சாத்தியங்களின் தோராய எண்ணிக்கை
சத்த விரும்பிகளுக்காக
வெடிச் சத்தமும் வேட்டுச்
சத்தமும்
விதவிதமாய்க் கேட்டுக் கொண்டிருக்கின்றன
மௌனத்தில் ஆழ்ந்து விட்ட
மலர்களின் இசைக்குறிப்புகளைக்
கேட்க
யாருமின்றி மரங்களின் நடனம்
நின்று போயிருக்கிறது
மனதை பலவிதமாய்ப் பிசைந்து
பார்த்தும்
எதிர்பார்க்கும் வடிவமைப்புத்
தப்பிச் சென்றபடி இருக்கிறது
தன்னைத் தானே தூண்டிக் கொள்ள
நெடுநேரமாய்ப் போராடிக் கொண்டிருக்கும்
ஆற்றாமை
வெளியில் சொல்ல முடியாத தவிப்புகளைத்
தாங்கியபடி
தண்டனைக் கால கொட்டடிகளைக்
கண் முன் நிறுத்துகிறது
உள்ளுக்குள் ஓலமிடும் ஆத்மா
வெளியில் அமைதி காக்கிறது
இன்னும் சிறிது நேரத்தில்
தோற்றுப்போய் ஓட நேரிடலாம்
மௌனத்தின் உளைச்சல்களில்
தொலைந்தவைகளை
ஆரவாரத்தின் இரைச்சல்களில்
தேட முயலாதீர்கள்
சத்தங்கள் அடங்கிய பின் நிசப்தத்தின்
குறிப்பை
எழுதிப் பார்த்து விட்டுச்
சொல்லுங்கள்
வெற்றுத் தாள்களில் வரைய
சாத்தியமிருக்கும்
சித்திரங்களின் தோராய எண்ணிக்கை
எத்தனை என்பதை
*****
No comments:
Post a Comment