எஸ். ராமகிருஷ்ணனின் சஞ்சாரம் – ஓர் எளிய அறிமுகம்
தமிழின் முக்கியமான நவீன எழுத்தாளுமைகளுள் எஸ். ராமகிருஷ்ணனும்
ஒருவர். அவரின் ‘சஞ்சாரம்’ நாவல் சாகித்திய அகாதெமி பரிசு பெற்றது. நாதஸ்வர இசைக் கலைஞர்களின்
மாறிக் கொண்டிருக்கும் வாழ்க்கை முறையைப் பேசும் இந்நாவல் அவமானத்திற்கும் அலைக்கழிப்பிற்கும்
இடையில் சஞ்சரிக்கும் அவர்களின் ஆற்றாமையை
நுட்பமாகப் பதிவு செய்கிறது.
ஒரு பவுன் இருபது ரூபாய் விற்ற காலத்தில் கச்சேரிக்கு ஆயிரம்
ரூபாய் வாங்கியவர் திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை. அவர் மிகச் சிறந்த நாதஸ்வர கலைஞர்.
முதல் சுதந்திர இன்னிசையை நாதஸ்வரத்தில் வாசித்த சிறப்புக்கும் உரியவர். கீழே உள்ள
இணைப்பைச் சொடுக்கி அவரின் முதல் சுதந்திர இன்னிசையை நீங்கள் கேட்கலாம்.
https://www.youtube.com/watch?v=lPSPFxsILAU
ராஜரத்தினம் போன்றவர்கள்
காவிரி பாயும் வண்டல் மண்ணின் இசைக் கலைஞர்கள்.
சஞ்சாரம் நாவல் பேசும் இசைக் கலைஞர்கள் கரிசல் மண்ணைச் சார்ந்தவர்கள்.
வண்டலின் நாதஸ்வரத்துக்கும் கரிசல் மண்ணின் நாதஸ்வரத்துக்கும் வேறுபாடு இருப்பதாகக்
குறிப்பிடுகிறார் எஸ்.ரா. வண்டலின் நாதஸ்வரத்தை யானையின் வசீகரத்துடனும் கரிசலின் நாதஸ்வரத்தை
நாட்டுப்பசுவின் சாந்தத்தோடும் ஒப்பிடுகிறார்.
கரிசல் மண்ணில் காருக்குறிச்சி அருணாச்சலம் பிள்ளை போன்ற நாதஸ்வர
ஆளுமைகளும் இருந்துள்ளனர். என்றாலும் காருக்குறிச்சியாரும் வண்டல் மண்ணின் நாதஸ்வரக்
கலைஞரான ராஜரத்தினம் பிள்ளையின் சீடராகக் கொள்ளத்தக்கவர் என்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கது.
கொஞ்சும் சலங்கை எனும் திரைப்படத்தில்
இடம்பெறும் ‘சிங்கார வேலனே தேவா’ பாடலில் காருக்குறிச்சியாரின் நாதஸ்வர இசையைக் கேட்டால்
அவரின் இசை ஆளுமையைப் புரிந்து கொள்ளலாம். கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கி அதை நீங்கள்
கேட்டுப் பார்க்கலாம்.
https://www.youtube.com/watch?v=Nuu2ddEZWfI
காருக்குறிச்சி அருணாச்சலம்
பிள்ளை பற்றிய ஆவணப் படமே இந்நாவலுக்கான வித்தை எஸ்.ரா. மனதில் போடுகிறது. அவர் பக்கிரி
என்ற நாதஸ்வர கலைஞரின் ஊடாக கரிசல் மண்ணின் வெக்கையோடு அதன் சாதிய வெக்கை கலந்து இந்நாவலைச்
சமைக்கிறார்.
இசைக் கலைஞர்களின் வாதனையின்
ஊடாக எஸ்.ரா. பேசும் சாதீயம் உக்கிரமாகவும் அவலத்தைக் காட்டுவதாகவும் உள்ளது. அச்சாதீய
உக்கிரத்தைத் தன் தன்னுணர்வாலும் விட்டுக் கொடுக்காத பிடிவாதத்தாலும் பக்கிரி கடக்கும்
போது அலைக்கழிப்புக்கு உள்ளாகிறார்.
வாசிக்க செல்லும் இடங்களில்
எல்லாம் நாதஸ்வர கலைஞர்களைச் சாதி மென்று துப்புகிறது. சாதிய மேலடுக்கில் இருக்கும்
சிறு பிள்ளைகள் கூட அவர்களை ஏளமாகப் பேசுவதும் வதைக்க முற்படுவதும் இந்நாவலில் பதிவாகியிருக்கிறது.
இந்நாவல் நகரும் போக்கு முக்கியமானது.
கரிசல் மண்ணில் தனிச்சிறப்போடு தனி ஆவர்த்தனம் பண்ணிய அரட்டானம் லட்சய்யா, சுப்பிரமணியம்
பிள்ளை, தன்னாசி போன்ற அற்றை நாளின் இசைக்கலைஞர்களோடு ஒப்பிடும் போது பக்கிரி போன்ற
இற்றை நாளின் இசைக்கலைஞர்களின் வாழ்க்கை வேதனையைத் தருவதாக இருக்கும் முரணில் நாவலை
நகர்த்துகிறார் எஸ்.ரா.
இசைக் கலைஞர்களில் லட்சோப லட்சம் பெற்று புகழோடும் மரியாதையோடும்
வாழும் நிலையில் பக்கிரி போன்ற கலைஞர்கள் அன்றாட வாழ்க்கைக்காக எதிர்கொள்ளும் அலைச்சலும்
அவமானங்களும் கரிசலின் வெம்மையை விட அதிகமானது. அந்த வெக்கைத் தாளாமல் திருவிழாவில்
பக்கிரி பற்ற வைத்து விடும் தீ கலவரத்துக்குக் காரணமாகித் தேடப்படும் குற்றவாளிகளில்
பக்கிரியும் மேளக்காரர் ரத்தினமும் ஊர் ஊராக அலைகிறார்கள். அவர்களின் அலைச்சலின் ஊடாக
முன்னும் பின்னுமாக மாறி மாறி ஓடும் நினைவோடையாக இந்நாவல் பயணிக்கிறது.
கல்லால் ஆன நாதஸ்வரத்தை வாசித்து மாலிக்கபூரை அலைக்கழிக்கும்
அரட்டானம் லட்சய்யா, தன் வாசிப்பால் எடைக்கு எடை தங்கம் பெற்று சகல சுகத்தையும் அனுபவித்து
வாழும் சுகவாசி கண் தெரியாத நாயனக்காரர் தன்னாசி, நாதஸ்வரம் கற்றுக் கொள்ள ஆர்வமுடன்
வரும் ஆங்கிலேய டேவிட் ஹாக்கின்ஸ், இசுலாமிய சமூகத்திலிருந்து நாதஸ்வரம் கற்றுப் பிரபலமாகும்
அபு, ஆரபியை வாசிக்கையில் தங்கத்தை மஞ்சளாக உருகி இழைய விட்டு வசீகரித்தாலும் குடி
கூத்து என்று கும்மாளமாய் இருக்கும் சுப்பிரமணியம் பிள்ளை என்று நாவல் முழுவதும் பல்வேறு
நாதஸ்வர கலைஞர்களின் கதை சிறுகதையின் செறிவோடு பின்னிப் பிணைந்திருக்கிறது.
‘நாதஸ்வரம் ஓர் அசுர வாத்தியம்’ என்று இந்நாவலில் பேசப்படுகிறது.நாதஸ்வரக்
கலைஞர்களின் வாழ்வியலைப் பேசும் இந்நாவலை எழுதுவதும் ஒரு வகையில் அசுர சாதகம் பண்ணுவது
போலத்தான். நாதஸ்வர இசை குறித்த நுட்பமான செய்திகளைப் பல இடங்களில் எஸ்.ரா. பதிவு செய்கிறார்.
நாதஸ்வரம் கற்றுக் கொள்வதில்
1. தத்தகாரம்,
2. தன்னகாரம்,
3. துத்துகாரம்,
4. அகாரம்,
5. வழுக்கு,
6. அசைவு,
7. பிர்கா,
8. விரலடி
என எட்டு விதமான பயிற்சிகள்
இருப்பதை நாவலின் ஓரிடத்தில் காட்டுகிறார்.
மோகனம் சந்தோஷமான இசை, கல்யாணி தாயின் பரிவோடு தன்னம்பிக்கையைக்
கொடுக்க கூடியது, சாமி புறப்பாட்டின் போது இசைக்கப்படுவது மல்லாரி, பூசைக்கு நீர் கொண்டு
வரும் போது இசைக்கப்படுவது மேகராகக் குறிஞ்சி, திருக்கல்யாணம் நடக்கும் போது இசைக்கப்படுவது
நாட்டைக் குறிச்சி அல்லது கல்யாண வசந்தம் போன்ற இசை சார்ந்த ராகக் குறிப்புகளையும்
நாவலின் ஆங்காங்கே காட்டிக் கொண்டு செல்கிறார். அவ்வசுர எழுத்துச் சாதகத்துக்காக எஸ்.ரா.
அரிதின் முயன்றிருக்கிறார்.
நாள்தோறும் மலர்களால் மூடப்பட்டிருக்கும்
தியாகராஜரின் திருப்பாதங்களை ஆண்டுக்கு இரு
முறை மட்டும் காண முடியும். பங்குனி உத்திரத்தில் இடது பாதத்தைப் பார்த்தால் திருவாதிரை
நன்னாளில் வலது பாதத்தைப் பார்க்கலாம். திருவாரூர்வாசிகள் அறிந்திருக்கும் திருவாரூர்
தியாகராஜரின் இப்பாதம் பற்றிய இத்தகவலையும் இந்நாவலில் எஸ்.ரா. பதிவு செய்திருக்கிறார்.
கரிசலில் தொடங்கி திருவாரூர் தியாகராசரையும் இவ்விதமாக இசையோடு கோர்த்து தமிழ்நாடு
முழுவதுமான இசைக் கலைஞர்களையும் ஆங்காங்கே தொட்டு பேச முற்படுகிறார் எஸ்.ரா.
மனிதரின் மனம் போகும் வக்கிரப்
போக்கில் கொலையொன்றைப் புரிந்து விட்டு அக்கொலைக்குப் பரிகாரமாக கல்லைக் நீராட்டும்
கீதாரியின் கதை தரும் அதிர்ச்சியை, ஏழு வீட்டுச் சோறு போட்டுத் திருடனைத் திருத்தும்
கொண்டம்மாள் கிழவியின் கதை தரும் நெகிழ்ச்சி மாற்றுகிறது எனலாம். இவ்வகையிலான கிளைக்கதைகளும்
இந்நாவலில் இருக்கின்றன.
ஒரு வகையில் சொல்வதானால்
நாவலின் பெயரில் வெளிவந்திருக்கும் சஞ்சாரம் சிறுகதைத் தொகுப்புகளின் தோற்றமாக ஒரு
மாயத் தோற்றத்தை விரித்துச் செல்வதை இந்நாவலை வாசிக்கையில் தவிர்க்க முடியவில்லை எனலாம்.
நூல் குறிப்பு
நூலாசிரியர் |
எஸ். ராமகிருஷ்ணன் |
நூல்
பெயர் |
சஞ்சாரம் (நாவல்) |
பதிப்பும்
ஆண்டும் |
முதல்
பதிப்பு, 2014 |
பக்கங்கள் |
376 |
விலை |
ரூ.
370/- |
நூல்
வெளியீடு |
உயிர்மை பதிப்பகம், 11/29,
சுப்பிரமணியம் தெரு, அபிராமபுரம்,
சென்னை
– 600 018 |
*****
No comments:
Post a Comment