இருளில் கலக்கும் உயிர்
சுழலும் மின்விசிறி இயக்கத்தை
நிறுத்திக் கொள்ள
தூக்கத்தின் ஈர்ப்பு விசையிலிருந்து
தூக்கி எறியப்படும் உடலிலிருந்து
உடைந்து சிதறும் விண்கற்களாய்
வியர்வைத் துளிகள் ஒவ்வொன்றாய்ச்
சிதறுகின்றன
இருட்டைக் கிழித்துக் கொண்டிருந்த
வெளிச்சம்
தோல்வியை ஒப்புக் கொண்டு
இருட்டுக்குள் சரண் புகுகிறது
கார்ப்பரேஷன் வாகனத்துக்குத்
தப்பிப் பிழைத்த
தெருநாயின் ஒப்பாரி ஒலி
இருளின் பேரமைதியைத் துளைத்துக்
கேட்க தொடங்குகிறது
எப்போதோ ஏதோ ஒரு வாகனம்
மனநிலைப் பாதிக்கப்பட்ட மனிதரைப்
போல
யாருமில்லாத சாலையில் ஹாரன்
அடித்தபடி
இங்கும் அங்கும் கடந்து செல்கிறது
இருள் பேரிருளாய் விஸ்வரூபம்
கொண்டு அச்சுறுத்துகிறது
எத்தனையோ இரவுகளையும் பகல்களையும்
கண்ட
பிரியவிருக்கும் உயிர்
அச்சுறுத்தும் இந்த இருளில்
சென்றுதான் கலக்க வேண்டும்
*****
No comments:
Post a Comment