நெல்லாடிய காலம்
குறுவையும் சம்பாவும் டெல்டா விவசாயிகளின் இரண்டு கைகளைப் போல.
காவிரியில் முறையாகத் தண்ணீர் வரும் வருடங்களில் குறுவையையும் சம்பாவையும் டெல்டாவில்
இருக்கும் எந்த விவசாயியும் தவற விட மாட்டார்கள். விவசாயம் அவர்களின் அடையாளம். கௌரவத்தின்
குறியீடு. நிலத்தைத் தரிசாகப் போட்டு விட்ட பழியை அவர்களால் ஏற்க முடியாது.
இந்த விவசாயத்திற்கு டெல்டா விவசாயிகள் தரும் மதிப்பையும் மரியாதையையும்
வார்த்தைகளால் சொல்லி விட முடியாது. பாரம்பரியமாக விவசாயத்தின் மீது தொடரும் பயபக்தியாகத்தான்
அதைக் குறிப்பிட வேண்டும்.
என்னதான் வயலில் வாய்க்கால் வரப்புகளில் முற்கள் நிறைந்திருந்தாலும்
செருப்பணிந்து செல்லும் விவசாயிகளைக் கண்டுபிடித்து விட முடியாது. ஒரு மூட்டையைக் கூட
திருடிச் செல்வார்கள். மண்வெட்டியைத் திருட மாட்டார்கள். விவசாயத்திற்குப் பயன்படும்
கருவிகளின் மீது அவர்களுக்கு தனி மரியாதை உண்டு. கருவிகளைத் தொட்டுக் கும்பிட்டுதான்
வேலையைத் தொடங்குவார்கள்.
புதுநெல் விதைக்கும் போதும், புதுநெல் அறுக்கும் போதும் குடும்பத்தோடு
வயல் காட்டில் இருப்பார்கள். வயலைப் பல நேரங்களில் காடு என்ற சொல்லால் குறிப்பிடுவார்கள்.
காட்டை அழித்து வயலை உருவாக்கியதன் ஏக்கமாகக் கூட அந்த வார்த்தை இருக்கலாம்.
அறுத்த நெல்லின் முதல் படியைக்
கோயிலுக்கு அளப்பார்கள். நெற்கதிர்களை அழகாகச் சோடித்து வீட்டின் நிலைப்படியில் தொங்க
விடுவார்கள். இன்னும் கொஞ்சம் கலை நயத்தோடு கோயிலிலும் தொங்க விடுவார்கள்.
வீட்டில் எந்த ஒரு விழா என்றாலும் நெல்லுக்கு ஒரு தனி இடம் உண்டு.
செவ்வாய், வெள்ளி போன்ற கிழமைகளில் நெல்லை விற்கவோ, கொடுக்கவோ மாட்டார்கள். நெல்லைச்
சுற்றிப் பின்னிப் பிணைந்திருக்கும் டெல்டா மக்களின் நம்பிக்கைகளும் சம்பிரதாயங்களும்
அறிய அறிய ஆச்சரியப்படுத்துபவை.
நெல்லை அளந்து எடுக்கும் போது ஒன்று என்று தொடங்குவதற்குப் பதிலாக
லாபம் என்று தொடங்கி இரண்டு, மூன்று, நான்கு என எண்ணிக் கொண்டு செல்வார்கள். அளவையின்
முடிவில் ஒரு சில நெல்மணிகளை அளந்தெடுத்த மரக்கால் எனும் அளவைக் கருவியில் போடுவார்கள்.
குதிரிலிருந்து நெல்லெடுப்பதாக
இருந்தாலும், பத்தாயத்திலிருந்து நெல்லெடுப்பதாக இருந்தாலும், அரிசிப் பானை அல்லது
ஆனைக்கால் குவளையிலிருந்து அரிசி எடுப்பதாக இருந்தாலும் துடைத்து அள்ளி விட மாட்டார்கள்.
துடைத்து அள்ளுவது என்பது தவறான பழக்கம் என்று குறிப்பிடுவார்கள். கொஞ்சம் நெல்லோ,
அரிசியோ கலத்தில் இருக்க வேண்டும் என்பார்கள். என்னதான் பஞ்சம் என்றாலும் விதை நெல்லை
அவித்து விட மாட்டார்கள்.
சாராயம் அருந்தி விட்டு வேலை
பார்க்க யாரையும் அனுமதிக்க மாட்டார்கள். சாராயம் அருந்துவதாக இருந்தால் அதையெல்லாம்
வேலையை முடித்த பிறகுதான் வைத்துக் கொள்வார்கள்.
பரம்பரைப் பரம்பரையாகத் தொடர்ந்து
வரும் நிலத்தை அவ்வளவு எளிதாக யாரும் விற்க மாட்டார்கள். அரிதாகத்தான் நிலங்கள் கைமாறுவதும்
விற்பனைக்கு வருவதும் நிகழும். அப்போதும் நில விற்பனைகளைத் தாளில் எழுதிக் கொண்டதோடு
சரி. பத்திரப்பதிவு செய்ததெல்லாம் குறைவு. வாய் வார்த்தைக்கு அவ்வளவு மதிப்பு கொடுப்பார்கள்.
விற்பதாக ஒருவருக்கு வாக்குக் கொடுத்த பின் இன்னொருவர் எவ்வளவு விலையைக் கூட்டிக் கொடுப்பதாகச்
சொன்னாலும் அதற்கு சம்மதிக்க மாட்டார்கள்.
கோயில் திருவிழாவுக்கு ஒவ்வொரு
வீட்டுக்கும் பணத்தை வசூலிக்க மாட்டார்கள். நெல்லை வரியாகப் போடுவார்கள். கொடுக்கல்
வாங்கல் எல்லாம் நெல்லோடு தொடர்புடையதாக இருக்கும். உப்பு விற்பவர் உப்புக்குப் பதிலாக
நெல்லைத்தான் வாங்கிச் செல்வார்.
பள்ளிச் சீரமைப்பு மாநாடுகள்
நடந்த போது நெல் மூட்டைகளைக் கொடுத்தவர்கள் இருக்கிறார்கள். எல்லாருடைய வீட்டிலும்
நெல் இருந்த காலம் அது. டெல்டா விவசாயிகளின் வாழ்க்கையில் இப்படிச் சொல்வதற்கு இப்படி
நிறைய இருக்கிறது. ஒரே மூச்சில் சொல்லி விட முடியாது. ஒவ்வொன்றாகச் சொல்லலாம்.
*****
No comments:
Post a Comment