29 Jun 2021

அலையென்பது கரைக்குள் அடைபட்ட கைதியன்றோ!

அலையென்பது கரைக்குள் அடைபட்ட கைதியன்றோ!

குளம்.

அலை அலையாக அலைகளை அனுப்பிக் கொண்டிருந்தது.

மனம்.

அதுவும் அப்படித்தான் செய்து கொண்டிருந்தது.

எஸ்.கே.வின் மனம் அலை பாய்ந்து கொண்டிருந்தது. சமயத்தில் கடல் அலைகள் போலவும், சமயத்தில் குளத்தில் எழும் அலைகள் போலவும் இருந்தது. ஒரே நேரத்தில் மனம் எப்படி கடலாகவும் குளமாகவும் மாறுகிறது என்று எஸ்.கே.வுக்குக் குழப்பமாக இருந்தது. அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் எஸ்.கே.வின் மனம் இரண்டுமாக மாறிக் கொண்டு இருந்தது.

ஒன்று தவறு என்றோ அல்லது தேவையில்லை என்றோ தெரியும் போது அதை மனதைச் சமநிலைப்படுத்துவதாக நினைத்துக் கொண்டு செய்யத் தேவையில்லையா என்ற அலை எழுந்த போது எஸ்.கே. குளத்தில் இறங்கிய எருமையைப் போல இருந்தார்.

யாரும் தனக்காக உதவப் போவதில்லை எனும் போது யாருக்காகவும் தான் உதவ வேண்டிய அவசியமில்லை என்று நினைத்த போது கடலில் சீறியெழும் சுறாவைப் போல வேகம் காட்டினார். 

“நான் என்ன நினைக்கிறேன் என்றால் பரிதாபத்தை உருவாக்கிக் கொண்டால் எப்படியும் தப்பித்துக் கொள்ளலாம் என்று. அந்தப் பரிதாபத்தை உருவாக்கிக் கொள்ளவே ஏதோ செய்கிறேன். ஆனால் பரிதாபப்படும் வண்ணம் இருப்பவர்களை வசமாக மாட்டி விட்டுத் தப்பித்துக் கொள்வார்கள் என்ற உண்மையை நான் உணர மறுக்கிறேன். மற்றொன்று என்னவென்றால் என்னை நல்லவன் என்று காட்டிக் கொண்டால் நான் சொல்வதை நம்புவார்கள் என்று நினைக்கிறேன். இப்படி ஒரு நிலையை உருவாக்கிக் கொள்வது தேவை இல்லாதது. ஒவ்வொருவரும் அவரவர் மனம் சொல்வதைத்தான் நம்புவார்கள். அவர்களுக்குச் சாதகமாக இருப்பவர்களை அவர்களுடைய மனம் நல்லவன் என்றும் சாதகமாக இல்லாதவர்களைக் கெட்டவர்கள் என்றும் சொல்லும். என்னதான் முயற்சி செய்தாலும் அவரவர் மனதில் நினைப்பதை மாற்றுவது என்பது சுலபமானதன்று. விசயங்கள் இவ்வளவு இருக்கும் போது இவ்வளவையும் கோர்த்துச் சிந்திக்க வேண்டும். மனம் போன போக்கில் சிந்திக்கக் கூடாது. என்னுடைய பிரச்சனையே மனம் போன போக்கில் சிந்திப்பதுதான். மனம் போன போக்கில் சிந்திப்பதையும் அதில் திருப்தி காண்பதையும் நான் விரும்புகிறேன். இதனால்தான் நான் தடுமாறுகிறேன்.” எஸ்.கே. தனக்குத் தானே முனகிக் கொண்டார். அந்த முனகல் குளத்தில் அலைகளின் சத்தத்தைப் போல இருந்தது. ஆர்ப்பரிக்கும் கடல் அலைகளின் சத்தத்தைப் போல இல்லை.

வெகு சீக்கிரத்தில் கடல் அலைகளின் சீற்றம் எஸ்.கே.வின் மனதில் உண்டானது. அது சிறிது தணிந்தது போல தோன்றிய போது ஒரு தத்துவ ஞானியைப் போல சிந்திக்க ஆரம்பித்தார் எஸ்.கே. அவர் உபதேசிக்கும் ஞானியைப் போல சிந்திக்க ஆரம்பித்தார். தணிதலின் அழகு அது. அந்த அழகில் எஸ்.கே. பின்வரும் வார்த்தைகளாய் வழிந்தோடினார்.

            மனம் என்பதே மனிதன் உருவாக்கிக் கொள்வது. அதில் மனிதன் சிக்கித் தடுமாறுவதுதான் வேடிக்கை. ஆசையின் காரணமாகவும் அச்சத்தின் காரணமாகவும் இந்த வேடிக்கை நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இதுதான் முடிவு என்று அழுத்திப் பேசுவதால் தவறொன்றும் ஆகி விடப் போவதில்லை.

            மனிதரின் மனதைப் பல நேரங்களில் குற்றவுணர்ச்சி வாட்டுகிறது. அந்தக் குற்றவுணர்ச்சியின் காரணமாக ஏதேதோ சிந்தித்துத் தடுமாற வேண்டியிருக்கிறது. இன்னும் சொல்லப் போனால் அந்தக் குற்றவுணர்ச்சியால் வருத்திக் கொள்வதை ரத்தம் வழிய சொரிந்து கொண்டு சுகம் காண்பதைப் போல செய்து கொண்டிருக்கிறது மனம்.

            ஒரு வேண்டுதல் வைக்கப்படுகிறது என்றால் அதைச் செய்வதும் செய்யாததும் ஒருவரது முடிவுதான். ஒருவேளை வைக்கப்படும் வேண்டுதலை செய்யாமல் போனால் மற்றவர்கள் சம்பந்தப்பட்டவரைப் பற்றி என்ன நினைப்பார்கள்? தவறாக நினைத்து விடுவார்களோ? என்று நினைத்து தடுமாறினால் அது ஒரு வகை பயந்தாங்கொள்ளித்தனம். இந்தப் பயந்தாங்கொள்ளித்தனம் இருக்கும் வரையில் பிரச்சனைக்கு முடிவு கிடையாது. இந்தப் பயந்தாங்கொள்ளித்தனம் எப்படி உருவாகிறது என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற மனம் முடிவு கட்டிக் கொள்ளும் கூண்டுக்குள் அடைபட்ட குறுகிய முடிவெடுக்கும் தன்மையால் உண்டாவது. குறுகிய முடிவுக்குள் உழலும் மனம் பயப்படுகிறது. அதை எப்படி வேண்டுமானாலும் சமாளித்துக் கொள்ளலாம், அதற்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்ற முடிவுக்கு மனம் வந்து விட்டால் அதனுடைய பயம் ஓடி விடும். அதாவது வேறு வகையில் இதைச் சற்று மாற்றிச் சொன்னால் எது நடந்தாலும் அதை எப்படி வேண்டுமானாலும் எதிர்கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்து விட்டால் பயமானது ஓடி விடுகிறது. ஆக எதைப் பேசுவதற்கும் எதைச் செய்வதற்கும் கூச்சமோ தயக்கமோ இல்லையென்றால் பயமும் இல்லை. நியாயம், தர்மம் என்பதெல்லாம் கூண்டுக்குள் அடைப்பட்டுக் கொண்வனின் பேச்சாகப் போய் விடுகிறது. முதலில் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்றால் இந்தக் கட்டுப்பெட்டித்தனத்தைத் தூக்கி எறிந்து விட வேண்டும்.

எது வசதியோ, எது சுகமோ அதைச் செய்யக் கூடாது. எது சரியோ அதைத்தான் செய்ய வேண்டும். மற்றவர்களுக்கு ஏத்தப்படி பதில் சொல்ல முடியாதது ஒரு பிரச்சனையே அல்ல. சில நேரங்களில் ஏன் பல நேரங்களில் அவ்வாறு சொல்ல முடியாது என்பதுதான் எதார்த்தம். அதற்காகக் கலங்க வேண்டியதில்லை. பதில் சொல்ல முடியாத போது பவ்வியமாகப் புன்னகை பூத்த முகத்துடன் இருக்க கற்றுக் கொள்ள வேண்டும். அதற்காக ஒன்றும் பெரிதாக யோசிக்கவோ, பிரயத்தனமோ பட வேண்டியதில்லை. புதிதாக ஒன்றை கருத்தில் கொள்ள வேண்டியிருக்கிற நிலைமை வரும் போது பார்ப்போம் என்றோ பார்க்கலாம் என்று மட்டுமோ சொல்லி வைக்கலாம். வேறொன்றும் சொல்லத் தேவையில்லை. மிக எளிதான வழிமுறை இது.

மனதுக்கு என்ன பிரச்சனை என்றால் அந்தச் சூழ்நிலையைத் திறம்பட எதிர்கொள்ள தெரியவில்லை என்பதுதான். எதையும் திறம்பட எதிர்கொள்ள தேவையில்லை. ஒரு சூழலைச் சராசரியாக எதிர்கொண்டாலே போதுமானது. அதற்கு மேல் ஒன்றும் செய்ய வேண்டியதில்லை.

மனம் போன போக்கிலான சுகத்தை மனிதர்கள் நாடிக் கொண்டிருக்கிறார்கள். அதுதான் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் காரணமாகிக் கொண்டிருக்கிறது. இது ஒரு வகையால் பயத்தால் நேரிடும் பிரச்சனை.

எதாவது பிரச்சனை என்றால் மனிதர்கள் துணைக்கு வர மாட்டார்கள் என்று நினைத்து வருத்தப்பட முடியாது. ஏனென்றால் பிரச்சனை இல்லாமல் இருப்பதை விரும்புபவர்களிடம் போய் பிரச்சனைக்குத் துணை வர வேண்டும் என்று கேட்க முடியாது. அவர்களுக்கு அந்தச் சாதாரண பிரச்சனையானது அவர்களது பிரச்சனையாக இருப்பதால்தான் அதிலிருந்து மீள வேண்டும் என்று நினைக்கிறார்கள். மேலும் இந்தப் பிரச்சனையானது அவர்களது சோம்பேறித்தனத்தாலும் கடமையாற்றுவதிலிருந்து ஏமாற்றும் குணத்தாலும் உண்டானதாகக் கூட இருக்கலாம். அப்படி சோம்பேறித்தனமும் கடமையாற்றுவதிலிருந்து தப்பிக்க நினைக்கும் மனிதர்கள் அடுத்தவர்கள் பிரச்சனை என்றால் நமக்கேன் வம்பு என்று ஒதுங்கி இருக்கவே நினைப்பார்கள். அது மனிதர்களது சுபாவம். மனிதர்களது சுபாவத்தை எடுத்துக் கொண்டால் அப்படி ஒரு நிலைமை ஏற்பட்டு அவர்களது உதவி கிடைக்காமல் போனால் அதைப் பெரிதுப்படுத்தாமல் போய் விடுவது உத்தமம். அப்படித்தான் பல நேரங்களில் மனிதர்களுக்கு மற்றவர்களது உதவி கிடைக்காமல் போகும் அவர்களையும் அறியாமல் அதைப் பார்த்துக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டு விடுகிறது. அப்படித்தான் எல்லாவற்றிலும் நடக்கும். மேலும் உதவி என்று கேட்டுப் போனால் அறிவுரையைச் சொல்வார்களே தவிர உதவியைச் செய்ய மாட்டார்கள். உதவிக் கேட்கும் போது அதைச் செய்வதற்கான ஆற்றலும் துணிவும் அவர்களிடம் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும் என்று சொல்லலாம். அதெல்லாம் நடைமுறையில் சாத்தியமா என்பது சிக்கலான விவாதத்திற்குரியது. உதவி கேட்டுச் சென்ற பல பொழுதுகளில் ஆற்றலும் துணிவும் இல்லாத மனிதர்களிடமே போய் நின்றிருக்கலாம். அதனால் எந்த உதவியும் கிடைக்காமல் போயிருக்கலாம். மனதுக்குப் பயமில்லை என்றால் யாரிடமும் அது உதவிக் கேட்காது. ஆனால் உதவிகள் தேடி வரும். வேண்டாம் என்றாலும் தேடி வரும். அது தைரியத்திற்கு வழங்கப்படும் பரிசு என்றும் சொல்லலாம்.

அலைகள் ஆர்ப்பரித்து எழுந்தாலும் எங்கே சென்று விட முடியும். குளத்திற்குக் கரை இருப்பதைப் போலக் கடலுக்கும் இருக்கிறது. அதன் கரை கண்ணுக்குள் அடங்காத வகையில் பெரிதாக இருக்கலாம். ஆனால் கடலுக்குக் கரை இருக்கிறது. கரையைத் தாண்டி எங்கேயும் சென்று விட முடியாது. ஆனால் அந்தக் கரைக்குள் எவ்வளவு வேண்டுமானாலும் ஆட்டம் போடலாம். துள்ளிக் குதிக்கலாம். கரையை உடைத்தும் பார்க்கலாம். எத்தனை காலம் உடைத்துக் கொண்டு வெளியேறிக் கொண்டு இருக்க முடியும்? கடல் என்றாலும் குளம் என்றாலும் இறுதியில் கரைக்குள் அடங்கித்தான் ஆக வேண்டும். எஸ்.கே.வின் சிந்தனைகள் ஒவ்வொன்றாக அடங்குவது போல பட்டது. என்னதான் அலைகள் என்றாலும் அது கரைக்குள் அடைபட்ட கைதிகள் அன்றி வேறில்லைதானே!

*****

No comments:

Post a Comment

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி சாத்தியமா?

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி சாத்தியமா? தமிழகத்தில் கட்சிகள் கூட்டணி அமைத்துக் கொண்டு தேர்தலை எதிர்கொண்டிருக்கின்றன. ஆனால் தமிழகத்தில் கூட்டண...