கால இயந்திரத்தைத் தேடி
காலப் பெருவெளியின் ஓர் இடுக்கில்
நின்றபடி
கால இயந்திரம் கிடைத்தால்
எப்படி இருக்கும் என்கிறார்
பேராசைப் பொதிகளால் நிரம்பிய
ஒருவர்
முன் பின் செல்ல முடியாத
கால இயந்திரத்தில் மனிதர்
பயணித்துக் கொண்டிருப்பதாக
விளக்கம் சொல்கிறார் ஞானியாகி
விட்ட ஒருவர்
அப்போது அந்த சூனியப் பொழுதின்
நொடியில்
தன்னுடைய கால இயந்திரம் திருடு
போய் விட்டதாகப்
புகார் கொடுக்க வருகிறார்
பொறாமையின் புழுக்கத்தால்
வெந்துப் புழுங்கும் ஒருவர்
கால இயந்திரத்தைக் கண்டுபிடிக்க
முயற்சிப்பதை
கால இயந்திரத்தில் பயணிப்பவர்
கண்டுபிடித்து விடுவார் என்று
புகாரைப் பெற மறுக்கிறார்
குறை தீர் பொறுப்பில் உள்ளவர்
ஆற்றாமையோடு வெளிவரும் புகார்
அளிக்க முயன்றவரை
நாங்கள் ஆட்சிக்கு வந்தால்
ஆளுக்கொரு கால இயந்திரம்
வழங்கப்படும் என்கிறார்
அரசியல்வாதியாக முயற்சிக்கும்
ஒருவர்
வாக்குறுதி நிறைவேற்றப்படும்
என்ற நம்பிக்கையில்
தனக்கான கால இயந்திரத்தை
முன்பதிவு செய்ய முயற்சிக்கிறார் ஒருவர்
எல்லாவற்றையும் வெறுமையோடு
பார்க்கும் கால இயந்திரம்
காலத்திற்கும் மனிதர்கள்
நடந்து கொள்வதற்கும்
சம்பந்தம் இல்லை என்பது போல
உணர்வற்றுச் சிரிக்கிறது
வெற்றுச் சிரப்பின் மௌன ஓசை
கேட்காமல்
கால இயந்திரத்தைத் தேடிக்
கண்டுபிடித்துத் தீர்வேன் என்று
கால இயந்திரத்தின் மீதேறி
ஒரு மனிதர் பயணிக்க தொடங்குகிறார்
*****
No comments:
Post a Comment