சொல்வதற்கு கவிதையில் ஏதுமில்லை
கவிதையில் ஏதேனும் புரிவதாக
இருந்தால்
எழுதியவரிடம் முதலில் சொல்லுங்கள்
கவிதையில் புரிய ஏதுமில்லை
சாசுவதமான உண்மையை வரைகின்றன
கவிதைகள்
உண்மையை விளக்க அது பொய்யாகிறது
உண்மையை எழுத அது புனைவாகிறது
உண்மையை வரைய அது கற்பனையாகிறது
உண்மைக்காக நீங்கள் எதையும்
செய்ய முடியாது
உண்மைக்காக எதைச் செய்தாலும்
உண்மை ஏதுமில்லை
உண்மை அங்கிருக்கிறது அப்படியே
இருக்கிறது
நீங்கள் தரிசிக்கலாம்
ஒவ்வொருவரும் தரிசிக்கலாம்
உங்கள் தரிசனத்தோடு உங்களில்
உறைந்துவிடுகிறது
வெளியில் எடுத்துச் சொல்வததெல்லாம்
அபத்தங்களின் பொட்டலங்கள்
உண்மையைத் தரிசிக்கும் கவிதை
அதில் உறைந்து விடுகிறது
அதில் புரிந்து கொள்ள ஏதுமில்லை
எடுத்துச் சொல்லவும் ஏதுமில்லை
வேண்டுமானால் கவிதையோடு கவிதையாக
நீங்களும் உறைந்து நிற்கலாம்
*****
கவிதை கண்ணாடி என்று கூறலாம்
ReplyDeleteநாம் காட்டுவதைத் திரும்ப காட்டும்
தாங்கள் கூறுவது போலவும் குறிப்பிடலாம். இலக்கியம் காலத்தின் கண்ணாடி என்று குறிப்பிடப்படுவதோடு தங்களின் கருத்து ஒன்றிப் போகும். இலக்கியத்தின் ஒரு வகைமையாகக் கவிதைக் கருதப்பட்டாலும் கவிதைகள் தரும் அக தரிசனத்தால் இலக்கியத்தின் தலையாய இடத்தில் கவிதை அமர்ந்து கொள்கிறது. ஒருவர் தனது புற தரிசனம் எவ்வாறு இருக்கிறது எனத் தனக்குத் தானே அறிந்து கொள்ள கண்ணாடியை நாடுகிறார் என்றால் புற தரிசனத்தைக் கடந்த அக தரிசனத்தைக் கண்டடைய கவிதையை நாடுகிறார் எனலாம் எனக் கருதுகிறேன்.
Delete