மனப்போக்கின்
மகத்துவம்
எஸ்.கே. தான் வகிக்கும் பதவியை நினைத்த போது தன்னுடைய பதவியை
நல்லதொரு பதவியாகக் குறிப்பிட முடியாது என்பது புரிந்தது. கீழே
பணியாற்றும் நபர்கள் மிகவும் சுயநலம் மிகுந்தவர்களாகவும் மிகவும் அல்பத்தனம்
மிகுந்தவர்களாகவும் இருப்பதாக அவருக்குத் தோன்றியது. அவர்களைச் சமாளிப்பது
எப்போதும் எஸ்.கே.வுக்கு மிகுந்த சவால் மிகுந்ததாக இருந்திருக்கிறது.
பொதுவாகத் தலைமைப்பதவியில் இருப்பவர்கள் அதிகமாகப் பேசக்
கூடாது என்றும் அதுதான் அந்தத் தலைமைப்பதவிக்கு அழகானது என்றும் எஸ்.கே. பலர்
சொல்ல கேட்டிருக்கிறார். ஆனால் எஸ்.கே. அவர்கள் ஒவ்வொருவரிடமும் ஒரு மணி
நேரத்திற்கு மேலாகத் தினமும் பேசுயிருக்கிறார். பேசப் பேச என்னவாகிறது என்றால்
எஸ்.கே. தன் பலவீனத்தைத்தான் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். ஆனால் எஸ்.கே.
என்ன செய்ய வேண்டும் என்றால் பேச பேச கேட்டுக் கொண்டே இருந்திருக்க வேண்டும்.
எதிரில் இருப்பவர்களை அதிகமாகப் பேச விட அப்போதுதான் அவர்கள் அதிகமாகக் களைத்துப்
போவார்கள். ஆனால் என்ன நிகழ்கிறது என்றால் எஸ்.கே. அதிகமாகப் பேசி அவர்களை விட
அதிகமாகக் களைத்துப் போகிறார்.
பேச்சினால் உண்டாகும் தவறுகள் ஆரம்ப காலத்தில் தவிர்க்க
முடியாது. நிறையப் பிழைகள் நேரிடத்தான் செய்கிறது. போகப் போகத்தான் இதெல்லாம்
சரியாகிறது. அதுவரை இதைத் தவிர்க்க முடியாது என்பது எஸ்.கே.வுக்கும் புரிகிறது.
இதெல்லாம் அனுபவங்கள்தான், அதாவது உத்தேசத் தீர்வுகள்தான் என்பதும்
எஸ்.கே.வுக்குத் தெரிகிறது.
எப்படிப் பார்த்தாலும் சில நிகழ்வுகளில் கீழே
இருப்பவர்களைச் சமாதானம் செய்வது போல வார்த்தைகளை விடக் கூடாது என்பது எஸ்.கே.வின்
அபிப்ராயங்களில் ஒன்று. அதாவது எப்போதும் எங்கேயும் யாரையும் சமாதானம் செய்வது
போலவோ, திருப்தி செய்வது போலவே வார்த்தைகளை விட்டு விடக் கூடாது என்பதில் உறுதியாக
இருப்பவர் அவர்.
எது சரியோ அதைப் பற்றி மட்டுமே பேச வேண்டும். சரி
அல்லாதவைகள் பற்றிப் பேசவே கூடாது. இந்த இடம்தான் எஸ்.கே. மாட்டிக் கொள்ளும் இடம்.
அதாவது சரி அல்லாதவைகளைப் பற்றிப் பேசும் அந்த இடத்தைத்தான் பிடித்துக்
கொள்வார்கள். ஆக எது சரியானதோ அதை மட்டும் பேச வேண்டும் என்பது எஸ்.கே.வின்
அனுபவம் தந்தப் பாடம். எஸ்.கே. தவறாகக் கூட சிலவற்றில் காரியம் சாதித்துக்
கொண்டிருக்கலாம். ஆனால் அதை வெளிப்படுத்துவது என்பதை எஸ்.கே. தன்னைத் தானே
பலகீனப்படுத்திக் கொள்வது போலத்தான். அது போன்ற தவற்றை இனிமேல் செய்யக் கூடாது
என்று எஸ்.கே. நினைத்துக் கொள்வார்.
எஸ்.கே. பணி செய்த நாட்களுக்கு ஊதியம் பெறுவதைச் செய்யக்
கூடாத குற்றத்தைச் செய்வதைப் போல நினைப்பார். ஆனால் அவருக்குக் கீழே உள்ளவர்கள்
எப்படித்தான் கூச்ச நாச்சமில்லாமல் பணிக்கு வராமலேயே ஊதியம் வழங்கப்பட வேண்டும்
என்பதை ஒரு உரிமை போலக் கேட்கிறார்கள் என்று யோசித்து எஸ்.கே. அசந்துப்
போவார். அதை விட மோசமாக பணிக்கு வராமல்
ஊதியம் பெறுவதை நியாயப்படுத்தி வேறு பேசுவார்கள். அதுவும் மிக நீண்ட நேரத்துக்கு
எஸ்.கே. என்னவோ தப்பு செய்வது போலவும் அவர்கள் என்னவோ மிக நியாயத்தோடும்
தர்மத்தோடும் அதைக் கேட்பது போலவும் பேசுவார்கள்.
கயவர்கள் எப்போதும் கயவர்கள்தான் என்று எஸ்.கே. நினைத்துக்
கொள்வார். அவர்கள் அவர்களின் சுயநலத்தையும் ஆதாயத்தையும்தான் நியாயம் என்று
பேசத்தான் செய்வார்கள். மற்றவர்களின் நியாய தர்மங்கள் எல்லாம் அவர்களுக்கு அநியாயமாகத்தான்
படும். அவர்களிடம் போய் வேறு எதையும் பேச முடியாது. பேசவும் வேண்டியதில்லை.
அமைதியாக இருந்து விடுவதே அனைத்திற்குமான தீர்வு என்றும் நினைத்துக் கொள்வார்.
பொறுமையாக இருப்பதால், வேறு பல நல்ல தீர்வுகளும் தோன்றும் என்பதும் எஸ்.கே.வின்
கருத்துகளில் ஒன்று. அப்போது பொறுமையான கருத்துகளுக்கு ஏற்ப தோன்றியதை
அதற்கேற்றாற்போல் செயல்படுத்தலாம் என்பது எஸ்.கே.வின் நோக்குகளில் ஒன்று.
எஸ்.கே. பல நேரங்களில் இதுதான் தீர்வு, இதற்கு மேல்
தீர்வில்லை என்ற நம்பிக்கையின்மையில் செயல்பட்டவர்தான். அப்போது அவர் நிறைய
கோபப்பட்டிருக்கிறார். வெகுண்டெழுந்து நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறார். காலம்
அவருக்கு நிறைய பாடங்களைக் கற்றுத் தந்திருக்கிறது. அது தந்த பாடத்தின்
அடிபப்டையில் எல்லாவற்றிற்கும் மேலும் தீர்வுகள் இருக்கிறதென்றால் எதற்குக் கவலை
அடைய வேண்டும் அல்லது மன உளைச்சல் அடைய வேண்டும் அல்லது கோபமடைய வேண்டும் அல்லது
வெகுண்டெழ வேண்டும் என்ற மனநிலையைத் தற்போது அடைந்திருக்கிறார். பொறுமையாக
அதிர்ச்சியடையாமல் நிதானமாக இருக்க முடியுமானால் எந்தச் சூழ்நிலையையும் எதிர்கொள்ள
முடியும் என்பதைத் தற்போது புரிந்து கொண்டிருக்கிறார். அது சரி, இதுவரை எஸ்.கே.
எதிர்கொண்ட சூழ்நிலைகள் அனைத்தையும் அவர் சாமர்த்தியத்தால்தான் எதிர்கொண்டாரா
என்ன? ஏதோ ஒரு சிலவற்றைச் சாமர்த்தியமாக எதிர்கொண்டிருப்பார். பலவற்றை அதன்
போக்கில் அப்படியே ஏதோ எதிர்கொண்டிருப்பார். அப்படித்தான் முடியும் ஒரு சராசரியான
மனிதருக்கு.
எஸ்.கே.வைப் பொருத்தவரையில் அவர் எப்போதும் சொல்வது
இதைத்தான், “எல்லாவற்றையும் நான் மட்டுமே தீர்த்து விட முடியாது. அதற்காக அதற்குப்
பொறுப்பேற்றுக் கொள்ளாமலும் இருக்க முடியாது. அதற்குப் பொறுப்பேற்றுக் கொள்வதால்
மன உளைச்சல் அடைந்து கொண்டும் இருக்க முடியாது. பொறுமையாக இருப்பதன் மூலமாகத்
தோன்றும் சரியான தீர்வை நோக்கி காத்திருப்பதைத் தவிர பிரமாதமான வழிகள்
ஒன்றுமில்லை. காத்திருக்கும் நேரத்தில் ஏதோ ஒன்று மர்மமாக நடந்து எல்லாவற்றையும்
எப்படியோ சரி செய்கிறது. அதற்காக நான் செயல்படாமல் இருக்கவோ, செயல்பாட்டைக்
குறைத்துக் கொள்ளவோ முடியாது. அதற்கு வரும் இடையூறுகளையும் பிரச்சனைகளையும்
பொறுமையாக இருக்கும் வழியில் மூலமாகத்தான் தீர்வு காண வேண்டும். எதிரான வழியில்
சென்று எவ்வித தீர்வையும் கண்டு விட முடியாது.”
சமீப காலமாக எஸ்.கே. இப்படியும் ஒரு கருத்தை உதிர்த்துக்
கொண்டு வருகிறார். அதாகப்பட்டது என்னவென்றால், ‘மனிதருக்கு மனிதர்கள் யாரும்
பிரச்சனையில்லை. மனப்பார்வை பொதுவானதொரு பிரச்சனை. அதைச் சரி செய்துகொண்டால்
போதும். பிரச்சனைகளுக்கான தீர்வு குபீர் என்று வந்து குதித்து விடும். அதன்
அடிப்படையில் எல்லாவற்றையும் எதிர்கொண்டு விட முடியும். உண்மையில் எந்த ஒரு மனிதரிடமும்
வேறு யாரும் பிரச்சனை செய்து விட முடியாது, அவர்தம் மனப்போக்கைத் தவிர. ஒருவரின்
மனப்போக்குதான் அவரிடம் பல்வேறு ரூபங்களில் பிரச்சனை செய்து கொண்டு இருக்கிறது.
அதைச் சரி செய்து கொண்டு விட்டால் உலகில் யாருக்கும் எந்தப் பிரச்சனையும் இல்லை.’
*****
No comments:
Post a Comment