யாராகிய நானும் யாராகிய நீயும்
ஒவ்வொரு முறைச் சந்திக்கும்
போதும்
நான் யார் என்பதைக் கண்டுபிடித்து
விட்டாயா என்கிறார்
தொலைந்து விட்ட பொருளைக்
கண்டுபிடிப்பது போல
சாமானியமாக இல்லை என்ற போதும்
நான்தான் நீ நீதான் நான்
என்கிறேன் நான்
நானெப்படி நீயாக முடியும்
நீயெப்படி நானாக முடியும்
நான் நான்தான் நீ நீதான்
என்கிறார் அவர்
ஒவ்வொரு பாகமாய்க் கழித்துக்
கொண்டு போனால்
பொருள் அங்கிருக்குமா என்று
அவர் வினவுகையில்
ஒவ்வோரு பாகமாய்ச் சேர்த்துக்
கொண்டு போனால்
பொருள் அங்கு உருவாகி விடும்
என்கிறேன் நான்
சூன்யத்தை அடைவதைப் பற்றிப்
பேசு என்கிறார் அவர்
இருப்பைப் பேசுவதில் தவறென்ன
என்கிறேன் நான்
உனக்கு ஞானம் வேண்டுமா வேண்டாமா
என்கிறார் முடிவாக அவர்
உங்கள் சரக்கை உங்களிடமே
வைத்துக் கொள்ளுங்கள் என்கிறேன் நான்
அது சரக்கல்ல கொடுக்கவோ பெறவோ
முடியாது என்கிறார் அவர்
பிறகெப்படி உங்களால் விற்பனை
செய்ய முடிகிறது என்றதும்
எதையும் பண்டமாய்ப் பார்ப்பதை
நிறுத்து என்று சத்தமிடுகிறார்
நான் யார் என்பது குறித்து
எனக்கு எந்த பிரச்சனையுமில்லை
நீங்கள் யார் என்பது குறித்துதான்
அச்சமாய் இருக்கிறது என்கிறேன் நான்
சாத்தானின் குழந்தையே இங்கிருந்து
ஓடி விடு என்கிறார் ஓலமிட்டபடி
அன்றொரு நாள் எல்லாரும் கடவுளின்
குழந்தைகள் என்று
நீங்கள் சொன்னது பொய்யா என்கிறேன்
நான்
நான் யார் என்ற கேள்வி அர்த்தமிழந்து
விட்டதைப் போல
அவர் விச்ராந்தியாய்ப் பார்க்கத்
தொடங்குகையில்
நீங்கள் யார் என்பது புரிந்து
விட்டது போலப் புன்னகைக்கிறேன் நான்
*****
No comments:
Post a Comment