. அதற்காக நாம் செய்ய வேண்டியது புதிதாக யாதொன்றும் இல்லை. நீரின் தொப்புள்கொடி அறிந்து நம் முன்னோர்கள் வடிவமைத்திருக்கும் ஆறு, குளம், குட்டை, வாய்க்கால், ஏரி ஆகியவற்றின் இருப்பிடங்களையும் வழித்தடங்களையும் கண்டறிந்து மீட்பதுதான்.

விவசாயம் நாம் செய்கிறோமோ இல்லையோ பாசன வாய்க்கால்களையும் வடிகால் வாய்க்கால்களையும் உள்ளது உள்ளபடியே வைத்திருப்பது தலைமுறைக்கு நாம் செய்ய வேண்டிய கடமை. நம்மிடம் இருக்கின்ற கட்டமைப்புக்கு நாம் எந்தவித ஊறும் செய்யாமல் இருந்தால் போதும் மழை எப்போதும் போற்றுதலுக்குரியதாக இருக்கும்.

நமது கட்டமைப்புக்கு நாம் ஊறு செய்தால் மழைநீர் வெள்ளமாகும், மழைநீரும் சாக்கடை நீரும் சிநேகம் கொள்ளும், சாலைகளே வடிகால்களாகும், குடியிருப்புகளே தேங்கி நிற்கும் குளமாகும், மழை பெய்யும் போது நாம் வீடு திரும்புவது மட்டுமல்லாது நாம் வீட்டில் இருப்பதும் கடினமாகும்.

நாம் அறிய வேண்டிய செய்தி ஒன்றிருக்கிறது. இயற்கையை மதித்தால் இயற்கை நம்மை மதிக்கும். மதிக்காது போனால் அது தன் போக்குக்குச் சென்று கொண்டிருக்கும். அதை நம்மால் தாங்க முடியாது. எந்நாளும் பேரிடர்களோடு வாழ்வதைப் பழகிக் கொள்வதைத் தவிர வேறு வழியும் கிடையாது.முடிவு நம் கையில்தான் இருக்கிறது.

*****

No comments:

Post a Comment

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...