விவசாயியால் விதைக்காமல் இருக்க முடியாது
அரிப்பெடுத்தவரால் சொரியாமல் இருக்க முடியாது. நிலம் இருப்பவரால்
விதைக்காமல் இருக்க முடியாது. ஒவ்வொரு முறையும் விதைத்து அறுவடை செய்வதற்குள் உண்டாகும்
சிரமங்களைப் பார்க்கும் போது அடுத்த முறை விவசாயமே செய்யக் கூடாது என்றுதான் தோன்றும்.
இது ஒரு பிரசவ வைராக்கியம் போன்றது. அடுத்த குழந்தை பிறந்தே தீரும் என்பது போல அடுத்த
வருடம் விவசாயம் தொடர்ந்தே தீரும்.
குறுவை போட்டவர்கள் மறு வருடம் குறுவை போட நிரம்பவே யோசிப்பார்கள்.
ஆனால் போடாமல் இருக்க மாட்டார்கள். பெரும்பாலான வருடங்களில் குறுவை அறுவடை மழையில்
சிக்கும். மழையில் நெல்லறுத்து அதைக் காய வைத்து வியாபாரியிடம் போடுவதற்குள் போதும்
போதுமென்றாகி விடும். இந்த 2021 ஆம் ஆண்டில் குறுவையை ஒரு வழி பண்ணி விட்டது மழை.
தமிழ் மாதத்தில் சொல்வதென்றால் புராட்டாசியிலும் ஆங்கில மாதத்தில்
சொல்வதென்றால் அக்டோபரிலும் இந்த வருட குறுவை அறுவடைக்கு வந்தது. இந்த மாதங்களில் ஒவ்வொரு
நாளுமோ அல்லது ஒரு நாள் விட்டோ மழை பொழிந்து கொண்டிருந்தது.
இத்தனைக்கும் வடகிழக்குப்
பருவ மழை அக்டோபர் 20 இல்தான் துவங்கும் என்கிறது வானிலை அறிக்கை. அதற்கு முன்பாக அப்படியொரு
மழை. இந்த மழைக்குக் காரணமாக வெப்பச் சலனத்தையும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சியையும்
சொல்கிறார்கள். விவசாயிகளின் நெருக்கடியை மழையிடம் சொல்ல முடியுமா?
சமீப ஆண்டுகளாக மேட்டூரில்
ஜூனில் தண்ணீர் திறக்கிறார்கள் என்றால் எனக்குள் ஒரு பயம் பற்றிக் கொண்டு
வந்து விடுகிறது. முதலில் என் அப்பா குறுவை போட வேண்டாம் என்ற முடிவோடுதான் இருப்பார்.
பிறகு எங்கிருந்து ஒரு நம்பிக்கை வரும் என்று தெரியாது சரி பாதி வயலில் போடுவோம் என்று
ஆரம்பித்து எல்லா வயல்களிலும் குறுவை விதைப்பைச் செய்து விடுவார்.
மண்ணில் விதைத்தது வீணாகப் போகாது என்பது அப்பாவின் நம்பிக்கை. நிலத்தைத்
தரிசாகப் போட்டால் மனிதர்கள் எப்படி பிழைப்பார்கள்? விதைத்தால்தான் பத்து பேர் பிழைக்க
முடியும் என்பார் அடிக்கடி.
எனக்கு நன்றாகத் தெரியும் என் அப்பா ஒவ்வொரு முறை குறுவையின் போதும் நூறு
ரூபாயைச் செலவு செய்து எழுபத்து ஐந்து ரூபாயைத்தான் அறுவடை செய்திருக்கிறார் என்று.
அதைக் குறிப்பிட்டு அவரிடம் எதுவும் சொல்ல முடியாது. அவருக்குக் கோபம் வந்து விடும்.
நான் அநாவசியமாகச் செலவழிக்கிறேன் என்று நினைக்கிறாயா என்ற கேள்வியை உடனடியாகக் கேட்டு
விடுவார். சம்பாதிக்கும் காசை பூட்டி வைத்தால் சமுதாயத்தில் நான்கு பேர் எப்படிப் பிழைப்பதாம்
என்பார்.
நான் கேட்ட கேள்வியை மனதில் பலவாறாக யோசித்து வைத்துக் கொண்டு பிறிதொரு
நேரத்தில் குறுவையில் முதல் போனால் சம்பாவில் திரும்பும் என்பார். குறுவையில் மீட்ட
முக்கால் பங்கு பணத்தை அவர் திரும்பவும் சம்பாவில் அள்ளிப் போடுவார். சம்பாவாலும் அவரால்
மீட்க முடியாது. குறுவை போட்ட வயல் சம்பாவில் எட்டு மூட்டைக்கு மேல் கண்டால் அதிசயம்
எங்கள் ஊரில். அதற்கு மேல் இன்ஷ்யூரன்ஸோ, நிவாரணமோ கிடைத்தால் லாபக் கணக்கில் கொஞ்சம்
வரவு வைத்துக் கொள்ளலாம். அது போன்ற வாய்ப்பு எல்லா வருடங்களும் கிடைக்கும் என்று சொல்லி
விட முடியாது. கிடைத்தாலும் கிடைக்கலாம் அல்லது கிடைக்காமல் போனாலும் போகலாம்.
நிவாரணமோ இன்ஷ்யூரன்ஸோ கிடைக்காத ஆண்டுகளில் விவசாயம் செய்ய செலவிட்ட
பணத்தை வங்கியில் போட்டிருந்தாலாவது வட்டியாவது கிடைத்திருக்கும் என்பேன் நான். அதைப்
பற்றிப் பேசாதே, நாம் செய்த விவசாயத்தில் நான்கு பேருக்குப் பிழைப்புக் கிடைத்திருக்கிறது
என்பார் அவர்.
எப்படி இவர்களால் இப்படி நினைக்க முடிகிறது என்று நினைப்பேன் நான். விவசாயத்தில்
சலிப்பு, இழப்பு ஆகிய இரண்டும் நிறையவே இருக்கிறது. இருந்தாலும் விவசாயத்தில் இயங்கிக்
கொண்டிருக்கிறோம் என்ற உணர்வு அவர்களுக்கு ஏதோ ஓர் உந்து சக்தியைக் கொடுக்கிறது. அவர்களைப்
பொருத்த வரைய இயங்குவது லாபம். இயங்காமல் இருப்பது நட்டம். மற்றபடி விவசாயத்தில் கிடைக்கும்
லாப நட்டங்களைப் பொருட்படுத்துவதில்லை. அதுவும் குறிப்பாக நட்டத்தை ஒரு பொருட்டாக நினைப்பதில்லை.
*****
No comments:
Post a Comment