1 Jul 2021

திரையில் இயங்கும் தமிழர்களின் அரசியல்

திரையில் இயங்கும் தமிழர்களின் அரசியல்

            இந்தக் கொரோனா காலத்தில் புதிய திரைப்படங்கள் அதிகம் இன்றி தமிழர்களால் வாழ முடிவது வியக்க வைக்க கூடிய ஒன்று. கடந்த அறுபது எழுபது ஆண்டு கால தமிழர்களின் வரலாற்றை எடுத்துக் கொண்டால் திரைப்படம் ரத்தத்தில் கலந்து விட்ட ஒன்றாக மாறியிருக்கிறது. ‘இரத்தத்தில் கலந்தது சினிமா’ என்று அலைவரிசை முழங்கும் அளவுக்கு அந்த மாற்றம் நிகழ்ந்திருக்கிறது.

            திரைப்படம் இன்றி தமிழர்களால் எதையும் சிந்திக்க முடியாதோ என்று எண்ணும் அளவிற்கு தமிழர்களின் பேச்சில் திரைப்பட வசனங்களின் தாக்கமும் தமிழர்களின் செயல்முறைகளில் திரைப்பட காட்சியமைப்புகளின் தாக்கமும் அதிகம் என்பதைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.

            எம்.ஜி.ஆரைப் பார்த்து கத்திச் சண்டை போட, சிவாஜியைப் பார்த்து உணர்ச்சி வசப்பட, ரஜினியைப் பார்த்து பஞ்ச் வசனம் பேச, கமலைப் பார்த்து காதல் செய்ய ஆர்வம் கொண்டவர்கள் தமிழர்கள்.

            தமிழர்களின் திரைப்பட ஆர்வம் ஒரு நாளில் விதைத்து மறுநாளில் முளைவிட்டதன்று. தமிழர்கள் ஆடல், பாடல், கூத்துகளில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்களாக இருந்திருக்கிறார்கள். தமிழின் முதல் காப்பியமான சிலப்பதிகாரத்தை எடுத்துக் கொண்டால் மாதவியின் ஆடல் கூத்தில் மயங்கி கோவலன் அனைத்தையும் இழந்திருப்பதைக் காணலாம். கோவலன் வடிவில் அன்று தொடங்கிய பித்து இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. இன்றும் திரைப்பட கூத்துக் கலையில் மயங்கித் தமிழர்கள் தன்னையே இழக்கும் அளவிற்கு அந்தப் பண்பாட்டுப் பாரம்பரியம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. நடிகைகளுக்குக் கோயில் கட்டுவது, நடிகர்களை அரசியலுக்கு வா என அழைப்பது என்று கூத்தில் மயங்கும் பண்பாட்டு மாற்றங்கள் வெவ்வேறு வடிவங்களில் நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன.

            தெருக்கூத்து, நாடகம் என்று வளர்ந்த திரைப்படத்திற்கான முன்னோடி வடிவங்களை ஒட்டுமொத்தமாக உள்ளிழுத்துக் கொண்டு திரைப்படம் விஸ்வரூப வளர்ச்சியை அடைந்திருக்கிறது.

            திரைப்பட ஆக்கம் வளர்ச்சி பெறுவதற்கு முன் பொம்மலாட்டம், தோல்பாவைக் கூத்து, தெருக்கூத்து, நாடகங்கள் போன்றவற்றைப் பார்ப்பதற்கு மக்கள் பெருந்திரளாக அணி திரண்டிருக்கிறார்கள். நாடக நடிகர்களுக்கு ரசிகர்களாக தங்களை வெளிப்படுத்த பேரார்வம் கொண்டிருக்கிறார்கள். நாடக நடிகைகளுக்கு அடிமையாக இருக்கவும் ஒரு சிலர் தயாராக இருந்திருக்கிறார்கள். இதைச் சிலப்பதிகார கோவலன் தொடங்கி வைத்ததாக மட்டும் கொள்ள முடியாது. சங்க இலக்கியத்தில் ஆடல், பாடல்களால் மயங்கும் பரத்தமைக் கொண்டவர்களைக் காணலாம். வேண்டுமானால் பெயர்ப்பதிவோடு வரலாற்றில் பதியப்பட்ட முதல் நபராக கோவலனைக் கொள்ளலாம்.

            தமிழர்கள் அறிவுணர்ச்சிக்குக் காட்டிய முக்கியத்துவத்தை விட கலையுணர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் காட்டியிருக்கிறார்கள். இதன் காரணமாக பேரறிஞர் என்று போற்றப்பட்ட அண்ணாதுரை தமிழர்களுக்கான அறிவுணர்ச்சியைக் கலையுணர்ச்சி கலந்து கொடுத்தார். திரைப்பட உருவாக்கத்தில் அவர் தன்னை இணைத்துக் கொண்டார். நாடகங்களைப் படைத்தார். திரைப்பட கலைஞர்களை ஊடகமாகக் கொண்டு அறிவுணர்ச்சியைப் பரப்புவதை ஒரு வழிமுறையாகவும் கைக்கொண்டார். அண்ணாதுரையைப் பின்தொடர்ந்த கலைஞர் கருணாநிதியும் அந்தப் பாதையைத் தொடர்ந்து கொண்டார்.

            தமிழர்களுக்கு எந்த உணர்ச்சியை ஊட்டுவதாக இருந்தாலும் அதற்குத் திரைப்படம் சரியான சாதனம் என்று பேரறிஞர் அண்ணாதுரை கணித்ததை எம்.ஜி.ஆர் முதல்வராகி நிரூபித்துக் காட்டினார். அதைத் தொடர்ந்து ஜெயலலிதாக முதல்வராகி அதை மேலும் நிரூபித்துக் காட்டினார். இதே நடைமுறைதான் தமிழ்நாட்டின் வழக்காக ஆகப் போகிறது என்பதை அவர்களைத் தொடர்ந்து வந்த ரஜினிகாந்த், விஜயகாந்த், கமல் உட்பட பலர் நிரூபிக்க காத்திருந்தார்கள். துரதிர்ஷ்டவசமாக ரஜினிகாந்த் அரசியல் பக்கம் வரப் போவதில்லை என்று அறிவித்து விட்டார். விஜயகாந்தும், கமலும் அரசியலில் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

காலப்போகில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதால் ரஜினியின் முடிவும் மாறலாம். திரைத்துறையிலிருந்து மீண்டும் ஒரு முதல்வர் வருவதும் நடக்கலாம். அது குறித்து அதீத கலையுணர்ச்சி கொண்ட தமிழர்கள் முடிவு செய்வார்கள். அதற்கான சான்றும் இருக்கவே செய்கிறது. அரை நூற்றாண்டுக் காலத்திற்கும் மேலாகத் தமிழர்கள் ஏதோ ஒரு வகையில் திரைப்படத் துறையோடு தொடர்புடைய முதல்வர் வேட்பாளரைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு இருக்கிறார்கள் என்பது அவர்களின் திரைப்பட கலையுணர்ச்சியின் அதீத தாக்கத்தைக் காட்ட போதுமான சான்றாகும். அதற்கொப்ப நடித்து ஒரு படம் பிரபலமாகி விட்டால் தமிழ்நாட்டின் பிரபல நடிகர்களுக்கு முதல்வராகும் ஆசையில் ரத்தத்தில் கலந்த ஒன்றாக இயல்பாக அவர்களை அறியாமல் உண்டாகி விடுகிறது. இப்படியாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது தமிழுலகின் அறிவு மற்றும் அரசியல் பாரம்பரியம்.

*****

No comments:

Post a Comment

என்னைப் போலிருக்க முயற்சிக்காத நான் மற்றும் சமரசமற்ற ஒன்று

என்னைப் போலிருக்க முயற்சிக்காத நான் அவர்கள் பிரமாண்டவர்களாக ஆனார்கள் தனித்துவம் மிக்கவர்கள் என உலகம் கொண்டாடியது அவர்கள் முன் நான் சாத...