17 Jan 2022

துணிப்பைக்குள் பாலிதீன் பைகள்

துணிப்பைக்குள் பாலிதீன் பைகள்

            ஒரு துணிப்பைக்குள் இவ்வளவு பாலிதீன் பைகளா? என்ற கேள்வி எவ்வளவு நுட்பமானது! அண்மையில் தமிழக அரசு ‘மஞ்சள் பை’ இயக்கத்தைக் கையிலெடுத்தது. மஞ்சள் பையோடு மக்களோடு மக்களாக முதல்வர் நடக்கும் விளம்பரம்பங்கள் வெளிவந்தன. அதைத் தொடர்ந்து பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது. அப்படி வழங்கப்பட்ட பரிசுத் தொகுப்பில் இருந்த பொருட்கள் பாலிதீன் பைகளில் இருந்ததை நோக்கியே மேலே எழுப்பிய வினா தமிழகமெங்கும் சமூக ஊடகங்களில் உலா வந்தது.

            துணிப்பைகளைத் தயாரிப்பதில் இருந்த நேர நெருக்கடியைக் கருத்தில் கொண்டு அவரவர் சொந்தமாகப் பை எடுத்துக் கொண்டு வந்தும் பொங்கல் பரிசுப் பொருட்களைப் பெற்றுக் கொள்ளலாம் என்ற அறிவிப்பையும் அரசு வெளியிட்டது. துணிப்பைக்கு மாறுவதில் இருக்கும் சிரமத்தையும் துணிப்பைகளின் கையிருப்பில் இருக்கும் பற்றாக்குறையையும் இது காட்டியது. இதுவே பாலிதீன் பைகளில் இட்டு வழங்குவதென்றால் எந்த சிரமும் இருந்ததிருக்காது. அந்த அளவுக்குப் பாலிதீன் பை கையிருப்பில் இருக்கிறது.

            இருபது ஆண்டுகளுக்குள் நிகழ்ந்த மாற்றம் இந்தப் பாலிதீன் கலாச்சாரம். அதற்கு முன்பு மளிகைப் பொருட்கள் அனைத்தும் காகிதப் பொட்டலங்களாகத்தான் இருந்தன. மளிகைக் கடைகளில் காகிதச் சுருள் போட்டுக் கொடுக்கவே ஒரு ஆள் இருப்பார். பல அளவுகளில் காகிதச் சுருள்களைப் போட்டு அவர் தயார் நிலையில் வைத்துக் கொண்டே இருப்பார். காகிதப் போட்டலத்தையும் சுருள்களையும் மெல்லிய சணல் சுற்றியிருக்கும் அந்தக் காலக் காட்சி மெல்லிய நிழலாக மனதில் வந்து படர்ந்து விட்டுப் போகிறது.

            எண்ணெய் வாங்குவதென்றால் அதற்கென ஒயர் கூடையில் போடப்பட்ட பாட்டில்களும் தூக்கு வாளிகளும் தயார் நிலையில் இருக்கும். இப்போது வீடுகளில் பாலிதீன் மற்றும் ப்ளாஸ்டிக் பைகள் அல்லது பாட்டில்களில் வாங்கி வந்து எண்ணெயை ஊற்றி வைப்பதற்குக் கூட கண்ணாடி பாட்டில்களும் தூக்கு வாளிகளும் இல்லை. ஒருமுறை பயன்படுத்தித் தூர எறியும் ப்ளாஸ்டிக் பாட்டில்களில் வாங்கி வந்து அதிலிருந்து அப்படியே பயன்படுத்தித் தூக்கி எறிந்து விடுகிறார்கள்.

            நாம் துணிப்பைக்கு மாறினாலும் துணிப்பையில் வாங்கி வரும் பொருட்களை அடங்கியிருக்கும் பாலிதீனை ஒழிக்க முடியாது போலிருக்கிறது. ஆனாலும் மஞ்சள் பை முன்னெடுப்பு நல்லதொரு முன்முயற்சி. படிப்படியாகத்தான் பாலிதீன் பயன்பாட்டைக் குறைக்க முடியும். அதை நோக்கிய முதல் அடியாகக் கொள்ளத்தக்கது இது.

            பாலிதீன் என்பது நம் அன்றாட வாழ்க்கையின் கலாச்சாராமாக மாறி விட்டது. நாம் பருகும் பால், தேநீர், தண்ணீர் வரை அனைத்தும் அதில்தான் வருகின்றன. குவளைகளில் பால் வாங்கிய காலமெல்லாம் மலையேறி விட்டது எனும் போது பிளாஸ்டிக்கின் பண்பாட்டு வலைக்குள் நாம் நன்றாகச் சிக்கியிருக்கிறோம் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. மெல்ல மெல்ல நாம் ப்ளாஸ்டிக்கிலிருந்தும் பாலிதீனிலிருந்தும் மீள்வது நமது தலைமுறைகளுக்கு நல்லது. அதற்கான முயற்சிகளை மெல்ல மெல்லவேனும் தொடர்வது நாட்டுக்கும் வீட்டுக்கும் இந்தப் பூமிக்கும் மிகவும் இனியது. ஏனென்றால் பாலிதீனிலும் ப்ளாஸ்டிக்கிலும் நாம் வாங்கி வந்து பொருட்களை நம் வயிறு செரித்து விடும். அந்தப் பாலிதீனையும் ப்ளாஸ்டிக்கையும் குப்பைகளாக நாம் வீசி எறியும் போது அவற்றை நம் பூமி செரிக்க வேண்டுமே!

*****

No comments:

Post a Comment

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர்

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர் ஒவ்வொருவரும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான நெறிமுறைகள் வழங்கப்படுகின்றன பெ...